மேகக்கைகளால்
சூரியக் குதிரையை
விரட்டியது வானம்...
குளிர்க்காற்று
மழைக்கு
கட்டியம் கூறியது
அன்ன நடை போட்டவர்கள்
அணுகுண்டு விழுந்ததாக
அலறிஅடித்து ஓடினர்
சிலருக்கு
கைக்குட்டையே குடையானது
காதலர்க்கு
முத்தப்பரிசாக
மழை
நகரச்சாலையில்
மழை மட்டும்
என் கால்களை
வேகப்படுத்திய பொழுது
சற்றென்று கறுத்தது
மனம்...
ஒதுங்க இடமின்றி
ஓடக் கால்கள் அற்ற
கருத்த உருவம்
சுருண்டு கிடந்தது
கூடவே
கொஞ்சம் சில்லறைக் காசும்
கரைந்து கொண்டிருந்தது
அவன் வரைந்த
கடவுள் படம்...
- பாரிமேகம்