வெகுசன இலக்கியம் எனும் கற்பிதம் அழகியல் மற்றும் சமூகவியல் அடிப்படைகளைக் கொண்டது. ஆகவே மிக இலகு வானது என்று நினைக்கப்படுகின்ற இக் கருத்தியல் மிகச் சிக்க லானது. ஒரு வரலாறு/ பண்பாடு/சமூகச் சூழலில் சித்திரிக்கப்படு கின்ற இலக்கிய வடிவங்கள், பிரதிகள்,இலக்கிய அமைப்புக்கள், இலக்கியம் படைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அல்லது வாசிக்கப்படுகின்ற முறைகள், இலக்கியப் படைப்புக்கள் முன்வைக் கின்ற உன்னதம்/மலிவு வகைப்பாடுகள் அல்லது இலக்கிய உற்பத்திகள், இலக்கியம் அமைப்பு என்ற நிலையில் சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் முறை இவற்றின் அடிப்படைகளுடன் மட்டுமே வெகுசன இலக்கியத்தைக் குறித்த வரையறைகள் உருவாக்க இயலும்.

வெகுசன ரசனை எனும் கற்பிதம் கூட ஒரு சமூகத்தின் கலாச்சார வரலாற்றில் ஒரு கட்டமாதலால் குறிப்பாக இச்சிக்கல்களின் வெளிச்சத்தில் வெகுசன ரசனையை எனும் கருத்தியலைப் புரிந்துகொள்ள உதவுகின்ற இணைவுகளையும் கூறுகளையும் அறிதல் என்பதே ஒரு ஆய்வில் முதன்மை இலக்காக அமையும்.ஏனெனில் மிகக் குறைவான வகைப்பாடுகள், முடிவுகளை முன்னிறுத்தி விசாலமான, நுட்பமான கற்பிதங்களைக் கொள்கையாக்குதல் என்பதுதானே இலக்கியத் திறனாய்வின் பொதுமுறையியல்.

வெகுசன இலக்கியம் எனப் பொதுவழக்கில் குறிக்கப்படுகின்ற ஓர் இலக்கியவகைமை (இதுபோன்ற வகைப்பாடு தேவையற்றது என்ற கருத்தும் வலிமையடைந்து வருகிறது என்றாலு கூட) உண்டு. இவ்விலக்கியத்தின் அமைப்பைப் பகுப்பாய்வு செய்யுமுன் வெகுசனரசனை எனும் கருத்தியலைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். ஆனால் கொள்கையாக்கத்தின் நிலையில் நமது வெகுசன இலக்கியம் சிறு சிக்கலை உருவாக்குகின்றது. மலையாள வெகுசன இலக்கியத்திற்கு ஏற்ற ஒரு கொள்கை உருவாக்கத்தின் தேவையை இச் சிக்கல் கவனப்படுத்துகின்றது.

வெகுசன இலக்கியம் குறித்து கிடைத்துள்ள கொள்கை விளக்க மாதிரிகள் பெரும்பாலும் மேற்குநாடுகள் சார்ந்தவைதான். இம் மாதிரிகள் நமது வெகுசன இலக்கியத்தை ஆராயப் போதுமானவை தானா என்பது ஐயம்தான். இலக்கியத்தின் பரவல்முறை வெகுசன இலக்கியத்தை வரையறுக்க உதவும் மதிப்பீட்டுக் கூறுகளில் ஒன்று. இயல்பாகவே பரவல்/ பரப்புதல் முறை வேறுபாடுகள் வெவ்வேறு மட்ட வாசிப்பு சமூகத்தை முன்னிறுத்துகின்றது.

மேலைக் கொள்கைகள் புத்தக வடிவ வெளியீட்டுச் சூழலை முன்வைத்தே வெகுசன இலக்கியத்தைப் புரிந்துகொள்ள முயன்றுள்ளன. மறுமலர்ச்சி, தொழிற்புரட்சியின் உச்சகட்டத்தில் ஐரோப்பாவில் புத்தக வெளியீடு ஒரு பெருந்தொழிலாக உருவெடுத்தது. நில வுடைமை அமைப்பின் மாற்றாக இடம்பிடித்த முதலாளிய அமைப்பில் அறிவும் அறிவின் களஞ்சியங்களாகப் புத்தகங்களும் அமைப்பு வடிவைப் பெற்றன. இக் கட்டத்தில் தான் புத்தகமும் எழுத்தாளனும் சமூக முக்கியத்துவமுடைய ஒரு உறவின் அடிப் படையில் அமைப்பாக்கம் அடைந்தனர்.

அறிவுப் பரவலாக்க வழிகள் என்ற நிலையில் ஏராளமான நூலகங்கள் உருவாயின. அறிவு ஓர் பொது இடமாக மாற்றம் பெற்ற சூழலை இங்கிலாந்தின் பின்னணி யில் ஆராய்கின்ற டெரி ஈகிள்டனின் Criticism and Ideology, Function and Criticism போன்ற நூற்கள் இதுபற்றி விளக்குகின்றன.

புத்தகங்களின் மலிவுப்பதிப்புகள் குறித்த கருத்தும் அன்றே இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தில் அதுபோன்ற புத்தகசாலைகளுக்குப் பெயர்போன க்ராப் ஸ்ட்ரீட்கள் போன்ற வெளியீடுகளின் பெயரி லேயே பரவலாக அறியப்பட்டன. பென்னி நாவல்கள் அன்றும் இன்றும் வெளியீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.இன்று போலவே அன்றும் ஒருவேளை இன்றை விடவும் அதிகமாக, அன்று சாதாரண வாசகரின் இலக்கிய வடிவமான நாவல்களே இப்போக் கின் நுகர்வுப் பொருளாக இருந்தது.

