ஏரிகள் நிரம்பும் போதெல்லாம், எங்கெங்கிருந்தோ பறவைகள் வரும் என்பது போல, தேர்தல்கள் வரும்போதெல்லாம், புதிய புதிய கூட்டணிகள் வரும். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது, இருந்த கூட்ட ணிகளும் உடைந்து சிதறிவிட்டன. மும்முனைப் போட்டி, நான்முனைப் போட்டி என்பதை யயல்லாம் தாண்டி, பன்முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று கலைஞர் அறிவிக்கும் முன்பே, பா.ம.க. விலகிப் போய்விட்டது. கலைஞரின் அறிவிப்பால், காங்கிர சோடு சேர்ந்து, விடுதலைச் சிறுத்தைகளும் விடுபட்டுப் போய்விட்டது. தன்னிச்சையான அறிவிப்பு, திராவிடக் கட்சிகளின் ஏகாதிபத்திய மனோபாவத்தைக் காட்டுவதாகத் தொல். திருமாவளவன், கடுமையா கக் குற்றஞ்சாட்டினார். எனினும், ‘திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசிவரும் மருத்துவர் ராமதாசோடு நீங்கள் நெருக்கமும், உறவும் வைத்துள்ளீர்களே... அது தி.மு.க.விற்குக் கசப்பை ஏற்படுத்தியிருக்காதா?’ என்று ‘புதியதலைமுறை’ தொலைக்காட்சியில் அவரிடம் கேட்கப்பட்டபோது, உறவு வேண்டும் என்று நினைத்தால், எந்தக் கசப்பையும் பொறுத்துக் கொள்ளலாம் என்று விடையிறுத்தார். அந்த விடை முழுமையானதாக இல்லை. இவ்வாறு தி.மு.க.அணி பிரிந்து போனது. குறிப்பாகக் காங்கிரசை விட்டுப் பிரிந்ததில் தமிழகமெங்கும் உள்ள தி.மு.க.வினரும், தி.மு.க. ஆதரவாளர்களும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

இந்த முடிவைக் கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே எடுத்திருந் தால், தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு மேலும் கூடியிருக்கும் என்பது பலரது கருத்தாக இருந்தது. அ.தி.மு.க. கூட்டணி பிரிந்துபோன விதம் வேறு விதமானது. தி.மு.க.வைப் போல், உள்ளாட்சித் தேர்தலுக்குக் கூட்டணி தேவையில்லை என்று ஜெயலலிதா அறிவிக்கவில்லை. மாறாக, தோழமைக் கட்சிகளுடன் பேசுதவற்கென்றே, தன் கட்சிக்குள் ஒரு குழுவை அமைத்தார். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அக்குழு தங்களை அழைக்கும் என்று கூட்டணிக் கட்சிகள் காத்திருந்தன.

அழைப்பு வரவில்லை. 10 மாநகராட்சித் தொகுதிகளுக்கும், 86 நகராட்சிகளுக்குமான வேட்பாளர் பட்டியல்தான் வெளிவந்தது. கூட்டணிக் கட்சிகள் அதிர்ந்தன. தாங்கள் கூட்டணியில் இருக்கி றோமா, இல்லையா என்பதே தெரியாமல் தவித்தன. அரசியல் அரிச்சுவடியைக் கூடச் சரியாக இன்னும் கற்காத தே.மு.தி.க. ஒரு செய்தியில் சரியாக இருந்தது. அழைக்காதவர்களின் வீட்டுக் கதவைத் தாங்களே போய் வலிந்து தட்டாமல், மெளனம் காத்தது. தங்கள் கட்சியின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது. ஆனால், நீண்ட நெடுங்காலமாய் அரசியல் தத்துவங்களை எல்லாம் உள்வாங்கிச் செரித்துக் கொண்ட பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோ, மானம், மரியாதை எல்லாம் பார்க்கக்கூடாது என முடிவு செய்து, மதியாதார் தலைவாசலை மகிழ்ச்சியோடு மிதித்தார்கள். பட்டியலை அ.தி.மு.க. மாற்றி வெளியிடும் என்று இவர்களே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.

யாரும் அழைக்காமலே, இடதுசாரித் தோழர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப் போனார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, தன் அடுத்த பட்டியலை வெளியிட்டு, அ.தி.மு.க. அவர் களை அவமானப்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு லேசாக உறைத்தது. வருத்தம் தோய்ந்த அறிக்கையை வெளியிட்டார்கள். ஆனால், இந்தியப் பொதுவு டைமைக் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியனோ, தங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை, தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் என்றார்.

ஜெயலலிதாவே அயர்ந்து போய்விட்டார். அவமதித்து, அவமதித்துக் களைத்துப் போய்விட்டார். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்களே, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போனார். வெளியேறிய மார்க்சிஸ்டுகள், தங்களுக்குத் தெரிந்த அடுத்த அரசியல் மேதையான விஜயகாந்தை நோக்கிப் படையயடுத்தனர். காரல் மார்க்ஸ், இலெனின் எழுத்துகளில் ஏதேனும் சந்தேகம் வந்தால் கூட அவரிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியிருப்பார்கள் போலும்! ஆனால் அப்போதும், தா. பாண்டியன் குழுவினர் போயஸ் தோட்ட வாசலில் நின்று, போவோர் வருவோரிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர். பேச்சுத் துணைக்கே ஆளில்லாமல் போன பிறகு, அவர்களும் விஜயகாந்தை நோக்கி விரைந்து வந்தனர்.

