சீனமூலம்: பாய் ஜீயி

தமிழில்: சக்தி ஜோதி

 

கவிஞர் பாய் ஜீயி (கி.பி.772 -கி.பி.846) சீனாவில்  ஜ்யூஜியாங் நகரின் அரசு உயர் அதிகாரியான பாய் ஜீயி பணியிறக்கம் செய்யப்பட்ட வேதனையில் தன் நண்பர்களோடு யாண்ட்ஸ் நதிக்கரையில் மது அருந்திக் கொண்டிருந்த போது கேட்ட இனிமையான இசைப்பாடலை இசைத்த பெண்ணுக்காக எழுதிய நீண்ட கவிதை. பிபா இசைக்கருவியின் மேதைகளான மியூ, கா ஆகியோரிடம் பதிமூன்று வயதிலேயே இசையை கற்றுத் தேர்ந்த ஒரு பெண் தன்னுடைய அழகு மற்றும் புகழை இழந்த பின்பு தேயிலை வியாபாரியை திருமணம் முடித்திருந்தாள். பழமையான சீனாவில் கவிதை எழுதுபவர்களும், கல்விமான்களும் மதிக்கப்படும் அளவிற்கு வியாபாரிகள் மதிக்கப்படுவதில்லை. எனவே அவள் தன்னுடைய தனிமைத்துயரை பாடல்களில் கரைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்காக எழுதப்பட்ட கவிதை இது. இந்த கவிதையின் நினைவாக புடாங் மாவட்டத்தில் லூஜியாஜூ என்ற இடத்தில் உள்ள ஹாங் ஃபூ நதியின் பென்ஃபூ துறைமுகத்தில் இன்று சீன அரசு ஓரியண்டல் பியர்ல் டவர் என்கிற 1535 அடி உயர கோபுரத்தை கட்டியுள்ளது. இந்த கோபுரம் கட்டப்பட்ட 1995ல் ஆசியாவின் முதல் பெரிய கோபுரமாகவும், உலகின் மூன்றாவது பெரிய கோபுரமாகவும் இருந்தது.  பாய் ஜீயி என்கிற இந்த கவிஞர்க்கு சீன அரசு கொடுத்திருக்கும் கௌரவம் ஓரியண்டல் பியர்ல் டவர்.

 

ஓர் இலையுதிர்காலத்து இரவு

யாண்ட்ஸ் நதிக்கரையில்

படகிலிருந்த நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன்

கோப்பை எங்கள் கரங்களிலிருந்தது

நாங்கள் அருந்தினோம் கலக்கமுற்ற மனதுடன்

இசையேதும் இல்லாத அங்கு

மென்காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன காய்ந்த மேபிள் இலைகளும்

நாணலின் கீற்றுக்களும் சருகுகளும்  நிலவொளி நனைந்திருந்த நதிப்பரப்பில்

படகிலிருந்த நண்பர்கள்

என்னைப் பிரிந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

அப்போது அருகாமை படகிலிருந்து

பிபா இசைக்கருவியின் இனியகீதம் மிதந்துவந்தது காற்றில்

என் நண்பர்கள் அகன்று செல்வதை மறந்துவிட்டனர்

நானோ எனது இருப்பினை மறந்தேன்

இப்படியான அதிசயத்தை நிகழ்த்தியவரை நாங்கள் பார்த்தோம்

இசை நின்றுவிட்டது

எந்த ஒலியுமற்று நிசப்தமாகியது

எங்கள் படகினை நகர்த்தி

விருந்தினை பூர்த்தி செய்யவல்ல இசைக்கலைஞரை

எங்களோடு அருந்துவதற்காக அழைக்க நெருங்கினோம்

எங்களால் முகம் காண இயலாத அந்த இசைக்கலைஞன்

நாங்கள் மேலும் வற்புறுத்த

விளக்கொளியில் பாதிமுகமும்

பிபாவின் பின் பாதிமுகமாய்த் தோன்றினாள் நாண்களைத் திருகி  சுருதியேற்றினாள்

இசைக்கருவியின் ஒவ்வொரு இழைகளையும்

இசைக்கும் முன்பே காற்றில் மிதந்து வந்தது அவளது இசை ஒவ்வொரு மீட்டலிலும்

அவளது வாழ்வின் துயரங்களும் மனக்கசப்பும் ஊற்றெடுத்தது புருவங்களைச் சுருக்கியபடி மேலும் இசைத்தாள்