மக்கள் ரசனையைப் புத்தக வெளியீட்டில் ஒரு வகைமையாக இனங்காணும் முயற்சி 18,19 நூற்றாண்டுகளிலேயே ஐரோப்பாவில் ஏற்பட்டது.இலக்கியம், புத்தகம், படைப்பாளி, மக்கள் ரசனை எனும் கூறுகள் அமைப்பாக்கம் பெறும் வரலாற்றைப் பீட்டர் ஹாம், பீட்டர் விடோஸன் என்றிருவர் தொகுத்துள்ள Popular Fiction என்ற நூலில் காணலாம்.

முதலாளியச் சூழலில் நூலாசிரியர்/ படைப்பாளிகளுக்குக் கிடைத்து வந்த புரவலர் நிலைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. சமூகத்தில் செல்வந்தர்களும் அரசர்களும் அளித்துவந்த பொருளாதார ஆதரவு எனும் இடத்தைப் புத்தகவெளியீட்டாளர்கள் கைப்பற்றினர். அவர்கள் ஓர் அரசியல் பிரிவாக அதிகார நாற்காலிகளைக் கைப்பற்றி யிருந்ததை வரலாற்றில் காண்கிறோம். இந்நிகழ்வுகள் அக்காலக் கவிதைகளிலும் நிழலிடுவதுண்டு.

விடுதலைக்குப் பிற்பட்டகாலத்தில் மலையாளத்தில் தோன்றிய வெகுசன இலக்கியம் பற்றிக் கூறுவதற்கு முன்னர் ஐரோப்பிய புத்தகவெளியீட்டுச் சூழல் பற்றிக் கூறக் காரணம் ஒரே நிலைகளில் இவற்றிடையே உள்ள ஒற்றுமைதான்.

ஐரோப்பாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நிகழ்வுற்ற ஒரு வரலாற்றுக் கட்டத்தை நாம் மிகக் குறுகிய காலத்தில் கடந்துள்ளோம். கேரளச் சூழலில் வாசிப்பு ஒரு நிறுவனம் என்ற நிலையில் வளர்ச்சி பெற்ற வரலாற்றை இதனுடன் இணைத்தே வாசிக்க வேண்டும். மக்கள் ரசனையின் தொழிற் பாட்டை வரையறுக்க இது அவசியமாகும்.

ஐரோப்பாவைப் போலவே நூலகங்கள் சமகால வெளியீடுகள் வழியாகவே மலையாளியின் வாசிப்புப்பழக்கமும் வளர்ந்தது. விடுதலைக்குமுன்னரே தொடக்கமிடப்பட்டிருந்த நவீனக் கல்வி முறை பொதுமக்களிடையேஅடிப்படைக்கல்வி, எழுத்தறிவு பெற லாக விடுதலைக்குப்பிந்தைய காலத்தில் பெருமளவு பரவலாக்கம் அடைந்தது. கேரளத்தில் ஏராளமான வாசகசாலைகளும் நூலகங் களும் பற்பல சமகால வெளியீடுகளும் ஏற்பட்டது இக் காலத்தில் தான்.

இலக்கியப்பணி என்ற கருத்தியலும் கூடக் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் ஏற்பட்டது. நாடுவிடுதலை பெற்ற காலத்தி லேயே கேரளம்45%எழுத்தறிவு பெற்ற மாநிலமாக இருந்தது. அடுத்த ஆண்டுகளில் அதில் ஏற்பட்ட முறையான வளர்ச்சியும் நமது பண்பாட்டு வரலாற்றின் பகுதியாகும். மறுமலர்ச்சியின் இயல்புடைய இக்கலாச்சாரச் செயல்பாடு மலையாளியின் வாசிப்பு, வாசிப்புமுறை வரலாற்றுடனும் வெளிப்படையாக வெகுசன இலக்கியத்துடனும் தொடர்புடையது.

*****

ஒரேகாலத்தில் இலக்கிய உற்பத்தியில் வேறுபட்ட முறைமைகள் நிலவுகின்றன. இந்நிலை இலக்கியத்தின் அமைப்பு, இலக்கியப் பரவல்முறை, வாசிப்புமுறை,இலக்கியவரலாறு இவற்றைப் பாதிப்பதுண்டு, வெகுசன இலக்கியத்தை வரையறை செய்ய இக்கூறுகளை அறிதல் அவசியம். நமதுவெகுசன இலக்கியத்தை அணுக மேற்கத்திய மாதிரி மட்டும் போதுமானதல்ல. சமகால இதழ் வெளியீடுகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.மேலை மாதிரிகளில் வெகுசன இலக்கியத்தின் ஒவ்வொரு மாதிரியும் புத்தக வடிவ வெளியீடுகளே.

ஒவ்வொரு படைப்புமுறை சார்ந்த மக்கள் ரசனையின் குறியீடாகச் செயல்படுகின்றன. நீண்ட கால அளவிலான மக்கள் ரசனை அவற்றிற்குண்டு. அதனோடுஒப்பிட மலையாள வெகுசன இலக்கியம் குறைந்தகாலஅளவிலான மக்கள் ரசனையைக் கொண்டுள்ளது. மக்கள் ரசனையின் அளவுகோல்களை ஆராயும் போது நமது புத்தக வெளியீட்டுத்துறை சில சுவாரசியமான போக்கு களைக் காட்டுகின்றது. இலக்கியப் பிரிவில் இடம்பெறுகின்ற புத்தக வடிவிலான நூற்களின் ஒரு பெரும் சதவீத நூற்களுக்கும் ஒரு சிறப்பான வாசக வட்டம் இல்லை.

