தமிழியல் ஆய்வில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் பேராசிரியரின் பதிவாக இப்பகுதி அமைகிறது.மாற்றுவெளி ஆசிரியர் குழு வினாக்களுக்கு பதில் அளித்தவர் பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள். இவர் ‘மொழி’ நிறுவனத்தின் இயக்குநர்.இவ்வுரையாடலைப் பதிவு செய்தவர் அ.மோகனா. இவர் தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.

நீங்கள் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்த காலத்தில் இருந்த தமிழ் ஆய்வுச் சூழல் குறித்துக் கூறுங்கள்.

முதலில் நான் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். 1960 களின் தொடக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் 1960களின் இறுதியில் கேரளப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றதால் இந்த ஒரு பத்தாண்டுகளில் தமிழியல் ஆய்வு எவ்வாறு இருந்தது என்பதை ஓரளவு என்னால் கூறமுடியும்.

இவை என் நினைவுகளிலிருந்து வருபவையேயன்றி குறிப்புகளின் அடிப்படையில் பெறப் பட்டவை அல்ல. நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் என்னிடம் இல்லை. எனவே, என் நினைவைச் சார்ந்தே நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கூறும் நிலையில் இருக்கிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு மூன்று துறைகள் இருந்தன. ஒன்று தமிழ்மொழித்துறை. இதற்குத் தலைவராக இருந்தவர் பேரா.தெ.பொ.மீனாட்சிசுந்தரம். இந்தத் துறையில்தான் முதுகலை வகுப்புகள் நடந்தன. இரண்டாவது துறை பேரா.லெ.ப.கரு. இராமனாதன் தலைமையில் இயங்கியது. இந்தத் துறையில் எம்.ஓ.எல். பட்டங்கள் வழங்கப்பட்டன. மூன்றாவது துறை ஆராய்ச்சித் துறை ஆகும். இந்தத் துறை பேரா. கோ.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இயங்கிக் கம்பராமாயண செம்பதிப்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தது.

பேரா.தெ.பொ.மீ. அவர்கள் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தபோது நான் முதுகலை மாணவன். அவர் மரபிலக் கணங்களிலும் புதிய துறையான மொழியியலிலும் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் தேவாரப் பதிகங் களிலும் கல்வெட்டுகளிலும் புலமை வாய்ந்தவர். அவருடைய பெரும் புலமை என்னைச் சற்றே அவரிடமிருந்து விலகியிருக்க வைத்தது.  அவரிடம் அங்குப் பணியாற்றி வந்த சில பேராசிரியர் களும் ஹானர்ஸ் படித்த மாணவர்களும் ஆய்வு செய்துவந்தனர். 

அவர்களுடைய ஆய்வு பெரும்பாலும் இலக்கணம், இலக்கியம் தொடர்பாக இருந்தன. 1961இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை தொடங்கப்பட்டது. தமிழ்த்துறைக்கும் மொழியியல் துறைக்கும் பேரா.தெ.பொ.மீ. தலைவராக இருந்தார். மொழியியல் துறை புதிய துறையாக இருந்ததால் அந்தத் துறையை அறியும் ஆவல் பலருக்கும் இருந்தது. முழுநேர மாணவர்கள் தவிர மொழியியல் துறையில் சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பும் இருந்தது.

1962இல் முதுகலையை முடித்துவிட்டு இரண்டாண்டுகள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் புனித சவேரியர் கல்லூரி யிலும் தமிழ் உதவியாளராக இருந்தபின் தமிழ் ஆய்விற்குச் செல்ல விரும்பினேன். அறுபதுகளின் தொடக்கத்தில் தமிழகத் தில் மூன்று இடங்களில் தமிழ் ஆய்விற்கான வாய்ப்புகள் இருந்தன.

1.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ.யின் தலைமையில் தமிழ்த்துறையிலும் மொழி யியல் துறையிலும் ஆய்வு செய்யும் வாய்ப்பு. 2. திருவனந்தபுரக் கேரளப் பல்கலைக்கழகத்தில் பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களும் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தார். 3. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேரா.மு.வ. அவர்களும் ஆய்வு நெறியாளராக இருந்தார். மரபிலக்கணம், பண்டைய இலக்கியங்கள் இவற்றில் ஆய்வு செய்ய விரும்பியவர்கள் பேரா.தெ.பொ.மீ.யிடம் செல்ல விரும்பினர்.

