மாறிய பாலினத்தார் (Transgenders) :

உடல் அளவில் குறிப்பிட்ட பாலின உறுப்புகள் பெற்று (ஆண்/பெண்) வளர வளரமனதளவில் உடல் பாலின அடையாளத்திற்கு மாறாக உணர்பவர்கள் மாறிய பாலினத்தார் என அழைக்கப்படுவர்.

transgendersஉடல் இன உறுப்பளவில் ஆணாக பிறந்து மனதளவில் தங்களைப் பெண்களாக உணர்பவர்கள் (திருநங்கைகள்), அதே போல் பெண்களாகப் பிறந்து தங்களை ஆண்களாக உணர்பவர்களும் உண்டு.

மேலும் பிறக்கும் போதே பாலின உறுப்புகள் சரியாக அமையப்பெறாமல் இன்ன பாலினம் என்று பார்வை மூலம் அறிய முடியாமல் பிறப்பவர்களும் உண்டு. இவர்கள் மருத்துவ ரீதியாக ஹெர்மோஃப்ரோடைட்ஸ் (Hermophrodites) எனறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பாலின நிலை பல வகை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளின் மூலமாக வரையறுக்கப்படுகிறது. ஆனாலும் இவர்கள் மனதளவில் வளர்ந்த பின் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை பொறுத்து இவர்களுடைய வாழ்க்கை அமையும்.

மாறிய பாலினப் பெண்கள் (அ) திருநங்கைகள்:

திருநங்கைகள் (ஆணிலிருந்து பெண்) ஆணாதிக்க சமூகத்தில் அதிக இழிவு படுத்துதல், உரிமைகள் மறுத்தல் மற்றும் ஒதுக்கிவைக்கப்படுதல் போன்ற அவல நிலைகளுக்குட்பட்டு, எவ்வித சமூக அங்கீகாரமும் கிடைக்கப்பெறாமல் பாலியல் தொழில், இலவசமாக பணம் வசூலித்தல் போன்ற சுய மரியாதைக்கு மாறான செயல்பாடுகளில் ஈடுபட்டு வாழவேண்டும் என்ற நிலையிலேயே உள்ளனர்.

தமிழக அரசு இவர்களையும், இவர்களது பிரச்சினைகளையும் இனம் கண்டு, இவர்க ளுக்கென்று நலவாரியம், குடும்ப அட்டை, அடையாள அட்டை, அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு போன்ற உரிமைகளை வழங்கி தரமான வாழ்க்கை முறையினை வழங்க சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகிறது.

அடையாளச் சிக்கல் :

ஆனாலும் திருநங்கைகள் யார் என குறிப்பிட்ட அடையாளம் வழங்க முடியாத குழப்பநிலை இன்னும் இருந்து வருவது அப்பட்டமான உண்மை.

பெண்மை கலந்த செயல்பாடுகளுடன், ஆணுடையிலும், மறைவாக அவ்வப்போது பெண்ணுடை அணிந்தும் வலம் வருபவர்கள் (Transvesites) , உடலளவில் (ஆணுறுப்புடன்) எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் உடையளவில் மட்டும் மாற்றம் கொண்டு பெண்ணுடையுடன் வாழ்பவர்கள்(Transexuals/Cross dressers) , மனதின் பெண்மைக்கேற்ப தன்னுடைய உடலை அறுவை சிகிச்சை மூலம் மாற்றியமைத்து முழுமையான பெண் போன்று வாழ்பவர்கள் (Transvesites) என் சில மாறுப்பட்ட பரிமாணங்களில் திருநங்கைகள் உள்ளனர்.

சமுதாயப் புறக்கணிப்பு :

சமூக அங்கீகாரம், உரிமைகள் அடைதல், தங்களுடைய இரத்த சம்பந்த குடும்பத்தாருடன் இணைந்த வாழ்க்கை, கல்வி பெறுதல், வேலை வாய்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்த கண்ணியமான வாழ்க்கை முறை அமைவதில் இன்னும் சிக்கலான நிலையே நீடிக்கிறது.

