பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய காலத்தில், இந்தியாவில் நவீன நிறுவனமயப்பட்ட கல்வி அமைப்புகள் செயல்படவில்லை. சமய நிறுவனங்கள் வழி செயல்பட்ட குருகுல வடிவிலான அமைப்புகள் இருந்தன. பாரம்பரிய கல்வி முறையை மேலும் வளர்த்தெடுப்பதா? அல்லது புதிய கல்விமுறையை அறிமுகப் படுத்துவதா? என்னும் உரையாடல், பிரித்தானிய ஆட்சியாளர் களிடையே இடம்பெற்றிருந்தது. பாரம்பரிய முறைகளுக்கு உதவி செய்து, அம்முறையை வளர்த்தெடுப்பதற்கு வாரன் ஹேஸ்டிங் போன்ற பிரித்தானிய அலுவலர்கள் ஒப்புதல் தந்தனர். 1781இல் வங்காளத்தில் இஸ்லாமிய மரபு சார்ந்த கல்விநிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதைப்போலவே பெனாரஸில் சமஸ்கிருதக் கல்லூரியும் உருவாக்கப்பட்டது. பிரித்தானிய அதிகாரிகள் உருவாக்கியதைப் போல உள்ளூர் ஜமீன்தார்களும் அவ்வகை யான நிறுவனங்களை உருவாக்க முன்வந்தனர்.

இவ்வகையில் பிரித்தானியர் ஆட்சி பாரம்பரிய சமய மரபிலான கல்விநிறுவனங்கள் உருவாகவே வழிகண்டது. சமஸ்கிருதம், பெர்சியன் மற்றும் அரபு மொழிகள் பயிற்றுவிக்கப் பட்டன. இக்காலத்தில்தான் 1784இல் ‘இராயல் ஆசியவியல் கழகம்’ உருவானது. இதனை உருவாக்கிய வில்லியம் ஜோன்ஸ், சமஸ்கிருத மொழியே இந்தியாவின் மொழி என்று புரிந்து கொண்டார். அம்மொழியையே ஐரோப்பியர்கள் ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்கினர். அம்மொழியிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டன. அதிலிருந்த மநுதர்மம் போன்ற சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியச் சட்டம் ஒன்றை பிரித்தானியர்கள் உருவாக்கிக்கொண்டனர்.

மேற்குறித்தப் பின்புலத்தில், பிரித்தானியரின் இவ்வகை நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளாத பிரித்தானிய அதிகாரிகளும் இருந்தனர். பாரம்பரிய மொழிகளைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மூலம், சமகாலத்தவர்க்குப் பயனில்லை என்று அவர்கள் கூறினர். இந்திய மொழிகளில் உள்ளவை தர்க்கபூர்வமற்றவை என்றும் அவற்றைப் பயில்வதன்மூலம் புதிதாக எதனையும் பெறப்போவதில்லை என்றும் கருதினர். இலண்டன் நகரில் செயல்பட்ட கிருத்தவ சமயம் சார்ந்த கல்வி நிறுவனங்களையும் விமர்சனம் செய்த இவர்கள், இப்பாரம்பரிய கல்விமுறைக்கு ஆதரவு அளிக்கவில்லை. கிருத்தவ சமயத்தைப் பரப்புவதற்கும் நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கும் ஆங்கில மொழி பயிற்றுவித்தல் மிக மிக அவசியம் என்று கருதினர். இந்தப் பின் புலத்தில்தான் ஆங்கிலவழி கல்வி போதிப்பதற்கானச் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தன. இவ்வகையில் பாரம்பரிய சமய மரபுக் கல்வியிலிருந்து விடுபடுவதற்கு ஆங்கிலக் கல்வி உதவியது.

