மலையாளக்கவிதைமொழியில்நெடுங்காலம் செல்வாக்குச் செலுத்திய பாய்ச்சல்களில் முக்கியமானவை செறுசேரி,எழுத்தச்சன், குஞ்சன் நம்பியார்,சங்ஙம்புழாக் கவிதைகள். கவிதையின் எல்லை வரம்புகள் மீறிப் பேச்சுமொழிவரை இக்கவிதைகளின் செல்வாக்குப் பரவியது. இவர்களின் கவிதைமொழியின் அடிவேர்கள் கேரள நாட்டார் பாடல்களில் உள்ளன. தொழிற்பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், வீரக்கதைப் பாடல்கள் முதலிய வெகுசனக் கவிதைகளின் அடிநீரோட்டம் இக்கவிதைகளின் வழியாக ஓடிப் பரவியுள்ளது. இக்கவிதைகள் அந்தந்தக் காலகட்ட சமூகவாழ்வை தொனிக்கச் செய்வதுடன் அவ்வாழ்வில் கணிசமான பண்பாட்டுப் பங்களிப்பை யும் செய்துள்ளன.

ஆனால் இவர்களில் எவரும் நாட்டார் பாடல்களின் நுட்பம், சூழல், மனிதனின் எளிய கற்பனைகளுக்கு மறுஉருவளித்து விட்டுத் தப்பிச் செல்லவில்லை. மாறாக, தங்கள் கண்ணோட்டம், வாழ்க்கைப் பார்வையை அடிப்படையாகக் கொண்டே இக் கவிதை மரபை உட்செரித்து, தங்களுக்கு உடன்பாடுடைய விழுமியத்தில் ஊன்றிநின்று அந்தந்தக் காலகட்டத்திய மொழிரீதியான சிக்கல் முதலிய சமூகமுரண்களைப் புரிந்து கொள்ள முயன்றதுடன் அவற்றுடன் மாறுபட்ட நிலையில் தன்னியல்போடும் படைப்பியல் போடும் எதிர்வினையாற்றினர். இத் தனித்துவம்தான் கேரளப் பண்பாட்டிலும் வாழ்விலும் செல்வாக்குச் செலுத்திட அவர்களைத் தகுதிப்படுத்தியது.

*****

நமது நாட்டார் பாடல்களைப் பகுத்தாராயும்போது சில இயல்புகள் கவனத்திற்கு வரும். உடலசைவு, உழைப்போடு உறவுடையதும் மனநிலைக்கேற்ப உருவாகிவிடும் வாய்ப்புடையது மான பல்வேறு தாளங்கள், மொழி, உச்சரிப்புமுறை, குரல் ஏற்ற இறக்க அழுத்தங்கள், படிமக்குறியீடுகள், பழமரபுகள், வாழ்க்கைப் பார்வை, வெளியிடலின் அவசியம் போன்ற கூறுகளின் சமூக இயல்பு அவற்றுள் முதன்மையானது.

பரம்பரை பரம்பரையாகப் பாடப்பட்டு, அந்தந்தத் தலைமுறை களின் கால தேச குல வேற்றுமைகளுக்கேற்ப மொழிவேற்றுமை, வேறுபட்ட கற்பனை, வாழ்க்கைமுறை, மனோநிலைகளால் உருவ உணர்ச்சிக் கலப்பு நேர்ந்துவிட்டிருக்கின்ற நாட்டார் பாடல்களின் காலக்கணிப்பு இயலாத ஒன்று.

இருப்பினும் நிலவுடைமை வழக்கமும், வடமொழி இலக்கியத்தின், மொழியின், பிராமணக் கலாச்சாரத்தின் செல்வாக்கு உச்சத்தை அடைந்தபின் நாட்டார்பாடல் களின் வளர்ச்சி நின்றுபோனதைக் காணமுடிகின்றது. இன்று வழக்கத்திலிருந்து வருகின்ற நாட்டார்பாடல்களில் மறைந்திருக்கின்ற இறுதிச்சமுதாய காலகட்டமும் இதுதான். (போர்த்துகீஸ், அரேபியரின் காலனியக் காலம்வரை நாட்டார் பாடல்களில் பதிவாகியுள்ளது காணலாம்)

இக்காலத்தில் நாட்டார் பாடல்களின் வளர்ச்சி மட்டும் நிலைக்க வில்லை. சமூக அமைப்பின் கீழ்த்தட்டுக்குத் தள்ளப்பட்டுவிட்ட புலையர்,செறுமர், பாணர் முதலிய அனேக சாதிகளாகப் பிரிந்து கிடக்கின்ற அடித்தள இனத்தின் பேச்சுமொழி, பண்பாடு, கலை களின் வளர்ச்சியும் நின்றுபோனது. அந்த நிலைத்துவிட்ட வடிவில் தான் இன்றும் அவை வழங்கிவருகின்றன. பழங்குடிகளின் மொழியும் பண்பாடும் இதற்கு வெகுகாலம் முன்னரே வளர்ச்சி நின்று போனது.

