விக்டர் பிராங்கல் என்பவர் எழுதிய இந்நூல் முற்றிலும் வித்தியாசமானது. ஆங்கிலத்தில் மட்டும் இதுவரை இந்நூல் 100 முறை பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மொத்தத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இந்நூல் ஆசிரியரிடம் இவ்வளவு பெரிய வெற்றியை இந்நூல் பெற்றதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு இதை நான் சாதனையாகக் கருதவில்லை. நம் காலத்து மக்களுடைய வேதனையின் வெளிப்பாடாகவே கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆம். ஆசிரியர் சொல்வது முற்றிலும் உண்மைதான். போர்க் கைதிகளைப் பற்றியும், அவர்கள் முகாம்களில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதைப் பற்றியும் எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

குறிப்பாக, இரண்டாம் உலகப்போரின் போது கொலைகாரன் ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கையும், பல்வேறு ஐரோப்பிய நாட்டு மக்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. அவனுடைய சித்ரவதை முகாம்களில் சிக்கித்தவித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர்கள் எத்தனையோ லட்சம். அத்தனையும் ஒவ்வொரு விதம். 1945ல் இந்நூல் முதன்முதலாக எழுதப்பட்டாலும் இன்று வரை இது பொருத்தமுடையதாகவே இருக்கிறது.

இலங்கைத் தீவில் நம்முடைய தமிழ் மக்கள் ராஜ பக்ஷே அரசின் முள்வேலிக்குள் மாட்டிக்கொண்டு சித்ரவதைக்கு ஆளாகும் புகைப்படங்களையும், செய்திகளையும் பார்த்து நாம் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். இதேநிலை தான் இரண்டாம் உலகப்போரின் போது இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்துள்ளதை இந்நூலாசிரியர் உள்ளம் நெகிழும் வண்ணம் படம்பிடித்துள்ளார்.

மனிதன் தனது மனத் துணிவால் புறச்சூழல்களை எதிர்த்து நிற்க முடியும் என்பதே இந்நூலின் மையக் கருத்தாகும். அதனால்தான் ஹிட்லரின் சித்ரவதைக் கூடங்களில் சிக்கி சின்னாபின்னமாகி உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட லட்சக்கணக்கானோர்களைப் பற்றி யோசிக்காமல் அதிலும் மட்டும் சிலர் எப்படி உயிருடன் இருந்தார்கள் என்பதைக் கண்டறிவதிலேயே அக்கறை கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடே இந்நூல்.

ஏனெனில், மனிதன் எதற்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் இயல்புடையவன் என்ற ருஷ்ய இலக்கியத்தின் பிதாமகன் தாஸ்தாவெஸ்கியின் கூற்றுப்படி சொந்த நாட்டில், சொந்த வீட்டில் சுகபோகத்துடன் வாழும் பொழுது ஒரு மனநிலையில் இருப்பான். அதேமனிதன், அதே வீட்டில் வாழ்ந்தாலும், தன் குடும்பத்தினரை இழந்தோ, கடன் சுமைக்கு ஆளாகியிருந்தாலோ அப்போது இன்னொரு மனோநிலையில் இருப்பான். ஆயினும், வாழ்வான். இதே மனிதன் யுத்த களத்தில் போர்க்கைதி யாகவோ அல்லது அகதியாகவோ பிடிபட்டு சித்ரவதைக்கு ஆளாகும் பொழுதும் அல்லது விஷப்புகை கொடுத்து கொல்லப்படும் சூழ்நிலையிலும் அல்லது அதற்கான காலத்தை எதிர்நோக்கி நிற்கும்போதும் வாழத்தான் செய்கிறான். ஆயினும், அவனுடைய மனநிலையில் தான் பட்டினியால் வாடுவதும்,கௌரவமான வேலைகளை செய்ய வைக்கப்படும் போதும், போதிய உணவின்றி மெலிந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பொழுதும் வாழவே விரும்புகிறான்.

இவ்வாறான மனநிலை இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறவன் ஏற்கெனவே மனதளவில் செத்துப்போனவன் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுவதும், சில சமயங்களில் ஜீரணிப்பதற்கு சிரமமாக இருந்தாலும் சற்று ஆழ்ந்து யோசித்தால் உண்மையே ஆகும்.

இதை மனிதனின் உளவியல் சார்ந்த நிலை, விதி, இருத்தல் சார்ந்த மனச்சோர்வு, மனம் சார்ந்த நரம்புக் கோளாறுகள், இருத்தல் சார்ந்த வெறுமை, வாழ்க்கையின் அர்த்தம், வாழ்வின் சாரம், அன்பின் அர்த்தம், துன்பப்படுதலின் அர்த்தம், புலன்களுக்கு அப்பாற்பட்ட மருத்துவப் பிரச்சனை, ஒரு லோகோ நாடகம், மகத்தான அர்த்தம், வாழ்வின் நிலையாமை, லோகோதரபியின் செயல்நுட்பம், கூட்டு மனக்கோளாறு என்ற ஏராளமான சிறிய சிறிய தலைப்புகளில் மனித மனங்களின் உள்ளோட்டத்தை மிக அற்புதமாக ஆய்வு செய்துள்ளார்.

முள்வேலி முகாம்களில் கைதிகளும், பொதுமக்களும் படக்கூடிய சிரமங்களை அவர் சித்தரித்த விதமும் ஒருபோதும் யுத்தம் கூடாது என்பதையும், சமாதானமான வாழ்க்கை எவ்வளவு அவசியம் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. நகைச்சுவை உணர்வைக் கூட செயற்கையாக தோற்றுவித்துக்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்வது நாம் வாழ வேண்டும் என்பதற்கு உதவும் ஒரு முயற்சி என்று அவர் குறிப்பிடுவது ``இடுக்கண் வருங்கால் நகுக’’ என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை வெளிப்படுத்துகிறது.

சற்று கடினமான மொழி நடை. ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நூலினை முற்றிலும் புரிந்து கொள்ள உதவும்.

வாழ்வின் அர்த்தம்

மனிதனின் தேடல்

விக்டர் பிராங்கல்

தமிழில்: ச. சரவணன்

பக்:192 | ரு.125

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

Pin It