தமிழ் நாவல் தன்னுடையதான வடிவத்தை இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில்தான் கண்டடைந்தது. மாறாகத் தமிழ்ச் சிறுகதை முப்பது, நாற்பது என்னும் இருபது ஆண்டுகளில் செழுமையான வடிவத்தைத் தேடிக் கண்டடைந்தது. வாழ்வின் சிறு அசைவினை மொழியில் தேக்கி, அதன் விரிவை வாசக மனதில் எழுப்பும் சிறுகதை யின் அடிப்படைப் பண்பு, வளமான தமிழ்க் கவிதை மரபிலிருந்து சுலபமாக அதனை வந்தடைந்தது. பிறமொழிச் சிறுகதைகளோடு ஒப்பிடும்போது, தமிழ்ச் சிறுகதை கவிதையின் பக்கம் சாய்ந்திருப்பதை உணரமுடியும். தமிழ் நாவல் வடிவிற்கான தேடல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. உணர்ச்சிக்கதை மரபு (ரொமான்ஸ் மரபு) ஒன்று தமிழில் இல்லாதிருந்தது. உணர்ச்சிக் கதையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டுதான் நாவல் வடிவம் உலகளாவிய நிலையில் தோற்றம் கொண்டது. உணர்ச்சிக்கதைகள் வாழ்வின்மேல் கனவைப் படரவிடுவன. கனவிலிருந்து வாழ்வை விடுதலை செய்து காணமுயன்றதன் பலனே நாவல். ஆனால் தமிழில் நாவலுக்கான முதல் முயற்சிகள் அனைத்தும் நாவலுக்கும் உணர்ச்சிக் கதைகளுக்கும் இடைப்பட்ட வடிவமாகவே அமைந்தன. சைவ மடங்கள் தோற்றுவித்த வறட்சியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதே வேதநாயகம் பிள்ளையின் சாதனை. கோவில் புராணங் களின் சிறு வாடை கூட ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில்’ இல்லை. ஆனால் அது சிறுசிறு வாழ்க்கைத் துணுக்குகளின் கோவை. வாழ்க்கை இயக்கம் பெறவே இல்லை. ‘பத்மாவதி சரித்திர’த்தின் மூன்றாவது பாகத்தில்தான் மாதவையர் நாவல் வடிவின் நெளிவு சுழிவுகளைக் கையாள அறிந்து கொண்டுள்ளார். ஆனால் அவருடைய எதிர்பாராத மரணம் முழுமை பெறாத நாவலாக அதனை முடித்துவிட்டது. முழுமைத் தோற்றம் தரப்பட்ட ‘பத்மாவதி சரித்தி’ரத்தின் வடிவில் நாவலின் வடிவச்சாயல் குறைவாகவே உள்ளது. ‘கமலாம்பாள் சரித்தி ரத்தை’ப் பொறுத்தவரையில் புதுமைப்பித்தனின் கூற்று மிகப் பொருத் தமானது. ஒரு பகுதி நாவல்; மறு பகுதி கனவு. கனவு ரொமான்ஸை அடை யாளப்படுத்துவது. உணர்ச்சிக் கதைகளைத் தடுமாற்றமின்றி இவர்கள் படைத்திருக்கலாம். பிற்காலத்தில் நாவல் வடிவம் பெற அது உதவியாக அமைந்திருக்கும். நாற்பதுகளில் வெளிவந்த க.நா.சுப்ரமணி யத்தின் ‘பொய்த்தேவு’, ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ நாவல்களை முன்வைத்துதான் தமிழில் நாவல் வடிவம் தோன்றிவிட்டதை உறுதி செய்துகொள்ள முடிகிறது. இடையில் வேங்கடரமணியின் ‘முருகன் ஓர் உழவன்’, சங்கரராமின் ‘மண்ணாசை’, வ.ரா.வின் ‘சுந்தரி’ என இரண்டும்கெட்டான் வடிவங்கள் நிறையவே வெளிவந்துள்ளன. நாவல் மரபின் இத்தொடக்கத்தை விரிவாக எதிர்கொண்டது பிற்காலத்தில் மரபு எடுத்துக்கொண்ட வேகத்தை மதிப்பிடவே.

ஐம்பதுகளில்தான் தமிழ் நாவல் மரபு அதன் செவ்வியல் வடிவத்தை தி.ஜானகிராமன் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டது. ‘செம்பருத்தி’ ‘உயிர்த்தேன்’ எனச் சில படிகளைக் கடந்துதான் அவராலும் செவ்வியல் வடிவத்தைத் தொடமுடிந்தது. செவ்வியல் வடிவம் மனிதவாழ்வைப் பிரபஞ்ச நிலைக்கு உயர்த்த முயன்றபோது, வட்டார நாவல்கள் அதை மண்ணோடு இறுகப் பிணைத்தன. ‘மோகமுள்’ நாவலுக்குத் தரும் முக்கியத்துவத்தை நீல. பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலுக்கும் தந்தாக வேண்டும்.