எந்த மக்கள் பிரிவினின்று நாட்டார் பாடல்கள் உருவாகி வந்தனவோ அப்பிரிவினரின் பேச்சுமொழியுடன் அவை வேற்றுமைப் படவில்லை. அதாவது அவர்களின் பேச்சுமொழிக்கும் கவிதை மொழிக்கும் வேற்றுமை இருக்கவில்லை.

தமிழ், மலையாளம், வடமொழி முதலிய மொழிகளின் கலப்பை நாட்டார்பாடல்களில் காணமுடிகின்றது. ஆனால் காலவேறுபாடு, குலவேறுபாடு,தேச வேறுபாடு இவைக்கேற்ப பேச்சுமொழியின் உச்சரிப்பு மாறுபாடுகள் அவற்றைத் திட்டமிட்டன, கட்டுப்படுத்தின.

கோல், தடி, தப்பு, உடுக்கு, குடம், வில் போன்ற தாள வாத்தியங்களின் ஒத்திசைவுடன் பாடப்பட்ட நாட்டார்பாடல்களும் விதைப்பு, நடவு, அறுவடை, கதிரடிப்பு, வேட்டை/காவல் வேளைகளில் பாடும் பாடல்களும் அவற்றின் தாளங்கள் பாடும்முறை மக்களுக்கு மனப்பாடம்.சிலவேளை குழுவாகவோ, அல்லது ஒருவரால் நடத்தப்படுகிற குழுவாகவோ, அரிதாகச் சிலவேளைகளில் ஒருவர் தனித்தோ, இருவரின் உரையாடல் வடிவிலோ இப்பாடல்கள் பாடப்பட்டன. மந்திரவாதம், தோற்றம் முதலிய தேவதை வழிபாட்டுப் பாடல்களில் திராவிடத் தெய்வங்களும் ஆரியத் தெய்வங்களும் இரு பழமரபுக்கதைகளும் இடம்பெறுவதுண்டு. இருப்பினும் மக்கள் வாழ்வு சார்ந்த கற்பனைகளில்தான் அவற்றின் கதையாடல் நிகழ்கிறது.

தேவதை வழிபாட்டுப் பாடல்கள், மந்திரவாதப் பாடல்கள், இயற்கைப் பாடல்களில் மனிதன் இயற்கை இடையேயான முரணும் இணைவும் மறைந்துள்ளது. அதிகாரிகளின் கொடுமைகளும் மக்களின் துன்பங்களையும் வெளியிடும் பாடல்களில், பகைஅச்ச நிவர்த்திக்காக ஏவப்படுகின்ற துர்மந்திரவாதங்களில்(செய்வினை/ஏவல்), மனித உறவுகள், பிரிவு, புணர்வு பற்றிய பாடல்களில் மனிதர்களிடையான சச்சரவும் இணக்கமும் இடம்பெறுகின்றது. தொழிற்பாடல்களில் இவ்விரு நிகழ்வும் காணலாம். வீரக்கதைப் பாடல்கள் சான்றாண்மைமிக்க வாழ்வுகுறித்து, வாழ்க்கை மதிப்பீடுகள் குறித்து ஒரு மக்களினம் பேணிவரும் கற்பனைகளை வெளிப்படுத்துகின்றன.

நாட்டார் பாடல்களின் கலைத்தன்மை பற்றி நபர்சாராத்தனம் (Inpersonality) , முன்னிற்கும் இயற்கை, பழமரபுச் சடங்குகள், வாழ்க்கை நிலையுடன் ரத்த உறவுடைய படிமக்குறியீடுகள், வெறும் தத்துவமாக மட்டும் விலகிக்கிடக்காத வாழ்க்கையுடனான தொப்புள்கொடி உறவைத் துண்டித்துக்கொள்ளாத முழு உடல் போல நிறைந்து பொலிவுடைய சமூகவாழ்வின் பிரக்ஞை, உள்ளுறைத்தன மிக்க வாழ்வியல் கண்ணோட்டம் என்றிவற்றை நமது நாட்டார் பாடல்களின் கலைமதிப்பாகக் கொள்ளலாம். இங்குக் களங்கமற்ற அகஇணைவு தாளம் இசை மொழி இத்யாதி சமூக ஊடங்களின் வழி நிறைவேறும் வேளை அவை ஒரு மக்களினத்தின் மானசீகவாழ்க்கை யின் ஒலிச்சித்திரமாக மாறுகின்றது.

