‘சமூக நீதி பற்றிப் பேசுவதற்கு, திராவிட இயக்கக் கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?’ என்று பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு கேட்டதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

திராவிட இயக்கம் என்பதே, சமூக நீதிக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம்தான் என்பது, தமிழக வரலாற்றின் அரிச்சுவடி அறிந்தவர்கள் கூட அறிவார்கள். ஆனால் மருத்துவருக்கு மட்டும் ஏனோ இப்படி ஐயம் எழுந்திருக்கிறது. அவருக்காக இல்லை எனினும், இளைய தலைமுறையினர் சில வரலாற்றுச் செய்திகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் அக்கறையில் திராவிட இயக்கம் பற்றிய உண்மைகள் சிலவற்றை எடுத்துவைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

panagal_arasarதமிழ் இன, மொழி மேம்பாடு, சமூக நீதி, பகுத்தறிவு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிவேர்களாய் அமைந்து கிடக்கும் கொள்கைகள். இவற்றுள்ளும் சமூகநீதியே முதன்மையானதும், அடிப்படையானதும் என்பதை நாம் அறிவோம்.

1944 இல் திராவிடர் கழகம் என்ற பெயர் சூட்டப்பட்டாலும், அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவ்வியக்கத்தின் மூலவேரை நாம் பார்க்கிறோம். 1912 ஆம் ஆண்டு நடேசனாரால் தொடங்கப்பட்ட சென்னை ஐக்கியக் கழகம் (பிறகு திராவிடர் சங்கமாக மாறிற்று), 1916 ஆம் ஆண்டு சர்.பிட்டி.தியாகராயர், டி.எம்.நாயர், சி.நடேசனார் ஆகியோரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி), 1926 இல் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆகியன அனைத்தும் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளே.

மேலே குறிக்கப்பெற்றுள்ள, அத்தனை இயக்கங்களுக்கும் பொதுவாக அமைந்துள்ள ஒரே கோட்பாடு சமூக நீதிதான். பகுத்தறிவு போன்ற கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன் நிற்கும் சமூக அநீதியை எதிர்த்தும், வாய்ப்புகள் அனைத்துச் சமூகத்தினருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்னும் சமூகநீதியை முன்வைத்தும்தான் நடேசனார் இயக்கம் தொடங்கினார். சென்னை, திருவல்லிக்கேணியில் திராவிடன் விடுதி என்ற ஒன்றைத் தொடங்கி, பார்ப்பனர் அல்லாதவர்களின் பிள்ளைகள் அங்கு இலவசமாகத் தங்கிப் படிப்பதற்கும் ஏற்பாடு செய்தவர் நம் நடேசனார்தான்.

நீதிக்கட்சியோ 1916 டிசம்பரில் ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ என்ற பெயரிலேயே தன் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அதனை வெறும் அறிக்கையாக மட்டும் அமைத்துக்கொள்ளாமல், 1920 இறுதியில் ஆட்சிக்கு வந்தபோது அதனைத் தன் செயல்திட்டமாகவும் அது அறிவித்தது. அதன் விளைவாகவே தமிழகத்தில் முதன்முதலாக இடஒதுக்கீடு என்னும் புதிய திட்டம் அரசின் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

Dr_C_Natesanதந்தை பெரியார், கடவுள் மறுப்பு, பெண்விடுதலை, பொதுவுடைமை, தனித்தமிழ்நாட்டுக்கோரிக்கை போன்ற கொள்கைகளைப் பின்னாளில்தான் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். தொடக்க நிலையில் இடஒதுக்கீடு என்னும் சமூக நீதிப்போராட்டம் மட்டுமே அவருடைய முற்றும் முழுதான கொள்கையாக இருந்தது. அதற்குப் பல சான்றுகள் உள்ளன. 1925 ஆம் ஆண்டு வ.வே.சு.அய்யர் ஆற்றில் மூழ்கி இறந்தபோது, இரங்கல் செய்தி விடுத்த பெரியார், ‘எல்லாம் ஆண்டவன் செயல் ’ என்கிறார். முதல் குடியரசுப் பத்திரிகை, முகப்பில் கோயில், சிலுவை, பிறைநிலா ஆகியனவற்றைத் தாங்கி வெளிவருகிறது. எனவே எம்மதமும் சம்மதம் என்கிற நிலையிலும், ஆண்டவனை நம்புகிற நிலையிலும் இருந்த பெரியார், பின்னாளில்தான் பகுத்தறிவாளராக மாறுகின்றார். அவ்வாறே சமதர்மம், பொதுவுடைமை முதலான கொள்கைகள் யாவும் அவரைப் பிறகு வந்து அடைகின்றன.