எதார்த்த நாவல் மரபின் இவ்விருவகையிலான வடிவங்களும் மொழியில் உருக்கொள்ளும் வாழ்வின் தோற்றம் குறித்து மிகுந்த கவனம் கொண்டிருந்தன. நிகழ்வுகளின் தேர்வும் அதன் இயக்கமும் வாசகன் சுவைக்கும்படியாகவும் அமைந்தன. நாவல்களின் பரப்பும் இதற்கிசைவான விரிவைக் கொண்டிருந்தது. வாசகக் கவனத்தை ஈர்க்கும்படியான நிகழ்வுகளுக்கு இவ்வடிவங்களில் பஞ்சமே இல்லை. பல சமயங்களில் வாழ்வின் எதார்த்தத்தை உணர இவை இடையூறாகக் கூட அமைந்தன. ஒரு வாசக மனம் ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவலின் பரப்பில் மேலோட்டமான ஈடுபாட்டினைச் செலுத்தி அதில் திருப்தி கண்டுவிடும். எதார்த்த நாவலின் இப்பலவீனத்தைத் தாக்கி நவீனத்துவம் நாவல் மரபைத் தன்வயப்படுத்திக் கொண்டது.

நவீனத்துவம் நாவல் வடிவிலும் மொழியிலும் செறிவை முதன்மைப்படுத்தியது. இச்செறிவு வடிவம் அல்லது மொழியைக் கையாளும் படைப்பாளியின் திறன் சார்ந்ததல்ல. நவீனத்துவம் புற உலக நிகழ்வுகளில் அல்ல, அந்நிகழ்வு தனிமனித மனதில் தோற்று விக்கும் நெருக்கடிகளை மொழிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தியது. ‘தனி மனிதப் பிரக்ஞையினூடாகக் காலம்’ என்னும் நவீனத்துவத்தின் அடிப்படை இதற்குக் காரணமாக அமைந்தது. வாசகக் கவனத்தை ஈர்க்கும்படியான நிகழ்வுகள் நாவல் பரப்பிலிருந்து விடைபெற்றுக்கொண்டன. நிகழ்வுகளின் விரிவும் கழன்றுவிட்டது. வாசகப் பங்களிப்பினை வலியுறுத்திய நவீனத்துவம், குறிப்புணர்த்தும் பண்பிற்கு அழுத்தம் தந்தது. வாழ்வின் புதிர் கவனம் பெற்றபோது, வெவ்வேறு விதமான புரிதல்களுக்கு இடம் தரும்படியான மொழி அவசியமானது. இவற்றின் ஒட்டுமொத்தப் பலன் நாவல் அதன் பக்க அளவில் சுருக்கத்தை எதிர்கொண்டது. ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலோடு ஒப்பிடும்போது அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ அனைத்தும் குறைவான பக்கங்களைக் கொண்ட நாவல்களே. தமிழ்நாவல் வடிவம் தன்னை முழுமையாகப் புதுப்பித்துக் கொண்டதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஜே.ஜே. சில குறிப்புகள். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான குறிப்புகளும் அவன் நாட்குறிப்பின் சில பக்கங்களும்தான் நாவல். வாசக மனதில் நாவல் சித்திரிக்கும் வாழ்வு சுயமான விரிவை எடுத்துக்கொள்ளும். இந்த விரிவு அந்த வாசகனுக்கே உரித்தானது. அவன் வாழ்வின் எதார்த்தத்தைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் வாசிப்பில் முக்கியம். அவ்வப்போது எதார்த்த நாவல்கள் வெளிவந்து கொண்டிருந் தாலும் பெரும்பான்மையான நாவல்கள், குறிப்பாக இளம் தலைமுறை நாவலாசிரியர்களின் நாவல்கள் நவீனத்துவ மரபைத்தான் சார்ந்துள்ளன.

 

இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளும் எண்பதுகளும் நவீனத்துவத் தின் சாதனை காலகட்டமாக அமைந்தன. ஜே.ஜே. சில குறிப்புகள் இச்சாதனைகளின் சிகரம். ‘மோகமுள்’ கட்டமைத்த தமிழ்நாவல் வடிவை இது சிதறடித்தது. தொடர்ந்து வந்த நாவல்களில் இதன் தாக்கத்தை ஏதோ ஒரு வகையில் உணரமுடியும். நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக்குதிரை’, ‘எட்டுதிக்கும் மதயானை’, ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப்பருந்து’ என நவீனத்துவத்தின் சாதனைகள் தொடரவே செய்தன. எனினும் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தில் ஒருவித தேக்கநிலையை நாவல் மரபில் உணரத் தலைப்பட்டனர்.

