மக்களுக்கு என்ன நன்மை என்பதை விடத் தங்களுக்கு என்ன பலன் என்பதில்தான் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் எப்போதும் குறியாக இருக்கும். அதனால் இவ்விரு கழகங்களும் எப்போதும் சண்டையிட்டுக் கொள்ளும். இவ்விரண்டும் போட்டுக் கொள்ளும் இரைச்சல்தான் தமிழ்நாட்டு அரசியல் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரைச்சலே இவர்கள் செய்யும் இசைக் கச்சேரி!

இக்கச்சேரிக் கழகங்களைக் கோட்டைக்கனுப்பியதால் தமிழர்கள் கோட்டை விட்ட உரிமைகள் ஏராளம்!

அந்த வரிசையில் முல்லைப் பெரியாறு அணை உரிமையும் கோட்டைவிடப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாற்று அணையில் தமிழகத்திற்குள்ள உரிமையை நிலை நிறுத்தியும், 142 அடிவரை முதல் கட்டமாகத் தண்ணீர் தேக்கலாம் என்றும், அணை வலுவாக இருக்கிறதென்றும், சிற்றணையில் செய்ய வேண்டிய செப்பனிடும் பணிகளைச் செய்தபின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடி தேக்கிக் கொள்ளலாம் என்றும் 27.2.2006 இல் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அது செல்லாது என்று சட்டமியற்றியது கேரளம்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று 7.5.2014 அன்று தீர்ப்பளித்தது. 2006 ஆம் ஆண்டின் தீர்ப்பை அது உறுதி செய்தது.

இத்தீர்ப்பின் படி உடனடியாக 142 அடி தேக்க அணையின் மதகுக் கதவுகளை இறக்கி அணையை மூட வேண்டும் என்று த.தே.பொ.க. ஊடகங்களின் வழியாகத் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டது. தமிழக உழவர் முன்னணியும் இதே கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. முல்லைப் பெரியாறு காவிரி உரிமை போன்ற வற்றில் அக்கறையுடன் செயல்படும் மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறியாளர் அ.வீரப்பன் அவர்கள், தீர்ப்பு வந்தவுடன் 142 அடி தேக்க மதகுகளை இறக்க வேண்டும் என்று ஊடகங்கள் வழி கோரிக்கை வைத்தார்.

அதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களும், இதே கோரிக்கையைத் தமிழக அரசுக்கு வைத்தார். ஆனால் தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் கருணாநிதியைச் சாடி நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில் பின் வருமாறு கூறினார்.

“ அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கைகள் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில்தான் மேற்கொள்ளப்படவேண்டும். அப்படித் தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

... இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் தன்னிச்சையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது” என்று முதல்வர் தமது அறிக்கையில் கூறினார்.

இவ்வாறு முதல்வர் கூறுவதற்கு மேற்படித் தீர்ப்பில் எந்த சான்றும் கிடையாது.

தீர்ப்பின் பத்தி 221 பின்வருமாறு கூறுகிறது. “ தமிழ்நாடு தனது வழக்கில் வைத்துள்ள கோரிக்கையை அது செயல்படுத்திக் கொள்ளலாம் 2006 தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கேரளம் இயற்றிய சட்டம் செல்லாது. 2006 தீர்ப்பின்படி தமிழ்நாடு செயல்படுவதில் குறுக்கிடாதவாறு கேரளத்திற்கு எதிராக நிரந்தரத் தடையாணை (permanent Instruction) வழங்கப்படுகிறது. 142 அடி உயரத்திற்கு அணையில் தமிழகம் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம்.”

அடுத்து பத்தி 222 - இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது; 142 அடிக்குத் தண்ணீரைத் தேக்குவதால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்கான அச்சம் எழ எந்தக் காரணமும் இல்லை என்ற போதிலும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்காக மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக்குழு அமைக்கப்பட வேண்டும். அம்மூவரில் ஒருவர் நடுவண் நீர்வளத்துறை அதிகாரி, அவர்தாம் அக்குழுவிற்குத் தலைவர், மற்ற இருவர் தமிழகம், கேரளம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பிரதிநிதி”

பத்தி 223: 142 அடி தேக்கிய பின் மூவர் குழு அணையைப் பார்வையிடும். அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்து தக்கபரிந்துரை அளிக்கும். அதன் பரிந்துரைப்படி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.”

மேற்படித் தீர்ப்பில் மூவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ்தான் 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை.

முதலமைச்சர் செயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ள மற்றொரு காரணம் மிகவும் கவனிக்கத் தக்கது.

“எது எப்படி இருந்தாலும் 16.5.2014க்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாக அ.இ.அ.தி.மு.க விளங்கும் அப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உடனடியாக மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அந்தக் குழுவால் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வறிக்கை நாளேடுகளில் 10.5.2014 அன்று வந்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஆட்சி மாற்றம் தேவையில்லை. 1979 ஆம் ஆண்டிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டு, ஐந்து மாவட்ட வேளாண்மை மற்றும் குடி நீர்த் தேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இனியும் காலதாமதம் செய்து, தீர்ப்பைச் செயல்படுத்த விடாமல் தடுக்கக் கேரளத்திற்கு வாய்ப்புத் தர வேண்டுமா?

2006 இல் இதே தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிய போது செயலலிதாதான் முதலமைச்சராக இருந்தார். அப்போது மதகுகளை இறக்கி மூடும்படி செயலலிதா ஆணையிடாமல் காலம் கடத்தினார். அப்போது 2006 இல் கேரளத்தில் இருந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுருந்ததால் கேரள மக்களின் வாக்குகளைக் கவனத்தில் கொண்டு, மதகுகளை இறக்கவில்லை என்று ஒரு கருத்து நிலவியது. இதனால் ஏற்பட்ட அவகாசத்தில் கேரளம் முல்லைப் பெரியாறு அணையைத் தன் வசப்படுத்தியும், உச்சநீதிமன்றம் அதைக் கட்டுப்படுத்த முடியாதென்றும் சட்டம் இயற்றிக் கொண்டது.

அந்தச் சட்டத்தைத் தகர்க்க எட்டாண்டுகள் தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளது. மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை கேரளத்திற்கு அதே முதல்வர் செயலலிதா தருவது சரியன்று.

மதகுகளை இறக்க நீர்ப்பாசனத் துறைக்கு தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும் தமிழக காவல் துறையினரின் பாதுகாப்புடன் மதகுகளை இறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அடுத்து; அணைப்பாதுகாப்பில் கேரளக் காவல்துறை இருக்கிறது. அதை விலக்கிக் கொண்டு நடுவண் காவல் துறையினரை அப்பொறுப்பில் ஈடுபடுத்தவேண்டும். இப் பரிந்துரையை ஏற்கெனவே நடுவண் உள்துறை நுண்ணறிவுப் பிரிவு வழங்கியுள்ளது. இதற்கான முயற்சியிலும் தமிழக முதல்வர் இறங்க வேண்டும்.

செயலலிதா தன் பதவிக் கனவுக்காக முல்லைப் பெரியாறு அணை உரிமையை பலியிட்டுவிடக் கூடாது.

Pin It