சமூக நீதிக்காகத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நடத்திய போராட்டங்கள் மிகப்பல. அவர் காங்கிரசைவிட்டு வெளியேறி வந்ததே அதற்காகத்தான் என்பதை நாம் அறிவோம். அவர் தன் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டமும் சமூக நீதிக்கானதுதான். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதே அவருடைய இறுதிப் போராட்டமாக அமைந்தது. இடையில் அவர் எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளார். அனைத்திலும் முதன்மையானது, 1957 நவம்பரில் அவர் தொடங்கிய சட்ட எரிப்புப் போராட்டம். சாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என்பதே, அதை அவர் எரித்ததற்கான காரணம். அப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். மூன்றாண்டுகாலம் வரை சிறைத்தண்டனையைப் பலர் ஏற்றனர். அப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்ற பலரின் குடும்பங்கள் சிதறிப்போயின. கோயில் நுழைவுப் போராட்டம், சட்ட எரிப்புப்போராட்டம் என சமூக நீதிக்காக திராவிட இயக்கம் கொடுத்த விலை மிகப்பெரியது.

அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் மிகக்குறுகியது என்றாலும், அக்காலகட்டத்தில்தான், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதுவும் ஒருவிதமான சாதி எதிர்ப்பேயாகும்.

கலைஞரின் ஆட்சிக்காலத்தில், கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய நிலையில் இருந்த பல்வேறு சமூகங்கள் பிற்படுத்தப்பட்டோர் என அறிவிக்கப்பட்டனர். வன்னியர் உள்ளிட்ட 108 சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என் அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்பட்டன. வன்னியர் சங்கமாக இருந்து, எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடியவர்களில் 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த முப்பது குடும்பங்களுக்கும் இன்றுவரை குடும்பநிதி வழங்கிவருகிறது கலைஞர் அரசு என்பதை யார்தான் மறுக்க முடியும்?

nayar_2252007 ஆம் ஆண்டில் பொது நுழைவுத் தேர்வை இல்லாமல் ஆக்கி, சமூக நீதியைக் காத்ததும் இன்றைய கலைஞர் அரசுதான்.

1971 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான், பெரியார் அவர்களின் கருத்துரைப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வரதராஜன் முதன்முதலாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக ஆக்கப்பட்டார்.

தமிழகத்தில் நடந்த இடஒதுக்கீட்டிற்கான மிகப்பெரும் போராட்டத்தின் காரணமாகவே 1951 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. அதன் பிறகே இடஒதுக்கீடு சட்டவிதிகளுக்குட்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் சுயமரியாதை இயக்கம், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று கேட்டு இயற்றிய தீர்மானம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் ஆட்சியில்தான் உயிர் பெற்றது. சிறுபான்மையினருக்கான பல்வேறு சட்டங்களையும், தி.மு.கழக ஆட்சிதான் நிறைவேற்றித் தந்தது. அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டுச் சட்டம் அண்மையில்தான் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு வர்க்க, சாதி, பால் அடிப்படையில் சமூக நீதியை நிலைநாட்ட முயலும் திராவிட இயக்கத்திற்குச் சமூக நீதி பற்றிப் பேச அருகதை இல்லை என்றால், வேறு யாருக்குத்தான் இருக்கிறது என்பதை பா.ம.க.நிறுவனர்தான் விளக்க வேண்டும்.

Pin It