தற்காலத் தமிழ் இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள் இவற்றில் ஆய்வு செய்ய விரும்பியவர்கள் பேரா.மு.வ.அவர்களை நாடிச் சென்றார்கள். தமிழ் இலக்கணத்தையும் இலக்கிய நூல்களை யும் மொழியியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்ய விரும்பிய மாணவர்கள் பேரா. வ.அய்.சுப்பிரமணியம் அவர்களிடம் சென்றனர்.

எனக்குத் தெரிந்தவரை 1960களில் தமிழியல்  ஒரு விரிவான பரப்பை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. பேரா.வ.அய். சுப்பிரமணியம் செவ்வியல் இலக்கியங்களை மொழியியல் ஆய்விற்கு உட்படுத்துவதில் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் கல்வெட்டு, நாட்டுப்புறவியல் துறைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தினார். அவருடைய நோக்கம் செவ்வியல் இலக்கியங்களுக்குச் சொல்லடைவும் மொழிநிலை ஆய்வும் அமைப்பதில் இருந்தது. இந்த நோக்கத்தினால் சங்க இலக்கிய நூல்களைத் தன் ஆய்வு மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்குத் தெரிவு செய்துவழங்கினார். மேலும் அவரே மொழியியல் கண்ணோட்டத்தில் புறநானூற்றிற்கு ஓர் சொல் லடைவும் உருவாக்கி வெளியிட்டார்.

நான் அவருடைய செவ்வியல் இலக்கியங்களின் மொழி நிலை ஆய்வில் சேராமல் நாட்டுப்புற இலக்கியங்களில் ஆய்வு செய்ய அவரிடம் பதிவுசெய்துகொண்டேன். என் விருப்பத்தை அவரும் ஏற்றுக்கொண்டார். எனக்கு முன்பு சென்னை வானொலி நிலையத்தில் பணிபுரிந்துவந்த ஹமீது என்பவர் நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை மொழியியல் அடிப்படை யில் பேரா.வ.அய்.சு.அவர்களிடம் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றிருந்தார். நாட்டுப்புறத் துறையில் ஆய்வு செய்வதற்கான ஒரு சிறு வாய்ப்பு அங்கு இருந்தது.

நான் பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக 1964இல் சேர்ந்து 1969இன் இறுதி யில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன். பின்னர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டியது.

1960, 70களில் கேரளப் பல்கலைக் கழகத்தில் உருவான தமிழியல் ஆய்வுப் பின்புலம் பற்றிக் கூறுங்கள்.

மேலே குறிப்பிட்டது போல புதிய ஆய்வுமுறையாக அப்போது உருவாகியிருந்த மொழியியலைக் கற்று இலக்கியங் களையும் பேச்சுமொழியையும் பேரா. வ.அய்.சு. அவர்களிடம் ஆய்வு செய்ய பலர் முன்வந்தனர். பதிற்றுப்பத்தைப் பேரா. ச.அகத்தியலிங்கமும், சிலப்பதிகாரத்தைப் பேரா.ச.வே. சுப்பிரமணியமும், குறுந் தொகையைக் காமாட்சிநாதனும், திருக்குறளைத் தாமோதரனும், பெரியபுராணத்தைத்  தா.வே.வீராசாமியும், கம்பராமாயணத்தை முதலில் வேலவன் என்பவரும் அவரின் எதிர்பாராத மரணத்தின் பின் கோவிந்தன்குட்டியும், பெருங் கதை மொழிநிலையை இளவரசும் ஆய்வு செய்தனர். நாட்டுப் புறப்பாடல்களில் நானும், ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு களின் மொழிநிலையைப் பன்னீர்செல்வமும் ஆய்வுசெய் தோம். எங்களைத் தவிர மலையாள கண்ணச ராமாயணத்தின் மொழிநிலையைப் புதுச்சேரி இராமச்சந்திரன் ஆய்வுசெய்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரா.தெ.பொ.மீ. தமிழ்த்துறைக்கும் மொழியியல் துறைக்கும் தலைவராக இருந்தது போலவே பேரா.வ.அய்.சு. கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைக்கும் மொழியியல் துறைக்கும் தலைவராக இருந்தார். இருவருமே ஒருகட்டத்தில் தமிழ்த் துறையைவிட்டு விலகி மொழியியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றனர். பேரா.வ.அய்.சு. மொழியியல் துறைத்தலை வரானதும் அவரிடம் பதிவு செய்திருந்த மாணவர்கள் மொழி யியல் துறை வழியாகவே தங்கள் ஆய்வேட்டை அளித்தனர்.