சுருக்கமாக, நாட்டார் பாடல்கள் மக்களிடமிருந்து உருவாவது மக்களால் உயிரொளியூட்டப் பெறுவது மக்களுக்காக நிலை பெறுவது.

******

மலையாளக்கவிதைமொழியின் நெருக்கடிக்கட்டங்களில் எல்லாம் படைப்பியல்பு மிக்க கவிஞர்கள் நாட்டார் பாடல்களின் இச்செழுமையான பாரம்பரியத்திற்குப் பயணம் செய்துள்ளனர். நாட்டார் பாடல்களின் தாள இசை மொழி இத்யாதி மரபுகளைத் தனது மேதமையோடும் கற்பனையோடும் மிகத்திறம்பட இணைத்த கவிஞர் சங்ஙம்புழா. அவரைத் தழுவி எழுதிய கவிஞர்களால் மலடாக்கப்பட்ட மொழிக்கு மீண்டும் உயிரோட்டமளித்தனர் இடசேரியும், வைலொப்பிள்ளியும்.

நாட்டார் பாடல்களில் இருந்துதனது கற்பனைக்குப் பொருத்தமான தாளம் இசை மொழி இத்யாதிகளை மட்டுமே சங்ஙம்புழா உள்வாங்கியிருந்தார். ஆனால் இடசேரி நாட்டார் மரபுகளில் ஊறிய தனது பட்டறிவின் உந்துதலால் நாட்டார் பாடல்களின் சமூக, மானிடவியல், தொன்மை வடிவ ஆழம்வரை வேரோடவிட்டிருந்தார்.

நாட்டார் பாடல்களின் சொற்கள்,பொருட்கற்பனைகளின் பக்குவ இணைவின் அழகியல்மரபுகளைத் தேடிச்சென்றார் வைலொப் பிள்ளி. பகுத்தறிவு, அறிவியல் உணர்வுசார்ந்த ஒரு வாழ்க்கைப் பார்வையும் பண்பட்ட கலை அணுகுமுறையும் காரணமாக அவரால் இடசேரி அளவுக்கு நாட்டார் பாடல்களின் பழமைச்செறிவை அடைய இயலவில்லை. அதுமட்டுமல்ல வள்ளத்தோளின் பின்னிழு விசையும் ‘சங்ஙம்புழா’விற் பக்கவாட்டுக் கவர்ச்சியும் வைலொப் பிள்ளியின் கவிதைக்கு எவ்விதமான தாண்டவ நிலையிலும் ஒரு மென்னசைவுத் தன்மையை நன்கொடை செய்திருந்தன.

*****

மலையாளத்தின் கற்பனாவாதம் அதன் பலவீனத்தைச் சங்ஙம்புழா’விடமும் ஆற்றலை ‘வைலொப்பிள்ளி’யிடமும் அடைந்து உச்சியைஎட்டி மெதுவாக வீழ்ச்சியடைந்தது. இறுதியில் நம் கவிதைமொழி மீண்டும் உணர்ச்சியும் பொருண்மையும் இழந்து ஆற்றலற்றது. இந்த இருளுள் ஆழ்ந்த கட்டத்தில்தான் நவீனத்துவம் குறித்த மேலைக் கற்பனைகளின் வெளிச்சத்தில் சில புதியகவிஞர்கள் தேடுதலைத் தொடங்கினர். தத்துவவாதங்களின் புதிய மேலைப் பொருள்கோடல்கள், நவீன மேலைக் கலைநுட்பங்கள் போல நாட்டார் பாடல்கள் நோக்கியும் இத்தேடல் பரவியது. எம்.கோவிந்தன், காவாலம் நாராயணப்பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போன்றோர் முதன்மையாக நாட்டார்பாடல்களில், பழமரபுக்கதை களில், நிகழ்த்துக்கலைகளில் கவிதைக்கூறுகளைத் தேட ஆரம்பித்தனர்.

இவர்களில் எம்.கோவிந்தன் வடமொழிச் சொற்களைக் கூடுமானவரை தவிர்த்த தமிழ் கலந்த பழைய மலையாளச் சொற்கள் நிறைந்த ஒரு மொழியைக் கண்டடைந்தார். சொல்லிணைவு, அணிப்பயன்பாடு, சிக்கனம், குரலிசை, தாளம் இவற்றில் நாட்டார் பாடல் முறைமைகள் கோவிந்தன் கவிதைகளில் பயன்படுத்தப் பட்டன. இதிகாச, பழமரபுக் கதைகள் இடம்பெற்றன. தமிழ்ச் சொற்கள், வழக்காறுகள், மந்திர வாக்கியங்கள், விடுகதைகளின் குரலிசைப்புகளும் மொழிப்பயன்பாடுகளும் கோவிந்தன் தனது தனித்துவமாக வளர்த்துக் கொண்டார். ஆனால் கவிதையனுபவத்தின் ரத்தஓட்டத்திற்குப் பதிலாக அறிவுத்தந்திரத்தின் முதுமையையே அவரது படைப்புக்களுக்கிருந்தது. பலவேளைகளிலும் செயற்கைத் தன்மை வெளிப்படையாகவே இடம்பிடித்தது.

