எழுபத்தி ஐந்து வயதில் ராமுப்பிள்ளை காலமாகி விட்டார். வருந்துவதற்கான சிறுவயது இல்லை. வாழ்ந்தது போதும் என்னும் சலிக்கும் காலத்தில் தான் போயிருக்கிறார்.

எவ்வளவு வயதிருந்தாலும் இந்த மண்ணிலிருந்து பிரியும் கடைசி பிரிவில்லையா?

நீராட்டி-நல்ல ஆடை உடுத்தி நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் கணவரின் கால்களைப் பிடித்துக் கொண்டு மனைவி அமிர்தம் அழுது கொண்டிருக்கிறாள். வாசலில் பந்தல் போட்டு-வாடகைச் சேர்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. உறவினர்கள் -நண்பர்கள் உள்ளே வந்து கடைசியாக அவரைப் பார்த்து விட்டு வெளியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். பெண்கள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். எந்த ஜாதி மதமானாலும்-உயர்ந்த பதவியில் பணத்தில் இருந்தாலும், பெண்கள் வெளியில் உட்காரும் பழக்கம் வரவில்லை. கல்யாண காரியத்திலும் கூட இப்படித் தானே இருக்கிறது.

அமிர்தம் அழுது கொண்டிருக்கிறாள். "இனி நான் என்ன செய்வேன்?" அவருக்குக் குழந்தையில்லை. ஒற்றையாள். அவள் காலம் முடிய சாப்பிடுவதற்கு, அவர் கொடுத்து வைத்திருக்கும் முதலுக்கு, மாதந்தோறும் வட்டி வருகிறது. வாழ்வதற்கு அது போதும். ஒரு பெண்ணுக்கு வயிற்றுப்பாடு மட்டும்தானா?

கணவர் இருக்கும் போது உள்ள சுமங்கலி வாழ்க்கையும், சமூக மதிப்பும் இனி இருக்காதே? இத்துடன் ஐம்பது வருடங்கள் இணைந்து வாழ்ந்ததின் எத்தனையோ நெருடல்கள், கண்முன் வந்து அவளைச் சூழ்ந்து வதைக்கின்றன.

இனி அதெல்லாம் முடிந்துபோன கதை. உடலுடன் கொள்ளும் கடைசி உறவு இப்போது மட்டும் தான். பின் வெறும் நினைவுகள் தான். நோய் நொடி என்று படுக்கையில் கிடக்காததால்; உடம்பு வாட்டமில்லாமல், உயிருடன் இருக்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. ஆனாலும் அத்தனை இயக்கங்களும் ஒரு மூச்சுக்காற்றில் நின்று போய் வெறும் சவமாகி விட்டாரே...

வேறு துர் பழக்கமெல்லாமில்லை. ருசியாக நன்றாகச் சாப்பிடுவார். அதிலும் இனிப்பும் உப்பும் உரப்பும் அவருக்கு ரொம்பப் பிடித்தம்.

ராமுப்பிள்ளையின் சித்தி மகன் நம்புப்பிள்ளை, அண்ணனின் பழக்கத்தை துக்கத்தோடு அடுத்த வீட்டுக்காரரிடம் மெச்சி சொல்லிக் கொண்டிருந்தார்.

"அது தான் அவருக்கு எமனாகிவிட்டது. அவருக்கு சுகரும் அதனுடன் பிறந்த பி.பியும் இருந்தது. இதற்கு மருந்து சாப்பிடணும். உப்பு, இனிப்பை தொடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.

இவர் கொடுக்கும் மருந்திலே என்ன ருசியிருக்கு. அதை விட்டுவிட. இப்படியெல்லாம் நாக்கையும் வயிற்றையும் சுருட்டிப்போட்டு எவ்வளவு காலத்திற்கு இருக்கப்போறோம்? கடைசி காலத் தண்டனை இந்த மருந்து மாத்திரைகள்."

ஒருபோதும் அதெல்லாம் சாப்பிட்டதில்லை. நேற்று எதிர்வீட்டு கல்யாண வரவேற்பு. இனிப்பையும் பிரியாணியையும் வளைத்துக் கட்டியிருக்கிறார். வயதான காலமில்லையா? அதன் குணத்தைக் காட்டிவிட்டது.

