மனிதன் தோன்றிய நாள் முதல் அவன் நடத்தும் போராட்டங்கள் அனைத்துமே ஒரு பொதுவான இலக்கைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்ப கால மனிதனை ஏறக்குறைய விலங்கோடு விலங்காக அவன் இருந்ததால் இயற்கை அடிமைப் படுத்தியிருந்தது. இயற்கைச் சூழ்நிலை அவன் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் வரை மட்டுமே அவனால் அச்சூழ்நிலையில் வாழ முடிந்தது. அது ஏதுவாக இல்லாத போது ஏதுவான இயற்கைச் சூழ்நிலையை நோக்கி தன்னை காத்துக் கொள்வதற்காக அவன் ஓட வேண்டியிருந்தது.

மற்ற விலங்கினங்களைப் போல் அல்லாமல் அவன் தன்னையயாத்த தன் குழுவைச் சேர்ந்த பிற மனிதர்களுடன் ஒன்றிணைந்து இயற்கையையும் கொடும் விலங்குகளையும் எதிர்த்துப் போராடினான். அன்று அவன் அறிவிற்கு எட்டிய அளவிற்கு இயற்கை மற்றும் அவன் எதிர் கொள்ள வேண்டியிருந்த விலங்குகள் குறித்த உண்மைகளை அவன் தெரிந்து கொண்டு அவற்றை எதிர்த்துப் போராடினான்.

அவன் தன்னையயாத்த தன் குழுவைச் சேர்ந்த மனிதர்களோடு ஒன்றிணைந்து இயற்கையையும் விலங்கினங்களையும் எதிர்த்துப் போராடும் வேளையில் மற்ற எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு வேறுபட்ட அம்சம் அவனது வாழ்க்கையில் தோன்றியது. அதாவது அவனிடம் ஒரு சமூகத் தன்மை தோன்றியது. அதன் பின்னர் அவன் வாழ்ந்த சமூகத்தில் என்று தனிச்சொத்து தோன்றியதோ அன்று வர்க்கப் பிரிவினைகள் உருவாயிற்று.

சொத்துடைமை வர்க்கம் அதனைப் பாதுகாத்துத் தான் சுகபோகமாக வாழ்வதற்காக புதுவகை சமூக ரீதியான சட்டங்களை இயற்றித் தனது உடமையையும் வர்க்க ஆட்சியையும் தக்கவைத்துக் கொண்டது. அவ்வாறு தோன்றிய வரலாறு காட்டிய வர்க்க ரீதியான அமைப்புகள் அடிமை சமூகம் , நிலவுடைமை சமூகம் மற்றும் இன்று நிலவும் முதலாளித்துவ சமூகம் ஆகியனவாகும்.

அடிமை சமூகத்தில் அடிமை எஜமானனை எதிர்த்துப் போராடிய அடிமையும் அப் போராட்டத்தின் விளைவாக உருவான நிலவுடைமை அமைப்பில் நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராடி முதலாளித்துவம் உருவாக வழிவகுத்த பண்ணை அடிமைகளும்  தங்கள் போராட்டங்களின் மூலம் தங்களை ஒடுக்கிக் கொண்டிருந்த ஆளும் வர்க்கங்களைத் தூக்கி எறிந்தனர்; இன்று நிலவும் முதலாளித்துவ அமைப்பில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கூலி அடிமை அதனைத் தூக்கி எறியும் வழிமுறையில் இருந்து கொண்டுள்ளான். 

மேலான சுதந்திரத்தை நோக்கிய போராட்டங்கள் 

இப்போராட்டங்கள் அனைத்திலுமே அந்தந்த அமைப்பின் சுரண்டும் ஆளும் வர்க்கங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது சமூகத்தின் மிகப் பெரும்பான்மையாக உள்ள சுரண்டப்படும் வர்க்கங்களின் முக்கிய இலக்காக இருந்தது.