கவிபுதுமொழி படைக்கவேண்டும். அம்மொழி அவனது பாரம்பரியத்தின் வேர்களோடு இருக்கவேண்டும்.கற்றறிவு கொண்டு ஒருவர் செயற்கையாக உருவாக்குவதல்ல கவிதைமொழி.அது படைப்பு. நேர்மையில்லாத பேச்சுமொழிகூடச் செயற்கையாகி விடுவதுபோல, அனுபவச்செறிவும் சிந்தனையாழமும் கனவுத் தன்மையும் கலவாத கவிதைமொழி செயற்கையானதாகி விடுகிறது. தன்னுடையது ‘தனது’மொழியில் அமைய வேண்டும். அதில் நாட்டார் பாடல் மரபு இடம்பெற வேண்டும். அது சுத்தகேரளத் தன்மையுடன் இருக்க வேண்டும் போன்ற முன்விதிகளுடன் நாட்டார் தன்மை பாவனை செய்யும் கவிதைமொழியைக் கோவிந்தன் செய்து வைத்திருந்தார். அதனால்தான்அம்மொழி மலையாளக் கவிதையில் ஒரு திருஷ்டிபொம்மை (நோக்குகுத்தி) யாகிப்போனது.

நாட்டார் பாடல்கள் பழமரபுக்கதைகளின் மரபுபாவணைகள் ஏதுமின்றிக் கவிதையில் இணைந்திருப்பதற்கு ‘இடசேரி’யின் ‘பூதப்பாட்டு’ஐ விட நிறைவான உதாரணம் வேறில்லை. மொழிவிளையாட்டும் கவிதையாக்கமும் வெவ்வேறு தொழில்கள். ஒன்று தந்திரம்/நுட்பம்; இன்னொன்று மேதமையால் மட்டுமே நிறைவேறுவது. ஒன்றின் ஆதாரம் பாண்டித்யம்/அறிவு என்றால் அடுத்ததின் உயிர்ஞானம்.

கடமனிட்டபாலகிருஷ்ணனின் கவிதைகள் நாட்டார் பாடல் களின் புற இலக்கணங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வில்லை. நாட்டார் பாடல்களின் சடங்கு நம்பிக்கைகளின் பழமரபுக் கதைகளின் சூழல் அவருக்கு அவர் வாழ்ந்த நிகழ்காலமும் தனது தனிமனித பண்பாடுமாக இருந்தது. அத்துடன் கவிதையின், சமூகத் தின், மொழியின் நிகழ்காலம் குறித்த படைப்புணர்வு அவரிடம் மிகுதியாகவே காணப்பட்டது. அதனால் அவருக்குப் புதிய நாட்டார் பாடல்கள் எழுதவேண்டிய தேவையோ நாட்டாராக பாவணை செய்ய வேண்டிய கட்டாயமோ ஏற்படவில்லை.

கவிதையைக் கவிதையாக்குவது அதனுள் கலந்திருக்கின்ற உணர்ச்சியின் உண்மைதான். அது கடந்தகால பிரக்ஞையின், நிகழ்கால அனுபவத்தின் எதிர்கால ஞானத்தின் இணைவுப்புள்ளி. அதுமுக்காலத்தின் குரல்களையும் ஏககாலத்தில் ஒலிப்பது.

கடந்த காலப்பிரக்ஞை, வரலாறோ பழமரபுக்கதையோ தனிநபர்சார் இழப்பின் ஏக்கமோ ஆகலாம். நிகழ்கால அனுபவம், சார்ந்திருக்கின்ற மானுட இருப்பின் முழுமை குறித்த அனுபவ அறிதலோ தனிநபர் சார்ந்த இன்பதுன்பமோ ஆகலாம். தீர்க்கதரிசனத் தன்மை வாய்ந்த எதிர்கால ஞானம், தனிநபர் சார்ந்த கனவாகலாம். சமயரீதியான விழிப்பு, தியானத்தன்மையான முழுமைஉணர்வோ சூன்ய உணர்வோ ஆகலாம். இவற்றில் எது எதன் இணைவெனத் தீர்மானிப்பது கவிஞனின் உலகியல் பார்வைதான்.

முக்காலபிரக்ஞைகளின் இவ்விணைவு கடமனிட்டாவின் நான்கு வரிகளில் இடம்பெறுவது காண்போம்:

 பாதாளப் படிகள் ஏற

பறையப்படை துள்ளிவருது

பறையறையும் தாளம் துள்ளி

பறையப்படை பாடி வருது.