இவ்வாசகரைப் பொறுத்தவரை புத்தகவாசிப்பு ஒரு வேறுபட்ட செயல்பாடு மட்டும்தான். இது ஒரு பயிற்சியின் சிக்கல். புத்தகவடிவில் அதிகமாக விற்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் சுத்த/ நல்ல இலக்கியமென நாம் பொதுவாகக் கருதுகின்ற ஒரு சில படைப்பாளிகளின் நூற்கள் மட்டுமே என்று இன்றையப் போக்குகள் காட்டுகின்றன.

நவீன விற்பனைத் தந்திரங்களுக்கும் இதில் பங்குண்டு. இருப்பினும் மிகுந்த மக்கள் வரவேற்பைப் பெற்ற படைப்பாளியின் நாவல்கள் (உண்மையான வெகுசன இலக்கியம்) கூடப் பதிப்பு விஷயத்தில் ‘கஸாக்கின்றெ இதிகாச’த்தின் எண்ணிக்கையை நெருங்க முடிவதில்லை. புதிய பொழுதுபோக்கு ஊடகங்களின் வரவால் படிப்பகம் மற்றும் நூலகச் செயல்பாடுகளும் அருகியுள்ளன.

வேறு சில சமூக அரசியல் சூழ்நிலைகளும் இதற்குக் காரணம்தான். தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் பல்சுவைக் கதையாடல்களை வீடுகளுக்குள் கொண்டு சேர்ப்பதையும் குறிப்பிடலாம். சுதந்திரத் திற்குப் பின் மிகநீண்ட காலமாக இருந்துவந்த ஒரு பொதுஇடம் என்பது இன்று மெல்லமெல்ல அருகிவருகின்றது. இச்சூழலில்தான் மக்கள் ரசனை என்பதை ஒரு மறுவரையறை செய்யவேண்டியுள்ளது.

அடிப்படையான மக்கள் ரசனை ஒரு அழகியல்ரீதியான கூறு அல்ல. ஒரு இலக்கியப்படைப்பின் கலைமதிப்பை அளந்திட அதையரு மதிப்பீட்டுக் கூறாகக் கொள்ளவியலாது. இலக்கியம் ஒரு படைப்புச் செயல்பாடும் அமைப்புமாக நாம் புரிந்துகொள்ளும் சூழலில் மக்கள் ரசனைக்கோ, வெகுசன இலக்கியத்திற்கோ இடமில்லைதான். Cult Fiction என்ற நூலில் கிளைவ் புளூம் கூறுவது நமது வெகுசன இலக்கியத்திற்கு ஓரளவு பொருத்தமாக உள்ளது.

“ஆய்வாளர்களைப் பொறுத்தவரை இச் சொல்லின் பொருள் அங்கீகாரமுடைய இலக்கியப்படைப்புக்கு அளிக்கப்படுகிற மிகை முக்கியத்துவம் காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட பெருவழக்கி லுள்ள வெளியீடு என்பதும் பண்பாட்டாய்வாளர்களைப் பொறுத்த வரை பெரும்பாலும் எதையும் இழிவுபடுத்தி மலிவும் சாதாரணத்து வமும் கற்பிக்கின்ற பொதுமக்கள் பண்பாட்டின் முக்கியமான உதாரணமாகும்” கூடவே இலக்கியப் படைப்புக்கள் என்ற தோரணை யில் வாசிக்கப்படுவனவற்றை ஒருங்கிணைத்து இலக்கியம் என்ற சொல்லாட்சியின் கீழ் நிலைநிறுத்துகின்ற பண்பாட்டுச் செயல் முறைப் பணியிலிருந்து விடுதலை பெற்ற ஒரு வாசகவட்டமே இவ் வெகுசன இலக்கியத்தின் நுகர்வோர். அவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. இலக்கியவிமர்சனம் பண்பாட்டுவிமர்சனத்திற்கு வழிவிட்டு விலகும் என்ற ஆந்தனி ஹோப்கின் கருத்துகள் இங்கு மிகவும் பொருளுடையதாகின்றது.

வெகுசன இலக்கியங்களில் மக்கள் ரசனை எவ்வாறு கட்டமைக் கப்படுகின்றது? வாசகர்களின் கருத்தையும் மக்களின் உணர்வுத் துடிப்பையும் அறிந்து இலக்கியப் படைப்பில் ஈடுபடும் முறை ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டில் இருந்திருக்கவேண்டும். சார்லஸ் டிக்கன்சின் ‘பிக்விக் பேப்பெர்ஸ்’ எழுதப்பட்டமுறையை நாம் அறிவோம். சந்தையின் தேவைகளுக்கேற்ப இலக்கியத்தையும் இலக்கியவாதியையும் மாற்றித் தீர்மானிக்கிற ஒருநிலை இது.

(மக்கள் ரசனையும் இதேபோல கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கட்டமைக்கப்படுவதன் சான்றுகள் நாமறிவோம்.ஏனெனில் சாமானிய மக்களின் ரசனைமாற்றம் சந்தையால் உருவாக்கப்படுவது தான். கிடைக்கப்பெறும் பொருளுக்கு அப்பால் ரசனையின் எல்லையை விரித்திட இயலாமைதான் பொதுமக்களின் பிரச்சினை). கேரளத்திலும் எதையும் கதையாக்குதல் என்ற போக்கு இருந்துள்ளது. பொதுமக்களால் பெரிதும் கவனிப்புப் பெற்ற பல சம்பவங்களின் மாதிரியிலமைந்த நாவல்களும் நெடுங்கதைகளும் எழுதப்பட்டன.

