நமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிமயமாதல் போக்கைக் கணக்கிலெடுத்து,  உரிய வழிகாட்டுதல் வழங்கி வர்க்க விடுதலைச் சாதிக்கப் பாடுபட வேண்டும் 

நமது நாட்டில் பட்டாளிமயமாதல் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.சிறு உடமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு பட்டாளி வர்க்க அணிகளுடன் சேரும் போக்கு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மிகப் பெரிய வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பகாசுர வர்த்தக நிறுவனங்கள் சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அழித்தொழித்துக் கொண்டுள்ளன. அது பட்டாளி வர்க்க அணிகளுடன் உடைமை இழந்தவர்களை அணி  சேர்த்துக் கொண்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத நிலை, இடுபொருள் விலை உயர்வு, உயர்ந்து வரும் உயர்கல்விச் செலவினங்கள் போன்றவை சிறிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோரைப் பொறுத்தவரை விவசாயத்தை முழுமையாக கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் குண்டுகுறுக்க நிலங்களை விற்றுவிட்டு விவசாயத் தொழிலாளராகவும் உதிரித் தொழிலாளராகவும் மாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பல இடங்களில் பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இப்போக்கை ஊக்குவிக்கும் விதத்தில் அரசு விவசாயத்திற்கு வழங்கிவந்த மானியத் தொகைகளை நிறுத்தி விவசாயத்தை இன்னும் கூட கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. இவற்றின் மூலம் ஏராளமானோர் ஆயிரக் கணக்கில் வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற கடைகளில் வேலை செய்யும் தொழிலாளராகவும் விவசாயப் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளராகவும் மாறியுள்ளனர்.

முன்பிருந்தது போல் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்போது பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாக இருப்பதில்லை. முழுக்க முழுக்க இயக்கங்கள் மூலம்தான் அவர்களுக்கு அரசியல் அறிவைப் புகட்ட முடியும் என்ற நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் அவர்களுக்குப் பட்டாளி வர்க்க விடுதலை உணர்வூட்டும் கருத்துக்களை ஊட்டும் அறிவும் திறமையும் பெற்றவையாக பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் இல்லை. இந்தப் போதாமையையும் வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி பாராளுமன்ற அரசியல் மூலமே ஆட்சிக்கு வந்து விடலாம் என்றவாறு அவர்களிடம் வளர்ந்துவிட்ட  நப்பாசையும் வர்க்கப் போராட்டத்தைத் தவிர வேறு அனைத்தையும் முன்னிலைப்படுத்தும் நிலையில் அக்கட்சிகளை நிறுத்தியுள்ளது.

அடிப்படை மார்க்சியத்தைக் கைவிட்டு விட்ட அவர்கள் தற்போது ஜாதிய நிலையினை எடுக்கும் ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். அதற்கு ஒத்துவரக்கூடிய அவர்களின் ஜாதிய வாத அரசியல், முதலாளித்துவத்தை மூடிமறைத்து இல்லாத ஜாதிய எதிரிகளை முன்னிலைப்படுத்தும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.

பெருகிவரும் விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு அவர்களது கூலி போன்ற பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி யதார்த்தபூர்வமாக இயக்கம் கட்டுவதை விட்டுவிட்டு அவர்களின் பிரச்னையிலிருந்தான தீர்விற்கு விடுதலை பெற்ற காலம் தொடங்கி இன்றுவரை நிலச்சீர்திருத்தம் என்பதையே தீர்வு எனப் பேசி வருகின்றனர்.

