நூல் விமர்சனம்: பிறை வளரும் ஓசை
ஆசிரியர் : மகரந்தன்
ஒரே எண்ணமும் சிந்தனையும் இருப்பவர்கள் அல்லது ஒரு துறை சார்ந்தவர்கள் எப்படியேனும் எங்கேனும் ஒரே அலைவரிசையில் சந்திக்கக் கூடுமென்று படித்ததுண்டு. கேட்டதுண்டு. வத்தலக்குண்டில் நடைபெற்ற கவிதைப் பங்கேற்பில் கலந்து கொண்டு நானும், புன்னகை ரமேசும் வத்தலக் குண்டிலிருந்து பேருந்து ஏற. பேருந்து நிலையத்தில் ஒட்டப் பந்தயம் நடத்திக் கொண்டிருந்தோம்! ஓடிப்போய் இருக்கையைக் கைப்பற்றுவது எனக்குப் பழகிப்போனதால் கண்ணாமூச்சி காட்டிய ஒன்றிரண்டு பேருந்துகளை இந்தப் பழம் புளிக்குமென்கிற சமாதானமாகி, இறுதியில் ஒரு பேருந்தில் தள்ளு முள்ளுக்கிடையே இருக்கையைக் கைப்பற்றினேன்.
அருகில் ஒரு இளைஞர். கையில் கல்யாண்ஜி கவிதை. சீதையைக் கண்ட அனுமனின் துள்ளலைப் போல மனசுக்குள் அதிர்வும் ஆச்சரியமும். "கவிதை பிடிக்குமா உங்களுக்கு..." என்று துவங்கி அறிமுகம்.
தனது பையிலிருந்து ஒரு தொகுப்பை எடுத்து நீட்டி தானும் ஒரு கவிஞர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கினார். நக்கீரனில் உதவி ஆசிரியர். கவிதையில் ஆர்வலர். அவர்தான் மகரந்தன்.
வீட்டிற்கு வந்து சில தினங்களுக்குப் பின்தான் தொகுப்பை வாசிக்கத் துவங்கினேன்.
"கவிதையாக வாழ்வதும். கவிதைக்காக வாழ்வதும் சுகமானது." என்ற தன் பதிவைக் செய்திருக்கும் கவிஞர் மகரந்தனின் கவிதைகள் மயிலிறகால் வருடிச் செல்கிற மென்மையையும், நெஞ்சுக் கூட்டிலிருந்து பீறிட்டெழுகிற உணர் வலைகளாகவும் அணி வகுக்கின்றன.
கடவுளை வணங்கும்போது கண்களை மூடிக்கொள்வது அபத்தமென்று கூறும் கவிஞர், அதற்கென முன்வைக்கும் வாதம் அவருக்குள்ளிருந்து ததும்பிக் கொண்டிருக்கிற அழகுணர்ச்சிதான். துவக்கநிலை படைப்பாளிகளுக்கே உரிய சொல் செலவு இல்லாமல் குறைந்தபட்ச சொற்களோடு, குறைந்த வரிகளோடு தன் ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார்.
இவரின் கவிதைகளில், கிடைக்க வேண்டிய உரிமை, பார்க்கத் தவறிய காட்சிகள், குழந்தைகள் பற்றிய தவிப்புகள், பறிபோன இயற்கை வளங்கள் பற்றிய பரிதவிப்பு, மென்சாரலை நினைவூட்டும் காதல் பதிவுகள் என்று வெளிப்படுத்துகிறார்.
குங்குமம் இதழில் பரிசுக்குரிய கவிதையாக தேர்வானது "கொடுப்பினை" கவிதை தண்ணீர் சிக்கனம் பற்றிய சிறந்த பதிவு.
எத்தனை தூரம் பயணம் போனாலும். எவ்வளவு சொகுசாகப் போனாலும், அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு பயணம் போன நாள் இனிமயானதுதான்.
"பிறை வளரும் ஓசை" தொகுப்பில் நாம் பார்க்கத் தவறிப் போன காட்சிகள், ரசிக்கத் தவறிய சொற்கள், வாழத் தவறிய வாழ்க்கை என்று புதுப்பாய்ச்சலைக் காண்கிறோம்.
கவிஞருக்கு இது முதல் தொகுப்பு. அதற்கான அடையாளங்கள் மிகக்குறைவே!
பிறை வளரும் ஓசை (கவிதைகள்) / மகரந்தன் / வெளியீடு : மார்கழிப் பதிப்பகம் ஆர். 56/11 கோட்டூர்புரம், சென்னை - 85. / விலை ரூ. 40.