திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவில் மாவட்ட மைய நூலகம் -1, கிளை நூலகங்கள்-49, ஊர்ப்புறநூலகங்கள்-72, பகுதி நேர நூலகங்கள்-22 என மொத்தம் 144 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

1954-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், துவங்கப்பட்டு கிளை நூலகமாக இயங்கியது தற்போது ‘‘திருப்பூர் மாவட்ட மைய நூலக மாக’’ மாறி புதுப்பொலிவுடன் இயங்குகிறது. நாள் ஒன்றுக்கு 700 வாசகர்கள் நூலகம் வந்து பயனடைகின்றனர். நாள்தோறும் 500 நூல்கள் இரவலாக வழங்கப் படுகிறது. 400 பேர் நூலகத்திலேயே வந்து படித்துப் பயன் பெறுகின்றனர்.

மொத்த உறுப்பினர்கள் - 19326 மொத்த நூல்கள் - 96297 புரவலர்கள் -104.

மாவட்ட மைய நூலகம் வாசகர் பயன்பாட்டிற்கேற்ப கீழ்க்காணும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.

1. பத்திரிகை, பருவ இதழ்கள் பிரிவு.

2. நூல்கள் இரவல் வழங்கும் பிரிவு.

3. குழந்தைகள் மற்றும் குடிமைப்பணி நூல்கள் பிரிவு

4. குழந்தைகள் மற்றும் மகளிர் பிரிவு

5. கணிணி பிரிவு (இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது)

ஆண்டுதோறும் நூலக வாரவிழாக்கள் நடத்தப்பட்டு வாசகர்களிடையே படிக்கும் ஆர்வம் தூண்டப்பட்டு புதிய நூல்கள் கண்காட்சியும், பூங்காக் களில் புத்தகம் என்ற புத்தகக் கண்காட்சியும், நடத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வாசகர் கூட்டம் கூட்டி திருப்பூர் மாவட்ட மைய நூலகத்தை நவீன மயமாக்கும் முயற்சி நடக்கிறது

டாக்டர். சி. ரா. ரங்கநாதன் அவர்களின் 5 குறிக்கோள்களில் மிக முக்கியமானதான அனை வருக்கும் நூல் (Book for All) என்ற விதிமுறையை முதன்மைப் படுத்தியே அனைத்துப் பொது நூலகங்களும் இயங்கி வருகின்றன.

திருப்பூரில் 5 லட்சத்திற்கு மேலாக உள்ள மக்கள் தொகையில் நூலகத்தைப் பயன்படுத்தும் மக்கள் மிகக்குறைவு. உறுப்பினர்களும் மிகக் குறைவு. எனவே அனை வரையும் நூலகம் வரவழைக்க வேண்டும் என்பதும் அனை வரையும் உறுப்பினராக்க வேண்டும் என்பதும் இம்மாவட்ட மைய நூலகத்தின் குறிக்கோள்.

வருடத்தில் 2 முறை மக்கள் செலுத்தும் சொத்துவரியில் இருந்து 10 பைசா வீதம் நூலக வரியாக நூலகங்களுக்கு வழங்கப்படுகிறது.

உறுப்பினர் காப்புத்தொகை, சந்தா காலக்கடப்பு என நூலகங் களில் வசூலிக்கப் படுகிறது.

நபருக்கு(தலைக்கு) ரூ1000/- வீதம் புரவலர்கள் தொகையாக கொடைவள்ளல்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. அவர்களின் பெயர்கள் பலகைளில் பொறிக்கப் பட்டு என்றென்றும் நூலகங்களில் காட்சிப்படுத்தப் படுகிறது.

நூலகங்களில் நன்கொடைகள் பொருட்கள் வடிவிலும் வாங்கப் பட்டு வருகிறது.

பொது நூலகத்துறையின் இயக்குநர் திருப்பூர் மாவட்ட மைய நூலகத்தை கணிணி மயமாக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் ந. மணிகண்டன் அதைசெயல்படுத்தி வருகிறார்.

சரியாக சொத்துவரி கட்டுவது, அதன்மூலம் நூலகவரி நூலகத்திற்கு கிடைக்கச் செய்வது, உறுப்பினர்கள் ஆவது, புரவலர்கள் ஆவது, நன்கொடைகள் வழங்குவது என நூலகத்திற்கு உறுதுணையாக எல்லோரும் நிற்க வேண்டும். இது மக்களின் கடமை.

எண்.8ல் பார்க் சாலையில் புதுப்பொலிவுடன் கம்பீரமாக அமைந்திருக்கும் நூலகத்தை கட்டாயம் பயன்படுத்துமாறு வாசகர் அனைவரையும் தவறாது அன்புடன் அழைக்கிறோம்.

Pin It