தமிழ்ச் சங்கமத்தின் சார்பில் 18.01.2011 அன்று சென்னையில், திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. நாளைய சினிமா என்னும் தலைப்பின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கருத்தரங்கில் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, ஜனநாதன், சமுத்திரக்கனி, பிரபு சாலமன், லிங்குசாமி, மிஷ்கின், சீனு ராமசாமி, படத்தொகுப்பாளர் லெனின், ஒளிப்பதிவாளர் ஜி.பி.கிருஷ்ணா, ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் என்று ஒரு பெரும் படையே கலந்து கொண்டனர். ஒரு கருத்தரங்கில் இத்தனை பேர் என்பது, திகட்டும் இனிப்பாய்த்தான் இருந்தது. இரவு 10 மணிக்கு மேல் திரண்டிருந்த பார்வையாளர்களிடம் ஒரு சலசலப்புக்கூட ஏற்பட்டது. ஆனால் அந்தக் கருத்தரங்கில் பல நல்ல செய்திகளும் இடம் பெற்றன என்பதை மறுக்க முடியாது.

‘பெரிய பட நிறுவனங்களையும், பட அரங்குகளையும் விட்டு வெளியில் வந்தபோதே திரைப்படத்தின் இன்னொரு முகம் தெரியத் தொடங்கிற்று. உற்பத்திக் கருவிகளை வாடகைக்குப் பெற்று படம் எடுக்கும் புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சினிமா, நாளைய சினிமாவின் புதிய பாதையாக இருக்கும் ’ என்றார் ‘பேராண்மை ’ இயக்குநர் ஜனநாதன்.

தென் மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கி இருக்கும், சீனு ராமசாமி, ‘ இரண்டு கோடிக்குப் படம் எடுக்கும் டைரக்டரா, 12 கோடி ரூபாய் டைரக்டரா என்று கேட்கும் நிலைதான் இன்று எங்கள் துறையில் இருக்கிறது. அளவுக்கு மீறிய விளம்பரங்கள் திறமை உள்ள இயக்குநர்களைக் கூட சாய்த்து விடுகின்றன. நிலவரம்பு மாதிரி விளம்பர வரம்பு ஒன்று வைத்தால் நல்லது. இல்லையானால் நாங்கள் எல்லாம் 2 கோடி டைரக்டராகவே இருந்து விட்டுப் போகும் நிலைமை வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது ’ என்று தன் பய உணர்வை வெளிப்படுத்தினார்.

தமிழில் வந்துள்ள படங்களிலேயே, கதை வசனம், தொழில்நுட்பம் என்று எல்லா அடிப்படையிலும், தேவர்மகன் மிகச் சிறந்த படமாக விளங்குகிறது என்றார் மருது. அதனை வழிமொழிந்தார் லிங்குசாமி.

நல்ல திரைப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சில நல்ல கருத்துகளைத் தமிழச்சி தங்கபாண்டியன் முன்வைத்தார். நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட், தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலும் சின்னச் சின்ன உத்திகளின் மூலம், எப்படி நவீனத்தைக் கொண்டுவந்தார் என்பதை ஜி.பி.கிருஷ்ணா விளக்கினார்.

பாலுமகேந்திராவின் பேச்சில் ஓர் அரிய செய்தி வெளிப்பட்டது. தொழில் நுட்பத்தில் இன்றைய திரைப்படம் மிக உயர்ந்து நிற்பதை அவர் சுட்டிக்காட்டினார். பழைய திரைப்படங்கள், ஒளிப்பதிவு செய்யப்பட்ட வானொலி நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் இருந்தன என்பதை மறுக்க முடியாது என்றார். அன்றைக்கு இருந்த தொழில் நுட்ப வளர்ச்சியில் அவ்வளவுதான் செய்ய முடிந்தது என்று கூறிய அவர், அந்தப் படங்களைப் பார்த்தும், ரசித்தும் அவற்றுள் ஊறியும் வளர்ந்தவன்தான் தான் என்பதையும் எடுத்துச் சொன்னார். இன்றைய வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, பழையனவற்றைத் திரைப்படங்களே இல்லை என்றுகூட இன்றைய இளைஞர்கள் கூறிவிடலாம் என்ற அவர், அன்றைக்கும் இன்றைக்குமான படங்களுக்கு இடையில் இருந்த ஒரு மிகப்பெரிய வேறுபாட்டை மட்டும் நாம் மறந்துவிட்டோம் என்றார். ‘அன்றும் இன்றும் திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கானவைதான் என்றாலும், இன்று நாம் ஆரோக்கியமான பொழுதுபோக்கை இழந்துவிட்டோம் ’ என்பது பாலுமகேந்திராவின் ஆதங்கமாக இருந்தது.

