பாரதிய ஜனதாக் கட்சி என்பது இந்துக்களுக்காகவும், இராமராஜ்யத்தை நிலைநாட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள கட்சி என்பது போன்ற ஒரு தோற்றம் ஒரு கட்டம் வரையில் நாட்டில் பலரிடமும் இருந்தது. அந்தத் தோற்றம் நீர்த்துப்போய் நெடுநாள் ஆயிற்று என்றாலும், அண்மையில் நடைபெற்ற கர்நாடகக் கலவரங்கள் மீண்டும் அதனை அழுத்தமாய் மெய்ப்பித்திருக்கின்றன. இராமரைப் பற்றியோ, பாபரைப்பற்றியோ கவலைப்படுவதுபோல காட்டிக் கொள்ளுவது வெறும் ஏமாற்று வேலை. பதவிக்காகவும், பணத்துக் காகவும் அடித்துக்கொள்ளும் கட்சிதான் பா.ஜ.க. என்பது தெளிவாகி விட்டது.

yadiyurappa_எடியூரப்பா தலைமையில் அமைந்திருக்கிற கர்நாடக அரசுக்கு எதிராக, ஆளும் கட்சியைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலகக் கொடியை உயர்த்தினர். கிடைத்த வாய்ப்பை காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. சுயேச்சைகள் ஐவர் ஆதரவு தெரிவித்தனர். கோவாவிலும் , மாமல்லபுரத்திலுமாக மாறி மாறிச் சந்திப்புகள் நடைபெற்றன.

இறுதி நாடகம் 11.10.2010 அன்று, பெங்களூருவில் உள்ள சட்டமன்றக் கட்டிடத்தில் நடந்தேறியது. வாக்களிப்பதற்காக சட்டமன்றம் வந்த ஆளும்கட்சியின் போட்டி உறுப்பினர்களும், சில சுயேச்சை உறுப்பினர்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வாயிலிலேயே நிறுத்தப்பட்டனர். அது அவைத்தலைவர் போபையாவின் ஆணை என்று கூறப்பட்டது. கர்நாடகத்தின் ஆளுநர் பரத்வாஜ், எவரையும் வாக்கெடுப்புக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விடுத்திருந்த அறிவிப்பு, ஏளனமாக மீறப்பட்டிருந்தது.

தடுக்கப்பட்டவர்கள் மீறி உள்ளே நுழைந்தபோது, சட்டமன்றக் கட்டிடம் ஒரு பெரிய அடிதடியைக் கண்டது. எப்படியோ காவலர்களை மீறிப் போட்டியாளர்கள் உள்ளே சென்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், வாக்கெடுப்பே நடத்தப்படாமல், முதலமைச்சர் முன்மொழிந்த நம்பிக்கைத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றுவிட்டதாக அவைத்தலைவர் அறிவித்தார். ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டது.

மிக வெளிப்படையாக நடந்துள்ள முறைகேடு என்றும், மக்களாட்சிப் படுகொலை என்றும் இதனைக் கூறலாம். கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பா.ஜ.க. உறுப்பினர்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்திருப்பது சரியா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சுயேச் சை உறுப்பினர்கள் ஐவரைத் தகுதி நீக்கம் செய்துள்ள கேலிக் கூத்தை என்னவென்று சொல்வது? சட்டமன்ற விதிகள் 10இன் படி, கட்சித் தாவல் சட்டம் என்பது சுயேச்சையினருக்கு எவ்வகையிலும் பொருந்தாது என்பது மிக எளிய உண்மை. அதைப்பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் அவைத்தலைவர் அங்கு செயல்பட்டிருக்கிறார்.

கட்சி உறுப்பினர்களின் மீது, அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உள்ளன என்பதை எல்லோரும் அறிவோம். ஒன்று அவர்கள் கட்சியைவிட்டு விலகி இருக்க வேண்டும். அல்லது, கட்சிக் கொறடாவின் ஆணைக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும். கர்நாடகத்தில் இரண்டுமே நடைபெறவில்லை என்பது வெளிப்படை. ஒரு வேளை வாக்களிக்கும் வாய்ப்பை அவர்களுக்கும் வழங்கி இருந்தால், என்ன நடந்திருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆனால் வாக்கெடுப்புக்கு முன்பாகவே தகுதி நீக்க நடவடிக்கை நடந்து விட்டது. எனவே அவைத்தலைவரின் செயல் மிக வெளிப்படையாக ஒரு கட்சிச் சார்புடையதாக உள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

ஆளுநர் உடனடியாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவும், அதன் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. முடிவு என்னவாக இருந்தாலும், ஒன்று தெளிவாகப் புரிகிறது. நாட்டு நலன் என்பது குறித்த கவலை எதுவும் இல்லாமல், கட்சி நலன், தனிமனித நலன் ஆகியனவே அங்கு முன்னிறுத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து விடுபட்ட கட்சியாக ஒரு கட்சியையும் கர்நாடகத்தில் நம்மால் பார்க்க முடியவில்லை.

Pin It