கி.பி.1516 ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட காளகஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது. அன்றைய தொழில் நுட்பத்தின்படி களிமண்ணும், சுண்ணாம்பும் பிறவும் கலந்து கட்டப்பட்ட கோபுரம் விழுந்துவிட்டது. லைலா புயல், மழை காரணமாகவும், ஆகம விதி மீறல்கள் காரணமாகவும் இடிந்து இருக்கலாம் என்று இரண்டு வகைக் கருத்துகள் நிலவுகின்றன. ஆகம விதிகள் மீறப்பட்டதால் இடிந்து விழுந்து இருக்கும் என்றால், ஆகம விதியை மீறியவர்களைத் தண்டிக்காமல், கோபுரம் தானே இடிந்து விழுவானேன். “ஆகம விதி மீறல்களோடு, ராகு கேது பூஜை நடத்தும் பக்தர்களிடம் இருந்து, முறைகேடாகப் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இது தவிர பல வகையான ஊழல்களும் நடக்கிறது. இதனால் ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டிய கோபுரம் ஐநூறு ஆண்டுகளில் விழுந்து விட்டது” என்று தேசிய தெலுங்கு சம்மேளனத் தலைவர் பல்லமல சுதிர் கூறியிருக்கிறார்.

இறையருள் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அநியாயம் மட்டுமே மிஞ்சுகிறது என்பதைப் பார்த்து, உயிரற்ற கோபுரமே விழுந்து விட்டது என்று பல்லமல சுதிர் கூறியதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

இது ஒருபுறம் இருக்க, இந்தக் கோபுரம் இடிந்தது நமக்கு வேறு விதத்தில் வியப்பைத் தருகிறது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரமே வலிமையில்லாமல் விழுந்துவிட்டது என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமனால் கடலுக்கு அடியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பாலம் இன்றும் எப்படிச் சேதமில்லாமல் இருக்கிறது? இதுதான் அந்த வியப்பு. களி மண்ணும், சுண்ணாம்பும் கலந்து கட்டும் தொழில் நுட்பம் ஐநூறு ஆண்டில் அதன் வலிமையை இழந்து விட்ட நிலையில், பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பாலம் கட்ட அப்படி என்ன தொழில் நுட்பம் இராமனிடம் இருந்திருக்கும் ? அந்தத் தொழில் நுட்பம் கடல் நீரின் உப்புத்தன்மையையும் மிஞ்சி இத்தனை ஆயிரம் ஆண்டுகள் எப்படி காத்து நிற்கிறது? இத்தனை இயற்கை சீற்றங்களில் எப்படி உடையாமல் பாலம் இருந்திருக்க முடியும்?

உண்மையில் அப்படி ஒரு பாலம் இருந்தால் தானே உடைவதற்கு. கோபுரம் இடிந்த விசயம் இல்லாத பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்லும் மதவாதிகளுக்கு ஒரு தயக்கத்தைத் தரலாம்.

மதவாதிகளின் அதீத கற்பனை என்ற தொழில்நுட்பம் மட்டுமே கொண்ட, இல்லாத அந்தப் பாலத்திற்காகத் துள்ளிக் குதிக்கும் இந்துத்துவவாதிகளின் பாவ விமோசனத்திற்காக ஒரு வேளை, காளகஸ்தி கோயில் தானே தற்கொலை செய்து இடிந்து விழுந்து விட்டதோ என்னவோ? மதவாதிகள் இனியேனும் திருந்தினால் சரிதான்.

- மு.தணிகாசலம்

Pin It