நவீனத்துவ நாவல்கள் தனிமனித மனதில் எழும் நெருக்கடிகளை எழுத்தில் துலக்குவதில்தான் கவனம் செலுத்தின. மனதின் சிறு அசைவுகளை மொழிப்படுத்த பரபரப்பான வாழ்க்கை நிகழ்வுகள் அவசியமற்றவை. சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளை முன்வைத்தே இதனைச் சாதித்துவிட முடியும். வாழ்வைச் சற்றும் பிசிரற்ற வடிவில் எழுத்தில் சித்திரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி புனைகதையின் அடிப்படைப் பண்பான புனைவை வளரச் செய்தது. மொழியில் வலிந்து புகுத்தப்பட்ட செறிவு இயல்பான நடையை இல்லாதாக்கியது. நாவல் என்ற வடிவின் அடிப்படை இயல்பான வாழ்வின் மீதான எல்லையற்ற விரிவு பெருங்கனவாக முடிந்தது. எதார்த்த நாவல்களைப் போலவே நவீனத்துவ நாவல்களும் காலத்தின் நகர்தலைக் குறிப்புணர்த்தலாக வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டின. காலம் ஒரு தொடர் இயக்கம் என்பது புறக்கணிப்பைப் பெற்றது. வரலாறு தன் கால்தடங்களை நிகழ்காலத்தில் பதித்துச் செல்கிறது என்ற உண்மை நவீனத்துவப் படைப்பாளிகளால் எதிர்கொள்ளவே படவில்லை. தமிழ் முற்போக்கு நாவல்கள் இதை மேலோட்டமாக முன்வைத்தன. விதிமுறைகளுக்கு உள்ளடங்கிய வரலாற்றுப் பார்வையின் மீதான எதிர்ப்புணர்வு நவீனத் துவப் படைப்பாளிகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டிருந்தது. ராஜ நாராயணனின் ‘கோபல்ல கிராமத்தில்’ இது ஆரோக்கியமாக வெளிப் பட்டிருந்தாலும் இந்த ஒவ்வாமை நவீனத்துவ விமர்சகர்களிடமிருந்து அதனை அந்நியப்படுத்தியது. நாவல் ஒரு குறுகிய வாழ்க்கை வட்டத் திற்குள்ளாகச் சிறைபட்டது இதன் விளைவே.

1990இல் ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. இதுவும் ஒரு நவீனத்துவ நாவலே. ஆனால் விலகலுக்கான கூறுகளைத் தன்னுள் கொண்டிருந்தது. சுற்றுச்சூழல் சீர்கேடு உட்படச் சமகால வாழ்வு சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் தன் பார்வை சென்றாக வேண்டுமென்ற முனைப்பு அந்த இளம் படைப்பாளியிடம் இருந்துள்ளதை நாவல் பதிவு செய்துள்ளது. ஏழு வருடங்களுக்குப் பின் 1997 இல் தமிழ் நாவல் மரபின் திருப்புமுனை நாவலான ‘விஷ்ணுபுரம்’ வெளியானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எந்தப் புராணக்கதை மரபிலிருந்து நாவல் தன்னை முற்றிலுமாக விலக்கிக்கொண்டதோ, விஷ்ணுபுரம் அதைத் தழுவிக் கொண்டது. எழுத்தில் முன்வைக்கப்படும் வாழ்வின் புறத்தோற்றத்திலிருந்து, வாழ்வின் எதார்த்தம் வேறானது என்பதை நவீனத்துவ நாவல்கள் உணர்ந்துகொண்டிருந்தன. ஆர்வமூட்டும் வாழ்க்கை நிகழ்வுகளை அது தன்னிலிருந்து விலக்கிக் கொண்டாலும், வாழ்வின் கூர்முனைகளில் சிக்கித் தவிக்கும் தனிமனிதனின் மன நெருக்கடிகளைத் துலக்குவதிலேயே அது கவனம் செலுத்தியது. ஒருவகையில் இதுவும் நாவலை வாழ்வின் நகலாக மாற்றியது.