ஆனால் அந்த இலக்குகளை எட்டும் பாதையில் அவர்களுக்குக் கிட்டியது அத்தகைய அனைத்துப் போராட்டங்களிலும் உள்ளீடாக இழையோடிக் கொண்டிருக்கும் வேறொரு அம்சமுமாகும். ஆம் அத்தகைய போராட்டங்கள் மனிதனுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் மேலானதொரு இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த வி­யங்களின் பாலான சுதந்திரத்தை வழங்கின.

ஆனால் ஏதாவதொரு வடிவத்தில் வர்க்க ஆட்சிமுறை நீடிக்கும் வரை பெரும்பான்மை மனித இனத்திற்கு முழுமை பெற்ற சுதந்திரம் என்பது கிட்டாது. வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகம் தனிமனித ரீதியான சுதந்திரமான வளர்ச்சியை தனது சுரண்டல் நலனுக்குகந்த விதத்தில் கட்டுப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

மனிதன் அவன் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை நடத்திய , நடத்திக் கொண்டுள்ள போராட்டங்கள் அனைத்தின் ஒரு பொதுவான இலக்கு முன்பு அவன் பெற்றிருந்ததைக் காட்டிலும் அளவிலும் பரிமாணத்தை  கூடுதலான சுதந்திரத்தைப் பெறுவதே என்பதாகவே இருந்தது.    

மாணவப் பருவமும் சுந்திரமும் 

வரலாற்று ரீதியான மனித குலத்தின் போராட்ட இலக்கு இவ்வாறானதாக இருக்கும்  வேளையில் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திர உணர்வும் அதற்கான வேட்கையும் அவனது வாழ்க்கையின் எந்தப் பருவத்தில் அவன் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் எத்தகைய தேவையற்ற கட்டுப்பாடுகளையும் தூக்கியயறிய முடிந்தவனாக இருக்கிறானோ அந்தப் பருவத்தில் அவனிடம் மிகுந்திருக்கிறது.

அதாவது அவனது இளமைப் பருவத்தில் தான் அவ்வுணர்வு அதிகபட்சமாக அவனிடமிருக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் அவன் கல்வி கற்கும் வாய்ப்பினை பெற்றவனாக இருந்தால் சமூகம் இயற்கை ஆகியவை குறித்த உண்மைகளையும் நுட்பங்களையும் அறிந்தவன் என்ற ரீதியில் அவன் சுதந்திரம் என்பதை ஒரு கருத்தோட்ட ரீதியாகவும் உணர்ந்தறிய முடிந்தவனாக இருக்கிறான்.

கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவர்களோடு ஒப்பிடுகையில் சுதந்திரம் குறித்த கண்ணோட்டத்தின் இன்னொரு பரிமாணத்தையும் அதாவது அறிவு சார்ந்த பரிமாணத்தையும் அறிந்தவனாக விளங்குகிறான். எனவேதான் உலகில் நடக்கும் அநீதியை எதிர்த்ததும் சமூக வாழ்க்கையை மேன்மைப்படுத்த வல்லதுமான அனைத்து முற்போக்கு இயக்கங்களிலும் மாணவர் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக விளங்குவதை வரலாற்று ரீதியாக நாம் பார்க்கிறோம்.

 சமூக அமைப்பு பறிக்கும் சுதந்திரம் 

ஆனால் அந்த உன்னத நிலை இன்று இந்தியாவில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே நிலவுகிறதா என்று பார்த்தால் அது குறித்த ஒரு பெரிய ஏமாற்றமே நம் கண் முன்பு பூதாகரமாக எழுந்து நிற்கிறது. இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் கிடைக்கும் ஒருசில வேலைகளைப் பெற பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டியிடவும் போராடவும் நேர்வதால் அவர்களது விருப்பத்திற்கு உகந்த வகையில் சுதந்திரமாக தனக்குத் தேவைப்படுவது என்று அவர்கள் கருதக்கூடிய அறிவு சார்ந்த விசயங்களின் பக்கம் தங்களது முழுக் கவனத்தையும் திருப்ப முடிவதில்லை. அதாவது இவ்விசயத்தில் மாணவனது உள்ளார்ந்த அடிப்படை உரிமையில் முதல் அடி விழுகிறது.  