இனக்குடிவாழ்வுவரை ஆழ்ந்து செல்கின்ற இனக்குழு நினை வின் வீரியமும் ஒடுக்கப்பட்ட நிகழ்காலத் துக்கத்தின் அணை உடைப் பும் வெறும் கண்களின் காட்சிக்குத் தோன்றாதது அகக்காட்சிக்குத் தென்படுவதுமான வரலாற்றுச் சக்திகளின் வருங்கால இயல்பும் ஒரேகாலத்தில் ஒரே படிமத்தில் இந்நான்கு வரிகள் உள்ளடக்குவது காணலாம்.

இனி ஒரு நாட்டார் பாடல்,

முண்டகவயலில் நண்டுக்குஞ்சு

முண்டகன்அறுத்தபின் என்ன செய்வாய்?

அப்பனின் மடியில் ஏறியிருப்பேன்

அப்பன்செத்தால் பின் என்ன செய்வாய்?

அம்மையின்மடியில் ஏறியிருப்பேன்.

அம்மைசெத்தால் பின் என்ன செய்வாய்?

அண்ணனின்மடியில் ஏறியிருப்பேன்

அண்ணன்செத்தால் பின் என்ன செய்வாய்?

அண்ணியின்மடியில் ஏறியிருப்பேன்

அண்ணிசெத்தால் பின் என்ன செய்வாய்?

என்விதிபோல நான் ஆவேன்.

இந்தநண்டுக்குஞ்சின் ஆன்மாவுள் பார்த்தால் நிராதரவான, பரிதவிக்கின்ற ஒரு புலையச்சிறுவனின் உருவம் காணலாம். காட்சியை இன்னும் சற்று விசாலப்படுத்திக் கொண்டால் ஒரு இனத்தின் காட்சி காணலாம். மேலும், காதுகொடுத்தால் மனிதகுல வரலாற்றில் இறந்தநிகழ் எதிர் காலங்களில் ஒலிக்கின்ற ‘எப்படி வாழ்வோம்’ என்ற கேள்வியும் அதற்குச் சாமானிய மனிதன் அளித்துவந்த பதிலும் கேட்கலாம்.

உண்மையான உணர்ச்சியின் இருப்புதான் கவிஞர் கடமனிட்டாவின் கவிதைக்கு இயற்கைத்தன்மையை அளிக்கின்றன. கவிதைக்கும் காலகட்டத்திற்கும் இடையேயான முரண் உறவுதான் அக் கவிதைகளுக்கு ஒரேவேளையில் நவீனத்துவத்தின் சொற்சிக்கனத் தையும் கற்பனாவாதத்தின் தன் இணைவு வழக்கத்தையும் நாட்டார் பாடல்களின் எளிய நம்பிக்கை வாய்ப்புகளையும் இடம்பெறச் செய்கின்றது.

நாட்டார்பாடல்களில் நிபுணத்துவம் பெற்ற கவிஞர் காவாலம் நாராயணபணிக்கர். கேரளத்தின் அடித்தள வர்க்க நாட்டார் பாடல்களின் மொழிவழக்காறு, தாளம்,வாய்த்தாரை, இவற்றை யெல்லாம் தம்கவிதைகளில் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு விஷயங்களுக்கு இது பயன்படுகின்றது. ஒன்று இவை எல்லாம் மனதில் ஆழ்ந்துபோன மக்களோடு உரையாட அல்லது இவற்றைப்பற்றிச் செவிவழியறிவு மட்டும் உடைய கல்வியறிவுடை யோரை ஆச்சரியத்துடன் ரசிக்கவைக்க. இரண்டாவதுதான் நோக்க மெனில்தவறில்லை.

கல்வியறிவுடையோர் சுவைத்திட ஆடுகின்ற கதகளி,திற, தெய்யம் முதல் காபரே வரையான் பொழுதுபோக்கு களில் இதுவும் அடங்கும். ஆனால், ‘ஏனு, மாளு, கடாத்தி, மட்டி, புட்ளு, மரண்ட்,நெப்பதிரு, புத்தம், தூசி, முஞ்ஞி, கொணவதியாரம்’ போன்ற காவாலம் பயன்படுத்துகின்ற சொல்வழக்காறுகளை இன்றும் பேச்சுமொழியில் பயன்படுத்துகின்றவர்களும் அவர் மையப்படுத்துகின்ற கற்பனைகளும் பழமரபுகளும் சடங்குநிகழ்த்துகளும் இன்றும் ரத்தத்தில் ஊறிய விரிந்ததொரு மக்களினத்துடன் உரையாடுவது இக் கவிதைகளின் நோக்கம் எனில் அவை சந்தேகத்திற்குரிய இடத்திற்கு மட்டுமே தகுதியுடையன.

