பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவில் இந்திய அரசு இருப்பதாக வெளியுறவு அமைச்சர் சுசுமா சுவராஜ் கூறியுள்ளார். அண்மையில் அமெரிக்கா போன போது தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் ஒபாமாவிடம் பகவத் கீதையை அன்பளிப்பாக வழங்கினார். இந்தியாவின் தேசிய நூல் பகவத் கீதை என்பதற்கு - இந்த அன்பளிப்பு நிகழ்வே ஓர் அரசு முறைப்பட்ட அடையாளமாகும் என்றும் விரைவில், அந்நூல் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்று சுசுமா கூறினார்.

பகவத் கீதை இந்துக்களின் புனித நூல்; இந்தியாவில் மிகப்பெரும்பான்மையினர் இந்துக்கள்; எனவே, இந்தியாவின் தேசிய நூல் பகவத் கீதை என்பது இந்துத்துவா பேசுவோரின் வாதம்.

இந்தியா என்பது ஒரு தேசம் என்பதும் இந்துமதம், பவுத்தம் போல் கிறித்துவம் போல் இஸ்லாம் போல் ஒற்றைத் தலைமை கொண்ட மதம் என்பதும் பொய்கள்!

இந்தியா ஒரு தேசமன்று; இந்தியாவில் பல தேசங்கள் இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் கூட இந்தியாவை ஒரு தேசம் என்று சொல்லாமல் ஒன்றியம் என்றே சொல்கிறது. தமிழ்த்தேசம், தெலுங்கு தேசம், மராட்டிய தேசம், வங்காளி தேசம், காஷ்மீரி தேசம் போன்ற பல தேசங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு தேசமும், வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு மொழியுடன் வெவ்வேறு தேசிய இனங்களின் தாயகங்களாக விளங்குகின்றன.

எனவே தேசமல்லாத இந்தியாவைத் தேசமென்று சொல்வது ஆரியப் பார்ப்பனிய ஆதிக்கத் திணிப்பும் அட்டூழியமும் ஆகும்.

அடுத்து பகவத் கீதை, புத்த தம்மம், பைபிள், குர்ரான் போன்று இந்து மதத்தின் ஒற்றைப் புனித நூல் அன்று. அவையெல்லாம் அந்தந்த மதத்தில் கேள்விக்கப்பாற்பட்ட ஒற்றை தலைமை நூல்கள்! பகவத் கீதை அப்படிப்பட்டதன்று.

தமிழகத்தில் சைவ சித்தாந்தப் பிரிவினர் பகவத் கீதையைத் தங்களின் வழிகாட்டி நூலாக ஏற்கமாட்டார்கள். திருமூலரின் திருமந்திரமும், சிவஞானமுனிவரின் சிவஞான போதமும்தான் அவர்களுக்கு வழிகாட்டி நூல்கள்.

தமிழ் வைணவர்களில் தென்கலைப் பிரிவினர் நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தைதான் தங்கள் புனித நூலாகக் கருதுகிறார்கள். பகவத் கீதை அவர்களுக்கு ஒற்றைத் தலைமைக் குரிய புனித நூல் அன்று.

பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்களில் பல பிரிவுகள் உண்டு. ஆனால் அவற்றில் எப்பிரிவும் முறையே புத்தர் - புத்த தம்மம், ஏசு கிறித்து - பைபிள், நபிகள் நாயகம் - குர்ரான் ஆகிய தலைமைகளுக்கு மாற்றாக வேறொரு தலைமையை, வேறொரு நூலைப் புனிதமாக ஏற்பதில்லை.

இந்துமதத்தில் அப்படியான ஒற்றைத் தலைமை இல்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல்வேறு சமயப் பிரிவுகளின் தொகுப்பாக இந்து மதம் இருக்கிறது. சைவர்களுக்கு சிவபெருமான் தான் தலைமைக் கடவுள். வைணவர் களுக்குப் பெருமாள்தான் தலைமைக் கடவுள். இக்கடவுள்களுக்கிடையே பிற்காலத்தில் உறவு கற்பிக்கும் புராணங்கள் எழுதப்பட்டாலும் சைவ ஆதீனங்களும் வைணவ மடங்களும் அப்படியான உறவோடு இன்று வரை இல்லை. சிவன் கோயில் பூசை முறை வேறு; பெருமாள் கோயில் பூசை முறை வேறு;

சைவத்திற்குள் பல பிரிவுகள் இருந்தாலும் சிவனைத் தலைமையாக ஏற்கின்றனர். அவர்கள் பெருமாளைத் தலைமையாக ஏற்பதில்லை. அதேபோல் தமிழக வைணவத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் பெருமாளைத் தலைமையாக ஏற்கின்றனர். அதே வேளை, வடநாட்டு வைணவத்தில் தமிழகப் பெருமாள் இல்லை. தமிழ்நாட்டு, வடநாட்டு வைணவர்கள் சிவனைத் தலைமையாக ஏற்பதில்லை.