அதாவது இன்று முதலாளித்துவ சமூக உற்பத்திக்கு எந்தவகை உழைப்புத் திறன் தேவைப் படுகிறதோ அந்தவகை உழைப்புத் திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமே பயனுள்ள ஓரே அறிவாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு இவ்வாறு பறிபோகும் மாணவர் சுதந்திரம் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதால் ஏற்படுவது; இதிலிருந்து மீள்வதற்கான ஓரே வழி உண்மையான சமூக முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் பொருள் மற்றும் கருத்து உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெற வாய்ப்புள்ள ஒரு சமூக அமைப்பை இன்றுள்ள சமூக அமைப்பை தூக்கி எறிவதன் மூலம் உருவாக்கிக் கொண்டுவருவதிலேயே உள்ளது. அதாவது இந்தவகை அடிப்படையான சுதந்திரம் மிக நீண்டகால அடிப்படையிலான ஒரு தீவிரமானதும் , இடைவிடாததுமான போராட்டத்தை வேண்டுவது.   

இதைத்தவிரவும் மாணவர் சமூகம் இன்று அது ஏற்கனவே அனுபவித்து வந்த பல்வேறு உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழந்துள்ளதை , அனுதினமும் இழந்து கொண்டுள்ளதை நாம் வேதனையுடன் பார்க்க நேர்கிறது.

இன்றைய சுரண்டல் அமைப்புமுறை ஒரு விசயத்தை வெளிப்படையானதாக ஆக்கியுள்ளது. அதாவது சமூகத்தின் ஒரு பிரிவினர் தங்கள் உரிமைகளை வலியுறுத்தவும் நிலைநாட்டவும் தேவையான உணர்வின்றி இருந்தார்களேயானால் அந்த உரிமைகள் அவர்களுக்கு எப்போது தேவைப் படுகிறதோ அப்போது அனுபவித்துக் கொள்ளட்டும் என்று காத்துக் கிடப்பதில்லை.

அதில் சம்பந்தப்பட்டுள்ள வேறு பிரிவினர் அவர்களது உரிமையிழந்த நிலையினை எவ்வளவு தூரம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் சாதகமாகப் பயன்படுத்தி உரிமை குறித்த உணர்வின்றி இருந்தவர்களின் உரிமைகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் பறித்து அவர்களை உரிமை இழந்தவர்களாக ஆக்குவதில் மிகுந்த கவனத்துடன் உள்ளனர்.     

சமூக மேம்பாட்டு மனநிலை , சமூக உணர்வு ஆகியவற்றுடன் கூடிய இயக்கங்கள் மாணவர் மத்தியில் என்று இல்லாமல் போனதோ அன்றிலிருந்தே அவர்கள் உரிமை இழந்தவர்களாக ஆக்கப்படும் போக்கு தொடங்கிவிட்டது.

தன்னாட்சி முறையினால் பறிபோகும் சுதந்திரம்  

இதுமட்டுமின்றி தற்போது மிகப் பெரும்பாலான கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தன்னாட்சி முறை அவர்களது ஓரளவு நிமிர்ந்திருந்த முதுகெலும்பினையும் வளைத்து அவர்களை முழுக் கூனர்களாக ஆக்கியுள்ளது. ஒரு ஆசிரியர் எவ்விதத் தயாரிப்பும் இன்றி பாடம் நடத்துவது என்ற பெயரில் வி­யங்களைத் தொடர்பின்றி உளறிக் கொட்டினால் கூட அதனை மாணவர்கள் சுட்டிக்காட்ட முடியாது.

காரணம் இன்று தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களில் நிலவும் அகமதிப்பீட்டு முறை அவர்கள் கைகளில் வழங்கியுள்ள மதிப்பெண்கள் தனக்குக் கிட்டாமல் போகும் என்ற மாணவர்களின் அச்சம்.   

இந்தத் தன்னாட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டதற்கு ஒரு ஆளும்வர்க்க சதியே காரணம். அதாவது கல்வி கொடுப்பதும் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வழங்குவதும் என்று இந்த சமூகத்தில் அத்தனை நடைமுறை சாத்தியமில்லாததாக ஆகிப் போனதோ அன்று ஒரு புது முழக்கத்தை ஆட்சியாளர்கள் முன்வைக்கத் தொடங்கினர். கல்விக்கும் வேலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை அது அறிவைப் பெறுவதற்கானதே ஆகும் என்பதே அம்முழக்கம். 