அ.தி.மு.க. அணியிலிருந்து புதிய தமிழகமும் வெளிவந்தது. ஜெயலலிதா வருந்தவும் இல்லை,திருந்தவும் இல்லை என்னும் உண்மையைக் கண்டுபிடித்து, டாக்டர் கிருஷ்ணசாமி அதை நேர்காணல் ஒன்றில் வெளியிட்டார். சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும் இந்த உண்மையை டாக்டர் கிருஷ்ணசாமி சிரமப்பட்டு, அவமானப்பட்டுக் கண்டு பிடிப்பதற்குள், பரமக்குடியில் ஏழு உயிர்கள் போய் விட்டன. குஜராத் மோடியின் உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா அனுப்பி வைத்த பொழுது, அதனையும் கூடக் கூட்டணி தர்மத்திற்காகப் பொறுத்துக்கொண்டார்களாம் மனித நேய மக்கள் கட்சியினர். சோ ராமசாமியின் ஆலோசனைகளைக் கேட்டு, இசுலாமிய மக்களுக்கு ஜெ. நன்மைகள் பல செய்வார் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள் போலிருக்கிறது. இதனைவிட அவர்கள் பி.ஜே.பி.யோடு நேரடியாகவே கூட்டணி சேர்ந்திருக்கலாம். இப்போது அவர்களும் வெளியேறிவிட்டனர்.

செ.கு. தமிழரசன் மட்டும்தான், தன் கட்சி (அப்படி ஒன்று இருக்கிறதா?) இன்னமும் அ.தி.மு.க. அணியில் உள்ளதாக அறிவித்துள்ளார். இவரோடு சேர்ந்து மதுரை சேதுராமன், பார்வர்டு பிளாக் பிரிவுகளில் ஒன்று ஆகியோர் பல நாள்கள் அலைந்து சில வார்டுகளைப் பெற்றுள்ளனர். சந்தைக் கூட்டத்தில் சரத்குமாரும் அலைந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஓரிரு வார்டுகள் கிடைக்காமலா போய்விடும்? காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், ஐ.ஜே.கே., பா.ஜ.க., அனைவரும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தம், பல ஆண்டுகளுக்குப் பிறகு,தமிழ்நாட்டில் பன்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலை ஜனநாயகத்திற்கு நல்லதுதான். பொதுவுடைமைக் கட்சிகளைத் தவிர, வேறு எவரும் அடுத்தவர்களின் தோள்களைத் தேடாமல், தனித்தனியே பயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உண்மையான வலிமை என்ன என்பதை ஓரளவு இப்போது தெரிந்து கொண்டுவிட முடியும். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலாக இருந்தால் முழுமையாகவே தெரிந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. தனிமனிதச் செல்வாக்குகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பங்கு உண்டு என்பதால், இப்போது முடிவுகளை வைத்து முழுமையாகக் கணித்துவிட முடியாது. எனினும், மாநகராட்சிகளில் பெரும்பான்மையாகவும், நகராட்சிகளில் அதற்கு அடுத்த நிலையிலும் உண்மைகள் புரியும்.

முதலிரண்டு இடங்களில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தாம் உள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர்கள் இருவருந்தான் நேரடிப் போட்டி நிலவப் போகிறது. எனினும் இந்தத் தேர்தல் மூலம், மூன்றாவது இடத்தில் யார் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

விஜயகாந்தை மூன்றாவது இடத்திற்குக் கொண்டுவருவதற்குப் பல ஊடகங்கள் உதவுகின்றன. காங்கிரஸ் கட்சி 14 இலட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்திருப்பதாகச் சொல்லி, அரசியல் விமர்சனங்களை எல்லாம் அதிர வைத்துள்ளது. (அப்பாடா, அது எவ்வளவு பெரிய உண்மை என்பது 21ஆம் தேதி தெரிந்துவிடும் ) சட்டமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, புதிய நிலைப்பாட்டினை எடுத்துள்ள ம.தி.மு.க.விற்கு ஏறுமுகம் இருக்கும் என்று சிலர் நம்புகின்றனர்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கோரிக்கை என்னவெனில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும், கூட்டணிகளே இல்லாமல், கட்சிகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான். அப்படிச் சந்திக்கும்போது, அவரவர் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில், இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதாவது, ‘விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்’ என்று சொல்லப்படும், ஜனநாயகத் தேர்தல் இட ஒதுக்கீடே சரியானதாக இருக்கும். அந்த முறை நடைமுறைக்கு வருமானால், ஒரு கோடி வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு 100 இடங்களும், 90 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு 90 இடங்களும் கிடைக்கும். இப்போது இருப்பதைப் போல, 1 கோடி வாக்குகளைப் பெற்றவர்களுக்கு 185 இடங்களும், 90 இலட்சம் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு வெறும் 5 இடங்களும் என்னும் போலியான நிலை இருக்காது. வாக்குகள் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுமானால், சின்னக் கட்சிகளுக்கும் உரிய இடங்கள் கிடைக்கும். வெறும் கடிதத் தாள்களை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகள் பலவும், சு. சாமி போன்றவர்களின் ஒற்றை உறுப்பினர் கொண்ட கட்சிகளும் காணாமல் போய்விடும். 14 இலட்சம் புதிய வாக்காளர்களைச் சேர்த்து வைத்திருக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளும், தங்கள் வாக்குகளை இனி யாருக்கும் வாரி வழங்க வேண்டிய தேவை இருக்காது.

எனவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், மக்களாட்சிக்கான புதிய கதவுகளைத் திறந்துவைக்கும் என்று பலரும் நம்புகின்ற அதே வேளையில், மாநிலத் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நிற்காமல், நேர்மையாகத் தேர்தலை நடத்துமா என்ற ஐயத்தையும் உருவாக்கியுள்ள தேர்தலாக இருக்கிறது.

Pin It