இந்தப் பரிமாணத்தில் உள்ள ஒவ்வொரு வகையினருக்கும் சமுதாய அங்கீகாரத்திலிருந்து உரிமை அடிப்படையிலான தேவைகளும் சிறிது மாறுபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சுமுகமான, கண்ணியமான, சமுதாயத்துடன் இணைந்த வாழ்க்கை மறுக்கப்படுவதால் அவர்களே (சொந்த குடும்பச் சூழலை விட்டு வெளியேறியவர்கள்) தனி குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இவர்களை ஒரு குறிப்பிட்ட குழுவாக அடையாளம் காண்பதிலும், தேவைகள் என்னவென்று புள்ளி விவரங் கள் சேகரிப் பதிலும் எப்போதும் ஒரு தொய்வு நிலையே உள்ளது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் உலகஅளவில் அனைத்து வகை மக்கள் மத்தியிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் அனேகமாக பாலியல் தொழிலை வாழ்வாதா ரமாகக் கொண்டுள்ளதால், எய்ட்ஸ் தடுப்பு நடிவடிக்கைகளின் போது, அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, சமீப காலமாக தமிழகத்தில் திருநங்கைள் வெளிப்ப டையாகத் தெரிய வந்துள்ளனர்.

பல காலமாக இவர்களைப் பற்றித் தவறான புரிதலும், சமூக அக்கறையின்மையுமே இருந்து வருகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிமுறைகளில் அடையாளமின்மை :

இதற்கு ஒரு சிறந்த உதாரணமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விதி முறைகளில் இவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பெடுப்பது பற்றிய தெளிவின்மை மற்றும் குழப்ப நிலை.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பாரம்பரியமிக்கதாகவும், உலகளவில் சிறந்த தெனவும் கருதப்படுகிறது.

முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872 இல் பல் கால நிலைகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1881 இல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சீரான கணக்கெடுப்பு நடத்தப்படடுள்ளது. அதை த் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. 2010 - 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சுதந்திரத்திற்குப் பிறகு எடுக்கப்படும் 15வது கணக்கெடுப்பாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பதென்பது வெறுமனே மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவது என இல்லாமல், நாட்டின் பல நிலைகளில் வாழ்பவர்களின் குடியுரிமை சரியாக அமைய வழிவகுக்கும் என்பதாகும்.

1872 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து, இப்போது (2010) நடைபெற்றுவரும் முதல் நிலை வீடு சார்ந்த கணக்கெடுப்பு (House listing and housing census) மற்றும் 2011 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தனிமனித கணக்கெடுப்பு (Population enumeration) வரைக்கும் மக்கள் கணக்கெடுப்பு சட்டத்தில் பல திருத்தங்கள் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொது பதிவாளர், மக்கள் கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையம் வாயிலாக, கணக்கெடுப்பில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பல விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு அட்டவணையின் கட்டம் 10, 11 மற்றும் 12 இல் ஒரே வீட்டில் வசிக்கும் அனைத்து நபர்களின் விபரங்கள் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது கட்டம் 10 இல் மொத்த நபர்களின் எண்ணிக்கையும் 11 இல் ஆண்கள், 12 இல் பெண்களுக்கான விபரங்கள் குறிப்பிட்டாக வேண்டும் என்றும், குறிப்பாக காயடிக்கப்பட்டவர்கள் (Eunuchs), பிறவியிலேயே பாலின உறுப்பு சரியாக அமையப் பெறாதவர்கள் (Hermophrodites) அனைவருமே 11 ஆம் கட்டத்தில்தான், அதாவது ஆண்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும் எனத் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவுறுத்தலின்படி திருநங்கைகளையும் ஆண்கள் என குறிப்பிடும் நிலையே உள்ளது.

மாறிய பாலின நிலை அடையாளம் (Transgenders), காயடிக்கப்பட்டவர்கள் (Eunuchs) அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இந்திய இதிகாசங்களில் பல இடங்களில் குறிப்புகள், வரலாற்றுக் காலங்களில் சில கதாபாத்திரங்கள், பைபிள் போன்ற பண்டைய நூல்கள் அனைத்திலுமே காயடிக்கப்பட்ட ஆண்களைப் (Eunuchs) பற்றியே அதிகம் குறிப் பிடப்பட்டுள்ளன.