நாட்டில் உருவாகி வளர்ந்துள்ள உபரி மூலதனத்தின் வட்டத்திற்குள் உற்பத்திச் சாதனம் என்ற ரீதியில் நிலங்கள் வந்துவிட்ட சூழ்நிலையில் ஏற்கனவே சிறு உடமையாளர்கள் தங்கள் கைவசமுள்ள நிலங்களை விற்றுவிட்டு பாட்டாளி வர்க்க அணிகளோடு வெகுவேகமாக சேர்ந்து கொண்டுள்ளனர். இச்சூழ்நிலையில் இவர்கள் முன்வைக்கும் காலாவதியான கருத்துக்கள் இரண்டுவகை விரும்பத்தாகத போக்குகளை ஏற்படுத்துகின்றன. ஒன்று நடக்காத வற்றைத்தான் இவர்கள் பேசுவர் என்ற எண்ணப்போக்கை மக்கள் மத்தியில் இது ஏற்படுத்துகிறது. மற்றொன்று ஆண்டு முழுவதும் வேலை, கட்டுபடியான கூலி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சரியான இயக்கம் கட்டாததால் விவசாயப் பண்ணை முதலாளிகள் மிகக் குறைந்த கூலி கொடுத்து விவசாயத் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் விவசாயத் தொழிலாளருக்கான குறைந்தபட்சக் கூலியாக அரசு நிர்ணயித்துள்ள கூலியைக் காட்டிலும் கூடுதல் கூலியை நடைமுறையில் விவசாயத் தொழிலாளர்கள் பல இடங்களில் தற்போதே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். விவசாயத் தொழிலாளருக்கு மட்டுமல்ல மிகக் குறைந்த கூலி பெற்றுவரும் தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில்களிலும் குறைந்தபட்சக் கூலியை நிர்ணயம் செய்ய அரசால் நியமிக்கப்படும் கமிட்டிகளில் இந்தக் “கம்யூனிஸ்ட்” கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகிக்கிறார்கள். அப்படியிருந்தும் இக்கொடுமை நடப்பதற்கான காரணம் தொழிலாளரைக் காட்டிலும் சிறு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் இவர்கள் குறியாக இருப்பதே.

சூழ்நிலையின் தலைகீழ் மாற்றமும், சங்கங்களின் செக்குமாட்டுச் செயல்பாடும்

சூழ்நிலை இத்தனை பெரிய மாற்றத்தினை அடைந்துள்ள வேளையிலும் தொழிலாளர் போராட்டம் குறித்த அணுகுமுறைகளில் எவ்வகையான மாற்றமும் இல்லாத செக்குமாட்டுத் தனமே இங்கு நிலவுகிறது. நிறுவன ரீதியாக திரட்டப்பட்டுள்ள பொதுத்துறை அரசு ஊழியர் சார்ந்த அமைப்புகள் பெரும்பாலும் பொதுமக்கள் நலனை கருத்திற் கொள்ளாதவையாக செயல்பட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. ஒட்டுமொத்த மக்கட் தொகையில் மிகமிகப் பெரும்பான்மையாக உள்ளவர்களோ தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டுவரப்படாமல் நிறுவன ரீதியாக ஒருங்கு திரட்டப்பட்டுள்ள பெரிய தொழில்களிலும், பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் உறுப்புகளும், உபகரணங்களும் உற்பத்தி செய்து தரும் வேலையைச் செய்யும் ஒப்பந்த முதலாளிகளின் கீழும் வேலை செய்கின்றனர்.

இதுபோன்ற சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களைத் தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டுமானால் அதற்கு மிகப் பெரியதொரு முனைப்பும் உழைக்கும் வர்க்க அரசியல் வேட்கையும் அவசியம். அவ்வாறு தொழிற்சங்க வட்டத்திற்குள் அவர்களை கொண்டு வந்தால் கூட இயக்கங்கள் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 10 பேர், 15 பேர் என்று குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் போராட்டக் குரலை பெரிதாக ஒலிக்கச் செய்ய முடியாது. இந்நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்து நிற்கும் நிலைக்கு அத்தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். அரசின் தொழிலாளர் துறை நிறுவனங்களின் முதலாளித்துவச் சார்பு நிலை, தொழிலாளர் நீதி மன்றங்கள் தீர்ப்புகள் வழங்க எடுத்துக் கொள்ளும் சகிக்க முடியாத கால தாமதம் போன்றவை அந்த சட்டரீதியான செயல்பாடுகளிலும் தொழிலாளரை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் சுரண்டலின் விகிதாச்சாரம் மிகக் கூடுதலாக உள்ளதால் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தத் திராணியுள்ளவர்களாக இருக்கும் இத்தொழிலாளரை நேரடி நடவடிக்கைகளில் நம்பிக்கையுடன் இறங்குவதற்கு ஏற்ற அமைப்புகள் கொண்டுவரப்பட வேண்டும். நிறுவன ரீதியாக ஒருங்கு திரட்டப்பட்டிருந்தும் தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டுவரப்படாமல் சிங்காரித்துச் சுரண்டப்படும் தகவல் தொழில்நுட்ப, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலை செய்யும் தொழில் நுட்பம் கற்ற தொழிலாளரையும் தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டுவரும் வழி முறைகளைக் கண்டறிய வேண்டும். தொழிற்சங்கங்கள் நிலை பெற்றுள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அறவே அரசியல் உணர்வு அற்றவர்களாக தொழிலாளரை வைத்திருக்கும் அங்குள்ள தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவித்துக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சரியான நடைமுறைகள் கண்டறியப்பட வேண்டும். இவற்றைச் செய்வதன் மூலமே தொழிலாளி வர்க்கம் அதன் விடுதலையைச் சாதிக்கும் வரலாற்றுப்பூர்வ பாதையில் அதனை கொண்டு சென்று நிறுத்த முடியும். 

