தமிழ் ஆய்வுகளில் பெரும் முன்னேற்றம் இல்லாமைக்குக் காரணம் தரவு நூல்கள் போதுமான அளவு உருவாக்கப்படாமையே. ஆய்வில் ஈடுபடுவோர் தாமே தரவுகளையும் தேடித் தொகுத்துக் கொள்ளவேண்டிய நிலையே உள்ளது. ஆகவே தரவுத் தேடலிலேயே ஆய்வாளர்கள் பல காலம் செலவிட நேர்கிறது. தரவுத் தேடலும் தொகுப்பும் என்னும் பணிக்கு அங்கீகாரம் கொடுக்கும் சூழலும் தமிழில் இல்லை. சுய ஆர்வம் காரணமாகவே சிலர் இதில் ஈடுபடுகின்றனர். ஆகவே தரவுகளை உருவாக்குவதைத் தம் வாழ்நாள் பணியாக எடுத்துச் செய்வோர் அவ்வளவாக இல்லை. அவ்வகையில் பல ஆண்டுகளாகத் தரவு உருவாக்கத்தையே தம் வேலையாகக் கருதிச் செயல்பட்டு வரும் புலவர் செ. இராசு அவர்களின் பணி மிகவும் முக்கியமானது.
சேதுபதி செப்பேடுகள், மராட்டியர் செப்பேடுகள், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், இசுலாமியர் வரலாற்று ஆவணங்கள் முதலிய பல தரவு நூல்கள் அவரது ஆக்கத்தில் உருவானவை. அவை பல்வேறு ஆய்வாளர்களுக்குப் பயன் தந்து வருகின்றன. படைப்பாளர்களுக்கும் அவை உந்துதல் தரக்கூடியவை. அதற்கேற்ற பல சம்பவங்கள் அந்த ஆவணங்களில் உள்ளன. கே.ஏ. குணசேகரன் எழுதிய 'பலியாடுகள்' நாடகத்திற்கான கரு கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் நூலில் உள்ள ஒரு செப்பேட்டுச் செய்தி.
தற்போது செ. இராசு தொகுத்து வெளிவந்துள்ள நூல் 'பஞ்சக் கும்மிகள்' என்பதாகும். வரலாற்றில் பஞ்சம் பற்றிய பல செய்திகள் பேசப்படுகின்றன. ஆனால் பஞ்ச காலத்தை விவரிக்கும் ஆவணப் பதிவுகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இந்தக் கும்மிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பஞ்சக் கும்மிகள் என்றால் பஞ்சம் பற்றிய கும்மிகள் எனவும் ஐந்து கும்மிகள் எனவும் பொருள்படும். தாது வருடப் பஞ்சக் கும்மிகள் மூன்றும் கர வருடப் பஞ்சக் கும்மி ஒன்றும் பரிதாபி வருடப் பஞ்சக் கும்மி ஒன்றும் என ஐந்து கும்மிகள் இந்நூலில் உள்ளன. அவற்றுடன் காத்து நொண்டிச் சிந்து, பெருவெள்ளச் சிந்து ஆகிய இரண்டும் உள்ளன.
ஓலைச்சுவடியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இவை நாட்டுப்புறப் பாடல் தன்மை கொண்டவை. கதைப் பாடல்களுக்குரிய வகையில் இயற்றிய புலவர்களின் பெயர்களையும் கொண்டுள்ளன. இப்புலவர்கள் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். புலமையும் நாட்டுப்புற மரபுத்தன்மையும் கலந்த வடிவமாக இவை உருவாக்கம் பெற்றுள்ளன.
மழை இல்லாமல் ஏற்படும் வறட்சியின் காரணமாகப் பஞ்சம் உருவாகும் என்பது பொதுவான கருத்து. அதுமட்டுமல்ல, பெருவெள்ளத்தின் காரணமாகவும் பஞ்சம் உருவாகும் என்பது நடைமுறை. உற்பத்தியைத் தடுப்பது வறட்சி. ஏற்கனவே பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புகள் எதையும் வறட்சி உடனடியாகச் சிதைத்துவிடாது. சேமிப்பில் இருக்கும் தானியங்கள் ஓரிரு ஆண்டுகள் வரைகூடத் தாங்கும். மெல்ல மெல்ல அழிவைக் கொண்டுவரும் தன்மை கொண்டது வறட்சி. ஆனால் பெருங்காற்றும் பெருமழையும் வெள்ளமும் அப்படிப்பட்டவை அல்ல. இவை உடனடி அழிவைக் கொண்டு வருவன. ஏற்கனவே பல்லாண்டுகளாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புகளை உடனடியாகச் சிதைத்துவிடுபவை இவை. வேகமான அழிவுக்குக் காரணமான இவற்றால் உடனடிப் பஞ்சம் ஏற்படுவது இயல்பு.
தகவல் தொடர்பு பெருகியுள்ள இக்காலத்தில் உதவிக்கரங்கள் எளிதாக நீள்கின்றன. தொடர்புகள் கடினமான பழங்காலத்தில் உதவுவார் இன்றிப் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்திருக்கக்கூடிய துயரத்தின் பரப்பு பெரிதாக இருந்திருக்கும். அத்தகைய துயரத்தை வெளியே எடுத்துச் சென்ற தொடர்புச் சாதனமாக இத்தகைய கும்மிகளும் சிந்துகளும் அமைந்திருக்கும். அவ்வகையில் பேருதவி புரிந்தவர்கள் இப்புலவர்கள். பஞ்ச காலத்தில் மனிதத் தன்மை மாண்டு போனதற்குப் பல சம்பவங்கள் இப்பாடல்களில் ஆதாரமாகக் கூறப்பட்டுள்ளன. மனைவியை விட்டுக் கணவன் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போவதும் பெற்ற குழந்தையைத் தானியத்திற்கு விற்பதும் கைவசம் இருக்கும் சொற்பப் பொருளையும் அபகரித்துக் கொள்ளும் திருட்டும் ஏமாற்றும் பெருகியதும் என இப்பாடல்கள் காட்டும் சம்பவங்கள் பல.