ஒரு தொழிலாகவேஇத்துறை செயல்பட்டுவருகிறது என்பதே பரவலான கருத்து. ஆசிரியர்/ இதழ் ஈடுபாடுகள், இதழ் உற்பத்தி செய்ய விரும்புகிற ரசனைக்கு ஏற்ப இயந்திரத்தனமாகக் கதைகள் படைக்கப்படுகின்றன. படைப்பாளியின் ஆளுமைக்கோ கலை நுட்பத்திற்கோ இடமேயில்லை. இயல்பாகவே படைப்பளிகள் நபர்கள் என்ற நிலையில் மறைந்துவிடுகின்றனர். ஒரு படைப்பாளி யைப் படைக்கவும் அழிக்கவும் ஒரு இதழாசிரியர்/ வெளியீட் டாளரால் இயல்கின்றது.

தொழிற்சாலைகளின் அதே அதிகார அமைப்பு இங்கும் செயல்படுகின்றது.எழுத்தாளர்கள் முகமற்ற தொழிலாளர்கள் அல்லது வெறும்பெயர்கள். ஒருவரே வெவ்வேறு புனைப்பெயர்களில் வெவ்வேறு படைப்புக்களை ஒரேநேரத்தில் செய்கின்றனர். சில பிரமுகர்கள் உதவியாளர்களை வைத்து இலக் கியப் படைப்பைச் செய்கின்றனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.

“ஆசிரியனின் மரணம்” என்ற கட்டுரையில் செயற்கையாக எழுத்தில் ஈடுபடும் கை பற்றி அவர்கள் கூறுவதை நாமிங்கு நினைக்கலாம். மேற்கில் கண்டடைந்த அளவு பரவலாகவும் ஆழமாகவும் மக்கள் ரசனைப் பற்றிய ஆய்வுகள் இங்கு நிகழவில்லை. மனிதவாழ்வின், செயல்பாட்டுத் தளங்களின் சிறப்பம்சங்களுடன் கதைவடிவில் எடுத்துரைக்கும் பாணியை ஆர்தர் ஹெய்லி, ரோபின் கூப்பர், இர்விங் வாலஸ், ஜெப்ரி ஆர்ச்சர் இவர்களின் எழுத்துக்களில் காணலாம்.

மலையாளத்தில்இவ்வளவு விரிவான வெளியீடோ உள்ளடக்கத்தில் புதுமையையோ நாடுகின்ற ஒரு பொதுவாசக சமூகம் இல்லைதான். இருப்பினும் பங்குச்சந்தை, நீதிநியாயத்துறை, விளையாட்டுப் பொழுதுபோக்கு இவைகுறித்த கற்பனையாக்கப் படைப்புகள் கெ.எல். மோகனவர்மா போன்றோரால் எழுதப்படுவது கவனிப் பிற்குரியது. அதுபோல அறிவியல் தொழில்நுட்பங்களைப் புனை வாக்கம் செய்கின்ற ராதாகிருஷ்ணனின் படைப்புக்களையும் குறிப்பிடவேண்டும்.

இந்த எழுத்தாளர்களை வெகுசன எழுத்தாளர்கள் என்ற நிலையில் குறிப்பிடவில்லை. மாறாக மக்கள் ரசனை என்ற கற்பிதம் எவ்வாறு வரையறைகளுக்கு அப்பாலும் பொருள்படுவதாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவும்தான். இதிலிருந்து மக்கள் ரசனை வாசக எண்ணிக்கையிருந்து மட்டும் தீர்மானிக்க இயலாதது காணலாம்.

***

வாசிப்பு என்ற நிறுவனம் வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைய எழுத்தறிவு,வாசிப்பதற்கான ஓய்வுவேளை, சூழல் எனும் சமூக அமைப்புக்கள் இன்றியமையாதவை. வாசிப்புப் பொருட்களின் கிடைத்தல் என்பதும் முக்கியமான கூறுதான்.இன்று நாம் ஜனரஞ்சகம் எனப் பெயரிட்டழைக்கின்ற உரைநடைக் கதையிலக் கியங்கள் புதிதாக எழுத்தறிவு பெற்ற ஒரு பெரும் சமூகத்திற்கு வாசிப்பு ஊடகமாகவும் தூண்டுதலகவும் இருந்தது.(ஏனைய பிற இலக்கிய வடிவங்களை விட). மிகப் பொருத்தமாக இணைவுறும் கூறுகளான இவ்வரலாற்று உண்மையை - வாசிப்பு; எழுத்தறிவு - ஒரு அழகியலாகவே வளர்க்கின்ற செயல்பாட்டை இப் படைப்புக் களின் அமைப்பினின்றும் காணலாம்.

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின்,கீழ், நடுத்தர மக்களின் எழுத்துப்பழக்கம், அழகியல் பற்றி ரிச்சார்ட் ஹொகார்ட் நடத்திய ஆய்வில்  இந்தஊடகம் பற்றிக் குறிப்பிடும் தகவல்கள் ஓரளவு நமது சூழலுக்கும் பொருத்தமானது.கதைகளுக்கே இவை முக்கியத்துவமளிக்கின்றன. அரசியல், சமூகப் பிரச்சினைகள், கலை இலக்கிய விவாதங்கள் இவற்றைக் கவனமாகப் புறக் கணிக்கின்றன.

