“பெற்றோருடன் வாழ மறுக்கும் பெண்”

“தோழியர் இருவர் தற்கொலை”

“பெண்கள் இருவரின் சடலம் கண்டுபிடிப்பு”

“துன்புறுத்தப்பட்ட ஓர் பாலினச் சேர்க்கை பெண் ஜோடி உயிரை மாய்த்துக் கொண்டனர்”

“கட்டிப்பிடித்த நிலையில் எரிந்து கிடந்த இரண்டு உற்ற தோழிகள்”

“கல்லூரி பெண் தற்கொலை”

“தோழியை எரித்த பெண்”

இது போன்ற வரிகளின் மூலம் தான், தமிழ்நாட்டில் ஓர் பாலினச் சேர்க்கைப் பெண்களைப் பற்றிய செய்திகள் வெளிப்படையாக வெளிவராத போது, செய்திக் கட்டுரைகளின் மொழிநடையை வைத்தே, அச்செய்தி ஓர் பாலினச் சேர்க்கை பெண்களைப் பற்றியது என அறிய முடிகிறது. சில முக்கியமான விதிவிலக்குகளைத் தவிர, ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு இந்நடைமுறை பொருந்தும்.

தமிழ்நாட்டில் பிரபல அச்சு ஊடகங்களில் " லிமீsதீவீணீஸீ" என்கிற வார்த்தை மெதுவாக நுழைந்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஓர் பாலினச் சேர்க்கைப் பெண்களின் வாழ்க்கைப் போக்கு ஒன்று போல்தான் இருக்கிறது. இரு பெண்கள் தங்கள் வீட்டை (கணவன் அல்லது பெற்றோர்) வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்கள். அவர்கள் குடும்பம் வசிக்கும் மாநிலத்தின் பிற பகுதியிலோ, அல்லது வேற்று மாநிலத்திலோ அமைதியாக வாழ்க்கை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் குடியேறுகின்றனர். ஒரு சில சமயம் தங்களுக்கான சட்டப்பேறு கிடைக்கும் என்ற உணர்வின் காரணமாக தேவாலயத்திலோ, கோவிலிலோ, மசூதியிலோ, திருமணச் சடங்கை நிறைவேற்றுகின்றனர். பெரும்பான்மையான நேரங்களில், இரு பெண்களுள் ஒருவரது பெற்றோர் அல்லது கணவர் அல்லது இருவரின் பெற்றோர் அல்லது கணவர் "காணாமல் போனதாக" கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்களைத் துரத்துகிறது காவல்துறை. இது போன்ற புகார்களின் பேரில், வெளி மாநிலத்திற்குத் தப்பியோடிய பெண்கள் தம் பகுதி மேஜிஸ்டிரேட் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படும் போது, தாங்கள் வயது வந்தவர்கள் என்றும் சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு தங்களுக்கு விருப்பமில்லையென்றும் தங்களின் " தோழியுடனோ", தனியாகவோ வாழ்வதற்கே விரும்புவதாகவும் வாதிட்ட போதிலும் இப்பெண்கள் அவர்களின் பெற்றொரிடமோ, கணவனிடமோ திருப்பி அனுப்பப்படுவது, எந்தச் சட்டத்தாலும் நியாயப் படுத்தப்பட முடியாத செயல் ஆகும்.

ஓர் பாலினச் சேர்க்கைப் பெண்கள் அல்லது " நெருங்கிய தோழிகள்" தங்களின் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது மற்றொரு கோணம். உயிரை மாய்த்துக் கொள்ளும் விதங்கள் வேறுபட்டாலும் பிரச்சனையில் இருக்கும் இரு பெண்களும் இணைந்து ஒருவரது வீட்டிலோ அல்லது ஒரே நேரத்தில் அவரவர் வீட்டிலோ அல்லது சிறிது தொலைவில் இருக்கும் ஹோட்டலிலோ தற்கொலை செய்துக் கொள்வது என்பதே அவர்களின் திட்டங்களாக இருக்கிறது. ஒரு சில சந்தர்ப்பத்தில், தற்கொலை முயற்சி செய்த இருவரில் ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க நேர்ந்தால், சமூகத்தின் வெறுப்பை எதிர் கொள்வதோடு, கொலை செய்தது அல்லது தற்கொலைக்கு துணை போனது ஆகிய தவறான சட்டக் குற்றச்சாட்டுகளையும் சந்திக்க நேரிடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவ்விஷயங்கள், தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்துபவையல்ல. தமிழ்நாட்டில் இப்பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாநிலத்திற்குள் உதவிகள் கிட்டுவது கடினமாக இருப்பதே அவர்களைப் பிற மாநிலப் பெண்களிட மிருந்து வேறுபடுத்துகிறது. தமிழ்நாட்டில், பாலியல் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட வேலைகள் என்பவை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், ‘ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்’, கோத்திகள், அரவானிகள் ஆகிய குழுக்களுக்கான உரிமைகளுக்காக நடைபெறும் வேலைகள் தான் பாலியல் சார்ந்த வேலைகளாக வகைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் அரவானி சமூகத்தினரது இயக்கம், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரவானிகளுக்கான நல வாரியம் அமைத்தது, வாக்காளர் அடையாள அட்டை வழங்கியது ஆகியவை தமிழ்நாட்டின் சிறப்பாகும்.

