மெத்தப்படித்தவர் ஜவகர்லால் நேரு. அவர் எழுதியிருக்கும் நூல்களும், கடிதங்களும் அவரின் அறிவாற்றலைப் பறைசாற்றுகின்றன. தன் குருநாதர் காந்தியோடு ஒப்பிடும்போது, நேரு ஒரு பகுத்தறிவாளர், நாத்திகர், முற்போக்காளர் என்றெல்லாம் பேசுபவர்கள் இருந்தார்கள் - இருக்கிறார்கள்.

nehru

ஆனால் நேரு ஒரு பிற்போக்காளர். பார்ப்பனர்களுக்குரிய மத, ஐதீக நம்பிக்கை உடையவர் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி, நேருவை அம்பலப்படுத்த ஒரு பெரிய முயற்சியை எடுத்தார் புரட்சியாளர் அம்பேத்கர். இதுபற்றி க. திருநாவுகரசு சொல்வதைக் கேளுங்கள் :

“ இந்து மதத்தின் புரட்டுகள் ” எனும் புத்தகத்தை அவர் (அம்பேத்கர்) 1954 ஆம் ஆண்டு, ஜனவரி முதல்வாரத்தில் எழுதத் தொடங்கினார். அப்புத்தகம் எழுதும் பணி 1955 நவம்பரில் முடிந்தது. இது அச்சிட நான்கு படிகள் எடுக்கப்பட்டன. படிகள் எடுக்கப்பட்டத் தாள்கள் கனமானதாகவும், உயர்ந்த தாளாகவும் இருந்தன. அச்சுப்பணி தொடங்கும் தருவாயில் தடைபட்டது. அம்பேத்கர் அப்புத்தகத்தில் இரண்டு முக்கியப் படங்களைச் சேர்க்க விரும்பினார். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராஜேந்திரப்பிரசாத் காசிக்குச் சென்று, அங்குள்ள பார்ப்பனர்களை வணங்கியதோடு, அவர்களின் பாதங்களைக் கழுவிக் குடித்தார். இக்காட்சியைப் படமாகப் புத்தகத்தில் அம்பேத்கர் இணைக்க விரும்பினார்.

அடுத்த படம் டில்லியில் 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல்பிரதமராகப் பண்டித ஜவகர்லால் நேரு பதவி ஏற்பதற்கு முன்பு காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்ப்பனர்களால் யாகம் வளர்க்கப்பட்டது. அதன் அருகே பண்டித நேரு அமர்ந்து இருந்தார். அவரிடம் காசிப் பார்ப்பனர்கள் இராஜ தண்டத்தை வழங்கினார்கள். எடுத்து வந்திருந்த கங்கை நீரை நேருவுக்குத் தந்து அருந்தச் செய்தார்கள். இதற்கான படத்தையும் இப்புத்தகத்தில் வெளியிட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். இராஜேந்திரபிரசாத் பற்றிய படம் கிடைத்தது. நேருவின் ‘ யாகப்படம் ’ கிடைக்கவில்லை, தேட வேண்டியதாகி விட்டது ”.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை வெளியிட்ட அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் மலரில் இவ்வாறு எழுதி இருக்கிறார்.

இப்பொழுது நேருவின் பூசாரி முகத்தை அம்பலப்படுத்தும் இன்னொரு படம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

‘ நேரு பண்டிதரின் வைதீகக் கோலம் ’ என்ற தலைப்பில், “ பகுத்தறிவு வீரர் - நாஸ்திகவாதி பண்டித ஜவகர்லால் நேரு தமது தாயாரின் முக்திக்காக பிரயாகையில் மரணச்சடங்கு நடத்தும் காட்சி ” என்ற எழுத்துக்களுடன் 1938, மார்ச் 20 ஆம் நாள் ‘ குடிஅரசு ’ இதழில் தந்தை பெரியார் இந்தப் படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பகுத்தறிவு வேடத்தில் சோசலிசம் பேசிய நேருவின் மார்பில் பார்ப்பனிய பூணூல். குளிக்கும் இடம் பிரயாகை. பார்ப்பனர்களின் புண்ணிய நதிகளுள் இதுவும் ஒன்று. நேருவுக்கு அருகில் குளிப்பவர்களும் பார்ப்பனர்களே ! அவர்களின் பின்தலைக் குடுமியும், பூணூலும், உடையும் இதை உறுதி செய்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் நேருவின் பகுத்தறிவு வேடத்தை அம்பலப்படுத்த முயன்றும், பதிப்பித்து வெளியிட இயலாமல் போனாலும், அதையே இன்னொரு படத்தின் மூலம் நேருவை அம்பலப்படுத்தினார் தந்தை பெரியார்.

புரட்சியாளர் அம்பேத்கரின் முயற்சியும், தந்தை பெரியாரின் செயலும் இங்கு ஒன்றுபட்டதனால், சோசலிசவாதியாக அல்ல, பூணூல் பூசாரியாகக் காட்சி தருகிறார் பண்டித ஜவகர்லால்நேரு.

(1938 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் வெளியான இப்புகைப்படத்தைக் “ கருஞ்சட்டைத் தமிழர் ” இதழுக்கு அனுப்பி உதவியவர் பேராசிரியர் ஆ. திருநீலகண்டர் - நன்றி.)

Pin It