‘விஷ்ணுபுரம்’ வாழ்வின் துல்லிய நகலை எழுத்தில் உருவாக்காமல் வாழ்வின் எதார்த்தத்தைச் சென்றடைய இயலும் என்ற நம்பிக்கையைத் துணிவாக முன்வைத்தது. சிறு வாழ்க்கை வட்டத்திலிருந்து, மானுடப் பெருவாழ்வு எனத் தன் எல்லையை விரித்துக்கொண்டது. ‘சிறிய பரப்பு அதிக ஆழம்’ என்னும் நவீனத்துவத்தின் விழியை ‘மிகப்பெரிய பரப்பு மிகப்பெரிய ஆழம்’ என மாற்றி அமைத்தது. வளர்ச்சிப்பாதையில் காலம்காலமாக மனிதன் எதிர்கொண்ட சிக்கல்கள், சங்கிலிக் கண்ணிகளாகத் தொடர்ந்து மனிதனை அச்சுறுத்தும் வரலாறு எனத் தன் பரப்பைத் துணிவாக விரித்துக்கொண்டது. எல்லாவற்றையும்விட மேலாக நவீனத்துவம் புறக்கணித்த புனைவுப் பண்பை விஷ்ணுபுரம் முழுமையாக மீட்டுக்கொண்டது. பௌராணிகர் கதை சொல்லும் பாணியிலமைந்த இந்த நாவல் அதற்கான மொழியை, வடிவைத் தேர்ந்துகொண்டது. நவீனத்துவம் வலியுறுத்திய செறிவு முழுமையாக விடைபெற்றுக் கொண்டது. பல பக்கங்களினூடாகக் கடந்து ஓர் உச்சத்தை எட்ட அது அனுமதித்தது. உச்சத்தைச் சாதிக்கும் பக்கம் மட்டுமே நவீனத்துவத்திற்குத் தேவையானது. அனைத்தையும் மொழியில் வெளிப்படுத்தாமல் வாசகப் புரிதலுக்கு விட்டுச் செல்லும் மௌனங்கள் மட்டுமே நவீனத்துவத்தின் எச்சமாகப் படிந்தது.

நாவலாசிரியன் நல்ல ஆய்வாளனாகவும் இயங்கவேண்டிய கட்டாயத்தை ‘விஷ்ணுபுரம்’ தோற்றுவித்தது. நாவலில் இந்தியத் தத்துவ மரபு முழுமையும் இழையாகத் தொடர்ந்துள்ளது. ஆவணச் சேகரிப்பும் தன்னுடையதான வாசிப்பிற்கு அதை உட்படுத்தலும் இதற்கு வேண்டும். நாவல் படைப்பில் இன்றியமையாத பாகமாக இது மாறியது. இங்கு ஆவணம் என்பது புனைவிற்கு எதிரிடையானதல்ல; மாறாகப் புனைவை வலுப்படுத்துவது. இத்தகைய உழைப்பு இதற்கு முன்பு நாவல் படைப் பாளிகளுக்குத் தேவையாக இருந்ததில்லை. வரலாற்று ‘ரொமான்ஸ்’களில் வரலாறு என்பது ஒரு போர்க்களம் குறித்த சிறு தகவல்தான். வரலாற்று நாயகன் போர் செய்வதைவிடக் காதல் செய்வதில்தான் முனைப்பு காட்டுவான். கனவை வழியவிடும் போது அங்கு வரலாறு எழுந்துவிடும். ஆனால் வாசகனை நுகர்வோனாக மாற்றிய இந்த ரொமான்ஸ்கள் மட்டுமே விரிந்த பக்க அளவினைக் கொண்டிருந்தன. ஆனால் இப்புதிய மரபு உருவப் பெருக்கத்தை இயல்பாக எதிர்கொண்டது. நாவல் கையடக்கும் வாழ்வின் பரப்பு அதன் பக்க அளவைத் தீர்மானிக்கும். 1998இல் வெளியான சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் மூன்று தலைமுறை வாழ்வை உள்ளடக்க முயன்றது. ஆனால் அதில் மேலோங் கியிருந்த நவீனத்துவத்தின் பண்புகள், வரலாற்று உணர்வின்மை போன்றவை அதை நவீனத்துவ நாவலாகவே தேங்கச் செய்தன.

தமிழ் நாவலின் இப்புது மரபை ‘நவீனத்துவத்திற்குப் பின்னரான தமிழ் நாவல் மரபு’ என்றே அடையாளப்படுத்த வேண்டும். பின்நவீனத் துவம் என்னும் கலைச்சொல்லைப் பயன்படுத்தும் கட்டாயம் எழவில்லை. கோட்பாடு சார்ந்த நாவல்கள், பின்நவீனத்துவ நாவல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தவைதான். யாப்பருங்கலக் காரிகையின் எடுத்துக்காட்டுச் செய்யுள்களைப் போல் குறிப்பிட்ட கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள இன்றியமையாதன. மரபோ நதியின் வெள்ளப் பெருக்கினைப்போல், தானாகப் பாதை வகுத்துக்கொண்டு பாயும்.