பகவத் கீதை எந்தச் சமயப்பிரிவுக்குரியது? வைணவத்திற்குரியது. வைணவத்திலும் வடகலைக்குரியது.

திருவரங்கம் யானைக்குத் தென்கலை நாமம் போடுவதா, வடகலை நாமம் போடுவதா என்ற சண்டையே இன்னும் தீரவில்லை. திருவரங்கம் அரங்க நாதர் கோயில் திருச்சுற்றில்பாடி வந்த ஒரு தமிழ்ப் புலவரை, திருமலைக்கு எப்போது போவீர்கள் என்று ஒரு வைணவ அன்பர் கேட்டுள்ளார். அதற்கு அந்தப்புலவர் “அரங்கனைப் பாடிய வாய் அந்தக் குரங்கனைப் பாடாது” என்றாராம். வேங்கட மலைமேல் இருப்பதால், வெங்கடாசலபதியைக் ”குரங்கன்” என்று சாடியுள்ளார் அந்த வைணவப் புலவர்.

வைணவர்களில் முகாமையான ஒரு பிரிவினர் ஏற்றுக் கொள்ளாத பகவத் கீதையை இந்து மதத்திலுள்ள மற்ற பிரிவுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாது.

இந்து மதத்தினரே, ஒட்டுமொத்தமாக ஒற்றைத் தலைமையாக ஏற்றுக் கொள்ளாத பகவத் கீதையை, பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவுக்குரிய ஒற்றைத் தலைமைப் புனித நூலாக எப்படி ஏற்க முடியும்?

இந்தியாவே ஒரு தேசமாக இல்லாத போது இந்தியாவுக்கு எப்படி ஒரு தேசிய நூலிருக்க முடியும்? பருவமடையாத சிறுமிக்குத் திருமணம் செய்து வைப்பதாலேயே அவள் தாயாகி விட முடியாதல்லவா?

அடுத்து, இந்தப் பகவத் கீதை புத்த தம்மம் போல, பைபிள் போல திருமந்திரம் போல திருக்குர்ரான் போல, நாலாயிர திவ்விய பிரபந்தம் போல ஒற்றைத் தனி ஆன்மிக நூலா? இல்லை. இக்காலத்தில் எழுதப்படும் நாவல் இலக்கியம் போல், பழங்காலத்தில் பங்காளிப் போரைப் மையப்படுத்தி எழுதப்பட்ட மகாபாரத காவியத்தின் நடுவில் வரும் ஒரு பகுதி பகவத் கீதை! அந்தப் பங்காளிப் போருடன் தொடர்புடைய ஒரு பகுதி!

வைணவ மெய்யியலை அறிந்தவர்கள் பெருமாள் வேறு; இராமர் வேறு என்பர். பெருமாள் ஒரு மெய்யியல்; இராமர் ஒரு கதாபாத்திரம்! தமிழ்நாட்டில் பெருமாளுக்குத்தான் எல்லா இடங்களிலும் கோயில் உண்டு. இராமருக்கு மதுராந்தகம் (ஏரிகாத்த இராமர் போன்று) மிகச் சில இடங்களில் மட்டுமே கோயில் உண்டு.

இராமனும், கண்ணனும் கருப்பாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் தமிழ் மன்னர்கள் என்பர் வரலாற்று அறிஞர்களான நா. சுப்ரமணியம் (இவர் பிறப்பால் பிராமணர்), மொழி ஞாயிறு பாவாணர் போன்றோர். இந்தியா முழுவதும் வாழ்ந்த தொல்குடிகள் தமிழர்களே என்பதை அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டுப் பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர். சிந்துவெளி மக்களின் தொடர்ச்சியே தமிழக வேளிர் என்பதை பாரி வேளைப் பாடிய கபிலரின் “இவர் யார் என்குவை ஆயின் இவரே” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைக் கொண்டு நிறுவிய ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் துவரையை (துவாரகையை - குசராத்) ஆண்ட மரபின் தமிழர் என்பார். கண்ணன் துவரையை ஆண்ட கருப்பு நிற மன்னன்!