ஆரோக்கியமான பொழுதுபோக்கு என்பது, எத்தனை பொருள் செறிந்த தொடர் என்று எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. வானளவு தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், அக்கலை சமூக மேம்பாட்டுக்குப் பயன்படவில்லை என்று சொன்னால், ஆகாய விமானத்தில் அழுக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாகத்தானே அது முடியும். தொழில் நுட்பத்தோடு சேர்ந்து சமூக அக்கறையும் வளர்வதே ஏற்றதாகவும், ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்கும் என்ற எண்ணத்தை பாலுமகேந்திராவின் உரை நமக்கு உணர்த்தியது.

மிஷ்கின் மிகவும் கோபப்பட்டார். நந்தலாலா என்னும் நல்ல படத்தை நம் தமிழர்கள் வரவேற்கவில்லையே, பிறகு எப்படி நாங்கள் நல்ல படம் எடுப்பது என்றார். அடுத்த படத்தில் குத்துப்பாட்டு வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தினார். ஒரு நாளைக்கு நான்குமணிநேரம்தான் தூங்குவதாகக் குறிப்பிட்ட அவர், அப்படி உழைத்தும் அதற்கேற்ற பயன் இல்லையே என்பது அவருடைய வருத்தம்.

மிஷ்கின் மீது கோபப்பட்டார் எழுத்தாளர் இராமகிருஷ்ணன். உலகிலுள்ள மக்கள் பலரும்தான் உழைக்கிறார்கள். தாங்கள் மட்டுமே தூக்கமின்றி உழைப்பதாகத் திரைப்படத்துறையினர் ஆதங்கம் கொள்வது நியாயமில்லை என்றார். விண்வெளி ஆய்வு உள்ளிட்ட  பிற துறையினர் தங்களின் தவறுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் உங்களுக்கு நல்லவற்றை ரசிக்கும் பக்குவம் இல்லை என்று சொல்லி நம்மையே குற்றவாளிகள் ஆக்குகின்றனர் என்றார்.

படம் எடுப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள கல்லூரிகள் உள்ளன. படத்தை ரசிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளவும் பள்ளிக் கூடத்தில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது பாலுமகேந்திராவின் வேண்டுகோள்.

எடிட்டர் லெனின் வழக்கம் போல் காரசாரமாகப் பேசினார். ‘ இப்போதெல்லாம் இயக்குநர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பதில்லை. நான்தான் இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கிறேன் ( ணூ லிஐயிதீ உஜுலிலிவிe மிஜுe dஷ்reஉமிலிrவி ) ’ என்று பேசியது ‘தொழில் செருக்காக ’ இருக்கலாம். சிறந்த படங்களைத் தேர்வு செய்ய அமைக்கப்படும் குழுக்களில் நீதிபதிகள் எதற்காக, திரைப்படங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார். பிறகு தமிழச்சி தங்கபாண்டியனைப் பார்த்து, நீங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் இதனைச் சொல்லுங்கள் என்றார்.

முரண்பட்ட கருத்துகள் இடம் பெற்றாலும், பயனுள்ள தகவல்களையும் வெளிப்படுத்திய இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த தமிழ்ச் சங்கமத்திற்கு, குறிப்பாக கவிஞர் இளைய பாரதிக்கு நம்முடைய பாராட்டுகள்.

-----------------------------------

Pin It