நடுத்தர மக்களின் ரசனையைத் தாமே கட்டமைத்து அதற்கேற்ற தீனியைத் தயாரித்தளித்தல் என்ற தந்திரத்தை இவ் விதழ்கள் செயல்படுத்துகின்றன. சுவாரசியத்தைத் தக்கவைத்துச் செல்லும் பாணியில் எழுதப்படுகின்ற கதைநாவல்களும்,நிகழ்வுத் தொகுப்புகளும் .இவற்றின் சிறப்பம்சங்கள்.அறிவுசார் உள்ளடக்கமோ சவால்களோ இவற்றில் இல்லை. அழகியல் ரீதியாக வும் கருத்தியல் ரீதியாகவும் சில எளிமையான வடிவஒழுங்குகளை உருவாக்குவதே இவற்றின் பணி. சமகால நிகழ்வுகளைக் கதை களாகப் படைத்தல் இதன் போக்கு. உள்ளீடற்ற, வெற்றுத் தகவல் களின் வடிவில் நிறைவேறாத இச்சைகளின் கற்பனை நிறைவேற்ற மாக அவை வாசிக்கப்படுகின்றன.

வெகுசன இலக்கியம், வாசிப்பு வரலாற்றில் துப்பறியும் நாவல் களுக்கும் இடமுண்டு. மலையாளத்தில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல்களின் எண்ணிக்கைக்கு இணையாக ஆங்கிலம், பிற மொழி களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட துப்பறியும் நாவல்களு முள்ளன. எவ்வாறாயினும் மலையாளியின் எழுத்து/ வாசிப்புப் பயிற்சியை வளரச் செய்ததில் இந்நாவல்களுக்கும் பங்குண்டு.

பிரதி என்ற நிலையிலிருந்து மாறாக ஒரு வாசிப்புமுறை, அழகியல், கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் எனும் நிலைகளில் மீண்டும் மீண்டும் தொடர்கின்ற நிலைவடிவங்கள்  எனும் இத் தன்மைகளுடன் வெகுசன இலக்கியம் வழக்கில் இருந்து வருகின் றது. மலையாளச் சூழலில் இவ்விலக்கியத்தின் வரலாறு மிகச் சுருக்கமானது. ஏனெனில் வெகுசன இலக்கியத்தின் முழுவரலாற் றுப் பதிவு என்பதை அதன் எண்ணிக்கைப் பெருக்கமே கேள்விக்குள் ளாக்கி விடுகிறது. அடிப்படையான மாற்றங்கள், வாசிப்புப்பயிற்சி யின் மீதான சவால் போன்ற கூறுகளை இவை தவிர்த்துக் கொள் கின்றன. ‘காலத்தைக் கடந்து வாழ்தல்’ என்ற “மேற்தட்டு இலக்கியக் கொள்கை”யின் பாதிப்பைக் கொண்ட படைப்பாளிகளும் படைப்புக்களும் இங்குக் குறைவுதான். இருந்தால் அதுகூட வரலாற்று ரீதியான காரணங்கள் மற்றும் சந்தைநிலவரங்களால் மட்டும்தான்.

வெகுசன இலக்கியத்தை நாம் “பைங்கிளி சாகித்யம்” என்று சொல்லிவருகின்றோம். முன்னர் குறிப்பிட்ட அழகியல்ரீதியான எளிமையாக்கம் இச்சொல்லில் அதன் எல்லாநிலைகளிலும் பொருள் படுகின்றது. முட்டத்து வர்க்கியின் புகழ்பெற்ற நாவல் “பாடாத்த பைங்கிளி”(1955) நாவல்தான் இச்சொல் வழக்கிற்கும் ஓரளவுவரை இவ்விலக்கிய வகையின் இன்றைய வடிவக் கட்டமைப்புக்குமான காரணம். சிக்கல்களே இல்லாத, நிறைவான கதை மற்றும் எதிர்பாராத முடிவுகளுக்கு இடமளிப்பதில் ‘பாடாத்த பைங்கிளி’ போல மற்றொரு உதாரணத்தைத் தேடமுடியாது.

‘பாடாத்த பைங்கிளி’ முதல் அனைத்து வெகுசன இலக்கியங் களும் எதார்த்தவாதத்தின் அடியற்றியே எழுதப்பட்டன. மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைகூறல்முறை அது. இக்கதைகளில் பயன் படுத்தப்படுகின்ற எதார்த்தவாதத்தின் இயல்பு என்ன?எதார்த்தவாதம் ஒன்றும் உண்மையின் பிரதிநிதியல்ல.

