செம்மொழியான நம் தமிழ், இன்னும் முழுமையான கல்வி மொழியாகவில்லை என்பது கவலை தருவதாகவே உள்ளது.

கல்வி வள்ளல் காமராசரின் ஆட்சிக் காலத்தில், 1956 ஆம் ஆண்டு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் அறிவிக்கப்பட்டது. கலை, அறிவியல் பாடங்கள் பல, தமிழில் நூல்களாக வெளியிடப்பட்டன.

கலைஞரின் ஆட்சிக் காலத்தில், 1970 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில், கல்லூரி வரையில் தமிழ்வழிக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் காட்டிய கடும் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

tmail_medium_engமீண்டும் 1999 இல் தமிழ்வழிக் கல்விக்குக் கலைஞர்அரசு ஆணை பிறப்பித்தபோது, தனியார் பள்ளி உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று அதற்குத் தடை வாங்கிவிட்டனர். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஆங்கிலக் கல்விதான் வேண்டும் என்று உறுதிபடக் கூறினார்.

இப்போது 2006 இல், கலைஞர் ஆட்சி ஏற்பட்ட பிறகு, ஐந்தாம் வகுப்பு வரையில், தமிழ் கட்டாயப் பாடம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி என்னும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

முதல் படியாக, இயந்திரவியல் (மெக்கானிக்கல்), கட்டிடவியல் (சிவில்) ஆகிய இரு பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப் படுத்தப்படுகிறது. அரசின் முடிவைத் தமிழ் அறிஞர்கள் மட்டுமன்றி, அறிவியல் அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். மாணவர்களிடையேயும் இதற்கான வரவேற்பு காணப்படுகிறது. ‘ இன்று வரை 207 பேர் தமிழ்வழிப் பொறியியல் படிக்க முடிவு செய்து சேர்ந்துள்ளனர் ’ என்கின்றார், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.

இத்தகைய நல்ல தொடக்கத்தை வாழ்த்தி வரவேற்க மனமில்லாத சில பத்திரிகைகள், எதிர்க்கருத்துகளைப் பரப்பத் தொடங்கிவிட்டன. தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா, தமிழில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமா என்று வழக்கமான பல்லவியைப் பாடியுள்ளன. தமிழ் வழிக்கல்வி வேண்டும் என்று காலங்காலமாகக் குரல் எழுப்பிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழ் இயக்கங்களும், பேச வேண்டிய இந்நேரத்தில் ஏதும் பேசாமல் மெளனம் சாதிக்கின்றன. தமிழுக்கு நல்லது நடப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் கலைஞர் ஆட்சியில் நல்லது நடந்துவிடக் கூடாதே என்னும் கவலை அவர்களுக்கு!

தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறும் அதே பத்திரிகைகள், ஆங்கிலத்தில் படித்தவர்களிலும் ஏறத்தாழ 75 % பேர், உரிய வேலைகளில் அமர முடியாமல்தான் உள்ளனர் என்னும் செய்தியையும் கூறுகின்றன. எனவே, வேலையில்லாச் சிக்கலையும், மொழிவழிக் கல்வியையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஆங்கிலம் தெரியாமல், வெளிநாடுகளுக்கு எப்படிச் செல்ல0 முடியும் என்பது அடுத்த கேள்வி. ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று எவரும் இங்கு கூறவில்லை. ஆங்கிலம் படிப்பது வேறு, ஆங்கிலத்தில் படிப்பது வேறு என்பதை ஆயிரம் முறை கூறியாகிவிட்டது. எனினும் இவர்கள் உறங்கு வதுபோல நடிப்பவர்கள். ஒருநாளும் இவர்களை எழுப்ப முடியாது.

துணைவேந்தர் மன்னர் ஜவஹர் இரண்டு செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். “ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் இரண்டு பருவங்கள் (செமஸ்டர்) மட்டுமே ஆங்கிலம் படிக்கின்றனர். தமிழ்வழிப் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கோ, ஆறு பருவங்களிலும் ஆங்கிலம் கற்பிக்கப்படும் ” என்கிறார். மேலும், “தமிழ்வழிப் பயிலும் மாணவர் களுக்கு, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்கான (Spoken English) சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும் ” என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் வழியில் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களே, ஆங்கிலத்தை நன்றாகப் பேசக்கூடியவர்களாக வருவர் என்பது தெளிவாகின்றது.

ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகமே இருண்டு போகும் என்பது போன்ற ஒரு மாயை இங்குள்ளது. அந்த அச்சத்திலிருந்து பெற்றோர்களும், மாணவர்களும் விடுபடுவதற்காகவே இந்த நல்ல ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே, மொழித்திறன் (Language Skill) என்பது வேறு, தொடர்புகொள் திறன் (Communicative Skill) என்பது வேறு. இங்கு இரண்டையும் ஒன்றாகவே போட்டுக் குழப்பிக் கொண்டுள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகாவில் நேர்காணல் தேர்வின் போது நடத்தப்பெறும் குழு விவாதங்கள், தாய்மொழியிலேயே நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். அந்த நிலை தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் ஆங்கில மொழி குறித்த அச்சம் நம்மைவிட்டு நீங்கும்.

ஜப்பான், சீனா, கொரியா போன்ற வளர்ந்த கீழை நாடுகளில் ஆங்கில மொழியறிவு மிக மிகக் குறைவு என்பதை நாம் அறிவோம். அங்கெல்லாம் தொழில்நுட்பம் வளராமல் போய்விட்டதா அல்லது அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதா?

இப்போது அங்கும் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கிவிட்டனர் என்று கூறுகின்றனர். அது உண்மைதான். ஆனால் இங்கேயும் ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலம் கற்கத் தொடங்கியுள்ளனரே அல்லாமல், ஆங்கிலத்தில் கற்கத் தொடங்கவில்லை.

சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில், மேலை நாடோ, கீழை நாடோ, எந்த நாடு தன் தாய்மொழியில் கல்வி கற்கின்றதோ, அந்த நாடே அறிவியலில் முன்னேறி உள்ளது என்பது உண்மை.

அந்த வகையில், தமிழகமும் அறிவியல் துறையில் முன்னேற, நல்ல தொடக்கத்தை உருவாக்கியுள்ள முதலமைச்சர் கலைஞரையும், தமிழக அரசின் கல்விக் கொள்கையையும் நாம் நெஞ்சாரப் பாராட்டுகின்றோம்.

 - சுப.வீரபாண்டியன்

Pin It