இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் நேருவின் இறுதி நாள்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

இறுதி நாள் வரை அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார் என்றும், 1964 மே 27 அன்று அவர் திடீரெனக் காலமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் நெடுநாள் நான் உயிருடன் இருப்பேன் என்று அவரும் ஒரு பேட்டியில் கூறினார்.

எனினும், உண்மைகள் வேறு மாதிரியாக இருந்தன. 1963 ஆம் ஆண்டு இறுதியிலேயே அவருடைய உடல்நலம் பாதிப்பு அடையத் தொடங்கிவிட்டது. அதனால்தான் அவர் அவசரமாகச் சில முடிவுகளை எடுத்தார். நாகாலாந்தைத் தனி மாநிலமாக ஏற்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்த அவர், 1963 திசம்பரில் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

1964 சனவரி, புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு மேடையில் அவர் சரிந்து விழுந்தார். முதல் உதவிக்குப் பின் புதுதில்லி கொண்டு செல்லப்பட்ட அவரைச் சோதித்த மருத்துவர்கள் லேசான பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். அதன் பிறகு, அவர் சுற்றுப்பயணங்களை வெகுவாகக் குறைத்துக் கொண்டார். காஷ்மீர்ச் சிக்கலில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. லால்பகதூர் சாஸ்திரியுடன் கலந்துரையாடினார். சனவரி இறுதியில், சாஸ்திரியைக் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார். சாஸ்திரி மீது அவருக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. இரண்டு பேரும், விடுதலைப் போராட்டக் காலத்தில், ஒரே சிறையில் இருந்தவர்கள்.

சாஸ்திரி, காஷ்மீர் சென்று வந்த பிறகு, நிலைமைகளில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டன. பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும், காஷ்மீர் விடுதலைப் போராட்டத் தலைவர், ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்வது என்று முடிவானது. அதன்படி, 1964 ஏப்ரல் 9 ஆம் நாள், ஜம்மு சிறையிலிருந்து ஷேக் விடுதலை ஆனார்.

சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ஸ்ரீநகர் பொதுக் கூட்டத்தில் மட்டும், ஏறத்தாழ 5 இலட்சம் மக்கள் கூடினர் என்று செய்திகள் கூறுகின்றன.

தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு நேரு, ஷேக்கிற்கு அழைப்பு விடுத்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். ஈத் பெருநாள் முடிந்த பிறகு, தில்லி வருவதாகச் செய்தி அனுப்பினார்.

ஏப்ரல் 29 ஆம் நாள் அந்தச் சந்திப்பு நடைபெற்றது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்தச் சந்திப்பு, 5 நாள்கள் நீடித்தது. ஷேக், தீன்மூர்த்தி இல்லத்திலேயே தங்கினார். ஒவ்வொரு நாளும் அங்கு சந்திப்பும், பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஜனசங்கம் (இன்றைய பி.ஜே.பி) போன்ற ஒரு சில கட்சிகள், அந்தச் சந்திப்பை எதிர்த்தபோதும், நேருவை எதிர்க்கும் ராஜாஜி போன்ற தலைவர்களே அதனை வரவேற்றனர்.

ஷேக் அப்துல்லா, பிறகு சென்னைக்கே வந்து, மே 5 ஆம் தேதி ராஜாஜியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நாடு முழுவதும் நல்ல நம்பிக்கைகள் பரவின. மே 22 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இது குறித்து நிருபர்கள் நேருவிடம் கேட்டனர். “பொறுத்திருங்கள், நல்ல செய்திகளை, முடிவான பின்பு கூறுகின்றோம் ” என்றார். அதுவே நேருவின் கடைசிப் பத்திரிகையாளர் சந்திப்பு.

பிறகு, இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நிகழ்ந்தது. நேருவின் உடன்பாட்டுடன், ஷேக் அப்துல்லா பாகிஸ்தான் சென்று, அன்றைய அதிபர் அயூப் கானைச் சந்தித்துப் பேசினார். மே 25, 26 ஆகிய இரண்டு நாள்களிலும் அவர்கள் கலந்துரையாடினர்.

வெளியில் வந்த ஷேக்கைப் பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டபோது, “என் மலர்ந்த முகமே, உங்களுக்குச் செய்தி சொல்லவில்லையா? ” என்று கேட்டார். விரைவில் தில்லி சென்று நேருவைச் சந்தித்துவிட்டுப் பத்திரிகையாளர்களுடன் பேசுவதாகக் கூறினார்.

காஷ்மீர்ச் சிக்கலுக்கு நல்ல முடிவொன்று வரப் போகிறது என்னும் நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டது. நேரு, ஷேக் அப்துல்லா, அயூப் கான் மூவருமே ஏற்றுக் கொண்டுவிட்டால், பிறகு வேறு என்ன தடை இருக்கப் போகிறது?

ஆனால், எவரும் எதிர்பார்க்காத வண்ணம், மறுநாள், (மே 27 1964) நேரு காலமான செய்தி இந்தியாவை உலுக்கியது. அந்த முயற்சிகள் அப்படியே நின்றுபோய் விட்டன. என்ன நடந்தது என்பதை ஏனோ யாரும் வெளியில் சொல்லவில்லை.

நேரு இன்னும் ஓரிரு மாதங்களோ, ஓரிரு வாரங்களோ கூட இல்லை, ஓரிரு நாள்கள் உயிரோடு இருந்திருப்பாரெனில், காஷ்மீர்ச் சிக்கலில் நல்ல திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது.

Pin It