அரற்றிக் கொண்டே படுத்திருந்தவர், சாமத்தில் அமிர்தம் அமிர்தம்னு மூன்று தடவை சத்தம் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான், எல்லாம் அடங்கி விட்டது. சிறிது நேரம் நெஞ்சு எம்பி எம்பித் தணிந்தது, தணிந்தே விட்டது.

"என்னாங்க-என்னாங்க" எனப்பரிதவித்த அமிர்தத்தின் குரல் கேட்டு, அடுத்த வீட்டு செல்லம்மா ஓடிவந்து பார்த்தாள்.

பொட்டுக்குழி இறங்கி விட்டது. காதுகள் தொங்கி விட்டன. கண்ணுப்பட்டையும் தணிந்துவிட்டது. அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.." நீண்ட அனுபவத்தில், சாவுக்களைகள் அனைத்தும் அவளுக்கு அத்துபடி.

வீட்டிற்குள் வந்து மாலையிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கன்னையா நாயக்கர், நாற்பதாண்டு கால நண்பரின் சடலத்தைப் பார்த்து கண்ணீர் உகுத்தார்.

இவரிடம் எழுத்து மூலமோ-சாட்சியமோ இல்லாமல், மகள் கல்யாணத்திற்கு வாங்கிய ஒரு இலட்சத்தை எண்ணி நிற்கிறாரோ என யோசித்த அமிர்தம் மெல்ல எழுந்து வந்து, "அண்ணே! உங்ககிட்டே வாங்கின ரூபாய்க்கு, ஊரிலே உள்ள பூர்வீக நிலத்தை விற்றுக் கொடுக்க விலைபேசி முடித்து விட்டார்.

அதற்குள்ளே இப்படியாகி விட்டார். நீங்க அதைப் பற்றி நினைக்க வேண்டாம். காரியம் முடியட்டும். நானே வந்து பணத்தைக் கொடுத்துடுறேன்."

இது பற்றி பேசுவோம் என்றிருந்தவருக்கு வலிய தீர்வு கிடைத்துவிட்டது.

"நான் அதைப் பத்தி யோசிக்கலே. இவரைப் பற்றி எனக்குத் தெரியாதா?" என நாசூக்காக ஒதுங்கிக் கொண்டார் கன்னையா நாயக்கர்.

இந்நேரம் சேலைமுந்தானையை தலையில் போட்டு, முகத்தை மூடியவாறு அழுது கொண்டு உள்ளே வேகமாக வந்த கமலம், அப்பாவின் காலடியில் விழுந்து புரண்டாள்.

"இனி நான் என்ன செய்வேன்? சொல்லு ங்கப்பா.." இறந்தவரின் முகத்தைப் பிடித்துக் கொண்டு பெருங்குரல் பாய்ச்சிக் கதறினாள்.

அங்கிருந்த ஆண்களும் பெண்களும் ரகசியமாக பேசிக் கொண்டார்கள்.

"வந்துட்டா, வெக்கம் கெட்டமுண்டே. இவளாலே தானே அந்த மனுசன் தலைகுனிந்து போனாரு."

"மானம் ரோசம் எல்லாத்தையும் உதிர்த்தவ. சபைக்கு வந்துட்டா."

இவ வரலைன்னா பொணம் வேகாதாக்கும்..."

பெண்கள் ஒவ்வொருவரும் அவளைப் பார்க்கப் பிடிக்காமல், முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

வெளியில் ஆண்களும், "இவளுக்கு யார் சேதி சொல்லியனுப்பியது?" எனக் கேட்டுக் கொண்டார்கள். பதில் யாரிடமும் இல்லை.

அந்த உயிரிலிருந்து ஜனித்த இந்த உருவுக்கு எப்படியோ சகுனம் காட்டாமலிருக்குமா? அதுதான் ஓடியாந்துட்டா.

ராமுப் பிள்ளையின் இளையதாரம் மரகதம் மகள் இவ. மூத்தாள் அமிர்தத்துக்கு பத்து வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை. அவள் சம்மதத்துடன் மரகதத்தை ஏற்றுக் கொண்டார்.