உழைக்கும் மக்களின் போராட்டக் கமிட்டிகள் 

அந்த அடிப்படையில் ஒட்டஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர் பகுதிக்கு முன்னுரிமை தந்து அவர்களை போராட்டப் பாதையில் இறக்கி விடுவதில் முழுமுயற்சியுடன் முதற்கண் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையூட்ட அனைத்து துறைகளிலும் உள்ள வர்க்க உணர்வு பெற்ற சமுதாயமாற்றச் சிந்தனை கொண்ட தொழிலாளரை உள்ளடக்கிய உழைக்கும் மக்களின் போராட்டக் கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். அரசு, பொதுத்துறை போன்ற வற்றில் உள்ள வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளரை அந்த உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிகளில் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும். அதுதவிர தனியார் உற்பத்தித் துறையில் பணிபுரியும் தொழிலாளரில் உணர்வு பெற்றவரையும் அதில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

இந்த உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் பதாகையின் கீழ் ஒட்டஒட்டச் சுரண்டப்படும் ஒப்பந்த மற்றும் சிறு முதலாளித்துவச் சுரண்டலில் ஈடுபடுபவருக்கு நம்பிக்கை கொடுத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை சார்ந்திருப்பதற்குப் பதில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுத்தினால் மிக விரைவில் அத்தொழிலாளர் இயக்கம் காட்டுத்தீயாகப் பரவவே செய்யும்.

இத்தகைய அமைப்பின் மூலம் வர்க்க சமரச செக்குமாட்டுத் தொழிற்சங்க செயல்பாடுகளினால் வெந்தும் நொந்தும் போயுள்ள அத்துறையின் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளரின் உணர்வுகளுக்கும் உரிய வடிகால் அமைத்துத்தர முடியும். அதன்மூலம் சுரண்டலின் கொடூரத்தைக் கடுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் இயக்கங்களையும் தட்டியயழுப்ப முடியும். இப்படிப்பட்ட சரியான வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியைக் கொண்டே தொங்குசதைத் தொழிற்சங்கங்களின் முகமுடியையும் கிழிக்க முடியும். இந்த உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி தொழிலாளர்களின் பிரச்னைகளோடு சமூகப் பிரச்னைகளையும் கையிலெடுக்க வேண்டும். அதன்மூலம் தொழிலாளர் இயக்கங்கள் சமூக இயக்கங்களாக மலரவும் வழிவகை ஏற்படுத்த வேண்டும்.

வேலைப் பாதுகாப்பின்மை, 8 மணி நேர வேலை என்பது இல்லாத போக்கு நுகர்வோர் கலாச்சாரத்தைப் பெருக்கி அவர்கள் கையில் வாங்கும் ஊதியத்தை பைக்கு செல்வதற்கு முன்பாகவே பறித்துக் கொண்டுவிடும் முதலாளித்துவச் சதி ஆகியவற்றை அம்பலப்படுத்தி, எத்தனை பிரகாசமான தோற்றத்தினைக் காட்டினாலும் இச்சமூகத்தில் அவர்களும் எவ்வாறு கூலி அடிமைகளாகவே உள்ளனர் என்பதையும் விளக்கி, மேலை நாட்டுத் தொழிலாளர் இன்று எதிர் கொண்டுள்ள கடுமையான பிரச்னைகள் நாளையோ நாளை மறுதினமோ இவர்களையும் கவ்விப் பற்றுவதற்கு உள்ள வாய்ப்புகளை அறிவுறுத்தி தகவல் தொழில் நுட்ப மற்றும் புதிய பொருளாதார மண்டலங்களில் வேலை செய்யும் தொழிலாளரை இயக்க வட்டத்திற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