1998இல் வெளியான ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவல் வடிவின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அடித்து நொறுக்கியது. கட்டுப்பாடுகளைத் துறந்த நிலையையே நாவலின் அடிப்படையாக இது முன்னிறுத்தியது. புனைவை எழுப்ப நாவலாசி ரியன் கவிதை, கட்டுரை, நாடகம் என எதை வேண்டுமானாலும் நாவல் பரப்பிற்குள் கையாள முடியும். எல்லாம் புனைவின் மாறுபட்ட தோற்றங்களே. புனைவின் அலகுகளில் ஒன்றாகத்தான் வாசிக்கப்பட வேண்டும். புனைவின் இலக்கு வாழ்வின் எதார்த்தத்தை உணரச் செய்வதே. இந்த நாவலும் வரலாறு தொடர்பான பெரும் உழைப் பினைத் தன்னகத்தே கொண்டது. ஒரு இலட்சியத்திற்காகப் பல்லாயிரம் மனித உயிர்கள் பலியிடப்பட்ட பின், அந்த இலட்சியம் கைவிடப்படும் தருணத்தில் பலியான மனித உயிர்களின் நிலை என்ன? மானுட வாழ்வின் அடிப்படை குறித்த ஒரு கேள்வியை நாவல் எழுப்பு கிறது. தமிழ்ச் சூழலில் சமகாலத் தன்மை கொண்ட கேள்வி இது. ஆனால் ரஷிய அல்லது மார்க்ஸிய வரலாற்றினைக் களமாகக் கொண்ட நாவல் என்றே எதிர்கொள்ளப்பட்டது. மொழியில் உருக்கொள்ளும் வாழ்க்கைத் தோற்றமும், நாவல் உணர்த்தும் வாழ்வின் எதார்த்தமும் வேறானது என்ற புரிதல் சமகால வாசகனுக்கு அவசியமானது.

நூற்றாண்டின் முடிவிற்குள் தமிழ்நாவல் மரபு தன்னை முழுமை யாகப் புதுப்பித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்துவந்த புதிய நூற்றாண் டில் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் புதுப்பாதையில் வெகுதூரம் முன்னேறி யுள்ளனர்.

தமிழின் முதல் நாவலான ‘பொய்த்தேவு’ நாவலின் க.நா. சுப்ரமண்யம், நாவலில் வரும் பாத்திரம் ஒன்றின் கண்கள் வழியாக நெல் குத்தும் இயந்திரத்தினை வேடிக்கை பார்க்கிறார். நவீனமயமாத லின் படிகளில் தமிழ்ச் சமூகம் ஏறத் தொடங்கிவிட்டதற்கான பதிவு இது. நவீனமயமாதல் அறிமுகம் செய்யும் இயந்திரங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும். ஒரு எல்லைவரை நவீனமயமாதல் சாதகமான பலன்களையே தரும். பெருகிவரும் வாழ்க்கை வசதிகள் மதிப்பீடுகளில் வரவேற்கும்படியான மாறுதல்களைத் தோற்றுவிக்கும். கீழத்தெரு சோமு மேட்டுக்குடியாக உயர முடிகிறது. உயரத்திலிருந்த நில உடமையாளர் கீழத்தெரு சோமுவின் பாதுகாப்பில் வாழும் கட்டாயம் நேரிடுகிறது. நில உடமை பாதுகாத்து வந்த மதிப்பீடுகளே அதனை அழுத்தும் சுமையாகிறது. நவீனமயமாதல் குறிப்பிட்ட எல்லையை அடைந்தபின் எதிர்மறையான பலன்களுக்கு நேராக மக்களை வழிநடத்தும். இப்போதும் மதிப்பீடுகள் மாறுதல் பெறும். ஆனால் இம்மாறுதல்கள் விரும்பத்தக்கனவாக அமைவதில்லை. புதிய தலைமுறைப் படைப்பாளியான கோபாலகிருஷ்ணன் ‘மணல் கடிகை’ நாவலில் இதை விசாரணைக்குள்ளாக்குகிறார்.

ஒரு தொழில் நகரத்தின் இரு நூற்றாண்டு வாழ்வை முன்னிறுத்தி இதனை நிகழ்த்துகிறார். ஒரு இயந்திரம் தோற்றுவித்துவிட்ட மாறுதல்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு நிலத்தை மனிதன் வாழ்வதற்கே அருகதையற்றதாக்கி விடுகிறது. செடியை வாடச் செய்கிறது தண்ணீர். தலைகீழ் மாறுதல் இது. இதுபோல்தான் மானுட வாழ்வும் அடிப் படை மதிப்பீடுகளைக் கூடச் சிதைத்துவிடுகிறது. குழந்தைகளின் உழைப்பில் சுகம் தேடும் தந்தைகள் - அன்னைகள். இந்த நாவலும் மிகுந்த உழைப்பின்மேல் எழுப்பப்பட்டுள்ளது. நுட்பமும் நம்பகத் தன்மையும் கொண்ட தகவல்கள். ஆனால் தகவல்களாகத் தோற்றம் கொள்ளாதவாறு புனைவின் அலகுகளாக மாற்றப்பட்டுள்ளன. நாவலின் பரப்பு மிகப் பெரியது. தனிமனித வாழ்வு அல்ல, ஒரு நகரத்தின் வாழ்வு விரிகிறது. சமகாலத்தில் மலர்களாக விரியும் வரலாறு. நாவலின் பக்க விரிவு தேவையானதும் கூட. ‘மணல் கடிகை’ தமிழ்நாவல் மரபின் சாதனைகளில் ஒன்றாக அமைகிறது.

