பழங்காலத்தில் இசை, நாடக நூல்கள் எனக்கருதப்படும் பெருநாரை , பெருங்குருகு, இசை நுணுக்கம், பஞ்ச பாரதீயம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பன இன்று நமக்குக்கிடைத்தில. ஆயினும் இந்நூல்கள் எழுந்த காலத்தும் பின்னரும் இக்கலைகள் இருந்த வரலாற்றைச் சிலப்பதிகார உரையிலும் பிற மேற்கோள்களிலும் இருந்து எடுத்து விளக்க அறிஞர்கள் முற்பட்டனர். அவர்களுள் முத்தமிழ் மாமுனிவர் விபுலானந்தர் பணி மனங்கொள்ளத்தக்கது; அவர்கள் அருளிய மதங்கசூளாமணி, நடராசர் திருவடிவம் ஆகிய நாடகங்களும் யாழ்நூல் எனும் இசைத்தமிழ் நூலும் தமிழுலகத்துக்குக் கிடைத்த பெருங்கொடைகள்.

விபுலானந்தரின் ஆய்வுகள் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையினை நிலைக்களனாகக் கொண்டது; அனுபவம், ஈழநாட்டு மட்டக்களப்பு வாவியில் எழும் இன்னொலி முதலாகத் தொடங்கியது. காற்றினும், காவினும் ஆற்றினும் எங்கணும் இன்னிசை கேட்டு மகிழ்ந்த மக்களின் சிறப்புகளை மட்டுநீர்நிலையுள் எழுந்த ஓர் இன்னொலியிலிருந்து தாம் கேட்டு வியந்த நிலையில் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன. (காண்க: தமிழ்ப்பொழில் - துணர் 16, மலர் 8 - 1940: “நீரரமகளிர் இன்னிசைப்பாடல்”) ஊரியிசை உலகப் பேரதிசயங்களில் ஒன்று என்பர் அறிஞர். இங்கு கருதத்தக்கது, யாழ்நூல், அடிகள் ஊரியிசை கேட்ட நிலையில் பிறந்தது என்பதே.

தமிழிசையின் வரலாறு, அடிகளாரின் வரலாறாக விரியும்.

‘யாழ்நூலி’னை நன்கு கற்றுத் தெளிவதற்குக் கணிதப்பேரறிவும் இலக்கியப்புலமையும் வேண்டுவனவாகும் என அந்நூலின் சிறப்பினை அறிந்தோர் உணர்வர். பண்டைய யாழ்களைப் பற்றிய இலக்கியக் கூற்றான விளக்கப்பகுதி மட்டுமின்றி அதனைத் தொடர்ந்து பௌதிக நோக்கோடு அமைந்த sonometer, tuning folks, air pumps முதலிய கருவிகளின் விளக்கம், ஒலி அலைகளின் கூறுபாடுகள், அவற்றின் நீளம் பற்றிய தெளிவுரை ஆகியவனவெல்லாம் பழந்தமிழிசை விளக்கத்துக்கு இன்றியமையாதனவாக அடிகளால் காட்டப் பெற்றுள்ளன.

காரைத்தீவிலுள்ள சைவப்பாடசாலை, கல்முனை - லீஸ் உயர்தர ஆங்கிலப் பாடசாலை, மட்டக்களப்பு அர்ச். மிக்கேல் கல்லூரி, கொழும்பு ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி, பொறியியற்கல்லூரி ஆகிய கல்விநிலையங்களில் பயின்ற அடிகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்

ஙி.ஷிநீ. பட்டமும் பெற்றார். அவரது இயற்பெயர் மயில்வாகனன். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் தேர்வில் தேறிய முதலாவது இலங்கை மாணவர் எனும் சிறப்பும் அடிகளுக்கு வாய்த்தது. பாரதியார் பாடல்களில் தோய்ந்த அடிகள் கற்றோர் மத்தியில் பாரதி பாடல்களுக்கு நல்மதிப்பினை ஊட்டி வளர்த்தார். Modern Review இதழில் Phonetics in Tamil (தமிழின் ஒலி மரபு) போன்ற அரிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். ஆங்கிலமொழி இலக்கியங்களின் சிறப்பை விளக்கும் ‘ஆங்கிலவாணி’ எனும் கட்டுரை, பண்டிதமணி கதிரேசச் செட்டியார் ‘மணிமலர்’ நூலுக்காக எழுதப்பட்டது; அந்த நாட்களில் இக்கட்டுரை, அறிஞர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடக இலக்கணங்கள், வடமொழி - தமிழ் - ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரே தன்மையனவாக இருப்பதை விளக்குமுகத்தான் எழுந்தது ‘மதங்க சூளாமணி’ எனும் நாடகத்தமிழ்நூல். பேரறிஞர் ஆனந்த குமாரசுவாமியின் ஆனந்த தாண்டவம் எனும் புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரைக்கு ஈடான அடிகளின் கட்டுரை, தில்லைத் திருநடனம் அல்லது நடராசர் திருவடிவம் என்பதாகும்.