1960களில் அண்ணாமலைப்பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுச் சூழல் குறித்துக் கூறுங்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை கண்ட பெருவளர்ச்சியை நான் கூறுவதை விட அங்குப் பணியாற்றிய, படித்த மாணவர்கள் கூறுவது பொருத்தமாக இருக்கும். தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அந்தத் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உலகின் பல நாடுகளில் இருந்த வெளிநாட்டு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தெ.பொ.மீ.யும் பேரா.அகத்தியலிங்கமும், அந்தத்  துறையின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். அந்தத் துறை Advanced Centre for Dravidian Linguistic எனப் பரிணமித்தது. அந்தத் துறையில் படித்து ஆய்வு செய்து வெளிவந்தவர்களும் தரமான ஆய்விற்கு வழிவகுத்தனர்.

1970களில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் உருவான தமிழியல் ஆய்வு குறித்துக் கூறுங்கள்.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறை 1970களில் சென்னை, அண்ணாமலை, திருவனந்தபுரம் ஆகியவற்றை அடுத்து ஓர் தமிழ் ஆய்வு மையமாக உருவாகியது. பேரா. முத்துச் சண்முகம், பேரா. தமிழண்ணல் முதலியோரால் வளர்த்தெடுக்கப்பட்டது. பின்னர் இந்தத் துறை பல துறைகளாகப் பிரிக்கப்பட்டதையும் அங்கு நடந்த ஆய்வுகளை யும் நான் ஓரளவே அறிவேன். நான் அறிந்ததை விட அறியாதது மிகுதி. எனவே அந்தத் துறைகளை அறிந்தவர்களிடம் கேட்பது நல்லது.

பேராசிரியர்கள் ச.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., வ.அய்.சுப்பிரமணியம் ஆகியோர் உருவாக்கிய ஆய்வு மரபு இன்றும் தொடர்கிறதா?

பேரா.ச.வையாபுரிப்பிள்ளையிடம் ஆய்வு மாணவராகச் சிறிது காலம் இருந்தவர் வ.அய்.சுப்பிரமணியம். அவர் அமெரிக்கா சென்று இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று திரும்பிவந்து கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பொறுப்பேற்று ஆய்வு மாணவர்களை உருவாக்கினார். வையாபுரிப் பிள்ளை யிடம் ஆய்வு மாணவர்களாக இருந்தவர்கள் குறைவு என நினைக்கிறேன்.  அதற்கு மாறாக, வ.அய்.சு.விடம்  ஆய்வு செய்ய மாணவர்கள் பலர் முன்வந்தனர். அவருடைய ஆய்வு மரபு என்பதை நான் இருவழியில் புரிந்துகொள்கிறேன். ஒன்று, நாம் செய்யும் ஆய்வு உலகத்தரத்தில் இருக்க வேண்டும்; நாம் எடுத்துக் கொண்ட ஆய்வுத் தலைப்பு உலகத்தின் வேறு மொழியில் வேறுபிற ஆய்வாளர்களால் ஆராயப்பட்ட ஒன்றாக இருக்கலாம். பரந்த பார்வை (international outlook) ஆய்விற்குத் தேவை. கிணற்றுத் தவளைகளாக இருக்கக்கூடாது என்பது நாங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம். இரண்டாவது, ஆய்வில் சிதறாத கவனம் இருக்கவேண்டும்.

அரசியல் சாய மில்லாத ஆய்வாக இருக்க வேண்டும். அரசியலில் நம்முடைய சார்பு எவ்வாறிருந்தாலும் அது நம் ஆய்வைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இந்த ஆய்வு நேர்மையும் நாங்கள் அவரிட மிருந்து பெற்றுக்கொண்ட கொடை. பரந்த பார்வையையும் ஆய்வு நேர்மையையும் அவருடைய மாணவர்கள் முடிந்தவரை கடைபிடித்தார்கள். அவருடைய மாணவர்களின் மாணவர்கள் மேற்கூறியவற்றைக் கடைபிடிப்பார்களேயானால் மரபு தொடர்கிறது என்று கருதலாம்.