வாழ்க்கையிலும் படுக்கையிலும் பங்குக்கு வந்தவள் என்னும் பேதமெல்லாம், மூத்தாளுக்கு இல்லை. அவள் சுபாவி. குள்ளமான உருவம். பேச்சும் கூட வீரியமாக மேலெழும்பி வராது. நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாகத் தான் பேசுவாள். காரியங்கள் பார்ப்பதும் கூட பதறாமல் தான் இருக்கும். இதனால் வீட்டில் சக்களத்திச் சண்டை வந்ததில்லை.

ஒரு வருடத்தில் கமலம் பிறந்தாள். பிள்ளை பிறந்த ஒரு மாதத்தில் மரகதம் போய் விட்டாள். ராமுப்பிள்ளையின் வம்சவிருத்திக்கு ஒரு பிள்ளையைத் தந்து விட்டுப் போகும் வரம் போலாகிவிட்டது அவள் வாழ்க்கை.

பிள்ளையை மூத்தாள்தான் வளர்த்தாள். பருவம் வந்ததும் மைத்துனன்- மரகதம் தம்பி பழனியப்பனுக்கே மணம் முடித்து வைத்தார். அவன் ஊரில் ஹோட்டல் வைத்திருந்தான். ஓரளவு வசதியான குடும்பம். பையன் ரொம்ப லட்சணமானவன். குணமும் சாந்தமானது. பெண்ணை விட மாப்பிள்ளை எல்லாவகையிலும் சிறந்தவன்.

கல்யாணமான ஆறு மாதத்தில் என்ன நடந்ததோ? கடையில் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தவனுடன் எங்கோ போய் விட்டாள் கமலம். மாப்பிள்ளை தகர்ந்து போனான். விஷயம் தெரிந்து போன மாமாவிடம் கோபப்படவில்லை மருமகன். வயதான காலத்தில் இப்படியொரு தலையிறக்கத்தை தேடிவைத்துப் போய் விட்டாளே என விசனப்பட்டான்.

சொந்த அக்கா மகளாக இருந்ததால் அவனால் ஏதும் பேசமுடியவில்லை. கட்டிய உடையுடன் அவள் இப்படிப் போனதற்கு எது காரணமாக இருக்கும்?

எவ்வளவு யோசித்தும் யாருக்கும் விஷயம் விளங்கவில்லை. அவளுக்குத்தான் தெரியும் என்றாகிப் போனது.

கொஞ்ச நாட்களில் மகள் இருக்குமிடத்தைக் கண்டறிந்து போனார். அங்கு அவள் படும் சிரமத்தைக் கண்டு பணம் கொடுத்து வந்தார். இதுபற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. பின்னர் அடிக்கடி பார்த்து உதவி வந்தார். மகளிடம் போய் வந்தால், ஒரு நாள் பூராவும் சாப்பிடாமல் மௌனமாக இருந்து விடுவார்.

இது ஏன்?

விடையில்லாத இக்கேள்விக்குக் கிடைக்கும் மௌனம், காலம் வரட்டும் என்பதா?

பெறாவிட்டாலும், வளர்த்து ஆளாக்கிய அமிர்தம் கூட கணவரிடம் இதுபற்றிக் கேட்பதில்லை.

இத்தகைய நேரங்களில் மனைவியின் முகத்தையே பார்ப்பார் ராமுப்பிள்ளை. திருமணமான புதிதில் திரும்பத் திரும்ப பார்க்க வைத்த முகம்-இளமையின் முகம் முகமூடியா? அது கழன்று போய்- இப்போதிருக்கும் முகம் எவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறது..

கணவருடன் வாழ்ந்தும் தாய் ஸ்தானத்தை அடைய முடியாத அபாக்கியவதி.

"அப்பா என்னை விட்டுட்டுப் போயீட்டீங்களே. இனி நான் என்ன செய்வேன்?.." கமலம் துயரம் துருவிக் கொட்ட, ராமுப்பிள்ளையின் முழங்காலில் தலை சாய்த்துப் புலம்புகிறாள். அவள் குரல் மட்டும் ஒற்றையாக ஒலிக்கிறது. இதற்குப் பதிலாக எத்தனையோ முறைகள் அவளைப் போய் பார்த்து வந்திருக்கிறார். இப்போது அவளே தேடி வந்து கேட்கிறாள்.