கடிகாரத்தை பின்னோக்கி ஓடச் செய்யக் கூடாது

வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியினால் பறிபோயுள்ள தங்களது வர்த்தக வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு சிறு வியாபாரிகள் மற்றும் சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் தன்மை வாய்ந்த போட்டியில் சிறு உடைமைகளை இழந்து நிற்போர் ஒரு சரியான கண்ணோட்டத்தோடு வழி நடத்தப்பட வேண்டும். இந்த துர்ப்பாக்கிய நிலையை தோற்றுவித்துள்ளது முதலாளித்துவமே என்பதை முன்னிலைப்படுத்தி அதனை அரசியல் அதிகாரத்திலிருந்து அகற்றாமல் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் கொண்டுவர முடியாது என்று உணர்த்தும் போக்கிலேயே அவர்களது போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 

அதை விடுத்து அவர்களது இழந்த உடமைகளும் நிறுவனங்களும் மீண்டும் அவர்களுக்கு கிட்டுவதற்காகப் போராடுகிறோம் என்ற நப்பாசையை அவர்கள் மனதில் ஏற்படுத்தக் கூடியதாக அப்போராட்டங்கள் இருக்கக் கூடாது. பிற உழைக்கும் வர்க்க அணிகளோடு ஒன்றிணைந்து அனைவரின் மேம்பட்ட வாழ்க்கைக்கும் உறுதியும் உத்திரவாதமும் தரக்கூடிய சோசலிச அமைப்பை நிறுவுவதே அப்போராட்டங்களின் அரசியல் இலக்காக இருக்க வேண்டும். மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறுவதைப்போல கடிகாரத்தை பின்னோக்கி ஓடச் செய்பவர்கள் வரிசையில் இப்போராட்டத்தை நடத்துபவர்கள் சேர்ந்துவிடக் கூடாது.

 மேற்கூறிய அடிப்படைகளில் உழைக்கும் மக்களின் போராட்டக் கமிட்டியினை ஏற்படுத்துவது, மலரச் செய்வது, வர்க்க முரண்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ஜாதிய முரண்பாட்டை முன்னிறுத்தி முதலாளித்துவச் சுரண்டலை மூடிமறைத்துக் காக்கும் போலி இடதுசாரிப் போக்குகளை அம்பலப்படுத்துவது ஆகியவை இன்று சமுதாய மாற்றம் விரும்பும் உணர்வு பெற்ற தொழிலாளரின் உடனடிக் கடமையாக ஆகியுள்ளது. 

இப்போதுள்ள தொழிற்சங்கங்கள் புரட்சிகரக் கண்ணோட்டங்கள் எதுவுமே இல்லாமல் முதலாளித்துவ அமைப்பின் தொங்கு சதையாக மாறியுள்ள சூழ்நிலையில் உழைக்கும் வர்க்க உணர்வு பெற்றோர் அவற்றுடன் இணைந்து செயல்பட்டு அவற்றை மாற்ற முயல வேண்டும் என்று மனப்பால் குடிக்கக் கூடாது. அந்த அமைப்புகளுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களின் முன்னேறிய பகுதியினரை இயக்கமும் அமைப்பும் தேவைப்படும் பகுதியினர் பக்கம் திருப்பி உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி போன்ற அமைப்புகளில் உறுப்பினராக்க வேண்டும். அதுவே சரியானதும் நடைமுறை சாத்தியமானதுமாகும். அந்த வகையில் இந்திய உழைக்கும் மக்கள் செயல்பட உறுதி ஏற்க வேண்டும்.

மேலை நாட்டின் உழைக்கும் வர்க்கம் தங்கள் பிரச்னைகளின் தீர்வுக்காக தாங்களே சிந்திக்கும் பாதையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் உந்தித் தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு பாதைகளைப் பரிசீலித்து எது உகந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதன் தார்மீக வலுவும் ஒப்பு நோக்குமிடத்திலான மேலான உழைக்கும் வர்க்க வாழ்க்கைக் கண்ணோட்டமும் நிச்சயம் அனைத்து அம்சங்களிலும் மிகச் சரியான பாதை முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி பாதையே என்று கண்டு கொள்வதற்கு அதனை இட்டுச் சென்று கொண்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய சமூகங்களில் தற்போது நிலவுவது ஒரு போராட்டக் குமுறலை உள்ளடக்கிக் கொண்டு வெளியே நிலவும் அமைதித் தோற்றமே. 

