முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசியல் கட்சிகளும், அரசும் முனைப்புக் காட்டி வருகின்றன. இதற்காகக் கேரளச் சட்டமன்றத்தில் அவர்கள் தீர்மானமும் இயற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் 01.01.2012 அன்று புதிய அணை கட்டுவதற்காக பூமி பூசை போடக் கேரள அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஒரு நாளேட்டின் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையினால் பயன்பெறும் தமிழகத்தின் 6 மாவட்ட மக்களும் கொதித்துப்போய், போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மொத்தத் தமிழகமும் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கின்ற நிலையில் கேரள அரசின் பூமி பூசை, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைகிறது.

அண்மையில் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படும், எப்படி அதைச் சரி செய்வது என்று ஆய்வு செய்வதற்கு, தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைப் பிரதமர் அமைத்தது, அவர் ஒருதலைப்பட்சமாக, கேரளத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக அமைந்தது.

பிரதமர் மன்மோகன்சிங் தமிழகம் வந்தபோது, முன்னாள் முதல்வர் கலைஞரும், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் நேரில் அவரைச் சந்தித்துப் பேசிய பின்னர், இப்பொழுது அக்குழுவை நிறுத்தி வைப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. பிரதமரின் இந்தச் சாதகமான அணுகுமுறைதான் கேரளாவை பூமி பூசை போடுமளவுக்குப் போக வழி செய்ததா என்ற ஐயமும் ஏற்படுகிறது.

ஈழப்பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அங்கு மாண்டு போன பல்லாயிரம் ஈழத்தமிழ் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். மாறாக கிருஷ்ணாவும், நிருபமாராவும் மாறிமாறி இலங்கைக்குப்போய் பேசினார்களே ஒழிய அந்தப் பேச்சு ஈழ மக்களைக் காப்பாற்றவில்லை. இராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியாக நிறுத்த பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா,  ஆஸ்திரேலியாவும் முயன்ற போது இந்தியா இலங்கைக்கே சாதகமாக நடந்து கொண்டது.

இன்று கூடங்குளம் மக்கள் போராட்டத்தையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் என்று இரஷ்யாவில் இருந்து மன்மோகன்சிங்கும், இங்கே மத்திய அமைச்சர் நாராயணசாமியும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்பகுதி மக்களின் அச்சமும், எதிர்காலத் தலைமுறைகள் குறித்த கவலைகளும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

அதே சமயம் பகவத் கீதையை ரஷ்யாவில் தடைசெய்யக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்றவுடன்,   நாடாளுமன்றம் அமளிதுமளியாகிறது. உடனே மத்திய அரசு அலறியடித்து, வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மூலம், ரஷ்ய தூதரை நேரில் அழைத்துப் பேசுகிறது. ஒரு மத நூலுக்குக் கொடுக்கும் மரியாதையைக் கூட, தமிழனுக்குக் கொடுக்க இந்திய அரசு தயாராக இல்லை.

இந்திய அரசு, தமிழகத்தைப் புறக்கணித்தேதான் வந்திருக்கிறது என்பதை வரலாறு நெடுகிலும் நம்மால் காணமுடியும். விட்டுக்கொடுத்தலும், சகிப்புத் தன்மையும் தமிழர்களின் உடன்பிறந்த குணங்கள் என்பதற்காக, எல்லா நிலையிலும் அது தொடரும் என்று எதிர்பார்ப்பது தில்லியின் தவறு.

கேரளாவின் அடாவடித்தனத்திற்கு தடை போட்டு, அணையை மத்திய இராணுப் பாதுகாப்பில் கொண்டுவர வேண்டும். அதோடு, மத்திய அரசு தன்னுடைய மாற்றாந்தாய் மனப்போக்கைக் கைவிட வேண்டும். நெய்வேலி மின்சாரத்தைக் கேரளா, கர்நாடாக போன்ற அண்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் மத்திய அரசால், நீரைப் பங்கிட்டு அளிக்க முடியவில்லை என்பதை பாமர மக்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உடலில் ஒரு பாகம் நலிவடைந்தாலும், ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
Pin It