2002ஆம் ஆண்டு, குஜராத்தில், இசுலாமிய மக்களின் மீது கடும் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. 2500க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. குடிசைகள் கொளுத்தப்பட்டன. சொத்துகள் சூறையாடப்பட்டன. அந்தக் கலவரங்களின் கதாநாயகர், அன்றும் இன்றும் குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி.

இப்போது அவர் 3 நாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார், எதற்குத் தெரியுமா? மத நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாம். ‘எல்லா மதங்களுக்கும் இடையில் என்று மோடி சொல்கிறார், எனவே இஸ்லாமிய மக்களாகிய நீங்களும் அதில் அடக்கம்தானே?’ எனக் கேட்டபோது, பேராசிரியர் ஹாஜாகனி அருமையாக விடைசொன்னார், ‘ஆமாம், எங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்’ என்று. அன்று கலவரத்தைத் தூண்டியவர், இன்று அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கிறாரே... இது  அவரிடம் ஏற்பட்டுள் மாற்றமா அல்லது மாற்றம் போலக் காட்டப்படும் தோற்றமா? தெளிவாகத் திட்டமிடப்பட்ட நாடகத்தில் முதல் சில காட்சிகள் இப்போது அரங்கேறிக் கொண்டுள்ளன. குஜராத் கலவரத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர், சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று அன்று நடந்தவைகள் விரும்பத்தகாதவைகள்தான் என்றார். தனக்கு அவை வருத்தமளிக்கின்றன என்றார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த எச். ராஜா போன்றவர்களும், அன்று குஜராத்தில் நடந்தவை ‘துரதிருஷ்டவசமானவை’ என்று தொலைக்காட்சியில் கூறுகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இப்போதே தயாராகின்றனர் என்பதுதான் இதன் பொருள். அடுத்த பிரதமர் வேட்பாளர் தான்தான் என்பதை மறைமுகமாக மோடி அறிவிக்கிறார். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அத்வானி ரதயாத்திரை நடத்துகிறார். இது அவர்களுக்குள் நடக்கும் யுத்தம். ஊடகங்கள் மோடியை முன்னுக்குக் கொண்டுவர முயல்கின்றனர். அன்னா ஹசாரேக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் குஜராத்தைப் பாருங்கள் என்கின்றன நம் பத்திரிகைகள்! அப்படி என்ன  அங்கே தேனும், பாலும் சேர்ந்து ஓடுகிறது என்று நமக்கு விளங்கவில்லை. பன்னாட்டு மூலதனங்களுக்கான கதவை அங்கு அவர் அகலத் திறந்து விட்டிருப்பதால், சில மேலை நாடுகளின் ஆதரவும் அவருக்குக் கிடைத்துள்ளது. உலகமயமாதலுக்கு வழிவகுத்த காங்கிரசையே தூக்கிச் சாப்பிட்டு விடுகின்ற அளவுக்கு, பா.ஜ.க., குஜராத்தில் பன்னாடடு நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றது.

பாரத தேசம், சுதேசி, சுயபொருளாதாரம் என்பன பா.ஜ.க.வின் முழக்கங்கள். ஆனால், குஜராத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? 2001இல் மோடி ஆட்சிக்கு வந்தபோது, அங்கு பன்னாட்டு மூலதனம் 69ஆயிரம் கோடியாக இருந்தது. இன்று அது 21 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் ‘ சுதேசிகளின் ’ லட்சணம்! பிறகு ஏன் அமெரிக்கா அவரைப் புகழ்ந்து தள்ளாது?

ஆனால் இத்தனைக்குப் பிறகும், இஸ்லாமிய மக்களின் நிலை அங்கு இரங்கத்தக்கதாகத்தான் உள்ளது. 50 சதவீதத்திற்கும் கூடுதலான இசுலாமியர்கள் வறுமையில் உள்ளனர் என்றும், 12 சதவீதம் பேர்தான் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர் என்றும், பயனுறு பொருளியல் ஆய்வு மன்றத்தின் தேசியக் குழு (National Council for Applied Economic Research) கூறுகின்றது. பொருளாதார மேம்பாடுகள் இன்றியும், கல்வி வாய்ப்புகள் இன்றியும் அங்கு வாடும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதும் செய்யாமல், மத நல்லிணக்கம் பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை? அதைத்தான் அங்கே மோடி செய்து கொண்டிருக்கிறார். அந்த மோடியை இங்கேயுள்ள நம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆதரிக்கின்றார். அந்த ஜெயலலிதாவைத் தமிழ்நாட்டு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களான ஜவாஹிருல்லாவும், ஹைதர்அலியும் ஆதரிக்கின்றார்கள்.

மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவைக் கொள்கை உறவு என்றே கூறவேண்டும். அதாவது இந்துத்துவா உறவு. ஆனால் ஜெயலலிதாவோடு இங்குள்ள இஸ்லாமியக் கட்சிக்களும், இடதுசாரிக் கட்சிகளும் கொண்டுள்ள உறவைத்தான் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மோடி முதலைமைச்சராகப் பதவியேற்றால், அங்கு ஜெயலிதா செல்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றால், இங்கு மோடி வருகின்றார். இரண்டு காட்சிகளையும் கண்டு சோ மகிழ்கிறார். சோ மகிழ்வதில் நியாயம் இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி மெளனம் சாதிப்பதில்தான் நியாயம் இல்லை. பதவியேற்புக்கு மட்டும் என்றில்லாமல், மோடியின் உண்ணாவிரதத்திற்கும் தன் ஆதரவுக் கரங்களை ஜெயலலிதா நீட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை நேரில் அனுப்பித் தன் ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.

எங்கேயோ உள்ள குஜராத்திற்குத் தன் சார்பில் இருவரை அனுப்பிய ஜெயலலிதா, தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் என்ன செய்தார்? கூடங்குளத்தில் ஒரு பெரிய பட்டினிப் போராட்டம். மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியாக்கும் அணு உலையை மூட வேண்டும் என்று கோரிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் களத்தில் இறங்கினர். நூற்றுக்கணக் கானவர்கள், காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் மக்களின் அச்சமும், அதன் விளைவாக எழுந்த போராட்டமும் எல்லாவிதத்திலும் நியாயமானது. தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறியுள்ள ஜப்பானில் கூட, நிலநடுக்கம், கடல்கோள் (சுனாமி) ஆகியன ஏற்பட்ட போது, நாடு நிலை குலைந்து போன செய்திகளைப் படித்தோம். இச்சூழலில் நம்மை அச்சம் சூழ்ந்து கொள்வது இயற்கைதானே! மேலும் அங்கு நடந்த போராட்டம் அரசுக்கோ, வேறு எவருக்குமோ எதிரான போராட்டமில்லை. தற்காப்பை முன்வைத்து நடத்தப்பட்ட, இன்றும் நடத்தப்படும் கோரிக்கைப் போராட்டம். கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம். அந்தப் போராட்டத்தைப் பார்வையிட, அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்ட, ஆறுதல் சொல்ல, முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்றாரா? மோடியைப் பார்க்க அனுப்பியதைப் போல, நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினாரா? மாவட்டச் செயலாளர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ அவரால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனரா? வேண்டாம், உள்ளூர் கவுன்சிலர்களையாவது அனுப்பித் தன் ஆதரவைத் தெரிவித்தாரா? ஒன்றுமில்லை.

அதுபோலவே, கோவை, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள், கூலி உயர்வு கேட்டுப் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் விசைத்தறிகள் உள்ளன. எட்டு இலட்சத்திற்கும் குறையாத மக்கள் பயனடைகின்றனர். எனவே இதுவும் மக்கள் போராட்டம். இப்போராட்டத் தையும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. ஐந்தாவது நாள் காலை, போராட்டப் பந்தலில் இருந்த ஒருவர் தொலைக்காட்சியில் கூறினார், ‘இன்று வரை எங்களை ஒரு அரசு ஊழியர் கூட வந்து பார்க்கவில்லை’ பரமக்குடி யிலோ, சாலை மறியல் செய்த ஒடுக்கப் பட்ட மக்கள மீது துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. மூன்று தமிழர்களின் உயிர்காக்கத் தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஏழு தமிழர்களின் உயிர்கள் ஓசையின்றி எடுக்கப்பட்டுவிட்டன. தூக்கில் ஏற்றக்கூடாது என்று நாம் கோரிக்கை வைத்தால், சரி...துப்பாக்கியால் சுடுகிறோம் என்கிறது இன்றைய தமிழக அரசு.

மோடியை ஆதரிப்பேன், மக்களைப் புறக்கணிப்பேன் அல்லது சுட்டுத் தள்ளுவேன் என்கிறார் ஜெயலலிதா. வாக்களித்த மக்கள்தான் விடைசொல்ல வேண்டும்.

Pin It