கற்றாழை, ஆலம்பழம், மாங்கொட்டை, ஈச்சங்குத்து, பனங்குருத்து உள்ளிட்டவை உணவானதையும் கற்றாழை போன்றவற்றைத் தொடர்ந்து உண்டதால் உடம்பு வீங்கிப் போனதையும் இப்பாடல்கள் காட்டுகின்றன. பிணம் தின்று பசியைப் போக்கிக் கொள்ளும் காட்சிகளும் இவற்றில் உள்ளன. 'மனிதனை ஓர் மனிதன் நன்றாகவே தின்றான்' என்பது பாடல் அடி. பஞ்ச காலம் மனித மதிப்பீடுகள் அனைத்தையும் அடியோடு சாய்த்துவிடும் தன்மை கொண்டது. உறவுகள், ஒழுக்கம் உள்ளிட்ட எல்லாம் எத்தகைய இழிநிலையை அடைந்தன என்பதற்கான சாட்சிகளை இப்பாடல்கள் சொல்கின்றன.
மதம் பற்றியும் தாசியரின்நிலை பற்றியும்கூட இப்பாடல்களில் செய்திகள் உள்ளன. அன்றைய சாதிநிலைகள் குறித்தும் சில தகவல்களை இவற்றிலிருந்து பெறலாம். ஆகவே பஞ்சம் பற்றிய ஆய்வுகளுக்கு மட்டுமல்ல, அக்காலச் சமுகம் தொடர்பான ஆய்வுகளுக்கும் ஆதாரமான தரவுத் தொகுப்பு என்று இந்நூலைச் சொல்லலாம். ஆட்சியாளர்களுக்கு எப்போதும் ஆதரவுக் குரலாகவே இத்தகைய பாடல்கள் விளங்குவதன் மர்மம் பற்றியும் யோசிக்கலாம். 'நீதி தவறாத கம்பெனியார்' என்று கூறி அவர்கள் எடுத்த நிவாரண நடவடிக்கைகளையும் புகழ்ந்து விவரிக்கிறது ஒருபாடல். இப்பாடல்கள் இடையூறின்றிப் பரவுதற்கான உத்தியாக இத்தகைய அரசாங்கப் புகழ்ச்சி இடம் பெற்றிருக்குமா? அச்சம் காரணமாக இருக்கலாமா? இயல்பாகவே அரசு சார்பு நிலை கொண்டவர்கள் இவர்கள் எனலாமா?
செ. இராசு எழுதியுள்ள பதிப்புரை மிக முக்கியமான பல செய்திகளைத் திரட்டித் தந்துள்ளது. கிறித்துவ மறைப் பணியாளர்கள் பஞ்ச காலத்தை எளிதான மதமாற்றக் காலமாகக் கருதியுள்ளனர். அவ்விதம் அதைப் பயன்படுத்தவும் செய்துள்ளனர். டிரிங்கால் என்னும் பாதிரியார் எழுதியுள்ள கடித வாசகம் '...ஆயிரக்கணக்கில் பிராங்க்ஸ் என்னிடமிருந்தால் பாதி நாடு திருமுழுக்குக் கேட்டு என்னிடம் வந்துவிடும்' என்று கூறுகிறது. இத்தகைய செய்திகளோடு தமிழில் இதுவரை பஞ்சம் தொடர்பாக வந்துள்ள இலக்கியங்கள் பற்றிய தகவல்களையும் பதிப்புரை தருகிறது.
கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடு முதலிய ஆவணங்களோடு பல்லாண்டுகளாகத் தொடர்பு கொண்டுள்ள செ. இராசு, இந்நூலை நல்ல பதிப்பாக ஆக்கிக் கொடுத்திருக்க முடியும். அருஞ்சொற்களுக்குப் பொருள் கொடுத்தல், சிறு விளக்கங்கள் தருதல் என்னும் முறையில் குறிப்புரை ஒன்றை அவர் எழுதியிருக்கலாம். பேச்சு வழக்குச் சொற்கள் விரவியுள்ள இவற்றிற்குச் சொல்லடைவு ஒன்றையும் உருவாக்கி வழங்கியிருக்கலாம். பாடல்களில் விடுபட்ட இடங்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருக்கலாம்.
இவ்வாண்டில் வெளிவந்துள்ள பல நூல்களில் தரவுத் தொகுப்பு என்னும் வகையில் இந்நூலைச் சிறந்ததாகக் கருதுகின்றேன். முதுமை, தொடர் மருத்துவம் ஆகியவற்றுக்கிடையேயும் ஈடுபாட்டுடன் செயல்படும் புலவர் செ. இராசு அவர்களின் ஆவணப் பதிவுப் பணியில் மற்றுமொரு முக்கியமான பதிவு சேர்ந்துள்ளது. காவ்யா பதிப்பகம் இந்நூலை அழகாகவும் பிழையின்றியும் வெளியிட்டிருப்பது இன்னுமொரு சிறப்பு.
- பெருமாள் முருகன்