இதில் மிகப் பெரும் கொடுமை என்னவென்றால் எந்தச் சுரண்டல் ஆட்சிமுறை உண்மைக்கும் அறிவிற்கும் முட்டுக்கட்டையாக உள்ளதோ அதற்கு முட்டுக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் அறிவைப் பெறவே கல்வி என்று கூறியதுதான். உண்மையிலேயே கல்வி அறிவிற்கானதாக எப்போது ஆக முடியுமென்றால் என்று விஞ்ஞானம் , தொழில் நுட்பம் ஆகியவை ஆளைக் குறைக்க என்றில்லாமல் சமூகத்தின் பொருட்தேவையினை நிறைவேற்ற என்ற வகையில் முழுமையாகத் திறந்து விடப்பட்டு உடல் உழைப்புத் தேவையினைக் கணிசமாகக் குறைக்கிறதோ அன்றுதான் கல்வி அறிவிற்கானதாக ஆகமுடியும்.    

இந்நிலையில் அம்முழக்கத்தினை சுரண்டல் ஆட்சியின் பாதுகாவலர்கள் முன்வைத்ததன் காரணம் பள்ளிக் கல்வியின் மூலம் மிகப் பெரும்பாலான மாணவர்களை எழுதப்படிக்க மட்டும் தெரிந்தவர்களாக மாற்றுவதும் கல்லூரிக் கல்வியினைப் பலருக்கும் எட்டாக்கனி ஆக்குவதுமேயாகும். அவ்விதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விமுறையின் விளைவாக பள்ளிக் கல்வியில் முதல் எட்டு வகுப்புவரை யாரையும் தேர்ச்சி பெறாதவர்களாக ஆக்கக் கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

கல்லூரிக் கல்வியைப் பொறுத்தவரை அரசு செலவு செய்து கல்வி வழங்குவதை எத்தனை தூரம் குறைக்க முடியுமோ அத்தனை தூரம் குறைக்க விரும்பிய அரசுகள் இந்த தன்னாட்சி கல்வி நிறுவன முறையை வலியுறுத்தத் தொடங்கின. உங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள் 24 மணி நேரமும் வகுப்பறைகளைப் பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் கல்லூரியை நடத்துவதற்கு ஆகும் செலவினங்களை மாணவர்களுக்கு கூடுதல் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்ற சூழ்நிலையை உருவாக்கி அரசுகள் தாங்கள் கல்விப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டன.

அரசின் நிதி உதவியுடன் செயல்படும் கல்லூரிகளைப் பொறுத்த வரையிலான அரசின் அணுகுமுறையாக இது இருந்தது. இதுதவிர தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதிகளும் தங்குதடையின்றி பணம் படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டன. அக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கல்வித் தகுதியைச் சார்ந்திராது பணவலிமை மூலமாக மட்டுமே பெற முடிந்தவையாக ஆகிவிட்டன.

பணம் சம்பாதிக்கும் அடிப்படையில் நடத்தப்படும் அத்தகைய தனியார் தொழில் நுட்பக் கல்லூரிகள் எவ்வாறு உண்மையான கல்வியினை முறையாக வழங்கும் கடமையினை ஆற்றும்? எனவே தான் அக்கல்லூரிகளில் முறைகேடுகளே முறைகளாகிப் போய்விட்டன.

பெரும்பாலான தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள தகுதியுள்ள ஆசிரியர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்பதாகவே இருக்கும் நிலை தோன்றியது. பிற அனைத்து ஆசியர்களும் கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்கள் உள்பட மிக சமீப ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பர். 

