மறுநாள் 15-01-2011இல் பிறக்க இருக்கும் தை முதல் நாளைத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகவும், பிற இந்துக்கள் சங்கராந்தியாகவும் கொண்டாட மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் தருணம், 14-01-2011 அன்று மாலை சபரி மலை ஐயப்பன் கோயில் மகர ஜோதியைத் தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 38 தமிழர்கள் உள்பட 106பேர் இறந்திருக்கிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மிகுந்த கனவுகளோடும், பெருத்த நம்பிக்கையோடும் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வந்த இந்த பக்தர்களுக்கு இந்தக் கொடுமை நேர்ந்தது ஏன்? இதற்கு யார் காரணம்? ஆண்டுக்கு ஆண்டு சபரிமலை கோயி லுக்கு பெருகி வரும் கட்டுக்கடங்காத கூட்டம், இந்தக் கூட்டத்தை முறைப் படுத்தி பாதுகாப்புத் தர அக்கறையற்ற கோயில் நிர்வாகம், கேரள அரசு, காவல் துறை, வனத்துறை என எல் லோருமே இதற்கு பொறுப்பு.

ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பிலிருந்து தட்டிக் கழித்து அடுத்தவர்கள் மீது பழியைப் போட் டுத் தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் இருக்க, தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கேரள உயர்நீதி மன்றம், இது தொடர்பான பல விளக்கங்களைத் தர, கேரள அரசின் காவல் துறை, வனத் துறை, கோயில் நிர்வாகமான தேவசம் போர்டு ஆகிய மூன்றுக்கும் உத்தரவிட்டதுடன் மகரஜோதி தொடர்பான சந்தேகங்களையும் எழுப்பி இந்த ஜோதி பற்றிய உண்மையை ஆராய்ந்து அறிவிக்கை அளிக்கவேண்டும் என கேரள அரசுக்கும் உத்தரவிட்டது.

இதற்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதைப் பகைத்துக் கொள்ள விரும்பாத பகுத்தறிவு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள அரசின் முதல்வர் அச்சுதானந்தன் மகர ஜோதியின் உண்மை தன்மையைக் குறித்து அறிய கேரள அரசு விசாரணை நடத்தாது, அது மக்கள் நம்பிக்கைசார்ந்த விஷயம் என்றதுடன், இதுபற்றி யாரிடமும் ஆலோசனையோ, ஆய்வோ நடத்தும் எண்ணமும் அரசுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.

ஆக எந்த நம்பிக்கையில் எத்தனை பேர் திரண்டால் என்ன, எத்தனை பேர் மாண்டால் என்ன, மதவாத சக்திகளோடும் அதன் நம்பிக்கை களோடும் சமரசம் செய்து கொண்டு வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொண்டால் போதும். ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால் போதும் என்று இருக்கிறது போலும், எதையும் அறிவியல் நோக்கில் ஆய்வு செய்ய வகுப்பெடுத்து, வர்க்கப் புரட்சிக்குத் தயார் செய்யும் பகுத்தறிவு மார்க்சிஸ்ட் கட்சி.

ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியைவிட அதன் முதல்வரைவிட ஒப்பு நோக்கில் நாங்கள் உண்மையானவர்கள் என்பதை மெய்ப்பிப்பது போல் தேவசம் போர்டு தானாக முன்வந்து மகரஜோதி தானாகவோ, தெய்வ அருளாலோ நிகழ்வது அல்ல, அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்று பத்திரிகைகளுக்குச் செய்தி தந்து உண்மையைப் போட்டு உடைத்திருக் கிறது. தேவசம் போர்டு இதில் இந்த உண்மையை ஒப்புக் கொண்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதையட்டி உண்மை வெளிவந்தது வரவேற்புக்குரியது.