வெளியிலிருந்து உள்ளே வந்தார் தெருப் பெரியவர் இராமநாதன். அமிர்தம் எழுந்து அவரிடம் போய் நின்றாள்.

மேளம் சங்கு சேகண்டி இதெல்லாம் வேண்டாம். பாடை கூட சாதாரண மொட்டைப் பாடையாகத் தான் இருக்க வேண்டும்" தன் இறுதிக் காரியம் எப்படி நடக்க வேண்டுமென்று முன்பே சொல்லி வைத்திருக்கிறார்.

ஒவ்வொருவரும் வெளியில் போய் காபி குளிர்பானம் இன்னும் என்னென்னவோ குடித்தும்-சாப்பிட்டும் வருகிறார்கள். அமிர்தத்துக்கு காபி பிடிக்குமா கையால் செம்பில் இரண்டு மூன்று முறைகள் வந்தது.

காலையில் சேதி கிடைத்ததும், குலை கொதிக்க ஓடிவந்த கமலத்திற்கு, நேரம் செல்லச் செல்ல கொதிப்பு உடம்பெங்கும் பரவிக் கொண்டு வருகிறது. அவளை யாரும் சீந்தவில்லை.

மாலை ஐந்து மணிக்குக்குளிகை. எடுத்துடலாம். சனிக்கிழமை செத்ததால் கோழி வாங்கிவிடணும். விடலைப் பயல் ஒருவன் வாங்கி வர ஓடினான். வாசலை விட்டுத் தள்ளி பாடை கட்டி முடித்துவிட்டான் முத்து. தகனம் தான். சுடுகாட்டிற்கு நேரம் சொல்லி விடப்பட்டது.

போகவர இருக்கும் பெண்கள் அவளை முறைத்து விட்டு, வெறுப்பில் முகம் திருப்பிப் போனார்கள். கமலம் புனிதமானதுதான். சேற்றில் விழுந்துவிட்டதே.

நேரம் செல்லவும் துக்கம் கலகலத்து ஆயாசமும் சோர்வும் ஒவ்வொரு வரையும் அழுத்தியது. உணர்ச்சியின் வேகம் அடங்கும்போது, எல்லாமே இப்படித்தான்.

ஏனோ தானோவென்றிருந்தவர்கள் சூடு பிடித்து காரியங்களில் துரிதமாக இறங்கினார்கள். குளிகைக்கு முன்னாலே வீட்டை விட்டு ராமுப்பிள்ளையை கிளப்பி விட வேண்டும். நீர்மாலைக்கு ஆண்களைக் கிளப்பி விட்டார் இராமநாதபிள்ளை. அப்பொழுது அமிர்தம் எழுந்துவந்து அவர் காதைக் கடித்தாள்.

"அனாதை இல்லத்தில் வருடா-வருடம் போய் படிப்புச் செலவுக்கும்-ஆடையும் எடுத்துக் கொடுத்து வருவாரே, பத்து வயதுப் பையன் சோமு, அவன் தான் கொள்ளி வைக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறாராம் ராமுப்பிள்ளை.

பின்னால் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை வைத்துப் போயிருக்கிறார்.

ஆண்கள் போய் வந்ததும், பெண்கள் போனார்கள். யாரும் கமலத்தைக் கண்டுகொள்ளவில்லை.

ஆயிற்று. ராமுப்பிள்ளை கடைசிப் பயணம் கிளம்பிவிட்டார். ஆண்கள் முன்னே நடக்க, சூழ்ந்து வரும் பெண்களுக்கு மத்தியில் பெருங்குரல் பாய்ச்சி, "என்னை விட்டுப் போறீங்களே.." நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள் அமிர்தம். அந்த அம்மாளை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டு கூட்டி வந்தார்கள் பெண்கள்.

தனித்து விடப்பட்ட கமலம், "அப்பா என்னை விட்டுப் போறீங்களே? நான் என்ன செய்வேன்?" அப்பா-அப்பா.. அவளின் ஒற்றைக்குரல் வெகுதூரம் கேட்டது. அவருக்கு கேட்டிருக்குமா?

தன்னைச் சுற்றி நின்ற அரண் இடிந்து பொடியாகிப் போன நிர்க்கதியில் நடந்தாள் கமலம்.

Pin It