கண்மூடித்தனமான கட்டுப்பாட்டில் சுயநிதிக் கல்லூரி மாணவர்கள் 

ஏறக்குறைய கல்வி கற்பித்தலைப் பொறுத்தவரையில் இதே போன்ற அல்லது இதைவிட மோசமான சூழ்நிலையில் படித்து வந்தவர்களாக இருக்கும் அவர்கள் எந்த வகையில் மாணவரின் அறிவுத் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தவர்களாக இருக்க முடியும்? அத்தகைய அறிவும் , பொறுமையும் , அனுபவமும் அற்றவர்களுக்கு அகமதிப்பீட்டு முறையின் கீழ் மதிப்பெண்கள் வழங்கும் அதிகாரமும் வழங்கப் பட்டுள்ளதால் அவர்கள் தங்களைக் கேள்வி எதுவும் கேட்காத விதத்தில் மாணவர்களை கண்மூடித்தனமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர்.

அரசு நிதி ஒதுக்கீடு செய்து கல்லூரிகள் திறப்பது ஏறக்குறைய நிறுத்தப்பட்டு விட்ட பின்னர் மாணவர்களின் கல்வித் தேவையை அடிப்படையாகக் கொண்ட தனியார் கல்லூரிகள் திறக்கப்பட அனுமதிகள் வழங்கப்படுவதாக அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதன் மூலம் தனியார்மயம் கலை , மருத்துவம் , சட்டம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் புகுத்தப்பட்டது. அப்போது எழுந்த ஒரு மிக முக்கியக் கேள்வி தனியார் கல்லூரிகளை பணம் படைத்தவர் மட்டுந்தானே அணுக முடியும் அவ்வாறு இருக்கையில் ஏழை மாணவர்களையும் கல்வி ஏணியில் ஏற்றிவிட அது என்ன செய்ய முடியும்? என்பதாகும்.

 பணம் இருந்தால் மட்டுமே படிப்பு என்பதனால் பறிபோகும் சுதந்திரம் 

அக்கேள்விக்கு விடையாக தனியார் கல்லூரிகளில் பாதி இடங்கள் நிர்வாகத்தினாலும் , மீதி இடங்கள் மதிப்பெண்கள் மூலமாகக் கணக்கிடப்படும் கல்வித் தகுதியின் அடிப்படையிலும் நிரப்பப்படும் என்று அப்போது கூறப்பட்டது; மேலும் தகுதி அடிப்படையில் தனியார் கல்லூரிகளில் இடம் பெறுவோர் நிர்வாகத்தின் கோட்டாவில் இடம் பெறுபவர்களைக் காட்டிலும் குறைந்த , அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தினாலே போதும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் அரசு நிறுவிய கமிசன்களின் பரிந்துரைகள் , நீதிமன்ற ஆணைகள் ஆகியவற்றால் மதிப்பெண் அடிப்படையில் இடம் பிடிக்கும் மாணவர்களும் நிர்வாகத்தின் கோட்டாவில் இடம் பிடிக்கும் மாணவர்களும் செலுத்தும் கட்டணம் ஒன்றே என்ற அநியாயமான நியதி நிலை நாட்டப்பட்டு விட்டது. அதனால் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாதவர்களாக ஏறக்குறைய முழுமையாக ஆக்கப்பட்டு விட்டனர். இவ்வாறு ஓரளவு முயற்சியுள்ள ஏழை மாணவர்களுக்கும் முன்பிருந்த தொழில்நுட்ப உயர்கல்வி கற்கும் உரிமை முற்றாகப் பறிக்கப்பட்டு விட்டது. 

பெற்றோரின் எதிர்பார்ப்பு கட்டிப்போடும் சுதந்திரம் 

இத்தகைய தனியார் தொழில் நுட்பக் கல்லூரிகளில் அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களைக் காட்டிலும் மிகவும் கூடுதலான கட்டணங்கள் பல்வேறு பெயர்களில் நிர்வாகங்களால் வசூலிக்கப் படுகின்றன. அதுதவிர நன்கொடைகள் என்ற பெயரில் கட்டாய வசூலும் ஏராளமாக நடைபெறுகிறது.