இந்நிலையில் ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் மற்றும் ஆண் டுக்கு ஆண்டு புதிது புதிதாய் மாலை போட்டு, சபரிமலைப் பயணக்குழுவில் சங்கமிக்கும் புதிய பக்தர்கள், இந்த மகரஜோதி மயக்கத்திலிருந்து விடு பட்டு, அவர்கள் இல்லத்திலேயே ஒரு ஜோதியை ஏற்றி வழிபட்டு, இறை யருளைப் பெறுமாறு கேட்டுக்கொள் கிறோம்.

எப்போதும்தான் வீட்டில் கிடக்கிறோம். இப்படிப்பட்ட விசேட நாளிலாவது வெளியே சென்று இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால்தானே வாழ்க்கையில் ஒரு ஈடுபாடு, மகிழ்வு இருக்கும் என்று கருது வதானால் இம்மாதிரி இடங்களுக்கு எங்கே சென்றாலும் செல்லுமிடத்தில் போதுமான பாதுகாப்பு உண்டா என்பதை உறுதி செய்துகொண்டு பயணம் புறப்பட வேண்டும்.

எதுவும் எதிர்பார்த்தா நடக் கிறது, எல்லாம் எதிர்பாராமல்தானே நடக்கிறது என்று நினைக்கலாம். நியா யம். ஆனால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டால் குறிப்பாக மக்கள் திரள் கூடுமிடங்களில் அக்கூட்டத்தைச் சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டால் அதை ஒழுங்குபடுத்த. பாதுகாக்க உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள் ளனவா என்பதையாவது புரிந்து கொள்ளவேண்டும்.

ஐயப்பன் தரிசனம் ஆண்டில் குறிப்பிட்ட சில நாள்களில் மட்டுமே என்பதால்தான் கூட்டம் இப்படி அலை மோதுகிறது. எனவே இக்கூட்டத்தைக் குறைக்க ஆண்டு முழுவதும் கோயிலைத் திறந்து வைக்க வேண்டும், ‘பதினெட்டு படிகள்’ கொண்ட பாதை மிகக் குறு கலானதாக இருப்பதால் அதை அகலப் படுத்தி விரிவாக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்த சில யோசனைகளை தேவசம் போர்டு ஐதிகங்களைக் காரணம் காட்டி மறுத்துவிட்டது.

இந்நிலையில் நமக்குத் தோன்றும் கருத்துகளாக, நாம் முன்வைக்க விரும்பும் சில யோசனைகள் கீழ் வருமாறு.

1. இன்று இறை நம்பிக்கை என்பது வழிபாட்டிற்காக கோவில் குளம் செல்வது என்பதை விடவும், இடர்மிகு வாழ்வின் அவஸ்தைகளிலிருந்து ஒரு பராக்காக எங்காவது சென்று வரலாம் என்பதான உணர்வே அதிகரித்து அதற்கான இடங்களாகவே பல கோயில் குளங்கள் இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலையும் ஒரு சுற்றுலாத் தலம் போல் ஆக்கி. அதற்கு மிக அருகாமை வரை சாலைப் போக்குவரத்து வசதி செய்து கொடுத்து பக்தர் கள் ஆண்டு முழுவதும் ஐயப்பனைத் தரிசிக்க ஏற்பாடு செய்யலாம்.

2. ஆண்டு முழுவதும் திறந்து வைப்பது ஐயப்பனைத் தொந்தரவு செய்வதாகிவிடும். தற்போதுள்ள தரிசன காலங்கள் தவிர பிற நாள்களில் அவர் உறக்கத்தில் - ஓய்வில் இருப் பதாக ஒரு ஐதீகம் இருப்பதால், பக்தர்கள் வசதிக்காக அவர் ஓய்வு நாளை, உறக்க நாளை குறைத்துக் கொண்டதாக ஒரு புது ஐதீகத்தை ஏற் படுத்தி அதன்படி நாள்தோறும் கோயிலைத் திறந்து வைத்து வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ, தொழி லாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை விடுவது போல ஐயப்பனையும் விடுமுறை எடுத்துக் கொள் ளச்செய்து. பிற நாட்களில் பக்தர்களை மகிழ்விக்கச் செய்யலாம்.

