கலைகள் ஒரு தேசிய இனத்தின் அடையாளங்களுள் முக்கியமான கூறு. நவீன வாழ்வில் தமிழர்களின் தொன்மையான கலைகள் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன. தமிழ் மரபான ஆட்டக்கலைகளை, தெருக்கூத்து போன்றவற்றை மேடை நாடகங்கள் விழுங்கிய காலம் போய், மேடை நாடகங்களைத் திரைப்படங்கள் விழுங்கிய காலம் வந்தது. தற்போது, சினிமாவை அவசர நெருக்கடி மிகுந்த வாழ்க்கை தின்று கொண்டிருப்பதை நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.

கூத்து என்பது இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை உடையதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இன்று நாம் காணக்கூடிய தெருக்கூத்து என்ற கலைக்கு குறைந்தது 800 அல்லது 900 ஆண்டுகளாவது தொன்மை உண்டு.

koothu_341ஆனால் இன்று, தெருக்கூத்து, நவ நாகரிகப் பார்வையாளர்களால் பார்க்கப் படுவதில்லை. கிராமங்களில், கோயில் திருவிழாக்களில் என்று அங்கொன்றும், இங்கொன்றுமாக உயிர்பிடித்துக் கிடக் கிறது. இந்தத் தலைமுறை மட்டும் தெருக் கூத்தை உதறித் தள்ளுமானால் அடுத்த தலைமுறைக்குத் தெருக்கூத்து என்றால் என்ன என்று அடையாளம் காட்டத் துரும்பு கூட மிஞ்சப்போவது இல்லை.

“என்ன சார் தெருக்கூத்து? அதே பழைய கதை. தொட்டதுக்கெல்லாம் பாட்டு, ரசிக்க முடியாத ஒப்பனை, பழக்கப்பட்ட பழைய மெட்டுக்கள். தெருக்கூத்து பார்க்கிறது ரொம்ப போர் அடிக்கும்  சார் ” இப்படி நம்மில் சிலர் சலித்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? சில வேளைகளில் இந்தச் சலிப்புகள் நம் குரலாகக் கூட இருந்திருக்கின்றன.

இதை முற்றிலுமாக மறுக்கிறது புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைக் தெருக்கூத்து மன்றம். தெருக்கூத்தை அடுத்த தலைமுறைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் முனைப்புடன் இயங்குகிறது இந்த மன்றம். இராமாயனம், மகாபாரதத்திலும் கூட இதுவரை கூத்தாக  ஆகாத பல  கதைகளைக் கூத்தாக்கியிருக்கிறது இம்மன்றம். பாரதியின் பாஞ்சாலி சபதம் தெருக் கூத்தாகியிருக்கிறது. அது மட்டுமல்ல, இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியேல் கார்சியா மார்க்குவெஸ்ஸின் சிறுகதை ஒன்றைத் தெருக்கூத்தாக ஆக்கியிருக்கிறார் இக்குழுவின் நிறுவனர் கண்ணப்பத் தம்பிரான்.

தெருக்கூத்தை இளைய தலைமுறைக்குக் கற்றுத்தந்து அதை மறுஉயிர்ப்புச் செய்ய முயலுகிறது புரிசை தெருக்கூத்து மன்றத்தின் கூத்துப் பயிற்சிப் பள்ளி.

யுனெஸ்கோவின் கலாச்சார வரைபடத்தில் புரிசை கிராமமும் இடம்பெற்றுள்ளது. காரணம் என்ன தெரியுமா? வட தமிழகத்தின் செய்யாறுக்கு  அருகிலுள்ள அந்த கிராமம், 300 ஆண்டுகளாகத் தெருக்கூத்தைத் தாங்கிப் பிடித்து வருகிறது என்பதுதான். கண்ணப்பத்தம்பிரான் என்ற புகழ்பெற்ற தெருக்கூத்து ஆசிரியரின் முன்னோர்கள் நான்கு தலைமுறையாகத் தெருக்கூத்து ஆடி வருபவர்கள். கண்ணப்பத் தம்பிரான் தனது வாழ்நாளில் தெருக்கூத்துக்குப் புதிய வடிவம் அளித்து உலகமெங்கும் தமிழர் கலை எனக்கொண்டு சென்றவர். 2003ஆம் ஆண்டு கண்ணப்பத் தம்பிரான் மறைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு,  அவருடைய புதல்வர்கள் கண்ணப்ப காசி, கண்ணப்ப சம்பந்தன் இருவரும் இந்த தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்கள். கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பயிற்சியின் இறுதியில் ஒரு தெருக் கூத்தையும் அரங்கேற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில் பயில வயது ஒரு தடையன்று. ஆர்வமுடைய யார் வேண்டு மானாலும் மாணவராகச் சேர்ந்து பயிலலாம். சென்னை, மதுரை, பாண் டிச்சேரி, பெங்களூரு என்று எத்தனையோ இடங்களிலிருந்தும் ஆர்வமுடையவர்கள் வந்து பயிற்சி பெற்றுள்ளனர். ஏன், வெளிநாட்டினரும் கூட, ஆர்வத்துடன் இப்பள்ளியில் மாணவராகச் சேர்ந்து பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். புரிசை மற்றும் அக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் மாணவர்கள் இளைஞர் கள் வந்து தெருக்கூத்தைக் கற்றுக் கொள்ளுகின்றனர்.

“ தெருக்கூத்தைக் கற்றுக் கொள்றவங்க, தெருக்கூத்து கலைஞராக ஆகணும்னு அவசியமில்ல. கற்றுக்கொள் ளும்போது, இந்தக் கலை மீது ஒரு மரியாதை வரும், ஈர்ப்பு வரும். தெருக்கூத்து என் தமிழ் இனத்தோட மரபுக் கலை, இதை அழிய விடாமக் காப்பாத்துறது என்னோட கடமை அப்படின்னு ஒரு சொந்த உணர்ச்சி வரும். அதுவே தெருக்கூத்தை அழியவிடாமப் பாதுகாக்கும் ” என்கிறார் தெருக்கூத்துப் பள்ளியின் ஆசிரியர் கண்ணப்ப சம்பந்தன்.

இந்தியத் திரைப்பட மேதைகளில் பலர் வங்காளத்தில் பிறந்தவர்கள். சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென் ஆகியோர் வங்காளத் திரைப்படங்களை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றவர்கள். ஆனால் இன்றும் வங்காளத்தில் திரைப்படத்திற்கு இணையாக நாடகமும் நிற்கிறது. வங்காளிகளின் மரபுக் கலைகளும் வாழ்கின்றன.

இந்திய இலக்கியம், திரைப்படம் ஆகியவற்றில் சிகரத்தைத் தொட்ட மலையாள தேசத்திலும் திரைப்படமும் வாழ்கிறது; நாடகமும் வாழ்கிறது ; மலையாளிகளின் மரபுக் கலைகளும் வாழ்கின்றன.

தமிழ் நாட்டுக்கு மட்டும் என்ன சாபமோ தெரியவில்லை, இங்கே ஒன்றை ஒன்று தின்று செரிக்கிறது. மரபுக் கலைகள் காலத்தால் முந்தியவை; நம் பண்பாட்டின் அடையாளங்களைத் தாங்கி நிற்பவை ; அவை காப்பாற்றி வைக்கப்பட வேண்டும்.

புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தினரைப் போல் மரபுக் கலைகளைப் பயிற்றுவிக்கவும், அடுத்த தலைமுறைக்குப் அக்கலைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், ஏனைய கலைஞர்களும் முன்வர வேண்டும். அதில் பங்கேற்பதற்குத் தமிழ் இளைஞர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.

Pin It