வடிவத்தில் தேசியத் தன்மை; உள்ளடக்கத்தில் சர்வதேசியத் தன்மை 

சுரண்டலும் மூலதனத்தின் ஊடுருவிப் பாய்தலும் உலகளாவியதாக மாறியுள்ள இன்றைய நிலை உலக அளவில் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்னைகளை மென்மேலும் ஒருமுகப் படுத்தியுள்ளது. முதலாளித்துவச் சுரண்டலே நமது அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம்; அதுவே நமது முதல் எதிரி என்ற சூழ்நிலை இதுவரை இல்லாத அளவிற்கு வெளிப்படையானதாக ஆகியுள்ளது. எனவே உலகப் பாட்டாளி வர்க்கம் தோளோடு தோள் நின்று போராடி தங்கள் தங்கள் நாடுகளின் முதலாளித்துவ அரசுகளைத் தூக்கி எறிந்து உழைக்கும் வர்க்கம் கொண்டுவர விரும்பும் சமூக மாற்றம் வடிவத்தில் தேசியத்தன்மையும் உள்ளடக்கத்தில் சர்வதேசியத் தன்மையும் பொருந்தியது என்பதை நிரூபிக்கும் காலம் வெகுவேகமாக வந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் வழிநடத்த சரியான அமைப்புகள் தேசிய அளவுகளில் போதுமான வகையிலும் அவற்றை ஒருங்கிணைக்கும் சர்வதேச அளவிலான தொழிலாளர் அமைப்பு உரிய விதத்திலும் உருவாகாதிருப்பதே இன்று முதலாளி வர்க்கத்திற்கு இருக்கும் ஓரே சாதகமான அம்சமாகும். 

அமைப்புகள் இனிய விருப்பங்களால் உருவாக்கப் படுவதில்லை

இன்றுள்ள உலகமயச் சூழ்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து இனிமேல் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் உள்ளன. அந்நாடுகள் உபரி மூலதனம் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நாடுகளின் மலிவான உழைப்புத் திறனைச் சுரண்டி லாபம் ஈட்ட அந்நாடுகளை நோக்கிப் பாய்ந்து கொண்டுள்ளது. எனவே முதலாளித்துவம் எந்த அளவிற்குத் தொழில் மயத்தை உலகளாவிய அளவில் கொண்டுவர முடியுமோ அந்த அளவிற்கு வெகு வேகமாகக் கொண்டுவந்து கொண்டுள்ளது. அந்த அளவிற்கான தொழில்மயம் ஏறக்குறைய எட்டப் பட்டுவிட்ட இன்றையச் சூழ்நிலையில் முதலாளித்துவம் வளர்வதற்கான வழி அறவே இல்லாமல் ஆகும் காலம் வெகு விரைவில் வரப்போகிறது.

அப்போது முதலாளித்துவம் உலகளாவிய கடுமையான நெருக்கடியினை எதிர் கொள்ளும்; அது அந்நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைக்கும் வர்க்கத்தின் மீதே நிச்சயம் ஏற்றி வைக்கும். அதன் மூலமாக உழைக்கும் வர்க்கத்தின் மீது வரவிருக்கும் தாக்குதல் இதுவரை சிந்திக்காத தொழிலாளரையும் சிந்திக்க வைக்கும். அச்சிந்தனை உரிய உழைக்கும் வர்க்க அமைப்புகள் உருவாவதிலேயே சென்று முடியும். அமைப்புகள் எதுவும் யாரது இனிய விருப்பங்களாலும் ஏற்பட்டு விடுவதில்லை. புறச் சூழ்நிலைகள் வேண்டும் போது அவை இன்றில்லாவிட்டால் நாளை நிச்சயம் உருவாகவே செய்யும். அவற்றின் உருவாக்கத்தையும் எவரது இனிய விருப்பமும் தடுத்துவிட முடியாது. இந்த அசைக்க முடியாத வரலாற்று நியதி உரிய அமைப்புகள் உருவாவதற்கும் நிச்சயம் வழிவகுக்கும்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சிந்திக்கும் சீர்தூக்கிப் பார்க்கும் பகுதியினராக செயல்பட்டு உழைக்கும் வர்க்க இயக்கத்தைத் தட்டி எழுப்புவதைக் கலை நுணுக்கத்துடனும் விஞ்ஞான நிபுணத்துவத்துடனும் தட்டி எழுப்புவதில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொண்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேசிய, சர்வதேசிய நிலைமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு சமூக மாற்றத்திற்கு வழிகோலும் அமைப்புகளை உருவாக்கும் அவசியத்தையும் மனதில் ஆழப்பதித்து செயல்பட்டால் நிச்சயம் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு இன்று தேவைப்படும் ஒரு திருப்பு முனையை நாம் ஏற்படுத்த முடியும். அதற்கான வீர உறுதியேற்கும் தினமாக இந்த மேதினம் அமையட்டும்.

Pin It