விளிம்புநிலையில் வாழும் மக்கள் வாழ்வு பெறும் கவனம் புதிய நூற்றாண்டின் மற்றொரு பரிமாணமாக அமைகிறது. இதற்கு முன்பும் விளிம்புநிலை மக்கள் வாழ்வு இலக்கியக் கவனிப்பைப் பெற்றுள்ளது. பூமணியின் ‘பிறகு’ நாவலில் இதனை எதிர்கொள்ள முடியும். ஆனால் இங்கு வாழ்வு என்பது படைப்பாளி சுட்ட விரும்பும் வாழ்க்கைச் சிக்கலின் நிலைக்களன் மட்டுமே. ஆனால் விளிம்புநிலை மக்கள் வாழ்வை, அதன் பலம் மற்றும் பலவீனத்துடன் முழுமையாக அரவணைக்கும் நோக்கம் புதிய நூற்றாண்டைச் சார்ந்தது. மூன்றாவது உலக நாடுகளும், விளிம்பு நிலை மக்களும் கவனம் பெறுவது பின்நவீனத்துவக் காலகட்டத்தின் பொதுபோக்கு. ஒருவகையில் இனவரைவியல் பண்புகொண்ட நாவல்கள். இக்காலகட்டத்திற்கே உரியவை. ‘ஆழி சூழ் உலகு’ நாவலை இங்குச் சுட்ட வேண்டும். இதன் படைப்பாளி ஜோ டி குரூஸ் புதிய நூற்றாண்டில் அறிமுகமானவர். அவருடைய முதல் நாவலும் கூட. இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கிய மரபு நெய்தல் நில வாழ்வைப் புறப்பார்வையில் தான் எதிர்கொண்டுள்ளது. ‘ஆழி சூழ் உலகு’ நாவல்தான் முதன்முதலாக அகப்பார்வையில் இவ்வாழ்வை எதிர்கொள்கிறது. விரிந்த கடல் பரப்பில் மனிதன் எதிர்கொள்ளும் அனுபவம் தமிழில் மொழிப் படுத்தப்பட்ட தில்லை. இந்த நாவல்தான் அந்த அனுபவத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. சதாகாலமும் தமக்குள் மோதிக்கொள்ளும் மக்கள். இயல்பாகிப்போன வன்முறை வாழ்வு என்றாலும் அதன் உள்ளும் மனதை நெகிழச் செய்யும் மதிப்பீடுகள். பிற சமூகங்கள் தொலைத்துவிட்ட மதிப்பீடுகள். மூன்று தலைமுறை வாழ்வு எழுத்தில் உயிர்பெறுகிறது. இழையாக ஊடுருவிச் செல்லும் வரலாறு காலத்தின் நகர்தலும் மதிப்பீடுகளின் மாறுதல்களும் இணைகோடுகளாக நாவல் பரப்பில் நீண்டு செல்கின்றன. ஆனால் எக்காலத்திலும் மாறுதலடையாத மதிப்பீடுகளும் உண்டு. தியாகம் - இதன் முக்கியத்துவத்தை மரணத்தின் விளிம்புவரை பயணித்து மீண்டுவரும் வாழ்க்கைச் சூழலிலிருந்துதான் உணர்ந்துகொள்ள முடியும். ‘ஆழி சூழ் உலகு’ நாவலும் மரபின் சாதனைகளில் ஒன்றே.

சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ (2008), ஜோ.டி. குரூஸின் ‘கொற்கை’ (2009), பொன்னீலனின் ‘மறுபக்கம்’ (2010) என்னும் மூன்று நாவல்களையும் இம்மரபில் அண்மைக்காலப் படைப்புகளாகச் சுட்ட வேண்டும். இவை ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலதிகப் பக்கங்களைக் கொண்டவை. இவற்றின் பக்க அளவு இவை விரித்துக் கொண்டுள்ள வாழ்வின் பரப்பிற்கு அவசியமானதும் கூட. பக்க அளவு இவற்றிற்குச் சுமையாக அமையவில்லை. இம்மூன்று நாவல்களுமே உறுதியான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் புனைகதை மொழியில் எழுப்பப்பட்ட வரலாறுகள். படைப்பாளிகளின் பெரும் உழைப்பின் அடிப்படையில் மொழியில் உருக்கொண்ட புனைவுகள். இவை விளிம்புநிலையில் வாழும் அல்லது வாழ்ந்த இனக்குழுக்களின் வரலாறுகள். காவல் கோட்டம் சமகாலத்திலும் விளிம்புநிலையில் வாழும் கள்ளர் இனமக்களின் ஆறு நூற்றாண்டு வாழ்வை மொழியில் எழுப்பி யுள்ளது. கொற்கை மையத்தில் வாழ்ந்து சமகாலத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட (இது படைப்பாளியின் புரிதல்) பரதவ இன மக்களின் வாழ்வை விரிக்கின்றது. மறுபக்கம் விளிம்பில் வாழ்ந்து, அதன் அனுப வங்களைக் கனலாக உட்கொண்ட, இன்று மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் வாழ்வை விசாரணைக்கு உள்ளாக்குகின்றது. இம்மூன்று நாவல்களுமே உறுதியான வரலாற்று ஆவணங்களை முன்வைத்து இயங்குகின்றன. இவற்றின் படைப்பாளிகள் வரலாற்று ஆய்வாளராகவும் செயல்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தி யுள்ள ஆவணங்கள் அனைத்துமே நம்பகத்தன்மை கொண்டவை. ஜோ. டி. குரூஸ் வாய்மொழி ஆவணங்களைப் பெருமளவு திரட்டியுள்ளார்.

வரலாற்று ஆவணங்களைப் புனைகதையின் அலகுகளாக உருமாற்றுவதில் இவர்கள் பெற்றுள்ள வெற்றி வெவ்வேறு விகிதத்தில் அமைந்துள்ளது. காவல் கோட்டம் வரலாற்றை நேர்கோட்டில் இயங்கச் செய்கின்றது. கிருஷ்ண தேவராயர் காலம்தொட்டு வரலாறு இயக்கம் பெறுகிறது நுட்பமான கால மாறுதல்களுடன். வரலாற்றின் புறத் தோற்றத்தை முற்றிலுமாகக் களைந்துவிட்டு, அதன் உயிரை மட்டும் புனைகதைக்குள் இயங்கும்படி செய்ய அவரால் முடிந்துள்ளது.

கொற்கை ஆவணங்களின் அரும்பெரும் தொகுப்பாக நின்று விடு கிறது. ஆவணங்கள் புனைகதையின் அலகுகளாக மாற்றம் கொள்வதில் தடுமாற்றம் கொள்கிறது. இதன் விளைவாகப் புனைகதையில் வரலாற்றின் புறத்தோற்றம் அழுத்தமாகப் படிந்துள்ளது.

வெங்கடேசனும், ஜோ.டி.குரூஸ்சும் இளம் தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகள். துறப்பதற்கு முன் சாதனைகள் பெரும் சுமையாக இல்லை. புதுப்பாதையில் தடுமாற்றங்கள் இன்றிப் பயணிக்க முடிந்துள் ளது. பொன்னீலன் முற்போக்கு மரபின் முக்கியப் படைப்பாளி. அவருடைய ‘புதிய தரிசனங்கள்’ மட்டுமே முற்போக்கு மரபில் குறிப் பிட்டுச் சொல்லும்படியான படைப்பு. ஆனால் அவரும் புதுப்பாதை யில் பயணம் செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமைகளை முழுமையாக அல்லாவிடினும் பெருமளவு துறந்துவிட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஓர் இனக்குழுவின் பழங்காலம், திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட ஒரு கலவரக்காலம், சமகாலம் என மூன்று தடங்களில் நாவலில் நிகழ்வு களை இயங்கச் செய்கிறார். நேர்கோடாக அல்லாமல் காலங்கள் தம்முள் பின்னிப் பிணைந்து ஒன்று மற்றொன்றில் ஊடுருவி இயக்கம் பெறுகிறது. மிகுந்த வாசக ஒத்துழைப்பினைக் கோரிப் பெறுகிறது நாவல். ஓர் இனக்குழுவின் நான்கு நூற்றாண்டு வாழ்வு விசாரணைக் குள்ளாக்கப்படுகிறது. வரலாறாக அல்ல; நாவலாகவே மறுபக்கம் அழுத்தம் பெறுகிறது.