தன்னை தன் இதயத்திலிருந்து இசைத்தாள்

தன் நீண்ட வாழ்க்கைப் பயணத்தை இசைத்தாள்

இப்போது மென்மையாக இசைத்தாள்

பின்  துரிதமாக மேலும் வேகமாக்கினாள் தன்னை

எதிர்பாராத வேளையின் பெரும் மழைச்சப்தமென

எங்கும் பரவியது இசை

காதலர்களின் இரகசிய மொழியென ரீங்கரித்தாள் மென்மையாய் சளசளக்கும் பேச்சின் பெரும் ஓசையினை இசைத்தாள்

சிறிதும் பெரிதுமான முத்துக்கள்

மரகதத் தட்டில் சிதறித் தெறிக்கும் ஒலியினை இசைத்தாள்

மணம் மிகுந்த பூக்களில் பாடுகின்ற

ஒளிமிகுந்த ஓரியோல் பறவையின் இனிய இசையினை இசைத்தாள் மேலும்  விம்மினாள் சோககீதத்தில்

கண்களின் நீர் வழிந்து கொண்டேயிருந்தது

மெல்ல நகர்ந்து செல்லும் பனிக்கட்டியாய் அதிர்ந்து அடங்கினாள் இசை முடிந்துவிட்டது

நின்றுவிட்டது கண்ணீரும் எங்கும் நிசப்தம்

ஆழமாய் வசப்படுத்தியது என் இதயத்தை

இசைக்குப் பின்பான மௌனம்

சப்தத்தைவிட அதிகமாய் உணர்த்திய  மந்திர கணம்

அந்த மௌனம் ஓசையுடன் தவறிவிழுந்த பூச்சாடியிலிருந்து

சிதறிய தண்ணீரின் சப்தம் அல்லது நிறைந்த கூரிய இலைகளாலான மரங்களடர்ந்த வனத்தினை ஊடுருவிச் செல்லும் குதிரையோட்டி எழுப்புகின்ற சப்தமென மனதின் துயரம் உடைந்து சிதறியது எதிர்பாராமல் ஒரு சமயத்தில் நான்கு கம்பிகளையும் இசைத்ததில்

மிகைப்பட்ட இசையும் முடிந்தது

பட்டுத்துணியாலான உறை உரிந்தது

நாண்களை இசைக்கும் மீட்டினை ஓயவிட்டாள்

பிறகு  உறைந்ததுபோல்  அனைத்தும் முடிவுக்கு வந்தன

 

சாந்தமும் அமைந்தடங்கிய வெற்றியும்

படகின் தொலைவிலும் அருகாமையிலும் படர்ந்திருந்தது ஆற்றின் பரப்பில் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது

இலையுதிர்காலத்து நிலவுமட்டிலும் துயரம் நிரம்பியவளாய் சேகரித்து வைத்தாள் இசைக்கருவியையும் கம்பிகளையும் மீட்டினையும்

நேர்த்தியும் கம்பீரமுமான அவள்

பின்பு கௌரவத்துடன் சொல்லிக் கொண்டாள்

 

அவள் ஸியாமோலிங் தலைநகரில் பிறந்து வளர்ந்தவள் பதிமூன்றாம் பிராயத்தில் பிபா இசையிலும் இசைக்கருவியிலும்

மேதமை மிளிரத் தேர்ந்திருந்தாள் தன் குரு ஷாங்காயினைப்போல நகரின் ஒப்பானவர்களுக்கிடையே முதன்மையாய் இருந்தாள்

அழகிய இளம் பெண்கள் யாவரும் பொறாமை கொள்வதாயிருந்தது இவளின் அழகு

பங்கேற்றோர் யாவரும் பாராட்டுவதாயிருந்தது இவளது இசைநிகழ்ச்சி ஒவ்வொரு பாடலின் முடிவும்