1835இல் மெக்காலே மூலம் அதற்கான திட்டவரைவுகள் உருவாயின. புகழ்வாய்ந்த ‘மெக்காலே கல்விக் குறிப்புகள்’ எனும் திட்டம் எல்லோராலும் ஏற்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கில மொழி வழியிலான கல்வி நிலைபேறுகொண்டது. இக்கல்வி முறைதான் இன்றும் தொடர்கிறது. இக்கல்வியைப் பெறுகிறவர்கள், எவ்வகையான புத்தெழுச்சி மனநிலை உடையவர்களாக உருப்பெறுகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பலாம். இக்கல்விமுறை அடிப்படையில் ‘கிளிப் பிள்ளை’ கல்விமுறையே; ‘சொன்னதைத் திருப்பிச் சொல்வது’. சுயமான சிந்தனைக்கு வழியற்றது. கல்வி பெறுவதன்மூலம் தம்மைச் சுற்றியுள்ள உலகம் தொடர்பான சொரணைகளைப் பெறுவதில்லை. மாறாக, இயல்பாக உள்ள சொரணையைப் படிப்படியாக இழந்து, எழுத்துப் பயிற்சி அல்லது குறிப்பிட்ட துறை தொடர்பான தகவல் பயிற்சி ஆகியவைகளைப் பெற்ற சடங்களாக உருப்பெற்று விடுகின்றனர். மொழி சார்ந்தும் சிந்தனை மரபு சார்ந்தும் அந்நியமாகி வாழ்வதற்கு இக்கல்வி உதவுகிறது. ஆங்கிலமொழி நீக்கமற கல்வியில் இடம்பெற்றுவிட்டது. ஆங்கில மொழிப் பயிற்சிதான் அறிவியல் சார்ந்த மனநிலையை உருவாக்கும் என்று நம்புகின்றனர். இத்தன்மைகளால் ‘வெற்றுச்சோடை’ யாகிப் போகின்றனர். சீனம் மற்றும் ஜப்பான் நாடுகளில் ஆங்கில மொழியின் இடம், இந்தியாவில் ஆங்கில மொழியின் இடம் என்ற ஒப்பீட்டைச் செய்யலாம். மேற்குறித்த இரண்டு நாடுகளில் உருப்பெற்றுள்ள அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு நமது நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வகையில் ஆங்கிலமொழிக் கல்வி என்பது நடுத்தர-மேல்மட்ட பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்றுள்ளது. இவர்கள் தாய்மொழியை உளவியல் ரீதியாக மறுக்கின்றனர். தமிழ் நாட்டுக் கல்வி வரலாறும் மேற்குறித்த பின்புலத்தில்தான் செயல்படுகிறது. இதிலிருந்து விடுதலை இல்லையா? என்ற கேள்விதான் எஞ்சு கிறது. மொழிக்கல்வி, கலைசார் கல்வி, பொறியியல் கல்வி, மருத்துவக் கல்வி ஆகிய அனைத்தும் தனிமனித தற்சார்பு எனும் சுயநலக் கருத்தாக்கத்தை உருவாக்குவதாகவே அமைகிறது. சமூக பொதுவெளி குறித்த புரிதல் தருவதாக அமைவதில்லை. கல்வி என்பது வெறும் பயிற்சி, வெறும் எழுத்தறிவு, வெறும் தகவல் அறிவு ஆகிய அடிப்படைகளை மீறுவதாக இல்லை. பிரித்தானிய மெக்காலே கல்வித் திட்டம், பிரித்தானியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்காத நோக்கத்தைக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும், சமூகத்தில் நடக்கும் எவ்வித நிகழ்வு குறித்தும் சொரணையற்றதாகவே கல்வி தொடர்கிறது.

மாற்றுக் கல்வியை நோக்கிய திட்டங்கள் என்பவை, வெறும் அடைமொழி களாக்கப்பட்டு ‘புதிய கல்வி’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் கல்வி பயிற்று ஒழுங்கு, பாடப் பிரிவு ஆகிய பிற நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய மொந்தை பழைய கள். உலகம் முழுவதும் தாய்மொழிவழிக் கல்வியே சொரணையை உருவாக்கும் என்கிறார்கள். நமக்கு அப்படியான வாய்ப்பு வரும் என்று எண்ணிக்கூட பார்க்க முடிவ தில்லை... பிரித்தானிய காலனியக் கல்விக்குள் மீண்டும் மீண்டும் தேடுகிறார்கள் நமது கல்வியாளர்கள். முதல் தலைமுறை கல்வியைப் பெறுவோர் ‘ஆங்கில மொழி’ எனும் அதிகாரத்தால் சோர்ந்து போகிறார்கள். இரண்டாம், மூன்றாம் தலைமுறைகள் கிளிப் பிள்ளைகள். இதற்கு மாற்றாக, ஆளுமையை உருவாக்கும் கல்வியை எப்போது பயிற்றுவிக்கப் போகிறோம்? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதாக இவ்விதழ் அமைகிறது.

- வீ.அரசு

Pin It