பெண் உரிமை மற்றும் விடுதலையைப் பற்றி பொது வெளிகளில் நடந்துள்ள விவாதங்கள் அடங்கிய சிறப்பான வரலாற்றைக் கொண்டது தமிழகம். மாநிலத்தில் முற்போக்குச் சிந்தனைகளுக்கு வித்திட்ட சுயமரியாதை இயக்கம் தொடங்கி, இன்று தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெண்களுக்கான பிரச்சனைகளைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் சிறிய ஆனால் முக்கியமான குழுக்கள் வரையிலான இவ்வரலாறு, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகவும் நீண்ட காலமாக தொடர்வதாகவும் இருக்கிறது. சாதியக் கோட்பாடுகளை கேள்வி கேட்பது, தமிழ்நாட்டு அரசியலில் எவ்வளவு இயல்பான விஷயமோ; பால், பாலினம், திருமணம் பற்றியக் கோட்பாடுகளை கேள்வி கேட்பதும் அவ்வளவு இயல்பானதாகவே இருக்கிறது. அடக்குமுறையின் அடிப்படைகளைக் கேள்விக் கேட்காத, அடக்குமுறையின் ஒரு சில வெளிப்பாடுகளை மட்டுமே எதிர்க்கக்கூடிய, வலிமையுள்ள ஒரு சிலரால் இவ்வரலாறும் பொதுவெளி விவாதங்களும் கட்டுப் படுத்தப்படுகின்றன. எனினும் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள இவ்விமர்சனங்கள், மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய புரட்சிகர முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் தொடர்ந்து இயங்கக் காரணமாக இருந்து வருகிறது. பால் மற்றும் பிற சமூக நீதி பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவோர் இச்சிந்தனையாளர் வட்டத்திற்குள் அடங்குவர்.

இது போன்ற முற்போக்கு வரலாற்றைக் கொண்ட மாநிலத்தில், ஓர்பாலினச் சேர்க்கை பெண்களின் நிலையை வெவ்வேறு முறைகளில் மாற்றியமைக்க வேண்டும். முதலில், தமிழ்நாட்டில் பாலினம் மற்றும் ஒருபால் ஈர்ப்பைப் பற்றி பேசுவதற்கான ஒரு மொழியை உருவாக்க வேண்டும். இம்மொழி சம்மந்தப்பட்ட வர்களுக்கு பிரச்சனைகள் வராத வண்ணமும், பெண்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கக் கூடியதாகவும், புரிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஓர்பாலினச்ச் சேர்க்கை பற்றிய விவாதங்கள் தமிழ்நாட்டின் முற்போக்கு சிந்தனையோட்டத்தில் வகிக்கும் முக்கிய பங்கையும் ஓர் பாலினச் சேர்க்கையாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை மனித உரிமை மீறல் என்ற கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் பற்றி முற்போக்குச் சிந்தனையாளர்களுடனும் குழுக்களுடனும் விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, பிரச்சனைகளுக்கு ஆளாகும் பெண்கள் தங்கள் உடல், விருப்பங்கள், உறவுகள் பற்றிய கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துக் கொள்ளத் தேவைப்படும் தகவல்களையும் தமிழகத்தில் இப்பெண்களுக்கான பாதுகாப்பான தங்கும் இடங்களையும் உதவி எண்களையும் வழங்க வேண்டும்.

மேல் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளின் சரியான பயன்பாட்டால் தான், இந்த மரணங்களையும் வன்முறைகளையும், தடுக்க முடியும். நம் நாட்டில் உயிர் இழப்பதற்கு பல்வேறு வழிகள் உண்டு. பசியால்,வாழ இடமில்லாததால், ஒருவர் இறக்கலாம். மதம், சாதி, வர்க்கம், பால் அல்லது பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் கொலை செய்யவும் படலாம். ஆசையும், அன்பும் மட்டுமே ஒரு சில வெளிகளை சுதந்திரமானதாகவும் சுகமானதாக வும் வைக்க போராடி வருகின்றன. நம்முடைய சிறிய மகிழ்ச்சிகளுக்கும் தற்காலிக சுதந்திரத்திற்கும் காரணமாக இருக்கும் அன்பு மற்றும் ஆசை இவற்றின் பெயரால் மனித உயிர்களை எடுக்கக் கூடாது என்று கேட்பது நியாயமற்றதா? 

Pin It