ஒரு மதம் சார்ந்த மடத்தின் தலைவருக்கு, அவர் செய்த குற்றத்திற்காகத் தண்டனை கொடுக்கப்பட்டதை எதிர்த்து, இன்று ஹரியானாவும், பஞ்சாபும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்திலும், ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இப்படி ஒரு வன்முறை நடந்தேறியது.
இங்கு அரசியலின் பெயரால் நடந்தது, அங்கு ஆன்மிகத்தின் பெயரால் நடக்கிறது.
ஹரியானா மாநிலம் சிர்சா என்னுமிடத்தில் உள்ள தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அதனை எதிர்த்து அங்கு தொடங்கியுள்ள கலவரத்தில் இன்றுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஊர்திகள் எரிக்கப்பட்டுள்ளன.
குற்றம் செய்தவர் நிம்மதியாகச்சிறையில் உள்ளார். அவருக்கான தண்டனைக் காலம் எவ்வளவு என்பதையே 28ஆம் தேதிதான் நீதிமன்றம் சொல்ல இருக்கிறது.
அதற்குள் குற்றம் செய்யாத அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். இதுதான் ‘பாருக்குள்ளே சிறந்த பாரத நாட்டின்’ இன்றைய நிலை.
ஆன்மிகத்தின் பெயரால், இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு, பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கலாம்.
எங்களுக்கு எதற்குப் பணம் என்று கேட்டுவிட்டு, லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் செய்யலாம். பற்றற்றவர்கள் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு, ஆசிரமங்களில் சுகபோக வாழ்வு நடத்தலாம்.
பாஜக ஆட்சி நடத்தும் மாநிலத்தில் ஆசிரமம் வைத்துள்ள, அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்றுள்ள, பாஜக ஆதரவு சாமியார் அவர் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது.