' வேலியே பயிரை மேயலாமா ' என்று கேட்பார்களே, அப்படி ஒரு மனச்சாட்சி இல்லாத காரியத்தை, இந்திய அரசாங்கம் செய்திருக்கிறது. ' இந்திய ‡ இலங்கைக் கடல் எல்லையில் 5 கடல் மைல் தூரத்திற்குத் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்க வேண்டும் ' என்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் ஒரு பிரமாணப் பத்திரம் பதிவு செய்திருக்கிறது மத்திய அரசின் கடலோரக் காவல்படை.   இந்திய அரசு தமிழர் விரோத அரசு என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது. ஈழத் தமிழர் பிரச்சினையானாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர் குறிப்பாகத் தமிழக மீனவர்கள் பிரச்சினையானாலும் சரி, எள் முனையளவும் அக்கறையற்ற போக்கினையே மத்திய அரசு மேற்கொண்டு வந்திருக்கின்றது. கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தது, ஈழப்போரின்போது இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்தது, இப்போது மீனவர்களுக்கு எதிரான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது என மத்திய அரசின் தமிழர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை 700க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் மோசமாகக் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படகுகள், வலைகள், உயர் ரக மீன்கள் என கோடிக்கணக்கான ரூபாய்கள் வரை பொருளாதார இழப்பினைச் சந்தித்திருக்கின்றனர். ' உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது ' என்று விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வார்கள். நம்முடைய மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிர்கூட மிஞ்சுவதில்லை என்ற கொடுமையான சூழ்நிலையை இன்று நாம் பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணமான, இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டிய இந்திய அரசு, சொந்த மக்களுக்கு எதிராக மல்லுக்கு நிற்பதை எண்ணிப் பார்க்கவே கேவலமாக இருக்கிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகக் குறுகிய கடல் பரப்புதான் உள்ளது. அதில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான பகுதி மிக மிகக் குறுகியது. கரையிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவுவரை விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று கடல் மைல் தொலைவு பவளப் பாறைகள் நிறைந்த பகுதி. அங்கே மீன் குஞ்சுகள்தான் இருக்குமே ஒழிய, பெரிய மீன்கள் கிடைக்காது. அதைத் தாண்டிச் சிறிது தொலைவு சென்றாலே கச்சத் தீவு வந்துவிடும். அத்தோடு இந்திய கடல் எல்லை ஏறத்தாழ முடிந்துவிடும். கச்சத் தீவுக்கருகில்தான் நல்ல வகை மீன்கள் கிடைக்கின்றன என்கின்றனர் மீனவர்கள். ஆனால் கச்சத்தீவை நெருங்கினாலே, இலங்கைக் கடற்படைப் படகு சீறிப்பாய்ந்து வந்து, நம்முடைய மீனவர்களைச் சின்னா பின்னப் படுத்திவிடுகின்றது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையில்தான் தமிழக மீனவர்கள் தொழில் பார்த்து வருகின்றனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, புதிதாக ஒரு தடையை வேறு போட வேண்டும் என்கிறது மத்தியக் கடலோர காவல்படை.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாக இலங்கை அரசு ஒரு கடிதம் எழுதியவுடன், எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதுகிறது. இத்தனைக்கும் இலங்கை அரசு, இந்தியப் பிரதமருக்கு அந்தக் கடிதத்தை எழுதவில்லை, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திற்குத்தான் எழுதியது. இலங்கை அரசின் ஒரு கடிதத்திற்குக் கொடுக்கின்ற மதிப்பைக்கூட, நடுக்கடலில் இலங்கையால் சுட்டுக் கொல்லப்படும் தமிழ் மீனவர்களின் நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு கொடுக்க மறுக்கிறது இந்திய அரசு. துக்ளக்கில் ' துர்வாசர் ' என்னும் கோடாரிக்காம்பு ஒன்று இராமேஸ்வரம் மீனவர்கள் மீதுதான் தவறு என்று எழுதி ' விசுவாசத்தைக் ' காட்டுகிறது.

கடல்சார் படிப்புகளை முறையாகப் படித்துத் தேறிய கப்பல் மாலுமிகளே சில நேரங்களில் எல்லைகளைத் தாண்டிவிடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், இந்திய அமைச்சர் ஒருவர், இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட்டதையும், பிறகு பாகிஸ்தான் இராணுத்தினர் அவரை மீண்டும் இந்திய எல்லைக்குக் கொண்டு வந்து சேர்த்ததையும் நாம் அறிவோம். நிலப்பகுதி எல்லைக் கோட்டை, அதுவும் ஒரு அமைச்சரே தெரியாமல் தாண்ட நேரும்போது, பட்டறிவை (அனுபவம்) மட்டுமே துணையாகக் கொண்டு  மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் எல்லை தாண்ட நேர்வது இயல்பான நிகழ்வுதானே! அப்படிப் பட்ட நேரங்களில், அவர்களைக் கைது செய்து, எச்சரித்து அனுப்பி விடுவதுதான் உலக வழக்கம். இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததே இல்லையா? அவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை எப்படி நடத்தியது? நல்ல உணவு கொடுத்து உபசரித்து, அவர்கள் பிடித்த மீன்களை இங்கே ஏலம் விட்டு, அந்தப் பணத்தை அவர்களிடமே சல்லிக்காசு உள்படச் சரியாகக் கணக்குப் பார்த்துக் கொடுத்துப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைத்தது. இதிலிருந்து இந்திய அரசுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இலங்கைதான், தமிழ்நாடு அன்று என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கச்சத் தீவை,' எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறைகளால் ஆனது ' என்று மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அலட்சியப்படுத்தியதன் விளைவுகளை மிகவும் மோசமாகத் தமிழ்நாடு இன்று சந்தித்து வருகின்றது. கச்சத் தீவை திரும்பப்பெற வேண்டும், அதன் மீது தமிழர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் மத்திய அரசு கண்டிப்புக் காட்ட வேண்டும் என்பதெல்லாம் சரியான  பார்வைகள்தான். அதற்கான செயல்பாடுகளை முன்னைவிடத் தீவிரமாகவும், ஒற்றுமையுடனும் தமிழக அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது உடனடி தேவையாகும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தும் ஒவ்வொரு முறையும், மத்திய அரசிடம் முறையிடுவதும், அவர்களும் விருந்துக்குப் போகும்போது, ஒப்புக்கு இராஜபக்சேவிடம் இதைப்பற்றிப் பேசுவதுமாக ஓர் ஓரங்க நாடகத்தை இந்திய அரசு அரங்கேற்றிக் கொண்டிருந்தது. இனி அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இலங்கை இராணுவம் என்ன உங்களைக் கொல்வது, இனி நானே உங்கள் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுகிறேன் என்று முதல் ஓலையை நீதிமன்றத்தின் மூலமாக அனுப்பிவிட்டது மன்மோகன்சிங் அரசு. மாநில அரசின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் கண்டனம், சமூக அக்கறையுள்ளவர்களின் பொதுநல வழக்குகள் என மத்திய அரசின் மீது எதிர்க்கணைகள் தொடுக்கப்படுகின்றன. இதற்கு மேல் என்ன செய்வது?

தமிழ்நாட்டிற்கென கடலோரக் காவல்படை இருக்கிறது. துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பாதுகாப்பை நாமே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

Pin It