இந்தியத் திருநாடு என்று பெருமைபடச் சிலர் பேசுவதுண்டு. பல்வேறு மொழிகள் பேசும் பல் தேசிய இன மக்களை உள்ளடக்கியது இந்தியத் துணைக்கண்டம்.

1956 நவம்பரில் இந்தியா மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட போது நிலவிய நிலப்பகுதிச் சிக்கல், ஆற்று நீர்ச்சிக்கல் முதலானவற்றில் சரியாக அக்கறை செலுத்தாமல் தமிழகத்தை ஆண்ட காங்கிரசு மெத்தனமாக நடந்து கொண்டது.

இன்றைக்கு நடுவண் அரசில் பல கட்சி ஆதரவு கொண்ட கூட்டணி ஆட்சி. மாநிலங்களிலும் பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் மலரத் தொடங்கிவிட்டன.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து 65 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரசு மட்டுமே ஆட்சி செய்தும் கூட, மாநிலங்களுக்கு இடையே யான எந்தவொரு சிக்கலுக்கும் சரியான தீர்வைக் காணத் தவறிவிட்டது.

அரசியல் அதிகாரம், ஆதாயத்திற்காக மக்கள் நலன்களைப் பலி கொடுத்தனர். மாநில உரிமை களை விட்டுக் கொடுத்தனர்.

இதனால் உருவான காவிரி நீர், முல்லைப் பெரியாறு நீர், பாலாற்று நீர், கச்சத்தீவு முதலானவற்றில் ஏராளமான சிக்கல்களைத் தமிழகம் சந்தித்து தனது வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றது.

முல்லை ஆறும், பெரியாறு ஆறும், தமிழ்நாட்டின் சதுரகிரி, சிவகிரி பகுதிகளில்தான் உற்பத்தியாகி ஓடுகின்றன. வீணாக அரபிக்கடலில் சென்று கலக்கும் நீர், பென்னி குக் என்னும் ஆங்கிலப் பொறியாளரின் தனிப்பெரும் முயற்சியினால் அணைகட்டித் தடுக்கப்பட்டது. சென்னை ராஜதானிக்கும், திருவிதாங்கூர் மகாராசாவுக்கும் இடையில் 1886இல் போடப்பட்டதுதான் 999 ஆண்டுகால முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம்.

முல்லைப் பெரியாறு அணைப்பகுதி இடம் பெற்றுள்ள தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட இடுக்கி மாவட்டம், மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது அதிகாரியாக இருந்த கே.எம். பணிக்கர் என்ற கேரளத்தவரால் சூழ்ச்சியாக கேரளாவோடு சேர்க்கப்பட்டது.

அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தனர். குறைந்தது அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியான 777 ச.கி.மீ. பகுதியைக் கூட கேட்டுப் பெறத் தவறிவிட்டனர். இன்றைக்குக் கேரள அரசு 125 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட ஒப்பந்தம் எங்களைக் கட்டுப் படுத்தாது, புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறுகின்றது. நடுவண் அரசு நியமித்த நீதியரசர் ஆனந்து தலைமையிலான குழுவின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஏற்க மாட்டோம் என அடாவடி செய்து வருகின்றனர்.

மலையாள மாத்ருபூமி என்னும் பத்திரிக்கை சில ஆண்டுகளுக்கு முன்னர், முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது. அணை உடைந்தால் கேரளாவில் நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்படும். 40 இலட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் எனப் புரளியைக் கிளப்பிச் சிக்கல் எழ வித்திட்டது.

மலையாள இயக்குனர் சோகன்ராய் என்பவர் டேம் 999 என்னும் திரைப்படத்தை எடுத்து, கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அணை உடைந்து பெரும்பாதிப்புக்கள் ஏற்படுவதாக பீதியைக் கிளப்பி வருகின்றார். எல்லோராலும் மதிக்கப்படுகின்ற நீதியரசராக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்கள் கூட நடுநிலை தவறிக் கேரளத்தவரின் அடாவடி நிலைப் பாட்டிற்கு ஆதரவாக நிற்கின்றனர்.

25.11.1979- இல் இரு மாநிலங்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பழைய முல்லைப் பெரியாறு அணையை ஒட்டிப் புதிய சிற்றணையை வலுப்படுத்திய பிறகு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ள ஒப்புக்கொள்ளப் பட்டது.

27.2.2006இல் உச்ச நீதிமன்றம் கூட அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், கேரளா அதற்கு எந்தத் தடங்கலும் செய்யக்கூடாது என தீர்ப்பளித்தது. ஆனால் 17.03.2006இல் கேரள சட்டமன்றம், அணைகள் பாதுகாப்புத் திருத்தச் சட்டத்தை இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்புக் காட்டி வருகிறது. ஆபத்து உள்ளது என்கிறது கேரளா. வாதத்திற்காக அப்படிப் பார்த்தால், தற்போதுள்ள அணைக்குப் பக்கத்தில் 100 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டினால் மட்டும் பூகம்பத்தால் பாதிக்கப்படாதா?