பேரா.வ.அய்.சு. அவர்களிடம் தமிழ்த்துறையில் ஆய்வு செய்த கடைசி மாணவன் நான். அவர் மொழியியல் துறைத் தலைவரானதும் மொழியியலில் முதுகலை பட்டம் பெற்ற வர்கள் ஆய்வு மாணவர்களாகச் சேர்ந்தனர். அதன் விளைவாக மலையாள மொழியிலும் ஆய்வு செய்யவும், மலையாள வட்டார மொழிகளிலும் ஆய்வுசெய்ய அவரிடம் மாணவர்கள் சேர்ந்தனர்.  அவர் தொடங்கிய திராவிட மொழிக் கழகமும்  (Dravidian Linguistics Association) அதன்  வழியாக உருவான பள்ளியும் (International School of Dravidian Linguistics) அந்நிறுவனத்தின் ஆய்விதழும் (International Journal of Dravidian Linguistics) அவருடைய பணியை வேறுநிலைக்கு இட்டுச் சென்றது. இந்தப் பணி அவர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்கும் வரை நீடித்தது.

பேரா.தெ.பொ.மீ. அவர்களிடம்  படித்தவர்களும் ஆய்வு செய்தவர்களும் ஒரு  பரம்பரையைத் தோற்றுவித்திருக்கிறார் கள். அந்தப் பரம்பரையின் பேர்சொல்ல இன்றும் நம்மிடையே சிலர் உள்ளனர். பேரா.தெ.பொ.மீ.யின் ஆய்வு மரபு மரபிலக் கணத்தையும் மொழியியலையும் உள்வாங்கிய ஓர் அணுகு முறையைக் கொண்டது. மரபிலக்கணத்தின் நுண்ணிய கோட்பாடுகளை மொழியியல் வழியாக வெளிக்கொணரும் முறை அவராலும் அவர் மாணவர்களாலும் பின்பற்றப்பட்டது.

தமிழ்மொழி வரலாற்றிலும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அவருடன் பணிபுரிந்த ஆசிரியர்களும், அவரது மாணவர்களும் தடம் பதித்தனர். நம் இலக்கண, இலக்கியங்களின் பாரம்பரியத்தை அறிவுபூர்வமாகக் காண வழிவகுத்ததும், அவ்வாறு அணுகிக் கண்டதை மறைக்காமல் உறுதிபட எடுத்துரைத்ததும் அவரது ஆய்வுமுறை. அவர் விட்டுச் சென்ற அந்த மரபு இன்று மங்கிவருவதாகவே தெரிகிறது.

பேரா.தெ.பொ.மீ. அவர்களுக்கும் பேரா.வ.அய்.சு. அவர் களுக்கும் ஆய்வுலகில் போட்டி நிலவியது என்பது உண்மை. ஆரோக்கியமான போட்டியாகத்தான் அது இருந்தது என்று நினைக்கிறேன். பேரா.தெ.பொ.மீ. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்ற பின் பேரா.வ.அய்.சு. அவரை  DLA வழியாக அழைத்ததும், தெ.பொ.மீ. அதனை ஏற்று Foreign Models in Tamil Grammar என்னும் தலைப்பில் தன் ஆய்வை வெளியிட்டதும் இரு பேராசிரியர் களும் கொண்டிருந்த நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகும்.

பேராசிரியர் தனிநாயகம் வழியாக உருவான உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் குறித்துத் தங்களது மதிப்பீடு யாது?

பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் (IATR) உருவானதற்குக் காரணமாக இருந்தவர்களுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வர் தனிநாயக அடிகள். இந்த அமைப்பே உலகத் தமிழ்மாநாடு நடத்துவதற்கு உந்துசக்தியாக இருந்தது. முதல் உலகத்தமிழ் மாநாடு தனிநாயக அடிகள் பணியாற்றிவந்த மலேசியக் கோலாலம்பூரிலும் (1966), இரண்டாவது மாநாடு சென்னை யிலும் (1968), மூன்றாவது மாநாடு பிரான்சு தலைநகர் பாரிஸிலும் (1972) நடைபெற்றன. இம்மூன்று மாநாடுகளை நடத்தியதிலும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வாளர்களை மாநாட் டிற்கு வரவழைத்து ஆய்வுக் கட்டுரைகளை வழங்கச்செய்த திலும் பெரும்பங்காற்றியவர் தனிநாயக அடிகள். அவர் பல மொழிகள் அறிந்தவர்.