இம்மக்கட்பிரிவின் இன்றையவாழ்க்கை அவரது நாட்டார் பாடல்களில் காணப்படுவதுபோல எளிமையானதாக இன்றில்லை. கேரள உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுவிட்ட சிக்கல்மிக்க வளர்ச்சி இவர்கள் வாழ்வையும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இன்று அவர்கள் வாழ்வு வெறும் ஒரு நிலவுடைமையின் அதிகாரத்துடன் மட்டும் தொடர் புடையதல்ல. முதலாளியத்தின் வல்லரசுவாத அமைப்புச் சிக்கல்களுடன் அது பிணைந்துள்ளது. அவர்களில் ஒரு பெரும்பிரிவு அரசியல்ரீதியாகவும் தொழிலாளர் இயக்கங்கள் வழியாகவும் ஒருங்கிணைந்துள்ளனர்.

வாக்குரிமை,கல்வியுரிமை, கோவில் நுழைவு உரிமை என்பனவற்றை அடைந்துள்ளனர். நிலச்சீர்திருத்தம் அவர்களில் ஒரு பிரிவினரை வாழ்ந்த நிலத்தின் உடைமைகளாக்கியுள்ளது. சில பலன்களுக்காக நெடுங்காலம் தொடர்ந்த அரசியல் பொருளாதாரப் போராட்டங்கள் வழி அவர்கள் கடந்து சென்றுள் ளனர். அவர்களைச் சுரண்டவும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் புதிய தந்திரங்களை வகுத்துக் கொண்டுள்ளனர். இன்று அவர்கள் வாழ்வு மிகுந்த நெருக்கடியும் போராட்டங்களுமுடையது. இப்படி, அவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அவர்களின் பிரக்ஞை எளிமையானதுமாக இருக்கிறது என்று கூறும்போது முன்னெச்சரிக்கை தேவை.

நாட்டார் பாடல்களும் நாட்டார்கலைகளும் இன்று அவரிடையே புழக்கத்திலிருப்பது வாழ்க்கைகுறித்த எளிமையுணர்வின் வெளிப்பாடாகவா-அதாவது கலைப்படைப்பு என்ற நிலையிலா- அல்லது சடங்குநிகழ்த்து என்ற நிலையிலா என ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது.

இனி, இந்த எளிமையுணர்வை நிலைனிறுத்தவே இன்று அவர்களின் நாட்டார்கலைகளும் நாட்டார்பாடல்களும் அவர்களுக்கு உதவுகின்றன எனில், வாழ்க்கையின் சிக்கலான உண்மைகளைப் புரிந்துகொள்ளப் போதுமான விதத்தில் வளர்ச்சி பெறுவதிலிருந்து அவர்களின் பிரக்ஞை தடுக்கப்பட்டுள்ளது. பழையப் பாடல்களும் கலைகளும் சடங்குத்தனமான முக்கியத்துவத்துடன் எளிமையான ஒரு வாழ்வின் பிரக்ஞையைச் சமர்ப்பணம் செய்து, இன்றும் மக்களிடையே இருந்துவருகின்றதென்றால் அது மக்களின் பிரக்ஞை வளர்ச்சிக்குத் தடையே என்பதில் சற்றும் ஐயமில்லை.

மக்களின் பிரக்ஞை வளர்ச்சிக்கு மட்டுமே இன்றுள்ள நாட்டார் பாடல்கள், கலைகளின் படைப்பியல்பு வளர்ச்சி உதவக்கூடும். தனி நபர்களுக்கு உதவாது. ஆனால், தொழிற்பிரிவு முதலிய வாழ்க்கை நிலைமாற்றத்தால் மனிதனின் சமூக இயல்பிற்கு அடிப்படையான மாறுதல்கள் நேர்ந்துள்ள நவீனகாலத்தில் கலைஞர்களிடம் இருந்து கலைப்படைப்புகள் தோன்றியதல்லாமல் நாட்டார்பாடல்களோ கலைகளோ உருவானதைக் கேள்விப்பட முடியவில்லை. சமூக வளர்ச்சியின் ஒரு உச்சகட்டத்தில் மனித உணர்வு மிக உன்னதமான தளத்தில் ஒருங்கிணைந்திருந்தால் அன்று ஒருவேளை, மீண்டும் உண்மையான மக்கள் கலை உருவாகியிருக்கலாம்.