மாறாக உண்மை எனும் தயாரிப்பு பற்றிவாசகன்/வாசகியை உணரச்செய்யும் செயல் முறையே அது. டாமியன் கிராண்ட் கூறிய பழையதொரு விளக்கப் படி, “தன் சுயம் இழந்து முற்றிலுமாகக் கீழடங்குகின்ற ஒரு உலகத் திற்கு ஒரு கடமையைச் செய்யவதும் நஷ்டபரிகாரம் செய்யவதும் தன் கடமை எனச் சொல்ல வைக்கின்ற இலக்கிய மனசாட்சியே ரியலிசம். படைப்பின் பிரதித்தன்மையை மறுத்தல், கதைசொல்லி யின் இடையீடற்ற தன்னிச்சையான போக்கில் கதையை முன்நகர்த்தல், முடித்தல் போன்ற ரியலிஸ்ட் சம்பிரதாயங்களை அப்படியே பின்பற்றி இந்நாவல்களில் கதை சொல்லப்படுகின்றது. கதையின் ‘உண்மைத்தன்மை’ யை உறுதிப்படுத்தவே இதுபோன்ற திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

படைத்தல் குறிப்புகளை இயன்றவரை பூடகமாக்கல் என்பதே இத்தந்திரம். எதார்த்தத்தைப் பற்றிய ஒரு மாயைஉணர்வை  இது வாசகரிடம் உருவாக்குகின்றது. படைப்புடன் உணர்ச்சிகரமாக ஒன்றுபடுதலையும் இப் படைப்புகள் வேண்டி நிற்கின்றன. சிக்கல்களற்ற, நிறைவான முடிவுகளை முன்வைப்பவை இவை. மயக்கத்திற்கு இடமளிக்காத தெளிவான வருணனையில் வெளிப்படுபவை.காதல்கதைகள் வெகுசன இலக்கியத்தின் முதன்மைச் சுனை. நற்பண்புகளின் விளைநிலங்கள். இக்கதைகளின் முதன்மைப் பாத்திரங்கள். இந்நிலைக்கு மாறான அடிப்படைகள் எதுவும் புதிதாக உருவாகவில்லை.

ரியலிசம் உருவாக்குகின்ற மாயையே இக் கதைகளின் அழகியலை நிர்ணயிக்கின்றது. வாசிப்பைப் படைப்புச் செயலுடன் பூடகமாக இணைத்து ஆவலைத் தூண்டி இழுக்கும் நிலையில் அது நிறைவேற் றப்படுகிறது. வாசகரின் உணர்ச்சிகரமான தலையீட்டிற்கு இட முண்டு என்ற எண்ணத்தைத் தூண்டிவிட்டு விலக்கிநிறுத்துதல் என்ற தந்திரமே இங்குச் செயல்படுகின்றது. ரியலிசப் பிரதிகளில் ஆசிரியர் வாசகரைக் கைபிடித்து தன்னுடன் கதைவழியே நடத்திச் செல்வ துண்டு. ஒவ்வொரு காட்சியிலும் நிகழ்விலும் ஆசிரியருடன் வாசகரும் பங்கேற்கின்றனர்.

அவ்வக்காட்சிகளில் இடம்பெறாத கதாபாத்தி ரங்களுக்கு மறுக்கப்படுகின்ற அனுபவத்தளத்தை வாசகன் அனுபவிக் கின்றான். இந்த அதிக அனுபவம் சூழலை மேலும் நன்றாகப் ‘புரிந்து கொள்ள’ உதவுகின்றது. ஆசிரியனின் மரணம் வாசகனின் பிறப்புக்கு வழியமைக்கிறது என்று உரையாடும் வேளையில் ரோலான் பார்த் இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுகின் றார். எதிர்பாராமைகளின் பங்காளியாக இருப்பதே வாசகனுக்கு இவ்வாய்ப்பைத் தருகிறது.

வாசகத் தலையீட்டின் வெளிப்பாடு ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வேறாக அமையலாம். உதாரணமாக, ‘பாடாத்த பைங்கிளி’ நாவல் புதிர்தன்மைக்கோ இறுதி வியப்புக்கோ இடமளிப்பதில்லை.அது நன்மை தீமைகள் குறித்த உணர்ச்சிகரமான போராட்டத்திற்கும் முடிவெடுத்தல்களுக்கும் இடமளிக்கின்றது. இதன் வாயிலாகவே இங்கு வாசக வெளிப்பாடு நேர்கின்றது. நன்மை தீமைகள் அடிப்படையான அளவுகோல்கள் அல்ல. அவை சூழல் மற்றும் செயலால் தீர்மானிக்கப்படுகின்ற தயாரிப்புக்களே. பாடாத்த பைங்கிளி போன்ற நாவல்களின் பாடுபொருள் சார்ந்த ஆற்றலும் வெற்றியும்கூட அதுதான்.

வறுமையை நன்மையுடன் இணைப்பது இப் படைப்புக்களின் பொதுப்போக்கு. நன்மை, வறுமையின் அதே இடத்தைப் பெறு கின்றது தீமை. சமூகவியல் ரீதியான முரண்களை நபர்சார் தளத்தில் எளிமையாக்கம் செய்து தீர்வு காண்பது என்ற விமர்சனத்தை வெகுகாலமாக எதிர்கொள்கின்றது வெகுசன இலக்கியம். ஒரு நிலையில் வரலாற்றை மறு உருவாக்கம் செய்கிறது என்று கூறலா மெனினும் உண்மையில் இவை வரலாற்றை இருட்டடிப்புத்தான் செய்கின்றன.

நபர் உற்பத்தியின் தோற்றத்துடன் தொடர்புடையன மேற்கின் நாவல்கள். நாவலின் வளர்ச்சியும் வரலாறும் மரணமும் கூடத் தனிநபர்வாதத்துடன் தொடர்புபடுத்தியே விவாதிக்கப்படு கின்றது. நாவல் நடுத்தர மக்களின், தனிநபரின் இலக்கியவடிவம். அதிமானிட இயல்புகளும் நல்லியல்புகளும் உடைய கதாநாயகர் களைக் கொண்ட ரியலிச நாவல்கள் நவீன நாவல்களுக்குவழிவிட்டுத் தந்தபோது நாவலின் இயல்பே மாறிவிட்டது என்ற பொருளில் நாவலின் மரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பழைய நாவல் வரையறைகான கதாபாத்திரங்கள் மிஞ்சியிருப்பது வெகுசன இலக்கியங்களில் மட்டும்தான்.பழைய தனிநபர்வாதத்தின் அபூர்வமான எச்சம் வெகுசன இலக்கியம்.