இம்மரபின் எதிர்கால வளர்ச்சியினைக் குறித்த நம்பிக்கையை இந்நாவல்கள் தோற்றுவிக்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்து, இந்நூற்றாண்டின் முதல் பத்து என்னும் இருபது ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த நாவல்கள் அனைத்தையும் இம்மரபில் உட்படுத்த வேண்டும் என்பதில்லை. நவீனத்துவம் வரலாற்றுடன் மட்டுமின்றித் தொப்புள்கொடி உறவான செவ்வியல் இலக்கியங்களுடனும் தன் உறவைத் துண்டித்துக் கொண்டிருந்தது. ஜெயமோகனின் ‘காடு’ ‘கொற்றவை’ என்னும் இரு நாவல்களுமே இந்த உறவைப் புதுப்பித்துக் கொண்டுள்ளன. ‘கொற்றவை’யைப் புதுகாப்பியம் என்றே அதன் படைப்பாளி அடையாளப்படுத்துகிறார். நாவலாக இவை வெற்றிபெற்றவையும் கூட. எனினும் இவற்றின் முக்கியத்துவம் மரபில் இவை செலுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது. தனித்தடத்தைத் தோற்றுவிக்கும் தருணத்தில் இவை தனியான கவனத்தைப் பெறும்.

நவீனத்துவத்திற்கு எதிரிடையாகக் கோட்பாடு சார்ந்த படைப்பியக்கம் செயல்பட்டு வந்துள்ளது. தமிழவன், சாருநிவேதிதா, எம்.ஜி.சுரேஷ், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகளைக் குறிப்பிடவேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிற்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்தும் உள்ளனர். எனினும் ஒரு மரபாகத் தொடர்ச்சி பெறும் நிலை எழவில்லை. ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், நெடுங்குருதி நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தில் தலித் இலக்கியம் ஒரு மாற்று இலக்கிய மரபைத் தோற்றவிக்கும் என்னும் நம்பிக்கையை ஊட்டியது. பாமாவின் ‘கருக்கு’, சிவகாமியின் ‘ஆனந்தாயி’ ஆகிய நாவல்கள் மரபை முன்னெடுத்துச் செல்லும் தகுதியைப் பெற்றிருந்தன. என்றாலும் இளம் தலைமுறைப் படைப்பாளிகள் மரபை முன்னெடுத்துச் செல்லாதது ஒருவித தேக்கநிலைக்குத் தலித் இலக்கியத்தை இட்டுச் சென்றுள்ளது.

இந்த இருபது ஆண்டுகளிலும் தமிழில் பெண்ணியக் கவிஞர்கள் தனி மரபாக உருவெடுத்துள்ளனர். ஆனால் புனைகதையில் இந்நிலை எழவில்லை. சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ முதல் இஸ்லாமிய நாவல். உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ பெண்ணிய நாவலாக வடிவெடுத்தாலும் பெரும் தாக்கத்தைத் தோற்றுவிக்கும் சக்தி பெற்றதல்ல. மாறாகப் பெண்ணிய மொழியைத் ‘தன் வரலாற்று நாவல்களில்’ தான் தேட வேண்டும். சென்ற நூற்றாண்டின் இறுதி முதல் புனைகதை மொழியில் எழுதப்பட்ட தன் வரலாறுகள் இவை. ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ தவிர்த்துப் பிற தன் வரலாற்று நாவல்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஒடுக்கப்பட்ட பெண்களின் வரலாறுகள். இந்த ஒடுக்கப்படுதலே புனைகதை மொழியைக் கையாள இவர்களைத் தூண்டியுள்ளது. அழகிய நாயகி அம்மாளின் ‘கவலை’, பாரத தேவியின் ‘நிலாக்கள் தூரதூரமாக’ முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு’ என இம்மரபு புதிய நூற்றாண்டில் தொடர்ச்சி பெற்றுள்ளது.

எக்கால கட்டத்திலும் மரபோடு இணையாத படைப்பாளிகளின் இருப்பு இருக்கவே செய்யும். ப.சிங்காரம், நகுலன் போன்றவர்களைக் குறிப்பிட வேண்டும். இக்காலகட்டத்தில் கண்மணி குணசேகரனைக் குறிப்பிட வேண்டும். அவருடைய ‘அஞ்சலை’ தமிழின் ஒரே இயல்பு வாத நாவல். மரபோடு இணையாதது இவர்கள் முக்கியத்துவத்தை எவ்வகை யிலும் குறைப்பதில்லை.

புதிய நூற்றாண்டில் தமிழ் நாவல் மரபு நம்பிக்கை ஊட்டும் விதத்தில்தான் உள்ளது.

(கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் தொடர்ந்து செயல்படுபவர். தமிழில் குறிப்பிடத்தக்க விமர்சகர்களுள் ஒருவர். பல நூல்களை எழுதியுள்ளார்.)

Pin It