OP Panneerselvamதேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்த வரி வருவாய் இல்லை.

 பெட்ரோலியப் பொருள்களின் விலை மா-றுபாடுகளால் எதிர்பார்த்த அளவைவிட 1000 கோடி ரூபாய் வணிகவரி வசூல் குறைந்துவிட்டது. அடுத்த நிதியாண்டில் இது 2,141 கோடி அளவிற்குக் குறைந்து போகும்.

 தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு மற்றும் மானிய உதவிகளின் மொத்த அளவு; 2014-15ஆம் ஆண்டில் பெறப்பட்ட ரூபாய் 39,057 கோடி, 2015-16ஆம் நிதியாண்டில் 37,526 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் ரூபாய் 35,485 கோடி மொத்த நிதி இழப்பைச் சந்திக்கிறது.

 தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சொந்த வரி வருவாய் வளர்ச்சியில் தமிழகம் மந்த நிலையில் இருக்கிறது.

(2015-16ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் முதல்வர் பன்னீர்செல்வம்.)

வெறும் 1.81 லட்சம் கோடிதான் கடன்

 தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை இருக்கிறது.

 வணிகவரி, பத்திரப்பதிவு, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பிறதுறைகளில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 மாநிலத்தின் கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறைதான் நெருக்கடியை ஏற்படுத்தும். தமிழகத்தின் கடன் கட்டுக்குள் இருக்கிறது.

 தமிழகத்தின் கடன் தொகை 2015 மார்ச் 31ஆம் தேதி வரை 1.81 லட்சம் கோடி ரூபாய்தான்.

    -- தமிழக நிதித்துறைச் செயலாளர்.

பத்திரப்பதிவுத் துறை

தமிழகத்தில் 2011-2012ஆம் ஆண்டில் ஆவணப்பதிவுகள் 35.18 லட்சம்.

2012 ஏப்ரல் 1ஆம் தேதி அமுலுக்கு வந்த நிலங்களுக்கான அரசின் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டு மதிப்புகளின்படி, 2012-13ஆம் ஆண்டில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 29.90 லட்சம். அதற்கு அடுத்த ஆண்டில் 26.53 லட்சமாக மேலும் குறைந்து போனது. அதுவே 2014-15இல் 13.54 சதவீதம் அதிகரித்ததாலும், இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பலே! டாஸ்மாக் வருமானம்

2014-15ஆம் ஆண்டு வருமானம் - 26,188 கோடி

2015-16ஆம் ஆண்டு எதிர்பார்ப்பு - 29,672 கோடி

அதாவது மேலும் 3000 கோடி ரூபாய்க்கு மக்கள் கூடுதலாக் குடிக்க வேண்டும் என்று தமிழக அரசு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

உணவு மானியத்திற்கு ஒரு ரூபாய் கூட கூடுதலாக இல்லை

தமிழகத்தில் பொது வினியோகத்திட்டம். அதன்கீழ் ரேசன் கடைகள். அங்கே இலவச அரிசி, குறைந்த விலையில் சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான உணவு மானியத்திற்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூபாய் 6000 கோடி நிதி ஒதுக்க கழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 5300 கோடி. சென்ற நிதியாண்டு? அதே 5300 கோடி. கேவலம் ஒரு ரூபாய் கூட கூடுதலாகக் கொடுக்கப்படவில்லை.

தமிழக அரசின் உப்பில்லா பட்ஜெட்

 நியுட்ரினோ மீத்தேன் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு நிதிநிலை அறிக்கையில் இல்லை.

 பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு 10 சதவீதம் கூட நிதி ஒதுக்கீடு இல்லை.

 மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21,116 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் 8 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

 நெல், கரும்பு விவசாயிகளின் கொள்முதல் விலை உயர்வு பற்றியும், காவிரி குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது பற்றியும் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

 மின் உற்பத்தி குறித்துத் தொலைநோக்குத் திட்டம் இல்லை.

 அரசின் கடன் 2 இலட்சத்து 500 கோடியாக உயர்ந்துள்ளது.

 ஆசிரியர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கோரிக்கைகள் மற்றும் அவை தொடர்பான எந்த ஒரு விளக்கமும் அறிக்கையில் இல்லை.

Pin It