இனவெறிப் பிடித்த இலங்கை அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது போதாதென்று, தமிழக மீனவர்களையும் சுட்டுக்கொல்லத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் இராமேஸ்சுவரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பிரிட்சோ என்ற மீனவர் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரிட்சோ கொல்லப்பட்டதை அறித்து தமிழகத்தில் எதிர்ப்பு கடுமையானவுடன், இலங்கை அரசு நாங்கள் சுடவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது.

அப்படியானால் யார் சுட்டது சீனா, ஜப்பான், மலேசியா அல்லது அமெரிக்கக் கடற்படை சுட்டனர் என்று இலங்கை அரசு சொல்கிறதா.

பிரச்னையின் விளைவை கொஞ்சம் கூட சிந்திக்கத் தெரியாமல், பிரச்னையை திசைதிருப்பும் வண்ணம் தமிழக பா.ஜ.க. தலைவர் இந்த நேரத்தில், “சீனாவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் யார் என்று இனிமேல்தான் தெரியும்” என்று குறுக்குச்சால் ஓடவிட்டுப் பார்த்தார்.

இந்திய துணைக் கண்டத்தை ஏக இந்தியா என்று சொல்லித் திரியும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் தமிழராக மட்டும்தான் தெரிகிறார்கள், இந்தியராகத் தெரியவில்லை.

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்குத் துணை நின்றதுபோல, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவதற்கு மத்திய அரசு துணைபோய்க் கொண்டு இருக்கிறது.

இலங்கை அரசை எச்சரிக்கை செய்யக் கூட மத்திய அரசு மறுக்கிறது. அண்மையில் நடந்த பிரிட்சோ படுகொலையை முன்னிட்டு இலங்கை அரசின் தூதரக உறவை இந்நேரம் துண்டித்திருக்க வேண்டாமா-?

எதிரி நாடு என்று பாகிஸ்தானைச் சொல்கிறது இந்தியா. அவர்கள் இந்திய மீனவர்களை இதுவரை சுட்டுக் கொல்லவில்லை. நட்பு நாடு என்று சொல்கிக் கொள்ளும் இலங்கை அரசோ தமிழ் மீனவர்களைச் சுட்டுக்கொல்கிறது.

இலங்கை அரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் தமிழகக் கடல் எல்லையில் கூட மீன் பிடிக்க அஞ்சுகிறார்கள், இதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கமுடியும்?

வெற்றியை நோக்கி வீறுகொண்டெழுக!

வரவிருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், வெறுமனே ஓர் இடைத்தேர்தலன்று. எதிர்காலத் தமிழ்நாட்டில் ஏற்படவிருக்கும் நல்ல மாற்றத்திற்கு எழுதப்படும் முன்னுரையாகும். இன்று தமிழகத்தில் உள்ள குற்றப் பின்னணி பினாமி ஆட்சி ஒழிந்து, செயல் தலைவர், தளபதியின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மலர வழிவகுக்கப் போகும் தேர்தல். எனவே இத்தேர்தலில்,பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தலைமையில், வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கவும் பேரவை முடிவு செய்துள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் அனைவரும், தி.மு.கழக வேட்பாளருக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனப் பேரவை கேட்டுக் கொள்கின்றது.