தமிழில் கலைச்சொற்கள் உருவாகி மக்கள் பயன்பாட்டுக்குப் பெருமளவில் வரவேண்டும் என அடிகள் பேரவாக் கொண்டார். சென்னையில் இயங்கிய கலைச்சங்கத்தாரால் கலைச்சொற்களை உருவாக்குவதற்கென அமைக்கப்பட்ட குழுவில் அடிகளும் ஓர் உறுப்பினராகப் பங்கு கொண்டு பௌதிகத்துறையில் பல்லாயிரம் கலைச்சொற்களை ஆக்கித்தந்தார். இது கலைச்சொல்லகராதியின் ஒரு பகுதியாக வெளி வந்தது. அடிகள் யாத்த நூல் வடிவாயமைந்த செய்யுள்களும் தனிச்செய்யுள்களும் பல நூறு ஆகும். Shakespeare எழுதிய Julius Ceaser, Merchant of Venice போன்ற நாடகங்களையும் வேறு பல நாடகங்களின் பகுதிகளையும் அடிகள் தமிழில் தந்தார். நூலின் ஒரு பகுதியையும் அவர் தமிழாக்கினார். 1936 - இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற சொல்லாக்க மாநாட்டில் அடிகளின் பங்கு பெருமிதத்துக்குரியது.

அண்ணாமலைப் பல்லைக்கழகத்திலும் பின்னர் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகக் கடமையாற்றிய அடிகள் காலனி ஆதிக்கத்தையும் வெள்ளையர் அடாவடிகளையும் அந்த நாட்களில் வெளிப்படையாக எதிர்த்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது ஒரு நாள் அந்த வளாகமே வெள்ளையாதிக்கக் கொடிகளைப் பறக்கவிட்டபோது அடிகள் மட்டும் தனது இல்லத்தில் தேசியக் கொடியை உயர்த்தி நின்றார். மொழிவிடுதலை நாட்டு விடுதலையின் ஓர் அங்கம் என அவர் வலியுறுத்திவந்தார். ராமகிருஷ்ணமடத்தின் ஆங்கில இதழ் (Prabuddha Bharata), தமிழிதழ் (ராமகிருஷ்ண விஜயம்) ஆகிய இரு இதழ்களிலும் ஆசிரியராகச் சிறந்த அடிகள், பண்பாடு குறித்தும் பாரதி குறித்தும் அந்த இதழ்களில் எழுதிய கட்டுரைகள் அறிவுலகின் கவனத்தை ஈர்த்தன.

“இமயத்தில் தமிழ்க் கொடி பறந்ததற்குப் புறச்சான்றுகள் கிடைத்தில என்கிறார்கள். ஆனால் இமயத்தலையில் தமிழ்முத்திரை பொறித்த ஈழக்கரிகாலன் நம்மிடையே வாழ்ந்து புகழ்கொண்டார்” என்று நாமறிந்த பேராசான் தோழர் ஜீவா அடிக்கடி கூறுவதுண்டு. தமிழ் வரிகளை ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலப்படைப்புகளைத் தமிழிலோ ஆக்குவதில் அடிகளுக்கு நிகர் அடிகளே என்றும் ஜீவா கூறுவார்.

திருக்குறள் பற்றிய The Books of Books in Tamil Land எனும் நூலும் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்த The Origin and Growth of Tamil Literature எனும் நூலும் அடிகள் நமக்களித்துச்சென்ற பெருஞ்செல்வங்கள். உலகப்பற்றையே துறந்த அடிகளுக்குத் தமிழ் மீதும் தமிழ் மாணவர் மீதும் கொண்ட பற்றைத் துறக்க இயலவில்லை எனக் கரந்தைக் கவியரசு உமாமகேசுவரர் கூறி மகிழ்ந்தார். அடிகளின் ‘யாழ்நூல்’ கண்ட முகவை ராஜமாணிக்கம் (நாம் பெரும்பாலும் மறந்துவிட்ட தோழர்களில் ஒருவர் ) தன் மகளைக் கானல்வரியை ஆழமாகக் கற்கச் செய்தார்; ‘கானல் வரி’ எனும் ஆய்வுநூல் ஒன்றும் வெளிவர உறுதுணையாயிருந்தார் (ஸ்டார் பிரசுரம்). தமிழிசை பற்றியும் அலங்கார சாத்திரம் பற்றியும் திருச்சி வானொலியில் அடிகள் நிகழ்த்திய உரைகளை இன்றும் நினைவு கொள்ளும் பெருமக்கள் நம்மிடையே உளர்! பாரதியை விபுலானந்தரில் கண்டேன் என்றார் அறிஞர் சோ. ராஜகோபால். (விபுலானந்தர் வெள்ளிவிழா மலர்.)

கற்றோர் அவையில் சொல்லுதற்குரிய ஏற்றமிகு தமிழ் எதுவென வினவுவோர்க்கு அவைக்குரியதாக ‘பாண்டியன் தமிழ்’ அமையட்டும் என்றார் அடிகள்; “அதில் உண்மை, அழகு, செம்மை ஆகியன பளிச்சிடும்” என்றார். மனம் போனவாறு மரபு தவறி எழுதுவதை அவர் ஒப்பவில்லை. 1942-இல் மதுரை முத்தமிழ் மாநாட்டில் அடிகள் நிகழ்த்திய பேருரை ஒரு வகையில் புதிய தமிழுக்கான முன்னறிவிப்பு ஆகும். உ.வே.சா. அவர்களைப் பற்றி எழுதுங்கால் “ இன்றைய தமிழுக்கு வரம்பு, தென்திசைக்கலைச்செல்வர், பெரும் பேராசிரியர், எழுத்தறிபுலவர்” என்று புகழ்ந்தார் அடிகள்.

- ஞாலன் சுப்பிரமணியன்
Pin It