ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம் ‘மா’ - இது விளம்பரமன்று வேண்டுகோள்!

குமுறும் எரிமலையாய்க் கொந்தளிக்கும் உணர்ச்சிகளும், ஞாலம் நடுங்கவரும் நியாயமான கேள்விகளுமாய், ‘மா’ திரைப்படம் நம் ஊனக் கண்களைத் திறந்து வைக்கிறது..

எப்போதாவதுதான் இப்படி ஒரு திரைப்படம் வரும் என்பது கூடச் சரியில்லை. எப்போதுமே இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை என்பது தான் சரி!

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே படத்தை இயக்கியுள்ள இயக்குனர், கால்களை இழந்த பின்னும், பட ஒளிப்பதிவைப் பாராட்டும்படி செய்துள்ள ஒளிப்பதிவாளர், கண் பார்வை இழந்த இசையமைப்பாளர், துவண்டு கிடக்கும் கால்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல், முதிர்ந்த நடிப்பை முகபாவங்களில் காட்டும் கதாநாயகன் என்று தொடர்கிறது, இப்படத்தின் பட்டியல். முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப் பட்டிருக்கும் இப்படம், நம்காலத்தின் தேர்ந்த கலைஞர்களில் ஒருவரான, இயக்குனர் பாலு மகேந்திராவை ஈர்த்து இழுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

இப்படத்தின் சிற்பி, மதன் கேப்ரியல் உரையாடல்கள் பலவற்றைச் சிற்பமாய்ச் செதுக்கியுள்ளார் என்றே கூறவேண்டும்

‘உலகத்தில் யாரும் எந்த நேரத்திலும் ஊனமாகிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு’ என்பது எவ்வளவு அழுத்தமான உண்மை. முதுமைக் காலத்தில், தடியூன்றி நடக்கும்போது, அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள்தானே! இவற்றை உணர்ந்தேனும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவாவிட்டாலும், அவர்களை இழிவு படுத்தாமலாவது இருக்க வேண்டும் என்பதுதான் இப்படம் நமக்கு ஊட்டும் உணர்வு!

அவர்களின் மீது பரிவை ஏற்படுத்தவோ, அவர்களுக்குச் சலுகைகள் கேட்டோ இப்படம் எந்த இடத்திலும் கையேந்தவில்லை. அவர்களின் சாதனைகளைப் பெருமிதத்தோடு ஒளியூட்டி இருப்பதே இப்படத்தின் மேன்மை. கால்கள் இல்லாத கதாநாயகன், ஆவணப்பட இயக்குனர் மாயாவைப் பார்த்து, “என் வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாது” என்று கூறும் இடம், கேலி பேசுவோர் வாயைக் கிழித்தெறிகின்றது.

கண்களே இல்லாமல் காவியம் படைத்த ஜான் மில்டன் தொடங்கி, எல்லா உறுப்புகளும் செயலிழந்த பின்னும் விஞ்ஞான ஆய்வுகளை இன்னும் விடாமல் செய்துவரும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் வரை, மாற்றுத் திறன் சாதனையாளர்கள் பலர் படத்தின் முகப்பில் காட்டப்படுகின்றனர். நம்பிக்கையோடு தொடங்கும் படம், கடைசிக் காட்சி வரை அந்த நம்பிக்கைக்குத் தளர்ச்சி ஏற்படாத வண்ணம் நகர்ந்து செல்கிறது.

உடல் ஊனம் என்பது எந்த ஒரு சாபத்தினாலும் ஏற்படுவது இல்லை, அதற்குப் பல அறிவியல் காரணங்கள் உள்ளன என்று மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரநாதன் கூறும் போது, பெரியாரின் சிந்தனைகள் அங்கு மிளிர்வதைக் காண முடிகிறது.

பேருந்துகளில், பொது இடங்களில், கழிவறைகளில் என ஒவ்வொரு இடத்திலும் மாற்றுத் திறனாளிகள் படும் அவலங்களும், பாலியல் தொல்லை களால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய மன உளைச்சலும் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

சில இடங்களில் செயற்கைத் தன்மையும், ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படத்தான் செய்கின்றன. அதே நேரத்தில் மனித வாழ்வின் அவலங்களைக் கூடச் சுவையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் மனிதநேயக் குறைவைத்தான் காட்டுகிறது. திரை உலகில் இப்படம் ஒரு திருப்பம். இது மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பது, நல்ல மனிதர்களின் விருப்பம்!

Pin It