ஆரியர்கள் கைபர் - போலன் கணவாய்கள் வழியாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் புகுந்த போது தங்களுடன் கொண்டு வந்த பிரஜாபதி, பிர்மா போன்ற கடவுளர்கள் மக்கள் செல்வாக்கைப் பெற முடியாததால், அங்கு தமிழ் மக்களிடம் நடுகல் தெய்வங்களாக பிரபலமடைந்திருந்த கருப்புத் தெய்வங்களான கண்ணன், இராமன் ஆகியோரை ஆரியப் பார்ப்பனிய மயமாக்கித் தமதாக்கிக் கொண்டனர்.

”பிறப்பு அடிப்படையில் நால் வருணங்களையும் நானே படைத்தேன்” என்று கருப்புக் கண்ணன் சொல்வதாக ஒரு புனைந்துரையைப் பகவத் கீதையில் இணைத்தனர். பகவத் கீதை என்பது மகாபாரதக் காவியத்தில், பிற்காலத்தில் இராகுலசாங்கிருத்தியாயன் கருத்துப்படி கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் சேர்க்கப்பட்ட ஓர் இடைச் செருகல்! ஆரியம் இந்தியத் துணைக் கண்டத்தில் நிலைத்த பிறகு ஆரிய - பார்ப்பனிய ஆதிக்கங்களை நிலை நாட்டிக் கொள்வதற்காக பலரால் - பல கட்டங்களில் எழுதிச் சேர்க்கப்பட்ட கதம்பத் தொகுப்பே இன்றுள்ள பகவத் கீதை!

அதில் நல்ல கருத்துகளே இல்லையா? இருக்கின்றன. ஆனால் மேலோங்கியிருப்பவை ஆரியப் பார்ப்பனிய மேலாதிக்கக் கருத்துகளே. அவற்றை இங்கு விரிவாக விளக்க வாய்ப்பில்லை; ஒரு சிலவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

கண்ணனைப் பரமாத்மா (கிருஷ்ண பரமாத்மா) என்று பகவத் கீதை சொல்கிறது. ஆனால் இராமனை - இந்தியாவின் ஒற்றைத் தெய்வமாக - ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. பார்ப்பனர்கள் முன் வைப்பது ஏன்? இந்த முரண்பாடு ஏன்? பகவத் கீதை மட்டுமே, இந்துக்களின் தலைமைப் புனித நூல் என்பது உண்மையானால், பகவத் கீதையை அருளிய கண்ணபிரானை அல்லவா இந்துக்களின் தலைமைத் தெய்வமாக ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. ஆசான்கள் முன்னிறுத்த வேண்டும். அவர்கள் கருத்துப்படி கண்ணணும் இராமனும் ஒரு மூலவரின் அவதாரங்களாக இருக்கட்டும். அந்த அவதாரங்களில் கண்ணன் தானே பகவத் கீதை அருளினார். அவர்கள் கணிப்புப்படி கண்ணன் யாதவன் என்பதால் - சத்திரியனான இராமனை முன்னிறுத்துகிறார்களா?

நம்மைப் பொறுத்தவரை கண்ணன் - இராமன் இருவரும் இரண்டு கதாபாத்திரங்கள். மக்களால் தெய்வங்களாக இருவரும் மதிக்கப்படுகின்றனர். இந்த இருவரில் யார் பக்கமும் நாம் இல்லை. எப்போதும் எல்லா மதங்களையும் சேர்ந்த - மதங்களைச் சேராத மக்கள் பக்கமே நாம் இருக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை ஆன்மிக மோசடிக் கும்பல்; ஆன்மிக வணிகம் செய்து வர்ணாசிரம ஆதிக்கத்தை இன்றும் நிலை நாட்டிக்கொள்ள முயலும் கசடர்கள்; ஆன்மிகத்தையும் ஏமாற்றுபவர்கள். அவர்கள் முன் வைக்கும் “இந்துத்துவா” என்பது ஒரு மெய்யியல் சார்ந்த ஆன்மிகமன்று. ஆரிய இன - பார்ப்பனிய வர்ணாசிரம தர்ம - வடநாட்டு மேலாதிக்கவாதம் தான் அவர்கள் முழங்கும் இந்துத்துவா. இந்து மதம் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாய் இருப்பதால் அவர்களின் கடவுள் நம்பிக்கை - மத நம்பிக்கை இரண்டையும் களவாடி ஆரியப் பார்ப்பனிய வடநாட்டு மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள - அதற்குக் கோடிக்கணக்கான மக்களைத் திரட்டிக்கொள்ள ஒரு குறுக்கு வழியே அவர்களுக்கு இந்து மதம்!

