1
இது நமக்குப்
பழகிப் போனது...
இருப்புப் பாதைக்குப்
பக்கத்து வீட்டுக்காரன்
புகைவண்டியின்
அலறலை சகித்துப்
பழகிவிடுவதுபோல்...
பிணவறைக் காப்பாளன்
பிணவாடைக்குப்
பழகிவிடுவது போல..
நாமும் பழகி விட்டோம்
துப்பாக்கி சத்தங்களை,
மரண ஓலங்களை,
பிண வாடையை,
ரத்த ஆறு ஓடும் வீதிகளை,
எல்லாவற்றையும் சகிக்க...
நம் வீட்டுக் கூரைமேல்
குண்டு விழும்வரை
சற்றுக் கண்ணயர்வோம்...
2
தாய்ப்பால் பற்றிய - ஒரு
கவிதையை எழுத
நினைக்கையில் அங்கு
அறுத்தெறியப் படுகின்றன
சில மார்பகங்கள்...
குழந்தையின் புன்னகையை
கவிதைப் படுத்த நினைக்கையில்
அங்கே புதைக்கப்படுகின்றன
பல குழந்தைகளின் கடைசிப்
புன்னகைகள்...
பூக்களை எழுதலாம் என்றால்
சாம்பல் காடுகளே
எஞ்சியிருக்கின்றன..
எதைப்பற்றியும்
எழுதவியலாமல் கடைசியில்
கடவுளைப் பற்றி எழுத
நினைக்கையில் அங்கு
குண்டு சத்தங்களுக்கு பயந்து
கருவறையை
காலி செய்துகொண்டு
ஒடி விட்டாராம் கடவுள்....
கடவுளே இல்லாத ஊரில்
யாரிருக்கிறார் இப்போது..?