மேலும் முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணை ஆறு மடங்கு நீர் கொள்ளளவு என்கிற போது அணை உடைந்தாலும் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது.

மேலும் கேரள மாநில அட்வகேட் ஜெனரல் கூட அணை உடைய வாய்ப்பில்லை என்றும், உடைந்தாலும் சுமார் 450 பேர்களுக்கு மட்டுமே பாதிப்புகள் ஏற்படலாம், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து பாதுகாக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாவிடில், தமிழகத்தின் வறட்சியான தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை முதலான மாவட்டங்களில், 2,17,000 ஏக்கர் நிலம் தரிசாகி ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இத்தனைக்கும் முல்லைப் பெரியாறு அணையில் 126 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் பயன்படுத்த முடியும். இந்த நிலையில் 136 அடிவரை கூட அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா எதிர்ப்பு தெரிவிப் பதும், இதை நடுவண் அரசு கண்டும் காணாமல் போவதும் தமிழகத்தை மேலும் வஞ்சிப்பதாகவே அமையும்.

கேரள மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 இலட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் இங்கே அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நீரில் பாதியைக்கூட கேரளா தர மறுக்கிறது.

கேரளாவினர் தங்கள் உணவுத் தேவையில் 82 சதவீதத்தை, தமிழ்நாட்டிலிருந்து 13 வழித் தடங்களின் மூலம் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். காய்கறி, பழம், பால், முட்டை, தானியங்கள், இறைச்சி, மணல், சிமெண்ட், மின்சாரம் எல்லாமே தமிழ்நாட்டில் இருந்துதான் கேரளாவிற்குச் செல்கிறது.

தமிழக மக்கள் சாதி, சமயம், கட்சி வேறுபாடு இன்றி முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். ஆனால் கேரளாவோ அங்குள்ள தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்கிக் கொள்ளையடித்து, தோட்டத் தொழிலாளர்களை அடித்து தமிழகத்திற்கு விரட்டுவதும், சபரிமலை அய்யப்பனை வழிபடச் செல்லும் பக்தர்களைக் கூடத் தாக்குவதும், தடுப்பதுமாக இருந்து வருகிறது.

அண்மையில் 09.01.2012 இல் அய்யப்பனை வழிபடச் சென்ற சென்னையைச் சேர்ந்த பக்தர் சாந்தவேல் என்பவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினர். மனைவியையும், இரு பெண் குழந்தைகளையும் கொண்ட பிளம்பர் கூலித் தொழிலாளியான சாந்தவேல், கோட்டையம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப் பட்டார். இரண்டு நாட்களாய் முதலுதவி சிகிச்சை கூட தராமல் விரட்டி அனுப்பிவிட்டனர்.

அவருடைய உறவினர்கள் அவரைச் சென்னைக்குக் கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி சாந்தவேல் இறந்து போனார். இறந்த சாந்தவேலு குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவருடைய மனைவிக்கு குடும்பத்தைக் காப்பாற்ற அரசு வேலை தர வேண்டும் என்றும், கேரள அரசிடம் இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வாங்கித் தர வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைத்தது. பிற அமைப்புகள் பலவும் சேர்ந்து போராடியும் அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை. குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல், சட்டத்திற்குப் புறம்பாகக் காவல்துறையினர், அவசர அவசரமாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று சாந்தவேலின் உடலை எரித்து விட்டனர்.

ஆறுதல் சொல்லக்கூட தமிழக அரசு இதுவரை முன்வரவில்லை. இழப்பீட்டுத் தொகை எதனையும் இதுவரை அக்குடும்பத்திற்கு எந்த அரசும் வழங்கவில்லை. அது வெறும் விபத்து என்கிறார் கேரள முதலமைச்சர் உம்மண்சாண்டி. மெளனம் சாதிக்கிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?

 - வேல்முருகன், நிறுவனர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

***

சாந்தவேல் குடும்பத்திற்குப் பேரவை ஆறுதல்

அண்மையில் கேரள வெறியர்களால் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர் சாந்தவேலின் மனைவி, பிள்ளைகளைச் சந்தித்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆறுதல் கூறினார். பேரவைப் பொறுப்பாளர்கள் மா. உமாபதி, எழில். இளங்கோவன், மு. குமரன், அம்பத்தூர் ராஜு, மோகன்ராம், மோகா சீனிவாசன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். சிறுதொகையாக ரூ.5000/- பேரவையின் சார்பில் அவர் மனைவியிடம் வழங்கப்பட்டது.

Pin It