ஆரியப் பார்ப்பனிய மேலாதிக்க வாதத்தை நிலை நாட்டிக்கொள்ளப் பகவத் கீதை பெருங்கருவியாக உள்ளது. ”ஏனெனில், பிறப்பு அடிப்படையில் நால் வருணங்களை நானே படைத்தேன்” என்று கண்ணபிரான் பகவத் கீதையில் கூறுகிறார். இது ஒரு புறமிருக்க, போர் அறத்தைக் கடைபிடிக்காமல், பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டி சூழ்ச்சிகள் செய்து, குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தான் கண்ணன். ஆரியச் சூழ்ச்சிகள் அத்தனையும் மகாபாரதத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

எல்லாக் கேடுகளுக்கும் சிகரமாக ”கொலை செய்! கொலை செய்! நான் பரமாத்மா சொல்கிறேன் கொலை செய்!” என்று கீதையில் அர்ச்சுனனைத் தூண்டுகிறார் கண்ணபிரான். ஆன்மிக அறம் கொலையைத் தூண்டுவதாக இருக்குமா? தமிழர் அறம் அப்படிச் சொல்கிறதா? இல்லை.

காந்தியடிகளைக் கொலை செய்த கோட்சே குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு சொன்னான் “அநீதியை அழிக்கக் கொலை செய்! என்று உபதேசித்தது கீதை. அந்தப் பகவத் கீதைதான் காந்தியைக் கொல்ல எனக்கு உத்வேகம் அளித்தது”.

இந்த பகவத் கீதை அற நூலா? ஆன்மிக நூலா? இதை இந்தியா முழுவதும் வாழும் 120 கோடி மக்களின் புனித நூலாக ஏற்கலாமா? கூடாது; கூடாது!

தமிழர்கள் மீது ஆந்திரக் காவல்துறை காட்டுமிராண்டித் தாக்குதல் - தமிழக அரசு முகத்தைத் திருப்பிக் கொண்டது ஏன்?

இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காகப் பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தால் உட்படுத்தபட்டிருக்கும் கொடியவன் இராசபட்சே, 09.12.2014 அன்று திருமலைக்கு சாமி கும்பிட குடும்பத்தோடு வந்த போது, தமிழகத் தமிழின உணர்வாளர்கள் இராசபட்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து செய்தி திரட்ட, தமிழகத்திலிருந்து ஊடகத் துறையினரும் சென்றிருந்தனர்.

ஆந்திரக் காவல்துறையினர் தமிழின உணர்வாளர்களை இழிவுபடுத்தி, பிடித்துத் தள்ளி தளைப்படுத்தினர். தமிழக ஊடகத்துறையினரைத் தாக்கினர். சன் தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி செய்தியாளர்களைத் தாக்கியதுடன் அவர்களின் ஒளிப்படக் கருவிகளையும் உடைத்தனர். அத்துடன் அவர்களை ஆந்திரக் காவல்துறையினர் கடத்திச் சென்று நள்ளிரவில் நடுக்காட்டில் விட்டுவந்தனர்.

இதுபோன்ற ஒரு நிகழ்வு, தமிழ்நாட்டில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்திருந்தால் இந்நேரம் ஆந்திர முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி, தமிழகக் காவல்துறையினரைக் கைது செய்ய ஆணையிடுமாறு வலியுறுத்தி, இந்திய அரசை அணுகியிருப்பார்கள். ஆனால், தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும், அயல் மாநிலத்தில் தமிழின உரிமையாளர்களும் தமிழக ஊடகத்துறையினரும் காவல்துறையி னரால் தாக்கப்பட்டதையும் அவமதிக்கப்பட்டதையும் கண்டு கொள்ளவே இல்லை. தமிழக அரசு, இவ்வாறு தனக்கென்ன வந்தது என்று இருந்தால் அயல் மாநிலங்களில் தமிழர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பாதுகாப்பு எங்ஙனம் கிடைக்கும்? தமிழர்கள் நாதியற்றவர்கள் என்ற எண்ணம்தான் அயலார்க்கு ஏற்படும்.

தமிழக முதலமைச்சர் தாமும் தமிழகக் காவல்துறை தலைவர் மூலமாகவும் முறையே ஆந்திர அரசை அணுகி 09.12.2014, 10.12.2014 ஆகிய நாட்களில், தமிழர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கிய ஆந்திரப்பிரதேசக் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

Pin It