ஒவ்வொரு படைப்புக்களும் வாசித்தலை வெவ்வேறுபட்ட தளங்களில் நிகழ்த்திச் செல்லுகின்றன. கதைச்சூழலுடன் இயல் பாகப் பங்கேற்றலும் எதிர்வினையாற்றலும் வாசகன் கடமை. இதனால் கதைநாயகனுக்குக் கிடைக்காத ஒரு அனுபவத்தளத்தை வாசகன் பெறுகின்றான். அவ்விடத்தில் வாசகன்தன்னையே நிறுத்திப் பார்க்க படைப்பு பரிந்துரைக்கின்றது. உணர்ச்சிகரமான ஒருங்கிணைவு இச்சந்தர்ப்பத்தில் நேர்கிறது. அதாவது படைப்பினுள் தார்மீகமான தலையிடலைச் செய்ய வாசகன் நிர்பந்திக்கப் படுகிறான் வாசிப்புச் செயலினூடாகவே. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன செய்திருக்க வேண்டும்; என்ன செய்யவேண்டும் என்பது போன்ற திருத்தங்களை முன்மொழியும் நிலை ஏற்படு கின்றது. மாயை உணர்வின் சிறப்பியல்பே இது.

சில நாவல்களில் மாயை உணர்வின் மற்றொரு முறையிலான வெளியீட்டைக் காண்கிறோம். இன்றைய வெகுசன இலக்கியப் படைப்பாளிகளுள் முக்கியமானவரான சுதாகர் மங்களோதயம் எழுதியுள்ள ‘மயூர நிருத்தம்’ (1992) தகவல்களைக் கதாபாத்திரங் களிடமிருந்தும் வாசகரிடமிருந்தும் ஒரேபோல மறைத்து வைத்தல் எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் கதையமைப் பைப் பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்.

1. மணவிலக்குப் பெற்ற அப்பா

2. மகளின் திருமண நிச்சயம்

3. அம்மா பற்றிய கேள்விகள்- விசாரணைகள்

4.  நினைவுகளின் வழி விரியும் கடந்தகாலம்

5. அம்மாவின் வேற்றுறவு பற்றிய சந்தேகங்கள்

6.  கூடவே அவள் தனது அப்பாவிற்குப்பணிவிடை செய்வது பற்றிய சந்தேகம்

7.  தூய அன்புறவுகள்வெளிப்படுதல்

8. மணமகன் வாகனவிபத்து

9. சந்தேகங்கள் பரிதவிப்பாக மாறுதல்

ஒரு புதுமையான படைப்புமுறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். கதாபாத்திரத்திரங்களின் பார்வை யினுடாகக் கதை நகர்த்தப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனநிலை வழியாகப் பயணிப்பதால் வாசிப்பு ஒவ்வொரு கட்டத் திலும் ஒரு தேடுதல், புரிதல், நியாயப்படுத்தலுமாகிறது. வெளிப் படாக் காரணம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது.வாசிப்பில் நிகழத்துகின்ற ஒவ்வொரு கண்டடைதலும் ஒவ்வொரு பார்வையினூடாக வந்தடைகின்ற நியாயப்படுத்தலாகின்றது.

அத்துடன் வெளிப்படாத ஒருகாரணத்தை அது கதைக்குள் விதைக்கிறது. இந்தத் தற்காலிகமான ஊசலாட்டமே கதையின் இயங்குசக்தி. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வைக்கு அப்பாலுள்ள தகவல்கள் வாசகனிடமிருந்து தொலை வாக்கப்பட்டுத் தற்கால முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு யதார்த்தம் பற்றிய அறிவல்ல மாறாக அறியாமையே உணர்ச்சிகரமான எதிர்வினையாற்றிட தூண்டுகின்றது. சிபாரிசு செய்யப்படும் திருத்தல்கள் வடிவில் இயல்பான எதிர்வினையாற்றல் அமைகின்றது. (Absent Cause) என்ற நூலில் ரோலான் பார்த் வாசிப்பு பற்றிக் கூறும்போது வாசகனின்தயாரிப்பு/ எதிர்கொள்ளல், பிரதிகளின் இயல்பு, வாசிப்புமுறை இவற்றிடையேயான உறவை ஆராய்ந்து பண்பாட்டிலிருந்து தோன்றும் பிரதிகளை நாம் Pleasure of the Text என்று அழைக்கலாம் என்கிறார். ஆயின் இப்படைப்புக்கள் ஏதேனும் பண்பாட்டுத்தேவையை நிறைவேற்றுவனவா என்ற கேள்வியையும் அவரே எழுப்புகின்றார்.

வெகுசன இலக்கியத்தின் மையம் காதற்கதைகள். அவ்விலக் கியத்தின் தன்மைபற்றிய பொதுபுத்தியின் குறியீடும் அதுதான். முட்டத்துவர்க்கியைத் தொடர்ந்து மத்திய திருவிதாங்கூர் கிறித்தவ சமூகத்தின் இலக்கியவடிவம் இது எனும் அடையாளப்படுத்தலும் இருந்தது. எனினும் இன்று வெவ்வேறு சமூகப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்ட பல படைப்புக்கள் வெளியாகின்றன.

