பிப்ரவரி 21, இரவு 11.50க்கு செல் ஒலித்தது. முழுத்தூக்கமும் கலைந்து விடக்கூடாதென்பதால் கைகளால் துழாவி செல்லை எடுத்தேன். பா.ரா. இறந்துவிட்டார் என்ற செய்தி என்னைத் தூக்கிவாரிப்போட்டது. பாரா என்று எல்லோராலும் அழைக்கப்படும் பா. ராமச்சந்திரன் என்கிற பன்முகப் படைப்பாளியின் இறப்பு இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.

 

தனது இறுதி மூச்சுக்குள் சமூகத்திற்குத்தான் சொல்ல நினைத்ததை நினைவுகளிலிருந்து பிழிந்தெடுத்து வார்க்கிற முயற்சிகளில் எல்லா படைப்பாளிகளுமே வெற்றிப் பெறுவதில்லை. அந்த வகையில் 100 பக்கங்களோடு நிற்கிற நாவலும் குழந்தைகளின் எதிர்காலமும் முழுமைபெறாமல் சிதறிக்கிடக்கும் பாராவின் கனவுகளாகும்.

 

மருத்துவ சிகிச்சைப் பெற பாராவை வலியுறுத்திய போதெல்லாம் கலை இரவுப்பணி, ஆவணப்படத் தயாரிப்பு, துறைமுகத் தமிழ்சங்கத்தின் ஆண்டுவிழா இவைகளை முடித்தபிறகே ஒயாது உழைத்தவர். அவர் இதயம் இயங்க மறுத்து 49 வயதோடு நிறுத்திக் கொண்டது. அழுகையும் பேச்சும் வற்றிப் போய் உதட்டில் முத்தமிட்டு முத்தமிட்டு மூர்ச்சையாகிப் போன மனைவி மங்களாபாய்,அப்பா ! அப்பா ! என அரண்டு மிரண்டு அழுகிற பதினேழு வயது மகள் பவித்ரா. ஐ,டி, (மி.ஜி) படிப்பின் இறுதி ஆண்டில் நிற்கிற மகன் கீர்த்தி சங்கர், தந்தை மரணத்தின் மனச்சுமையோடு குடும்ப பாரத்தையும் அவன் மீது ஏற்றியுள்ளது வாழ்க்கை.

 

எந்தவொரு படைப்பாளியும் எழுத்துக்குப் பின்னால் ஒளிந்து வாழ முடியாது. பாரா எழுத்தைப் போல் வாழ்ந்தார், குடும்பத்தில் ஜனநாயகத்தை நிலை நாட்டினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சியை தன் இல்லத்தில் நடத்தி ஆண்கள் சமைக்க பெண்கள் சுவைக்கச் செய்தவர்.

 

குடியிருப்போர் நலச்சங்கம் அமைத்து கலைநிகழ்ச்சி களில் நாட்டுபுறக் கலைகளை அரங்கேற்றியவர், தனது குடியிருப்புப் பகுதியை கழிவுக் கூடாரமாக மாற்ற இருந்த ஒரு கெமிக்கல் கம்பெனியை காலூன்றவிடாமல் செய்ய மாற்றுக் கருத்துள்ளவர்களையும் அரவனைத்துக் கொண்டு போராடி வெற்றி கண்ட போராளி. மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு சிஐடியுவின் செயலாளராக துறைமுகச் சங்கத்தில் செயல்பட்டு தற்காலிக ஊழியர்களுக்க்காகக் களம் அமைத்துப் போராடியவர், அதன் மூலம் தன்னைச் சுற்றி ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். தான் பணி செய்யும் துறைமுகத்தில் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து, முற்போக்கு இலக்கியங்களைப் பரவாலாக்கச் செய்தவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்களாகவும், திரைப்படக் கழகச் செயலாளராகவும் பொறுப்புகள் வகித்தவர்.

 

தமுஎகச-வின் மாநாடுகள், முகாம்களின் போதெல்லாம் பாராவைச் சுற்றி நகைச்சுவை ததும்ப ஓர் இலக்கியப் பட்டாளமே நிற்க யாரையும் எளிதில் வசீகரம் செய்யும் ஆற்றல் படைத்தவர். தமுஎகசவின் வட்டத்திற்கு வெளியேயும் பல இலக்கிய முகாம்களுக்குப் பரிச்சயமானவர். கவிதைகளில் கதைகளில் பேச்சில் கவித்துவம் குவிந்து கிடக்கும், ஆனாலும் தன்னை ஒரு கவிஞன் என்று அழைப்பதை விரும்பாமல் எழுத்தாளர் என்ற பரிமாணத்தைப் பற்றிக் கொண்டவர்.

 

நாவலாசிரியர் என்கிற முத்திரை பெறும் முயற்சியை எட்டுவதற்குள் மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பகுதியில் அலுவலராகப் பணியாற்றியவர். பணப்புழக்கமும் கையூட்டும் சகஜமாக நடக்கிறபகுதி. பாரா அங்கு நேர்மையோடு பணியாற்றி நேர்மையை விதைத்தவர். ‘அப்பாவின் கைப்பெருவிரல்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழக இலக்கிய வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவர்.


நிஜவாழ்க்கையிலும் தந்தையைப் போற்றி பாதுகாத்ததோடு தந்தையின் மேன்மையைப் பறை சாற்றியவர். வாழ்க்கையின் நுணுக்கங்களை பதிவு செய்வதிலும் வல்லவர், இதழ்களுக்கேற்ப சமரசம் செய்து கொள்ளாத போராளி, தமிழ் மொழியின் சிறப்பை முன்னிறுத்தியும், கல்விமுறை பற்றியும் ‘தூரத்துக் கனவு’ என்கிற அவர் இயக்கிய ஆவணப்படம் காலந்தோறும் பேசப்படும்.

 

விளையாட்டுத்துறையில் பாராவுக்கு இருந்த ஞானத்தைக் கண்டு கொண்ட தீக்கதிர் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற விசேஷ நாட்களில் கட்டுரைகள் கேட்டுப் பிரசுரித்தது. ஓவியத்தின் பால் உள்ள ஈர்ப்பால் குழந்தைகள் - சிறுவர்களிடம் ஒவியத்தை வளர்ப்பதிலும், நடிப்பு, பாடல், திறனை வளர்ப்பதிலும் அயராது உழைத்த தோழன் பாரா. பல்துறைவித்தகராக வலம் வந்த பாரா பொது வாழ்வையும் குடும்பத்தையும் ஒருங்கிணைத்து வழி நடத்தியவர். பாராவிடமிருந்து நல்ல அம்சங்களோடு அவர் நினைவுகளையும் தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.

-மணிநாத்

Pin It