எதிர்பாராத எண்ணற்ற பரிசுகளினால் திணறியது

இசையில் கரைந்தது நாளெல்லாம் மயங்கிச் சரியும்வரை ஆடினாள் தன்னை மறந்து

மது சிதறியது ஆடைகள் கறைபடிந்தன

தொய்வடைந்தனர் எதிராளர்

மகிழ்வினை ஏந்தி நகர்ந்தன நாட்கள்

பின்பு மேலும்  கடந்தன பலநாட்களும் ஆண்டுகளும்

பின்பு மெல்ல நழுவிச் சென்றன அவளின் இனிய தருணங்கள்

 

காலம் கரைத்தது அவளின் அழகை

ராணுவம் சேர்ந்தான் சகோதரன்

அத்தையும் மரித்துப்போனாள்

விலகிச் சென்றன உறவுகள்

தேடி வருவோரின் பயணங்கள் குறைந்து பின்  தேய்ந்து மறைந்தது

தளர்வுற்ற அவள் திருமணம் செய்துகொண்ட தேயிலை விற்பவனுக்கோ

கவனம் பணத்தில் இருந்தது ஃபுல்லான் நகரில் தேயிலை வாங்குவதற்கு

தன் காலத்தை செலவிட்டுக் கொண்டிருந்தான்

ஒருபோதும் இவளின் தனிமைக்கு வருந்துவதில்லை அவன்

குளிர்ந்த நீரும் நிலவும் தவிர  யாதொரு துணையுமற்று

இவளோ தனித்திருந்தாள் படகின் கூடாரத்தில் பழமையின் கனவுகளிலிருந்து

இப்போது  ஒளியின் ஆழத்திலிருந்து

கண்ணீர் நிரம்பிய முகத்திலிருந்து திரும்பியிருந்தாள்

 

அவளின் இசையினால் வாதை நிரம்பியிருந்தது

இப்போது மேலும் வாதை மிகுந்திருந்தேன் அவளின் கதையினால்  அறிமுகமற்ற புதியவர்களாயினும் நாங்கள் சிந்தையில் ஒன்றானோம்

 

ஓராண்டுக்கு முன்பு ஜ்யூஜியாங் நகரிலிருந்து தலைமறைவானேன்  எனது கவலை வளர்ந்தது

நகரம் எனக்கு தொலைவாயிருந்தது

இந்தக் காலங்களில்

இசை அங்கு இல்லை புல்லாங்குழல் இல்லை பிபா இல்லை

 

இப்போது அருகாமை நகர் பென்சாங்கில் வாழ்கிறேன்

நாணலும் மூங்கிலும் அடர்ந்த ஈரநிலத்தில்

குயிலின் சோககீதமும் மந்திகளின் அழுகுரலும் என்றிருக்கும் நான்

பகலிலும் அதன்பின் தொடரும் இரவிலும்  எதைக் கேட்பது மூச்சடைத்துப் போகிறேன்

ஒரு வசந்தகால நதிக்கரையிலோ

இலையுதிர்கால நிலவொளியிலோ

தனியனாய் மது அருந்திக் கொண்டிருப்பது என் வழக்கமாகியது

ஆம் அங்கே கிராமியப்பாடல்களும் புல்லாங்குழலுமிருந்தாலும்  பண்படாமலிருந்த அவை எனக்கு இனிமையாயிருக்கவில்லை  இந்த இரவில்

தேவகீதமாய் என்னுள்  ஒளிர்ந்தது உனது பிபா இசை

நீ மேலும் சற்றே எனக்காக இசைத்தால்

நான் உனக்கான பாடலை எழுதுகிறேன்

 

அவளின் நீண்ட கணம் அமைதியாய் உறைந்திருந்தது

என் வார்த்தைகளில் இசைக்கருவியின் கம்பிகளில் சுருதியேற்றினாள்

இசையின் வேறு வழிமுறையில் இசைத்தாள்

இதயத்து உணர்வை அதன் துயரத்தை இசைத்தாள்

கண்ணீர் தளும்பியது

துயரங்கள் நிரம்பிய பழைய கசந்த நினைவுகள் யாவும்

கண்ணீர்த்துளிகளில் கரைந்தன  ஒரு கணத்தில்

ஜ்யூஜியாங்க் நகரின் ஒரு உயர் அதிகாரியின் நீலநிற ஆடைகளும் நனைந்தன.

Pin It