உலகமயச் சூழ்நிலையில் தொழில்நுட்பக் கல்வி கற்று வருபவர்களில் ஒரு சிலருக்கு நல்ல சம்பளம் கிட்டும் வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் தங்களின் கைவசமுள்ள உடமைகள் ஆபரணங்கள் போன்றவற்றை விற்றும் , அடமானமாக வைத்தும் இத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களின் விருப்பம் எதற்கும் எந்த முக்கியத்துவமும் தராமல் பொறியியல் படிப்பில் சேர்த்துவிடுகின்றனர்.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்கள் இதைச் செய்வதால் மாணவர்களும் தங்களது விருப்பங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு பெரும்பாலும் பெற்றோர் விரும்பும் பொறியியல் கல்லூரிகளிலேயே சேர்கின்றனர். நன்கு படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்குக் கூட பாடம் கற்பிக்கும் தரமான அனுபவம் வாய்ந்த  ஆசிரியர்கள் பெரும்பாலான தனியார் தொழில் நுட்பக் கல்லூரிகளில் இல்லை. அந்நிலையில் பொறியியல் கற்பதற்குத் தேவையான அடிப்படை அறிவும் , விருப்பமும் பெருமளவு இல்லாத மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எவ்வாறு அந்த ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியும்? 

மாணவர் பேரவைகள் இருந்த போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விசயங்கள்  இன்றைய நடைமுறைகள் 

கல்லூரி வளாகங்களுக்குள் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த மாணவர் பேரவைத் தேர்தல்களும் அரசியலும் கல்லூரி வளாக வன்முறையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பொய்யான சாக்கில் முற்றாக இல்லாமல் செய்யப் பட்டுவிட்டன. அவ்வாறு நிலைமை மிக மோசமானதாகப் போனதற்குக் காரணம் கல்லூரிகளின் கட்டுப்பாட்டு விதிகள் மட்டுமல்ல; இந்தச் சுரண்டல் அமைப்பிற்குச் சேவை செய்து பழகிப்போன அரசியல் கட்சிகளின் கருத்து ரீதியான வறுமையும் , கல்வி அறிவு பெற்றவர்களிடமிருந்து எழும் கேள்விகளை சந்திக்கத் திராணியற்றுப் போன போக்குமாகும்.

கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர் பேரவை சார்ந்த அரசியல் நிலவிய காலத்தில் கல்லூரிக்கு பொழுது போக்க என்ற அடிப்படையில் வந்த வசதிபடைத்த மாணவர் சிலர் விரும்பத்தகாத போக்குகளையும் தான்தோன்றித் தனத்தையும் சிறிதளவு கல்லூரி அரசியலில் கொண்டு வந்தது உண்மையாக இருந்தாலும் அத்தகைய அரசியல் சூழ்நிலை நிலவிய காலத்தில் அதிகமான கட்டண உயர்வினையோ மாணவர் உரிமைப் பறிப்பினையோ கல்லூரி நிர்வாகங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவைகளாகவே இருந்தன.

ஆனால் இன்று நிலைமை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது. அதீதக் கட்டண வசூல் , பாரபட்சமாக அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவது போன்ற கொடுமைகள் எவ்வகை எதிர்ப்புமின்றி நிலவுகின்றன. அதனை எதிர்க்க மாணவர்களின் இளமைத் துடிப்பு முன் வந்தாலும் பெற்றோரின் எதிர்பார்ப்பு  அதாவது எவ்வகைப் பிரச்சனையுமின்றி நல்ல மதிப்பெண் பெற்று உடனே வேலை கிடைக்கும் விதத்தில் பட்டம் பெற்றுத் தங்கள் பிள்ளைகள் வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு  அதனைத் தடுக்கிறது.

இதன் விளைவாகத் தோன்றும் ஒருவகை விரக்தி அவநம்பிக்கையாக உருவெடுத்து அது எதன் மீதும் பிடிப்பில்லாமல் அனைத்தையும் கிண்டலும் கேலியும் செய்யும் மனநிலையை மாணவர்களிடையே உருவாக்குகிறது.

