இந்த இதழ் வெளிவரும் வேளையில் அயோத்திச் சிக்கல் குறித்த தீர்ப்பு வெளிவந்திருக்கலாம் ; அல்லது மீண்டும் தள்ளிவைக்கப் பட்டிருக்கலாம். எப்படி இருப்பினும், இந்தியாவின் தலைமேல் தொங்கும் கத்தியாகவே அயோத்தி இருந்து கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பரபரப்பு, வீதிகளில் இராணுவத்தின் அணிவகுப்பு. தமிழகம் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் காணப்பெறும் இயல்பு நிலைக்கு, அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் திராவிட இயக்கம் தூவிய விதைகளே காரணம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

அயோத்திச் சிக்கலில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்பு, இரண்டு முதன்மையான கேள்விகள் முன்நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்று, இராமர் பிறந்த இடம் அதுதானா என்பதற்கு நீதிமன்றம் விடைசொல்ல வேண்டும். இன்னொன்று, 400 ஆண்டுகளுக்கு முன்பு, மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் இருந்ததா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.

இரண்டாவது கேள்விக்காவது நீதிமன்றம் விடை சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் முதல் கேள்வியை அது என்ன செய்யப்போகிறது என்பதே அனைவருக்கும் உள்ள குழப்பம். அன்று ராமர் பிறந்து போது, மகப்பேறு பார்த்த மருத்துவச்சியை நீதிமன்றம் எப்படித்தேடிப் பிடிக்கப் போகிறதோ தெரியவில்லை. இராம காதை எழுதிய வால்மீகியும், கம்பனும் கூட அதுபற்றிப் பேசவில்லை. ஆனால் அலகாபாத் நீதிமன்றம் அதுபற்றிப் பேசியே தீரவேண்டும் என வலியுறுத்துகின்றது சங்பரிவார்.

அடுத்ததாக, 400 ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் இராமர் கோயில் இருந்தது என்று நீதிமன்றம் கூறிவிட்டாலும், என்ன நடக்குமென்று இப்போது சொல்லமுடியவில்லை. இது ஆன்மீகச் சிக்கலாக இருந்தாலும், கோயில், கோபுரம், கட்டிடங்கள் என்று வரும்போது அவை சொத்து வழக்கினைப் போலத்தான் பார்க்கப்படும். அந்த வகையில் எந்த ஒரு சொத்தினையும் குறிப்பிட்ட காலத்திற்குத் தன் வசம் வைத்திருந்தால், அது ‘அனுபவப் பாத்தியதையின் அடிப்படையில் ’ அவர்கள் சொத்தாக ஆகிவிடும். ஒரு வீட்டில் தொடர்ந்து ஒருவர் குடியிருந்து வந்தால், பிறகு அவ்வீட்டின் மீது, வீட்டின் உரிமையாளர் உரிமை கொண்டாடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுவதை நாம் பார்க்கிறோம். அவ்வாறே நிலங்களைக் கூட 14 ஆண்டுகளுக்குக் குறையாமல் ‘உழுபடை’ (நிலக்குத்தகை) எடுத்திருந்தால், பிறகு அந்நிலம் அக்குத்தகையாளருக்கு உரியதாகிவிடும் என்றுதானே நம் சட்டங்கள் கூறுகின்றன.

14 ஆண்டுகளிலேயே உரிமை பறிபோய்விடும் என்றால், 400 ஆண்டுகளுக்குப் பிறகு அதுகுறித்துப் பேசுவதற்கு என்ன இருக்கிறது?.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இதுபோன்ற மதச் சண்டைகளால் நாட்டுக்கு என்ன நன்மை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பிறப்பிலான் இறப்புமிலான் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு, இராமர் பிறந்த இடம் இதுதான் என்று இன்னொரு பக்கம் பேசித் திரிவது என்ன நீதி?

அயோத்திச் சிக்கலில் கூடுதல் கவனம் செலுத்தித்தான், பாரதீய ஜனதா கட்சி கடந்த தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அன்று மசூதி இடிப்பில் முன்னணியில் நின்ற கல்யாண்சிங், உமாபாரதி போன்றவர்கள் இன்று தங்கள் செல்வாக்கை முழுமையாக இழந்துள்ளனர். அத்வானியின் நிலைமையே சொல்லிக் கொள்ளுகிற நிலையில் இல்லை என்பதை நாடறியும்.

எனவே நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்குவதை விட்டுவிட்டு, நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தலாம் என்று பா.ஜ.க., கருதுமானால், அதன் அடிபாதாள வீழ்ச்சியைப் பிறகு யாராலும் தடுக்க முடியாது.

இந்தச் சிக்கல்களை எல்லாம் ஒருவாறு உணர்ந்துதான் இந்துத்துவா அமைப்பினர் தீர்ப்பைத் தள்ளிப்போட வேண்டுமென்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்மாறாக இசுலாமிய அமைப்புகள், உடனடியாகத் தீர்ப்பை வழங்க வேண்டுமென்று கோரி நீதிமன்றம் சென்றுள்ளனர்.

என்றாவது ஒரு நாள் தீர்ப்பு வந்துதானே தீரவேண்டும்? எவ்வளவு காலம் தள்ளிப் போட முடியும்? தள்ளிப் போடுதல் தப்பித்தலே. தீர்ப்பை ஏற்று அமைதி காக்க முயல்வதே அறிவுடைமை.

Pin It