 ***

வெகுசன இலக்கியத்தில் பல கூறுகளும் முன்முடிவு செய்யத்தக்க வடிவ ஒழுங்குடன் (patterns) திரும்பத்திரும்ப இடம் பெறுவது இயல்பு. மேற்கோள்கள் என்ற கருத்தாக்கத்தின் வழி இந்நிலையைப் புரிந்து கொள்ளலாம். வகைமாதிரிகளின் வடிவில் திரும்பத்திரும்ப அமைகின்ற சந்தர்ப்பங்களையே இங்கு நாம் மேற்கோள் என அழைக்கின்றோம். ஒரேமாதிரியான சந்தர்ப்பங்கள் மாறுபாடின்றி மீண்டும் மீண்டும் இடம்பெறுதல் இவ்விலக்கியத்தின் தனிப்பண்பு. இப்படைப்புகளில் நிலைஉருவினரான கதாபாத்திரங்களாக, கொள்கைவாதியான அப்பா, பொறுமைசாலியான அம்மா, நியாய மான போலீஸ் அதிகாரி, வட்டிக்கடை கொங்கிணி, நல்லவனான இஸ்லாமியன், லஞ்ச ஊழல் பேர்வழியான அரசியல்வாதி, கிறித்தவப் பெயர்கொண்ட ஸ்டெனோகிராபர் பெண் போன்ற பாத்திரவார்ப்புகள் திரும்பத்திரும்ப நிகழ்வது காணலாம். ஒரே படைப்பாளியின் பல படைப்புக்களில் மேற்கோள்கள் இடம்பெறுவதுண்டு.

மாறுதலடைந்து வருகின்ற சமூகச்சூழல்களால் மனித உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள் இலக்கியப் பதிவாக்கம் பெறுவது இயல்பு.இதன் எளிமையான மேலோட்டமான மாதிரிகள் வெகுசன இலக்கியம். நவீன சமூகமும் அப்படியரு உற்பத்திதான். அச்சமூகத்தைப் பிரதிபலிக்க முயற்சிக்கும் வெகுசன இலக்கியம் சாதிப்பவர்/அடைபவர், தியாகிகள் என இருவகையான மனித மாதிரிகளை முதன்மைப்படுத்துகிறது. இவை ஆண், பெண் குறித்த வேறுபட்ட கற்பிதங்களைக் கட்டமைக்கின்றன. இரு பிரிவிலும் அடிப்படை நன்மையால் வளர்ச்சியடைபவருண்டு. ஆனால் போட்டிப் பொறாமைகள் நிறைந்த உலகில் சாமார்த்தியசாலிகளான ஆண்கள் சுரண்டல்/ஊழலின் வழியினைத் தேர்பவராகவும் பெண்கள் உடலின் வழியே வெற்றியடைபவராகவும் சித்திரிப்புப் பெறுகின்றனர்.

நமது உன்னத இலக்கியங்களில் இடம்பெறுவதை விடவும் அதிக அளவு பெண்கள் வெகுசன இலக்கியங்களில் மையம் பெறுவது மற்றொரு உண்மை. பெண்ணுடலைச் சமூக அந்தஸ்துடன் இணைக்கும் நிலையை இவற்றில் காணலாம். இந் நாவல் கதைகள் இடம்பெறும் வார இதழ்களில் பெண்ணுடலின் சித்திரிப்பு இக் கருத்தை உறுதிசெய்யும்.

இச் சித்திரிப்புகளின்வழி வெளிப்படும் பாத்திரங்கள் ஒரு முன்மாதிரி வடிவைக் கொண்டிருப் பதோடு உடல் வரைவுக் காட்சியும் கூட மீளுருவாக்கம் பெறு கிறது.பெண்ணுடலின் கவர்ச்சியை மையப்படுத்தும் படைப்புகள் மறைமுகமான சொல்லல் முறையைப் பின்பற்றுவதுண்டு. ஓரள வேனும் அறமதிப்புகளைக் கடைபிடிக்க முயலும் ஒரு நடைமுறைச் சமூகத்தின் உறுப்பினராக இருக்கின்ற நம் வாசக சமூகத்தின் முன் வைக்கப்படுவது என்ற நிலையில் பாலியலை மறைத்தும் மாற்றுருவிலும் அளிக்கவேண்டியது அவசியம்தான்.

இலக்கியத்தின் பரவல்முறை இங்கும் முதன்மை பெறுகின்றது. ஏகாந்தவாசிப்புச் சூழலில் இடம்பெறுகின்ற புத்தக வடிவிலான கதைகளும் பொது இடங்களில் வாசிக்கப்படுகிற வார இதழ்களில் வெளியாகிற கதைகளும் வேறுபட்ட அறமதிப்புக்களை முன்வைப்பவை. புனிதம் குறித்த கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவன, பாலியல் வேட்கை களை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் நியாயப்படுத்தல், பெண்ணுடல், பழிவாங்கல், ஆன்மீகம்/மூடநம்பிக்கை எனும் உள்ளடக்கங்களை முன்னிறுத்துவதுடன் வெகுசன சமூகத்தின் மாறுபட்டஇலக்கிய நுகர்வுத்தன்மையைக் காட்டுகின்றது இன்றைய மலையாள வெகுசன இலக்கியம்.

துணை நூற்கள்

Barthes, Roland. Pleasures of the Text

Bloom, Claive. Pulp Fiction : Popular Reading and Pulp Theory,

London, Macmillan, 1996.

Grout Damian, Realism

Haggart Richard, Uses of Library

Pin It