சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மாநகரப் பேருந்து ஒன்று 27.06.2012 அன்று விபத்துக்குள்ளானது. இதில், 30 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கால்கள் முறிந்தன.

பேருந்தின் ஒட்டுநர் கைபேசியில் பேசியதால் தான் விபத்து நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், பேருந்து ஓட்டுநர்களோ பேருந்துகள் சரிவரப் பராமரிக்கப்படாததாலும், குறைபாடுகளுடன் காணப்படுவதாலும் தான் இவ்விபத்து நடைபெற்றது எனக் கூறினர். ஒட்டு நரின் இருக்கை கழன்று சரிந்தால் ஓட்டுநர் சாய்ந்தார் எனவும் கூறினார்.

இரண்டு காரணங்களும் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் கைபேசியில் பேசாமலிருப்பது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள போதும், ஒரு சிலரின் அலட்சியப் போக்கால் இது போன்ற விபத்துகள் நடக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குத் தக்க தண்டனை அளிப்பதும் ஞாயம்.

மற்றொரு காரணமாக கூறப்படும், மாநகரப் பேருந்துகளின் பராமரிக்கப்பின்மையும் ஆய்வுக்குரியதாகும்.

சென்னை மாநகரப் பேருந்துப் போக்குவரத்துக் கழகம் இழப்பில் இயங்குவதாகவும், அதன் காரணமாக அனைத்துப் பேருந்து கட்டணங்களையும் உயர்த்துவதாக ஏற்கெனவே அ.தி.மு.க. அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திவிட்டது. இதனையடுத்து, டீலக்ஸ் முதல் சொகுசுப் பேருந்துகள் வரை பல வகைகளில் பேருந்துகள் வந்தாலும், மக்கள் குறைந்த கட்டணம் கொண்ட வெள்ளைப் பலகை கொண்ட பேருந்துகளுக்கே காத்துக் கிடக்கின்றனர். குறைந்த கட்டணத்துடன் அதில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியிலிருந்தே வெள்ளைப் பலகைப் பேருந்துகள் குறைந்தளவே இயக்கப்படுகின்ற நிலையில், இவ்வெண்ணிக்கை அ.தி.மு.க. ஆட்சியில் மேலும் குறைக்கப்பட்டு விட்டது. சொகுசுப் பேருந்துகளும், ஏனைய டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்பட்டு, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இவ்வகையில், தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானம் சரிவர பேருந்துகளின் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுவதில்லை. வெள்ளைப் பலகை பேருந்துகள் அடிக்கடி பிரேக் டவுன் ஆவதும், சொகுசு பேருந்துகள் சீறிப்பாய்வதும் நடக்கிறது. அதிருப்தியுறும் மக்கள் சொகுசுப் பேருந்துகளுக்கு மாறுவதும் நடக்கிறது.

பலமுறை பேருந்துகளின் பழுது நிலையை நாங்கள் கூறிய பிறகும் கூட நிர்வாகம் அதை கண்டு கொள்ள மறுக்கிறது என ஓட்டுநர்கள் வேதனையுடன் புலம்புகிறார்கள். இவ்வாறு அதிகாரிகளின் மெத்தனமும், அலட்சியமும் பல உயிர்களைக் காவு வாங்குவது வேதனையானது.

இவை ஒருபுறமிருக்க, சென்னை நகர சாலைகள் மிக மோசமாகவே காட்சியளிக்கின்றன.

நடுவண் தேசிய குற்ற ஆவணப் பதிவகத்தின் 2011ஆம் ஆண்டு குறிப்பேடுகளின்படி, இந்தியாவின் முக்கிய 53 நகரங்களில் ஆய்ந்ததில், சென்னை மாநகரச் சாலைகள் தான் மிக மோசமாக விளங்குகின்றன என்றும், அதனால் தான் இங்கு அதிகளவு விபத்துகள் நடக்கிறதென்றும் தெரிவிக்கின்றது.

இப்பதிவேட்டின்படி, கடந்த 2011ம் ஆண்டில் மட்டும், சென்னையில் மொத்தம் 9845 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இரண்டாவது இடத்தை நாட்டின் தலைநகரான தில்லி பிடித்துள்ளது. அங்கு 6065 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. மூன்றாம் இடத்தை தகவல்தொழில்நுட்ப நகரமாக வர்ணிக்கப்படும் பெங்களூர் நகரம் பிடித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் புழங்குகின்ற பழைய மகாபலிபுரச் சாலைகளில் இரவு நேரத்திலும், மின்விளக்குப் போட்டு அழகுபடுத்துகின்ற தமிழக அரசு, சாதாரண மக்கள் புழங்கும் சாலைகளை அப்படியே விட்டு வைத்துள்ளது. இதே போலத்தான், தில்லி, கர்நாடக அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையும், மண்ணின் மக்களுக்கு வசதிக்குறைவையும் ஏற்படுத்தி, நவீனத் தீண்டாமையை கையாள்கின்றன.

சென்னை நகரின் சாலைகள் ஓர் மழைக்காலத்தைக் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் மெய்ப்பிக்கப்பட்டே வருகின்றது. தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையிலேயே இது தான் நிலை என்றால், தமிழகத்தின் மற்ற பகுதிகளின் நிலை கவலைக்குரியதாகும்.

சாலைகளின் நிலை இதுவென்றால், நகரத்தின் போக்குவரத்தை நிலைகுலையச் செய்யும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் புதிய புதிய சலுகைகளுடன் வழங்கப்படும் இருசக்கர மோட்டார் வாகனங்களும், மகிழுந்துகளும் சாலைகளை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. பல பேர் செல்லக் கூடிய இடத்தை பொது சாலையை, ஒருவர் மட்டுமே பயணிக்கும் மகிழுந்துகள் அடைத்துக் கொண்டு நிற்கும் போது, அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் முயற்சிக்கலாம்.

சாலைகளிலும், மேம்பாலங்களிலும் மிதிவண்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் தனிதடம் அமைத்துத் தருவது முக்கியமானது.

சென்னைப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கென செயல்படுத்தப்படும், மெட்ரோ – மோனோ தொடர்வண்டித் திட்டங்கள் போக்குவரத்தை குறைக்கும் என எதிர்பார்க்க முடியாது. மகிழுந்துகளும், இருசக்கர வாகனங்களின் பயன்பாடும் குறையும் வகையில், பொதுப் போக்குவரத்தை தரமான முறையிலும், குறைந்த செலவிலும் தமிழக அரசு கொடுக்க முன்வந்தால் மட்டுமே சென்னை நகரின் நெரிசலைத் தீர்க்க முடியும். அதைவிட்டு விட்டு புதிய புதிய திட்டங்கள் போடுவது, நிலைமையை மேலும் சிக்கலாக்குமே தவிர, தீர்வாக அமையாது.

Pin It