அவரால் தமிழக ஆய்வாளர்களையும் பன்னாட்டுத் தமிழியல் ஆய்வாளர்களையும் ஒருங்கிணைக்க முடிந்தது. ஆய்வுரைகளின் தரத்தை அளவிட அவர் செக்கோஸ் லோவாகிய அறிஞர் கமில் ஸ்வலபிலையும் பேரா.வ.அய்.சு. அவர்களையும் அணுகினார். அவர்களின் உதவியால் இளம் ஆய்வாளர்களின் கட்டுரைகள் செழுமை பெற்றன. இளம் ஆய்வாளர்களும் பன்னாட்டுத் தமிழியல் ஆய்வாளர்களும் கலந்துரையாட இம்மாநாடுகள் வழிவகுத்தன.

இம்மூன்று மாநாடுகளில் அளிக்கப்பட்ட ஆய்வுரைகள் proceedings ஆக வெளிவந்தன.  முதல் இரு மாநாட்டு ஆய்வுரைத் தொகுப்புகள் தமிழகத்தில் கிடைத்த அளவிற்கு மூன்றாம் மாநாட்டு ஆய்வுரைத் தொகுப்பு கிடைக்காமல் போனதால் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டுக் கட்டுரைகளைக் குறைவாகவே அறிந் திருக்கிறோம். உலகத்தரமான, ஆய்வு செறிந்த  கட்டுரைகளும் உலகத் தரத்தை எட்ட முயலும் இளம் ஆய்வாளர்களின் கட்டுரைகளும்  இவற்றில் இடம்பெற்றுள்ளன.

இம்மாநாடுகள் தமிழ் ஆய்வுலகக் கருத்துப்பரிமாற்றத்திற்குப் பெரிதும் உதவின. என்னைப் பொறுத்தவரை முனைவர் பட்ட ஆய்வுமாணவனாக இருந்த காலத்தில் முதல் இரு மாநாடுகள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் இலங்கை ஆய்வாளர் கைலாசபதியைச் சந்தித்து உரையாடி யதை மறக்கமுடியாது. பேரா.குரோ அளித்த ஊக்கமும் மறக்க முடியாத ஒன்று. இந்த மூன்று மாநாடுகளின் ஆய்வுரைத் தொகுப்புகளில் அடங்கியுள்ள கட்டுரைகள் பல ஆய்விற்கு இட்டுச் செல்லக் கூடியவை. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட இந்த ஆய்வுரைகள் இன்றைய ஆய்வுலகில் மீண்டும் எளிதில் வாங்கக்கூடிய அல்லது  பார்வையிடக்கூடிய முறையில் வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழியல் ஆய்வு உருவான பின்புலம் பற்றிக் கூறுங்கள். இப்போது அந்நாடுகளில் தமிழியல் ஆய்வு எவ்வகையில் உள்ளது?

மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறை (Insitute of Indology) பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றி சமஸ்கிருத மொழியை ஆய்வு செய்யத் தொடங்கின. சமஸ்கிருதம் இந்திய ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக இருந்ததால் அந்நாட்டு ஆய்வாளர்களின் கவனம் அந்த மொழியின் மேல் திரும்பியதில் வியப்பொன்றுமில்லை. தமிழும் பிற திராவிட மொழிகளும் இந்த இந்தியவியல் துறை கோட்டைக்குள் நுழைவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

சமஸ்கிருதப் பேராசிரியர்கள் சிலர் திராவிட மொழிக்குடும்பத்தையும் தொன்மையான  இலக்கிய இலக்கணங்களையுடைய தமிழ் மொழியையும் ஆராயமல் இருப்பது தவறு என உணர்ந்தனர். அமெரிக்க மொழியியல் பேராசிரியர் எமனோ, இங்கிலாந்து பேராசிரியர் பரோ, செக்கோஸ்லோவாகிய பேராசிரியர் கமில் ஸ்வலபில், பிரான்ஸ் நாட்டு பில்லியோசா, குரோ ஆகியோரின் ஆய்வு களும் நூல்களும் தமிழியல் பரப்பைக் காட்டக்கூடியன வாகவும் மேலாய்விற்கு வழிவகுப்பனவாகவும் இருந்தன. இவர்களுள் சிலர் எழுத்திலக்கியங்களில் மட்டுமல்லாமல் எழுத்து மரபு இல்லாத தோதவர் மொழி,  கோதவர் மொழி, இருளர் மொழி முதலிய மொழிகளையும் ஆராய்ந்தனர்.

