1999-ஆம் ஆண்டு கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தரு பேராசிரியராகப் பணிபுரிய வந்திருந்தார். ஒரு பெரும் ஆய்வுத் திட்டத்துடன் உலகத் தமிழிலக்கிய வரலாற்றைப் பல தொகுதிகளாக உருவாக்கும் பெரும்பணியில் பேராசிரியரின் வழிகாட்டுதலை வேண்டி, அப் போதைய உ.த.ஆ.நிறுவனத்தின் இயக்குநர் இராமர் இளங்கோ அவரை அழைத்திருந்தார். பேராசிரியர், மெரினா வளாகத்தில் அமைந்திருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் ஓராண்டு தங்குவதாக ஏற்பாடு. அவருடைய எழுத்துப் பணிகளில் உதவ, ஓர் உதவியாளர் தேவை ஏற்பட்டது. பேராசிரியர் வீ.அரசு, அப்பணிக்குச் செல்லுமாறு என்னைப் பணித்தார். இப்படித்தான் அப்பெரும் பேறு எனக்குக் கிட்டியது.

ka_sivathambi_340சில கட்டுரைகளை - குறிப்புகளைப் பேராசிரியருக்குப் படித்துக் காட்டுவது, பேராசிரியர் சொல்லச் சொல்ல எழுதுவது எனது பணி. உதவியாளராகச் சேர்ந்த நான் பேராசிரியரது தூய அன்பின் அணைப்பால் ‘பெறா மகன்’ ஆனேன்.

தனக்குச் செய்யப்படும் சிறுசிறு உதவிகளுக்கும் தகுதிக்கு மீறி, நன்றி பாராட்டும் பண்பு பேராசிரியரிடமிருந்தது. நாம் செய்யும் சிறிய உதவியைக் கூட, நூறுமுறை நூறு பேரிடம் சொல்லிச் சொல்லி நன்றி தெரிவிப்பார். எழுத்துப் பணிகளில் உடனிருந்த போது சொல்லச் சொல்ல எழுதியதற்குக்கூட, கட்டுரையில் பெயரைக் குறிப்பிட்டு அங்கீகரித்தார். எழுதப்படும் பொருண்மை குறித்த விவாதங்களில் சிறிய கருத்தைச் சொல்லியிருந்தால்கூட, அதனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். தன் புலமைச் செயல்பாடுகளுக்குச் செய்யப்படும் அணில் உதவியைக் கூட ஞாலத்தின் மாணப் பெரிதென வியந்து நன்றி பாராட்டினார். இங்குள்ள எந்த அறிஞரிடமும் பேராசிரியர்களிடமும் நான் கண்டிராத பண்பு இது. இப்பண்பைத் தன் இறுதிக் காலம் வரையிலும் தக்க வைத்திருந்தார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. இயற்கையாக அவரிடம் படிந்திருந்த இப்பண்பு தான் 1982இல் அ.மார்க்சையும் இணைத்துக் கொண்டு அவர் உருவாக்கிய ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ என்ற நூலுக்கு அடிப்படையாக அமைந்தது.

உடல்நிலை அவரை எவ்வளவு வருத்திய போதிலும் ஓயாது படித்தபடியிருந்தார் பேராசிரியர். அவருடைய உடலின் எடையளவு இடையறாது கற்று அறிவைச் சேகரித்திருந்தார் அவர். குறிப்பிட்ட எந்த ஆய்வுப் புலத்தையும் நுணுகி ஆராயும் தன்மையர் அவர். மொழிப் பயன்பாடு, சொற்கள் உருவாக்கம், பயன்படுத்தும் என்பதனை ஆழ்ந்து நோக்குவார். அதில் கண்டடைந்த விடயங்களை அடுத்த புலத்துடன் ஊடாடவைத்துப் புதிய முடிவுகளை எய்துவார். இவ்வகையிலான ஆய்வுச் செயற்பாடே அவரைப் பிற ஆய்வறிஞர்களிடமிருந்து வேறுபடுத்தியது எனலாம். இதுவே அவரை, ‘ஆய்வறிஞர்களின் ஆய்வறிஞராக’ உருவாக்கியது என்பதை உறுதிபடக் கூறலாம்.

‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ குறித்து அவர் கலாநிதிப் பட்டத்திற்கு ஆய்வு செய்தது நாடகத்தின் மீது அவருக்கிருந்த தீராக் காதலால் தான். இலங்கையில் நாடகத்தைக் கற்கை நெறியாக உருவாக்கியதில் பேராசிரியர் சிவத்தம்பிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தமிழ்நாட்டில் நாடகக் காரர்களுடன் அவர் பாண்குடித் தோழமை பாராட்டினார். காலச்சுவடு நடத்திய ‘தமிழினி 2000’ கருத்தரங்கின் ஒரு மாலை நாடக நிகழ்வில் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, பேராசிரியர் சே.இராமானுஜம் இருவருக்கிடையே அமர்ந்து மேடையில் பங்கேற்றதைச் சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டார். ‘தமிழ் நவீன அரங்கின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே அமர்ந்திருந்தது. தனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றே அவர் குறிப்பிட்டார்.

இசையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண் டிருந்தார் பேராசிரியர். சுமக்க முடியாத தனது பருத்த உடலைச் சுமந்துகொண்டு, நாரத கான சபாவின் படிக்கட்டுகளில் மூச்சிரைக்க ஏறி நடந்து, இருக்கையில் தன்னைத் திணித்துக்கொண்டு, இசைக் கச்சேரி இரசித்தது இப்போதும் கண்ணில் விரிகிறது. அவர் கச்சேரியை இரசிப்பதைப் பார்க்கக் கோடிக் கண்கள் வேண்டும். உற்சாகமாகி, குழந்தையைப் போலக் குதூகலித்து, கரவொலி எழுப்பி இரசிப்பார். டி.வி.சங்கர நாராயணன் முதலான மூத்த தலைமுறைப் பாடகர்களையும் இரசித்தார். சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற இளைய தலை முறைப் பாடகர்களையும் வியந்தார். ‘என்னமா பாடறானப்பா...’ என்று உருகிப் பாராட்டுவார். காருக்குறிச்சி அருணாச்சலம், டி.என்.இராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்த நிகழ்வைச் சுவைபடப் பேசுவார்.

‘தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும்’ பற்றி எழுதிய பேராசிரியர், தொடர்ந்து தமிழ்த் திரைப் படங்கள் குறித்து அவதானித்து வந்தார். அது குறித்த காத்திரமான உரையாடலையும் தொடர்ந்து நிகழ்த்தி வந்தார். பாரதிராஜாவின் சில திரைப் படங்களின் காட்சிகளை அணுஅணுவாக இரசித்து விளக்குவார். ஞானராஜசேகரனின் ‘பாரதி’ திரைப் படம் பார்த்துப் பாராட்டிக் கடிதம் எழுதி, அவருடைய இல்லத்திற்குச் சென்று சேர்க்கப் பணித்தார்.

பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் அவருடைய அறைக்கு வந்தவண்ணமிருப்பர். அனைவரையும் வரவேற்று, நேரம் ஒதுக்கி உரையாடுவார். இளைய ஆய்வாளர்களை மனந்திறந்து பாராட்டும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது. எனது முதல் நூலுக்கு அவரிடம் முன்னுரை கேட்டபோது, உற்சாகப்படுத்தி எழுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் கல்விப் புலம் சார் ஆய்வுகள் குறித்து மிகுந்த அக்கறையும் கவலையும் கொண் டிருந்தார் பேராசிரியர். இலங்கையில் மேற்கொள்ளப் படும் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வு, ஆய்வேடு குறித்த பெருமிதம் அவருக்கு எப்போதுமிருந்தது. ‘முனைவன் கண்டது முதல் நூல்’ என்ற நன்னூல் நூற்பாவினை மேற்கோள் காட்டி, முனைவர் பட்ட ஆய்வு எத்தகையது என்பதையும் அதனைக் காத்திரமாகவும் கனதியுடனும் செய்ய வேண்டுவது எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைப்பார்.

