அமராவதி சங்க இலக்கியத்திலும் சரி இன்றும் சரி வற்றாத ஜீவ நதி. இன்று சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆறு அமராவதி ஆறு. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினுள் ஒரு பிரிவாக(ஒரு சரத்தாக) இந்த அமராவதி ஆறும் இணைக்கப்பட்டு, இதில் ஆண்டிற்குத் தேக்கப்படும் 7 டி.எம்.சி. தண்ணீரில் 3 டி.எம்.சி. தண்ணீரை கேரளத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

        தற்போது சனவரி 6ஆம் நாள் கேரள அரசு மறையூருக்கு அருகில் கோவில் கடவிலிருந்து 1 கி.மீ.தூரமுள்ள மலைப்பகுதியில் பாம்பாற்றை இடைமறித்து அணை கட்ட திட்டமிட்டுள்ளது,

        அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகியவற்றில் நீர்பிடிப்புப் பகுதியில் முதன்மையான நீராதாரமாக பாம்பாறு உள்ளது. இந்த ஆற்றை மறித்து அதன் குறுக்கே அணை கட்டி, 3 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது கேரளம்.

        அமராவதி அணை 1958ஆம் ஆண்டு காமராசர் முதல்வராக இருந்த போது மிகப் பெரிய அளவில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட இருந்தது அப்பொழுதும் இப்பொழுது போலவே உடனிருந்த காங்கிரஸ் தன்னலவிரும்பிகள் அணையைச் சுருக்கி சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் கட்ட வைத்துவிட்டனர். இந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதி 836 ச.கி.மீ. ஆகும். இதில் 700 கி.மீ. கேரள மாநிலப் பகுதியாக உள்ளது.

        அமராவதி அணையில் 90 அடி உயரம் அளவிற்கு நீர் தேக்கி, விவசாயத்திற்குப் பாசனம் செய்யவும், உடுமலை முதல் தாராபுரம் வழியாகக் கரூர் வரை நூற்றுக்கணக்கான வழியோர கிராம மக்களுக்குக் குடிநீர் வழங்கவும் ஆதாரமாக விளங்குகிறது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டுப் பாசனப்பகுதியில் 29 ஆயிரத்து 387 ஏக்கரும், புதிய ஆயக்கட்டுப்பாசனப் பகுதியில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் அளவிற்கும் இன்று வரை விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

        பாம்பாற்றை மறித்து கட்டப்படும் அணையின் மதிப்பு 230 கோடி. இதை மாண்புமிகு தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டால் அட அப்படியா! இல்லவே இல்லை என அடித்துரைப்பார். ஏனெனில் அவருக்கு அவ்வளவு தொகை சாதாரணமே. அதையும் மீறி கேட்டால் “அட இது வெறுமனே அளவு மட்டும் எடுப்பார்கள் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்ட முடியாது” என்பார்.

        பாம்பாற்றை மறித்துக் கட்டப்படும் அணையில் 40 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பெப்சி நிறுவனத்துக்கும் வழங்க இருக்கிறார்களாம். இதற்காக 2.5 கி.மீ. நீளத்திற்கு மலைகளில் சுரங்கம் அமைத்து 800 மீட்டர் தூரத்திற்குக் குழாய்கள் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர். ஆண்டிற்கு 8.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

        அக்கறையுள்ள உடுமலை மற்றும் அமராவதி பாசனத்தால் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் தன்னலம் பாராமல், தன்முனைப்பு பாராமல் முழுமையாக, ‘மொழியால் தமிழன்! இனத்தால் தமிழன்’ என்று இனஉணர்வோடு கைகோத்து ஒரே அணியாக நின்று போராட வேண்டும்.

        இது தமிழனின் தலையாய கடமை. இந்தக் கடமைக்காகப் போராடுவதால் நம்முடைய இழப்பைத் தடுக்க முடியும். நமக்கென்ன வந்தது என்று இந்தச் சூழலில் விட்டுவிட்டால் தமிழகத்தின் உரிமை பறிபோவதோடு கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் தரிசு நிலப்பரப்பு அதிகரித்து, விவசாயி இருக்கமாட்டான் என்ற நிலை ஏற்படும்.

        கேரளத்திலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தையும் ஒரே நாளில் அமராவதி - ஒன்பதாறு பேருந்து நிறுத்தத்தோடு திருப்பி அனுப்பிவிடுவோம்.

        அணைக்கட்டும் முயற்சியை திரும்பப் பெறாமல் கேரள அரசின் எந்தப் பேருந்தையும் உடுமலை நகருக்குள் வரவிடமாட்டோம் என்று தமிழர்கள் உறுதியேற்க வேண்டும்.

        கேரளத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து அரிசி, மணல் உள்ளிட்டு எந்தப் பொருளும் செல்லாமல் பொருளாதாரத் தடை விதிப்போம். தமிழ்நாட்டிலிருந்து மலையாளிகளை வெளி யேற்றுவோம்.

Pin It