கமில் ஸ்வலபில் தமிழகத்திற்கு முதன்முறையாக 1958இல் வந்து பேராசிரியர் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை அவர்க ளிடம் தமிழ்கற்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் காலடியில் இருந்து உ.வே.சா. தமிழ் கற்றது போலவே கமில் ஸ்வலபில் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையிடம் தமிழ் கற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார் (I have had the honour and luck to sit at the feet of a guru, Mahavidvan M.V.Venugopal Pillai).கமில் ஸ்வலபில் அரசியல் காரணங்களால் செக்கோஸ்லோவாகியாவை விட்டு வெளி யேறி அமெரிக்கா, ஜெர்மனி,நெதர்லாந்து ஆகிய நாடுகளி லுள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். தமிழ்மொழி, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், சித்தர்பாடல்கள், திராவிட மொழிகள் ஆகியவை  அவருடைய ஆய்விற்குக் களனாக இருந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி இரு நூல்களாக வெளியிட்டுள்ளார்.

அவருக்குப்பின் செக் குடியரசின் தலைநகரான ப்ராக்கில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை இன்றளவும் இயங்கிவருகின்றது. இதன் தலைவராக கமில் ஸ்வலபிலின் மாணவரான வாசெக் இருந்துவருகிறார். அவருக்கு அண்மையில் குறள்பீட விருது அளிக்கப்பெற்றதை நாம் அறிவோம். கமில் ஸ்வலபில் தொடங்கிவைத்த தமிழாய்வு அவருடைய நாட்டில் இன்றும் தொடர்வது வியப்பான ஒன்றுதான்.

ஏனெனில், ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா விலும் தமிழாய்வு குறைந்துவருகிற இந்த நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் தமிழ் கற்பிக்கப்படுவதும்  ஆய்வுகள் நிகழ்வதும் பல நெருக்கடிகளினிடையில் நடந்துவருகின்றன.

ஜெர்மனியில் நான் பணியாற்றிய கொலோன் பல்கலைக் கழகத்து இந்தியவியல் துறை இன்று பெயர்மாற்றம் பெற்றுத் தமிழாய்வைக் குறைத்துக்கொண்டுள்ளது. நண்பர் தாமோதரன் முப்பதாண்டுகள் பணியாற்றிய ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்து தெற்காசிய நிறுவனத்தில் தாமஸ் லேமான் தமிழ் கற்பித்துவருகிறார் என்றாலும் தமிழின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறஇயலாது. போலந்து நாட்டின் தலைநக ரான வார்சாவில் தமிழ்க் கற்பிக்கப்படுவதும் அதற்காக இந்திய அரசு நம் நாட்டிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்களை அங்கு அனுப்புவதும் இதுவரை நடைமுறையில் உள்ளது.

இங்கிலாந்து மற்றும் பிரித்தானிய நாடுகளில் உருவான தமிழியல் ஆய்வு குறித்துக் கூறுங்கள்.

இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் ஜி.யு.போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பரோ பணியாற்றியதும் நாம் அறிந்ததுதான். இலண்டனில் உள்ள SOAS இல் (School of Oriental and African Studies) ஜான் மார் பல ஆண்டுகள் பணியாற்றினார். சங்க இலக்கியங்களில் மிகுந்த பயிற்சியுடைய இவர் ஒரு கர்னாடக சங்கீத ஆர்வலர்.

பல ஆண்டுகள் சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இசை விழாவில் அவரைப் பலர் பார்த்திருப்பார்கள். உடல்நலக் குறைவு காரணமாக அவர் இப்போது  வருவ தில்லை. அவருக்குப்பின் SOASஇல்  தமிழக நாட்டுப்புற ஆய்வில் நன்கறியப்பட்ட ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் தமிழ் கற்பித்துவந்தார். இப்போது அவரும் அங்கில்லை. தமிழகத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் மிகுதியாக வாழும் இலண்டனில் பல்கலைக்கழகத்தை விடத் தமிழர்கள் ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் பள்ளிகள் தங்கள் வாரிசுகளுக்குத் தமிழ்க்கற்பிக்க முன்வருகின்றன.