தனது சொந்த ஊரான கரவெட்டியை மிகவும் நேசித்தார் பேராசிரியர். தனது கிராமத்தை, பெற்றோரை, உறவினர்களை, நண்பர்களைக் குறித்துப் பேசும்போதெல்லாம் குழைவும் கனிவும் அவரிடமிருந்து வெளிப்படுவதைக் காணமுடியும். கலவரத்தின்போது சொந்த ஊரை விட்டு, உயிர் பிழைக்க வேண்டித் தப்பித்துக் கொழும்புக்குப் பயணப்பட்ட அந்தத் துயர இரவைப் பற்றி அவர் பேசும் போது கண்களில் ஈரம் படர்ந்திருக்கும். ஓடும்போது சுமக்கக்கூடிய சுமைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, வீட்டில் மீதமிருந்த பாத்திரங்கள் முதலானவற்றை வீட்டுக்கு நடுவில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்த அந்த நாளை நினைவுபடுத்திச் சொல்லும்போது குரல் தழுதழுக்கும். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பயின்ற, பல நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய அந்த நவீன மனிதனுக்குள் கிடக்கும் கரவெட்டிக்காரனை தரிசிக்கும்போது நமக்கு வியப்பு ஏற்படும்.

ஓயாத படிப்பு, சிந்தனை, எழுத்து என்று இயங்கிய பரபரப்பான வாழ்க்கையிலும் தன் குடும்பத்தை இரத்தமும் சதையுமாக நேசித்த நல்ல குடும்பத் தலைவராக அவர் இருந்தார். தன் மூன்று பெண் குழந்தைகளையும் வாஞ்சை மீதூர நேசித்தார். தனது மருமகன்கள், பேரக் குழந்தைகள் என எல்லோரிடமும் அள்ளித் தர அவரிடம் அன்பு கொட்டிக் கிடந்தது.

பேராசிரியரின் துணைவியார் அவருக்குத் தாயாகவும் இருந்தார். அவரது அத்தனை குடும்பப் பொறுப்புக்களையும் விருப்பத்துடன் அம்மையார் சுமந்தார். அதனாலேயே தனது பணிகளைப் பேராசிரியர் முழுமையாகக் கவனிக்க முடிந்தது. அறிவுஜீவியான தனது கணவரை, தந்தையை இவ்வளவு பெருமை பொங்கப் பார்த்த எந்தக் குடும்பத்தையும் இதுவரை நான் கண்டதில்லை. அவருடைய மகள்கள் வேறு வேறு துறையைச் சார்ந்திருந்தாலும் தங்கள் தந்தையது ஆய்வு, எழுத்துப் பரப்பின் மீது மிகுந்த மரியாதை கொண் டிருந்தார்கள். அவரது குடும்பத்தினர் தங்களது உறவினர்களோடு மட்டுமல்ல, பேராசிரியரின் புலமைநிலைப்பட்ட உறவுகளோடும் மனநெருக்கத் தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டனர்.

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி ஆய்வு உலகில் தனி ஒற்றை மரமாய் வாழ்ந்த வரல்லர்; ஆயிரம் விழுதுகள் பரப்பிய ஆலமர மாய் விகாசித்தவர். அந்த ஆலமரம் அடியோடு சாய்ந்த இவ்வேளை மனம் கனத்துக் கிடக்கிறது.

கா.சிவத்தம்பியின் நண்பர் கலாநிதி க.கைலாசபதி அகால மரணமடைந்தபோது, இப்படி எழுதினார் பேராசிரியர் து.மூர்த்தி : ‘மரணம் மாபெரும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது என்று வழக்கமாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால் கைலாசபதியின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை நாம் இட்டு நிரப்பியாக வேண்டும்’

ஆம். இதையே வழிமொழியத் தோன்றுகிறது. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை நாம் இட்டு நிரப்பியே ஆக வேண்டும்! ஏகாதிபத்தியத்தின் விளை பொருளான உலகமயத்தை மரணக்குழிக்கு அனுப்பும் தெம்பும் திராணியும் மார்க்சியத்துக்குத்தான் இருக்கிறது என்பது உணரப்படும் இவ்வேளையில் அது அவசியமானதும் கூட.

Pin It