3. திருப்பதி கோவிலுக்கு, அதே வீர்யத்துடன¢ ஆங்காங்கே சின்னத் திருப்பதி வைத்து, நேரடியாக திருப்பதி செல்ல முடியாதவர்கள், சின்ன திருப்பதியிலேயே வெங்கடாசலபதியை வழிபட்டு. அந்த அசலான அருளைப் (ஒரிஜினல் எஃபக்டைப்) பெறுவது போல ஐயப்பனுக்கும் அதே வீர்யத் துடன் ஆங்காங்கே கிளைகள் ஏற்படுத்தலாம். பக்தர்கள் நலனில் அக்கறையுள்ள ஐயப்பன் இதை முழு மனதுடன் ஏற்பாரே தவிர, இதில் கருத்து மாறுபட மாட்டார் என்று நம்பலாம்.

4. மகர ஜோதி மக்களால்தான் ஏற்றப்படுகிறது என்று தேவசம் போர்டே ஏற்றுக் கொண்டுள்ளதால் இனியும் இந்த ரகசியத்தை மூடி மறைத்து, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஜோதியைக் காட்டுவதை மாற்றி, இதற்காக ஓர் ஆண்டு முழுவதும் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்த்து நாள்தோறும் இந்த ஜோதியைக் காட்டி பக்தர்களை மகிழ்விக்கலாம். ஜோதி காட்டுபவர்கள் இதை பணிச் சுமை யாகக் கருதினால் அவர்களுக்கும் ஒரு நாளோ இரண்டு நாளோ வார விடு முறை விடலாம். அல்லது பணிமாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

5. இப்படியெல்லாம் மாற்றங்கள் கொண்டு வந்து, சபரிமலை பயணம், ஐயப்பன் தரிசனம் முதலானவற்றை இயல்பாக்கிவிட்டால், அதன் மவுசு குறைந்து விடுமோ, இது மலின மாகிவிடுமோ என்று கேரள அரசும், தேவசம் போர்டும் அஞ்சாமல் தயங்காமல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தால். எவ்வளவோ பிரச்சினைகள் தீரும். மக்களுக்கும் ஒரு நிம்மதி பிறக்கும்.

இவையெல்லாம் நடக்குமா, சாத்தியப்படுமா, இதற்கெல்லாம் ஐயப்பன் சம்மதிப்பாரா என்றால் நிச்சயம் சம்மதிப்பார்.

காரணம், நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள், வசதி வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி மக்கள் ஐயப்பனைத் தரிசிக்கும்போது இந்த நவீன வளர்ச்சிகள், நெருக்கடிகளுக்கு ஏற்ப ஐயப்பனும் தன் ஐதீகத்தை சற்று விட்டுக் கொடுப்பார் என்று நம்பலாம். அதோடு ஐதீகமா, மக்கள் நலனா என்று பார்த்தாலும் மக்கள் நலனே முதன்மை யானதே தவிர ஐதீகமல்ல என்பது ஐயப்பனுக்குத் தெரியும்.

ஆகவே நடந்த விபத்தை சிலர் சொல்வதுபோல் தெய்வக்குற்றம் என்பதாக நோக்காமல், தேவைப்படும் மாற்றங்களுக்காக இது ஐயப்பனே கொடுத்த தெய்வ எச்சரிக்கை, அறி விப்பு என்பதாகக் கொண்டு - இதே போன்ற ஒரு அறிவிப்பைப் பல ஆண்டு களுக்கு முன்பே ஐயப்பன் ஒரு தீ விபத்தின் மூலம் தந்தார். அப்போதே நாம் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். தவறி விட் டோம் - எனவே, அடுத்த ஆபத்து நேரும் முன்பாகவே தேவைப்படும் சீர்திருத்தங்கள் மாற்றங்கள் செய்து மக்கள் நலனைக் காக்கவேண்டும் என்பதே நம் வேண்டுகோள். ஐயப் பனின், ஐயப்ப பக்தர்களின் வேண்டு கோளும் அதுவாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.

Pin It