அமெரிக்கப் பின்புலத்தில் உருவான தமிழியல் ஆய்வு குறித்துக் கூறுங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழாய்வு நடைபெறுவதை நான் நேரடியாக அறிந்தவன். அமெரிக்காவில் தமிழ்  கற்பிக்கப் படுவதையும் ஆய்வுகள் நிகழ்த்தப்பெறுவதையும் நூல்கள் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும் அங்கிருந்துவரும் மாணவர்கள் வழியாகவும் ஓரளவிற்கு அறிவேன்.  சங்க இலக்கியப் பாடல்களைச் சுவைபட ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஏ.கே. இராமானுஜன் பணியாற்றிய சிக்காக்கோ பல்கலைக்கழகமும், செம்மொழித் தகுதி உடையது தமிழ் என விளக்கிய ஜார்ஜ் ஹார்ட் பணியாற்றிய கலிபோர்னியப் பல்கலைக்கழகமும், தமிழின துணைவினைகள் ஆய்வைத் தொடங்கிவைத்த ஹெரால்டு ஷிஃப்மன் இருந்துவரும் மிச்சிகன் பல்கலைக்கழகமும் அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் இடங்களாக விளங்குகின்றன. இவர்களைத் தவிர, தமிழின் பல துறைகளில் ஈடுபட்டவர்கள்  அமெரிக்காவின் பல இடங்களில் ஓரளவிற்கு மொழியோடு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்துவருகின்றனர். தமிழாய்வில் நிலைகொள்ள முடியாமல் வேறு பணிகளுக்குச் சென்றவர்களும் உண்டு.

ஒரு பத்தாண்டு (1960-70) அமெரிக்கர்கள் தமிழ்மொழியில் ஆய்வுநிகழ்த்தினர்; அதன் பின்னர் மொழியைக் கற்றுக் கொண்டு தமிழக அரசியல்,  தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சமூகம், தென்கிழக்கு ஆசியாவில் தமிழகத் தொடர்பு என்பன போன்ற பல் துறைகளில் அவர்களின் ஆய்வு விரிந்து சென்றது.

தாங்கள் கற்ற தமிழை மேலும் வளர்த்துக்கொள்ளவும் தங்களுக்கு வேண்டிய நூல்களைப் படித்துத் தெளிவு பெறவும் என்னிடம் வரும் அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வாளர்கள் சிலரின் கூரிய அறிவும் பிற துறைப் புலமையும் என்னைச் சிந்திக்கவைத்துள்ளன. அவர்களது அறிவும் புலமையும் தமிழுக்குப் பயன்படுவது வரவேற்கத் தக்கது. அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் நிலைக்க வேண்டுமே என்பதும் தமிழக இளம் ஆய்வாளர்கள் ஆங்கிலப் பயிற்சியின்மையால் அவர்களோடு கருத்து பறிமாறிக்கொள்ளாமல் இருப்பதும் கவலை அளிப்பனவாக உள்ளன.

பாரதியார் தனது ‘புதிய ஆத்திச்சூடி’யில் “யவனர் போல முயற்சிகொள்” எனப் பரிந்துரைத்திருக்கிறார். பாரதி குறிப்பிடும் ‘யவனர்’ சங்க இலக்கியங்களில் பேசப்படும் ‘பொன்னொடு வந்து கறியடு’ மீண்ட கிரேக்க-ரோமர்கள் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர் கண்ட மேலை நாட்டவர்களே. அவர்களின் விடா முயற்சியும் உழைப்பும் அவர்களை நமக்கு முன்னுதாரணமாகக் கூறச் செய்தது.  பாரதியின் புதிய ஆத்திச்சூடியின் அறிவுரையை நம் இளம் ஆய்வாளர்கள் பின்பற்றுவது நம் முந்தியத் தலைமுறை தமிழ் ஆய்வாளர்களைப் பின்பற்றுவதாகவே இருக்கும். ஏனெனில், நம் முந்தியத் தலைமுறை ஆய்வாளர்கள் யவனர் போல முயற்சிகொண்டவர்களாக வாழ்ந்தனர்.

Pin It