இந்த நிலையில் ஏறக்குறைய 40 சதவீதப் பொறியியல் கல்வியில் சேரும் மாணவர்கள் உரிய 4 ஆண்டுகளில் பட்டம் பெற்று வெளியில் வர முடிவதில்லை. அந்நிலைக்கு முறையான கற்பித்தலின்மையே முக்கிய காரணமாக விளங்குகிறது. பட்டம் பெற்று வெளியேறுவோரில் ஏறக்குறைய 10 சதவீதம் பேரே உடனடியாக ஓரளவு நல்ல ஊதியம் கிட்டும் வேலைகளுக்குச் செல்கின்றனர். மீதமுள்ளோர் மிகக்குறைந்த ஊதியம் கிட்டும் வேலைகளுக்கும் , வேலையின்மையில் உழலும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். 

நிரந்தர நிலை அல்ல 

ஆனால் அதிக ஊதியம் கிட்டும் வேலைகளுக்குச் செல்பவர்களோ வேலைப் பாதுகாப்பு , வேலை நேர நிர்ணயம் போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் ஒரு நிச்சயமற்ற எதிர்காலமும் , தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை நிர்ணயமும்  இல்லாத நிலையில் உள்ளனர். குறைந்த ஊதியத்திற்கு வேலைக்குச் செல்பவர்களோ குறைந்த ஊதியச் சுரண்டலோடு சரியான வேலைச் சூழ்நிலை , பணிப் பாதுகாப்பு , வேலை நேர நிர்ணயம் ஆகியவை இல்லாமல் உரிமை இழந்து நிற்கின்றனர். இந்த நிலைக்கு நாம் வாழும் சமூக அமைப்பே காரணம் என்று மேலோட்டமாக வேணும் அவர்களை உணர வைக்கும் சமூக நிலை குறித்த பாடத்திட்டங்கள் அவர்கள் கற்ற தொழில்நுட்பக் கல்வியில் அறவே இல்லாததால் பெற்றோரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முடியாமல் தாங்கள் இருக்கும் நிலைக்குத் தங்களது திறமையின்மையே காரணம் என்று விதியை நொந்து கொண்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.

இவ்வாறு சுதந்திர உணர்வு மிகுந்திருக்க வேண்டியதொரு பருவத்தில் நமது மாணவர் சமூகம் விரும்பியதைக் கற்க, நல்ல கற்பித்தலைப் பெற, முறையற்ற கட்டண வசூல் , அகமதிப்பீட்டு முறையின் பாரபட்சம் போன்றவற்றை எதிர்த்து நிற்க என்று எந்த உரிமையும் இல்லாமல் , கிண்டலிலும் , கேலியிலும் தஞ்சம் புகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நம்மை ஆளும் முதலாளி வர்க்கத்தின் மிகப் பெரும் வெற்றி எதில் உள்ளதென்றால் கூடுதல் சுதந்திரம் இன்னும் கூடுதல் சுதந்திரம் என்பதை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமூக இயக்கத்தைத் தன் வசதிக்கு உகந்த விதத்தில் கட்டிப் போட்டுள்ளதில் தான் உள்ளது.

ஆனால் இன்று தனது வர்க்க ஆட்சியின் நீடிப்பிற்குச் சவால் எதுவும் இல்லை என்று மனப்பால் குடித்துத் திளைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணமான அதன் மேற்கூறிய வெற்றி மிகவும் தற்காலிகமானது என்றும் மாணவர் சமூகத்தை இந்நிலையிலேயே வைத்திருக்க முடியும் என்று அது காணும் கனவு நீடிக்கப் போவதில்லை.

ஏனெனில் எந்தச் சுரண்டல் அமைப்பும் நிரந்தரமாக நீடிக்க முடியாது; அவை மாறித்தான் தீரவேண்டும் என்பது தவிர்க்க முடியாத வரலாற்றின் நியதி. நெருக்கடியிலிருந்து முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பு ஒரு போதும் தப்பிக்க முடியாது. அந்த நெருக்கடி தூங்கிக் கொண்டிருக்கும் மாணவர் சமூகத்தையும் நிச்சயம் உலுக்கி எழுப்பும். ஆம் மரம் ஆடாமல் அசையாமல் இருக்க நினைத்தாலும் காற்று அதனை அவ்வாறிருக்க விடாது.

Pin It