காயடிக்கும் முறைக்கும் (Castration), மாறிய பாலின உணர்வால் தங்கள் உடலை மாற்றி யமைத்துக் கொள்வதென்பதற்கும் (Emasculation) எந்த சம்பந்தமும் இல்லையென்பதுதான் உண்மை.

அதிகமாக, காயடிக்கும் செயல் முறை (ஆண் மையை நீக்குதல்) அந்த நிலைக்குட்படுத்தப்படும் நபரின் விருப்பமின்றி செயல்படுத்தப் பட்டிருக்கவேண்டும். ஏனெனில் திடகாத்திரமான ஆண்கள் (பெரும்பாலும் அடிமைகள்) கவனம் பாலியல் ஈர்ப்புக்குட்படாமல் தங்களுடைய கடமைகளை (பல்லக்குத் தூக்குதல், அந்தப்புறக் காவல் போன்றவை) செய்ய வேண்டும் என்பதற்காகக் காயடிக்கப்பட்டனர் என நாம் சில நூல்களில் படித்திருக்கிறோம்.

அதன் பின்னரும் அவர்களின் மனதின் உணர்வு ஆண்தன்மையுடன் இருப்பதால் அவர்கள் தங்களை ஆண்கள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எந்த வரலாறுகளிலும் உடல் அளவில் ஆணாகப் பிறந்து மனதளவில் பெண்ணாக உணரும் மாறிய பாலின நிலையில் இருந்தவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லையயனலாம்.

இதற்குக் காரணம் இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும், ஆணாதிக்க சமூகத்தில் ஆண் பெண்போல் இருப்பதை இழிவாகக் கருதுவதும் காரணமாக இருக்கலாம். எனவே இவர்களுக்கென்று தனி அடையாளம் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாமல், காயடிக்கப் பட்டவர்கள் என பொதுவான அடையாளத்துடன் காணப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் அந்த காலக்கட்டத்தில் இருந்தே செயல்பட்டு வருவதால் அதன் விதி முறைகளிலும் இந்தக் குழுவினரை ஆண்களாகக் குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவர்களுக்கென்று உரிமை மீறல்களும், ஒதுக்கிவைத்தலும், இழிவுபடுத்தலும், சமுதாய அங்கீகாரமின்மையும் அதிகரித்து வந்ததாலும், தங்களின் மன நிலை பெண்மையாக இருக்கும் பட்சத்தில், பெண்ணுக்குரிய உடல் மாற்றத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள அதிகமானோர் முன்வந்ததாலும், மாறிய பாலினநிலை என்னும் வழக்கு 1960 களில் இருந்து அதிகமாகப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் மாறிய பாலினத்தார், அதிகமாக மாறிய பாலினப்பெண்கள், முழுமையான பெண்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆண்களாகப் பதிவு செய்யும் பட்சத்தில், இவர்களின் எண்ணிக்கையை அறிவதிலோ, இவர்களின் உரிமைத் தேவைகளுக்கேற்ப முழுமையான நடவடிக்கைகளை செயல்படுத் துவதிலோ இன்னும் சிக்கலான நிலையே நீடிக்கும்.

இது தொடர்பாக பிரதமருக்குத் தமிழக முதல்வர் வைத்துள்ள வேண்டுகோள் மிகவும் பாராட்டுக்கும், வணங்குதலுக்கும் உரியதாகும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதி முறைகளில் மாற்றம் செய்வதென்பது பல நிலை பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் உள்ளடங்கிய மிகப் பெரிய செயல்பாடு என்பதால், வரும் 2011 பிப்ரவரி தனி மனித கணக்கெடுப்பின் போது செயல்படுத்த முடியாத காரியமாகக் கூட அமையலாம்.

குறைந்த பட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னராவது செயல்படுத்தும் வகையில் முயற்சிகள் அவசியமென்பது தெள்ளத் தெளிவான செய்தி.

வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஒரு குழு மக்கள் அங்கீகாரமில்லாமல், கண்ணியமான வாழ்க்கை அமையப் பெறாமல் இருப்பது, மனித உரிமைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட நிலை எனும் நோக்கில், இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வு என்பது எவராலும் மறுக்க முடியாத செய்தி.

எதிர்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் மாறிய பாலின உணர்வாளர்களை (Transgenders) முறையாக கணக்கெடுக்க சில தொலை நோக்குப் பார்வைகள் :

மாறிய பாலின உணர்வாளர்களுக்கென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு இணையான மாவட்ட ரீதியான, அரசின் நேடியான தலையீடுதலின் மூலமாகத் தனி அலுவலர்கள் நியமித்து தீவிரமான கணக்கெடுப்பு ஒன்று நடத்தலாம்.

பல பரிமாணங்களில் இருக்கும் மாறிய பாலின உணர்வுள்ளவர்களைப் பற்றிய முழு விபரங்களை அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்துத் தனித் தனிக் கட்டங்களில் குறிப்பிடலாம்.

அதாவது,

1. உடலுறுப்பு பாலின அடையாளத்திற்கு மாறாக, மனதளவில் மற்ற பாலினமாக உணரும் தன்மையுடையவர்கள்

2 உடல் அளவில் மாற்றங்களுக்குட்படாமல், வெளிப்படையாக உடையளவில் மட்டும் மாற்றத்துடன் வாழ்பவர்கள்

3 உடல் அளவில் நிரந்தரமான மாற்றங்களுக்கு (பெண்ணிலிருந்து / ஆணிலிருந்து) உட்பட்டவர்கள்

எனும் பிரிவுகளில் தனித் தனிக் கட்டங்களில் குறித்துக் கணக்கெடுப்பு செய்யலாம்.

அதைத் தொடர்ந்து நிரந்தரமான மாற்றத்திற்குட்பட்டவர்களுக்கு மாறிய பாலின பெண்/ ஆண் என அடையாள அட்டைகள் வழங்கலாம்.

பொதுவாக இந்த முறையைச் செயல்படுத்துவதன் மூலம் பால் மாற்றுத் தன்மை அதிகரிக்கும் என்பதோ, ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்பதெல்லாம் விதண்டாவாதம். உடல் மற்றும் மனதளவில் ஆண் உணர்வுடன் இருப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பால் மாற்றுக்கு உட்பட மாட்டார்கள் என்பது மருத்துவ ரீதியான, உளவியல் ரீதியான உண்மை.

நிரந்தர அடையாள அட்டை உள்ளவர்களை வரும் கணக்கெடுப்பில் முறையே கட்டங்கள் 11, 12 இல் சேர்க்க அறிவுறுத்தலாம்.

சமூக வாரியான கணக்கெடுப்பில் மாறிய பாலினம் எனும் சமூகத்தில் இந்த பிரிவினரைக் குறிப்பிட்டு, இவர்களுக்கு உரிமை, சட்ட ரீதியான இட ஒதுக்கீடு / வாய்ப்புகள் பெற ஆவன செய்யலாம்.

நிரந்தர அடையாள அட்டை வழங்குவதை மருத்துவச் சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப் பங்களை வலியுறுத்தி முறைப்படுத் தலாம்.

ஏனெனில் உடல் அளவில் நிரந்தர மாற்றத்திற்குட்படாதவர்கள் அனேகமாக தன் ரத்த சம்பந்தமுள்ள குடும்பங்களுடன், குடும்ப அட்டையுடன் கூடியஅடையாளத்துடனேயே இருப்பார்கள். இதன் மூலம் ஒரு நபருக்கு இரு அடையாளங்கள் போன்ற குளறுபடிகளைத் தவிர்க்கலாம். (உதாரணமாக உடலளவில் நலமாக இருப்பவர்கள், விபத்து போன்றவைகளால் உடலுறுப்புகள் இழக்கும் பட்சத்தில் மாற்றுத் திறனாளிகள் என்னும் அடையாள அட்டை பெறுவது போல)

Pin It