சாதாரண மக்களிடம் உரையாட நாட்டார்பாடல்கள், நாட்டார் கலைகள், கற்பனைகள்,சங்கேதங்கள், பழமரபுகள் அவற்றிலுள்ள எளிய மனிதக் கற்பனையை இக் காலத்தில் ஒருவர் மீட்டுரைக் கின்றார் அவர் நிச்சயமாக மக்களின் பிரக்ஞை வளர்ச்சியை தடுக்கின்றார். ஒரு மக்களினத்தின் சமூகப்பண்பாட்டு வளர்ச்சி வரலாற்றிலிருந்து சார்பின்றிவெளியேற்றி எடுத்த பாரம்பரிய உணர்வு யதார்த்தத்தில் பாரம்பரியமான உணர்வல்ல. ஏனெனில், சமகாலத் தன்மையுடைய இறந்தகாலக்கூறு எதுவோ, அதுபற்றிய உணர்வே பாரம்பரிய உணர்வு. இனி இந்த சரியான பரம்பரை உணர்வைப் பகுத்தாராயும்போது இன,குடிவழி முரண்கள் அதில் அடங்கி நிற்கின்றன.

எனவே,இரண்டாவதாகக் கூறியது போல, யாரிடமிருந்து காவாலம் நாராயணப்பணிக்கர் தனது மையங்களை அடைந்தாரோ, அம் மக்களிடம் உரையாடுவதே இக்கவிதைகளின் நோக்கமெனில் இவை அவர்களின் பிரக்ஞை வளர்ச்சியைத் தடுக்கின்றன. (சிக்க லான வாழ்வியல் உண்மைகளைப் புரிந்துகொள்ளத் தகுதிப்படுத்தும் நிலையில் நாட்டார் பாடல்களை நாட்டார்கலைகளை வளர்த்தெடுப் பது இனி அசாத்தியம்தான். குழந்தைப் பருவத்திற்குத் திரும்பிச் சென்றபின் மீண்டும் நன்றாக வளர மனிதனால் இயலாதது போல) மேலும், கால உயிர்ப்பின் இன்மையில் அவரது கவிதைகள் வெறும் விளையாட்டாகவே பரிணமிக்கின்றன. ஒருபொழுதுபோக்கு அல்லது சடங்கின் முக்கியத்துவம் மட்டுமே அவற்றிற்குண்டு.

 மன ஆற்றலின் குரல் முழக்கி தமது துயரங்களுக்கு மாந்த்ரீக பரிகாரம் தேடிய ஒரு மக்களினத்தின் மந்திரவாதப்பாட்டின் தாள ஒழுங்கில் அவர் எழுதும்போது, அந்த மக்களினத்தின் நேர்மையை பகடி செய்கின்ற விளையாட்டாக, அல்லது இதயமற்ற ஒரு சடங்காகக் கவிதைத்தொழில் மாறுகின்றது.

“மண்ணும்நாற்றும் கதிரும் எதுவும்தனதாகஇல்லாதவனை

மண்ணே அடியேன்

மண்ணில் அரும்பிய முளையே அடியேன்

முளையில் எழுந்த நாற்றே அடியேன்

நாற்றுப் போர்த்த நிறமே அடியேன்

கதிரே அடியேன்

கும்பக்குட வயிறா, டேய் மாப்பிளா சங்ஙாதி

நீமண்ணை நம்பி மண்ணிலுணர்ந்தாயா

மணவாளச்சங்ஙாதி”

என வீரமுழக்கம் செய்விக்கும்போது உண்மையில் அவன் கோமாளி யாக்கப்படுகிறான். ஏனெனில், மண், கதிர், நாற்றின் உரிமை உண்மையில் நிலவுடமைக்குச் (மாப்பிளா சங்ஙாதி) சொந்தமானது. அதாவது மண், நாற்று, கதிர் யாவுமான புலையனின் உடமையும் இந்த மாப்பிளா சங்ஙாதிதான். தனக்கு எதுவும் உரிமையில்லை யெனினும் அதையறியாமல் எல்லாம் தனதே என நம்பி ஆறுத லடைகின்ற அந்த அடிமையின் பழைய நம்பிக்கையே இங்கு அவனிடம் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் முரசு முழக்கமாகப் பாராட்டப் பெறுகிறது இக்கவிதை.

தனக்கு உரிமையற்ற மண்ணோடு அந்நியனின் களஞ்சியத்தில் நெல் குவிப்பதற்காகச் செய்யும் கூலி வேலையோடு தன்னைக் கரைத்து மூழ்குதல் வர்க்கப் போராட்டத்தின் முரசொலி அல்ல. நிலவுடைமைச் சமூகத்தில் அடிமையின் பெருமூச்சு அது. அவனது இருப்பின் யதார்த்தம் குறித்த அறியாமை காரணமாகவே , உழைத்து விளையச் செய்கின்ற வயல் தனதல்ல என்ற உண்மையை உணர அவனால் இயலாமல் போகிறது.

