subavee_mayilsami(17.07.2010 அன்று பொன்னேரியில், ஏறத்தாழ ஆயிரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த அரங்கில், நூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது. அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரையும், சுப.வீரபாண்டியனும் மாணவர்களிடையே உரையாற்றினர். கூட்ட ஏற்பாடுகளை மீஞ்சூர் தி.மு.கழக ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் சுந்தரம், அவரது நண்பர்கள், வாசகர் வட்டத் தலைவர் நக்கீரன், நூலகர் பாண்டியன் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். உரையரங்கம் நிறைவடைந்தபின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மயில்சாமி அண்ணாதுரையிடம் பல்வேறு வினாக்களை எழுப்பினர். அதிலிருந்து சில வினாக்களும், அவர் அளித்த விடைகளும்)

கோதவாடி என்னும் ஒரு சிற்றூரில் பிறந்த நீங்கள், இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக எப்படி உயர்ந்தீர்கள்?

அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்றைச் சொல்வதானால், நான் தமிழ் வழிக்கல்வியில் படித்தவன். தாய்மொழி வழிக் கல்விதான் அறிவியல் செய்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளுவதற்கும், அதற்கும் மேல் நாம் சுயமாகச் சிந்திப்பதற்கும் உதவும். எனவே, என் முன்னேற்றத்தில் தமிழ்வழிக் கல்விக்குப் பெரும்பங்கு உண்டு.

சந்திராயன் விண்கலத்தை அனுப்புவதற்கு முன் திருப்பதி கோயிலுக்குச் சென்று பூசை செய்து வழிபட்டது சரிதானா?

நான் தனிப்பட்ட முறையில் அவ்வாறு எதுவும் செய்வதில்லை. பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் தொடக்குவதில்லை என்றுகூட ஒரு மரபு உண்டு. ஆனால் நான் பல புதிய திட்டங்களைச் செவ்வாய்க் கிழமைகளில்தான் தொடங்கியிருக்கிறேன் என்றாலும் திருப்பதிக்கு என் மேலதிகாரிகள் எல்லாம் சென்ற போது என்னையும் அழைத்தார்கள். அதை நான் மறுக்க முடியாது.

ஆக்டோபஸ் சோதிடம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அப்படி எல்லாம் எதுவும் இருக்க முடியாது. அதற்கு எந்தப் பெட்டியில் உள்ள உணவு பிடித்ததோ அதை நோக்கி அது சென்றிருக்கும். ஜெர்மனி என்று எழுதியிருந்த பெட்டியில் இருந்த உணவை முதலில் அது உண்டது. பிறகு அதில் சலிப்பு ஏற்பட்டுக் கூட இன்னொரு பெட்டிக்குப் போயிருக்கலாம். அவ்வளவுதானே தவிர, வெற்றி தோல்வியை ஆக்டோபஸ் முன்கூட்டியே சொல்லும் என்பதெல்லாம் விஞ்ஞானத்திற்கு முற்றிலும் புறம்பானது.

Pin It