நிலவுடைமையாளன் மண்ணில் வேலை செய்வதில்லை என்ற உண்மையில் அவன் சீற்றம் கொள்கிறான். ஏன் நிலவுடைமையாளன் வேலை செய்வதில்லை என்று யோசிக்கும் திறன் அவனுக்கு இல்லை. நிலவுடைமையாளன் செய்யவேண்டிய வேலை கூட அவனே செய்வதாக, அவனது உழைப்பின் பலனாகவே நிலவுடைமை வேலை செய்யாமல் இருக்கிறான். இந்நிலைமைக்குக் காரணம் அவருடைய நிலவுடைமை அதிகாரமே என்பதை அவன் புரிந்து கொள்வதில்லை. அதைப் புரிந்து கொள்ளும்போது மட்டுமே அவனது வர்க்க உணர்வு பொருளாதார அமைப்பை அடிப்படையாகக் கொண்டமையும். அதற்கான வழிகளைக் கவிதை மூடிவிடுகின்றது.

மலையாளக் கவிதை மொழி,கவிதை உணர்வின் இயல்பான வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் நாசகரமான பாதிப்பைச் செலுத்திய ஒன்று வடமொழி இலக்கியத்தின் புதுச்செவ்வியல் மரபு. பிராமண மேலாதிக்கத்தின், நிலவுடைமைத்தனத்தின், பண்பாட்டு ஆதிக்கத்தின் தண்டணை ஊடகமாக இருந்தது அது. இன்றைய மலையாளியின் கவிதை உணர்வை பாதிக்கின்ற பெரியதொரு அழிவுக்கூறு திரைப்பாடல்கள். இவ்விரண்டு துறைகளிலும் காவாலம் நிறையவே பங்களிப்பு செய்துள்ளார்.

நாட்டார்பாடல்கள், கலைகளின் மீட்டுருவாக்கம், வடமொழி இலக்கியத்தின் புதுச்செவ்வியல் மரபு, திரைப்பாடல்கள் எனும் மூன்று கூறுகளும் கேரளமக்களின் இலக்கிய உணர்வு, வாழ்க்கைப் பிரக்ஞை இவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதில் முதன்மையானவை. இவை மூன்றும் மக்களின் சடங்குத்தனமான, வாழ்க்கையுடன் உறவற்ற யதார்த்த உணர்வைப் பிராமண மேலாதிக்கம் சார்ந்த நிலவுடைமைப் பண்பாட்டையும் முதலாளியச் சந்தைப் பண்பாட் டையும் மக்களிடையே இறுக்கி உறுதிப்படுத்தும் பண்பாட்டுக் கருவிகளாகத் தொழிற்படுகின்றன.

இம்மூன்று துறைகளிலும் இன்று அதிகமான பங்களிப்புகள் செய்துவரும் ஒரு கலைஞர் திரு. காவாலம் நாராயணப் பணிக்கர். அதனால்தான் அரசியல் துறையிலும் சிந்தனைத்தளத்திலும் மக்களின் பிரக்ஞை விகாசத்தை அச்சப்படுகிற சக்திகள் யாவும், அதாவது நடைமுறைத்தன்மையை, நிலவுடை மையை, முதலாளியத்தை முன்னிறுத்தும் சக்திகள் அனைத்தும் அவரது கலைப் பண்பாட்டுத் தலைமையை ஒரு பெருங்கொடை யாகக் கருதுகின்றன.

நாட்டார் பாடல், பாரம்பரியம், தெய்யம், திற, பொராட்டு நாடகம், படயணி, பால்காவடி முதலிய நமது இலக்கிய கலைத் துறைகளில் முழங்கி ஒலிக்கின்ற வார்த்தைகளின் உட்பொருள் ஆராய்கிற ஒரு தேடுநன் நடுங்கச் செய்யுமொரு உண்மையைக் காண்பான்.இம்மீட்டுருவாக்கத்திருப்பணி முயற்சிகள்யாவும், நீதிநியாய உணர்வு முதல் மொழிஉணர்வு வரை பரவிக்கிடக்கின்ற பண்பாட்டு நெருக்கடியும்விலைவாசி உயர்வு முதல் வல்லரசுச் சுரண்டல் வரையான பொருளாதார நெருக்கடியும்உள்ளடக்கிய மிகையான சிக்கலை, சமகால மனிதவாழ்நிலையை மறைக்க நம் காட்சிகளுக்கு முன் தொங்கவிடப்பட்ட நூலாம்படைகள்.

ஆனால் வெளிப்படையாகத் தீமையற்றதெனத் தோன்றுகிற இவ்வார்த்தை களின் கருப்பையில்தான் மக்களின்பிரக்ஞை விகாசத்தை அஞ்சுகிற பாசிசத்தின் இரும்புலக்கை வளர்கின்றதெனும் உண்மையை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்?

Pin It