காமன்வெல்த் போட்டி ஊழல்கள்

சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் மத்திய ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் கொடிகட்டிப் பறக்கிறது. ஊழல் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல. ஸ்பெக்ட்ரம்-2 ஊழலில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வரவேண்டிய பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி அடுக்கடுக்கான ஊழல்களோடு இப்போது காமன்வெல்த் போட்டி ஊழலைப் பார்த்து நம் நாட்டை உலகமே காறித் துப்புகிறது.

கட்டுமாணப் பணிகள், தடகளங்கள் தயாரிப்பு, விளையாட்டுக் கருவிகள் வாங்குதலிருந்து தொலைக் காட்சியில் ஒளிப்பரப்புவது வரை அனைத்திலும் ஊழல் புரிந்துள்ளனர். இதற்குப் பொறுப்பான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்கல்மாடி ராகுல் காந்தி யின் நெருங்கிய நண்பர். மொத்தச் செலவு நாற்பதா யிரம் கோடி ரூபாயில் நான்கில் ஒரு பங்கை மட்டும் செலவிட்டு விட்டு மீதியை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளனர். 100 ரூபாய் செலவளித்தால் 400 ரூபாய் என்று செலவு காட்டியுள்ளனர். இது காமன் வெல்த் நாடுகளிடையே பெரும் பரபரப்பையும் கேவலத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.மன்மோகன்சிங் என்ற மலைவிழுங்கி மகா தேவனின் அரசு இந்த உலகம் சிரித்த ஊழலில் மௌனம் சாதிக்கிறது. தலை-வரை பங்கு போயிருக்கு.

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடும் கொள்ளைக்காரர்களும்

தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள மோசடிகள் வெளியாகியுள்ளன. ஆனால் இத்திட்டம் தன்னைக் களிப்பில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வர் பாராட்டியுள்ளார். இதுவரை 1. 53 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்தக் காப்பீட்டு அட்டை கிடைத்து விட்டால் மருத்துவமனைகளுக்கு லாட்டரிச்சிட்டு கிடைத்த மாதிரித்தான். பில்லைத்தீட்டி கொழுக்கிறார்கள். இதில் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் ரகசிய உறவு இருப்பதை அரசும் வேடிக்கை பார்க்கிறது.

மருத்துவமனைகளுக்குக் காப்பீட்டு நிறுவனம் கடந்த ஆண்டில் ரூ. 415. 43 கோடி அளித்துள்ளது. தமிழக அரசு காப்பீட்டு நிறுவனத்திற்கு இதற்கென ரூ. 628. 20 கோடி பிரிமியமாக செலுத்தியுள்ளது. இந்த ஆண்டுக்கு ரூ. 750 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு மொத்தமாக இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு இதுவரை ரூ. 1378 கோடிகளை ஒதுக்கியுள்ளது. இவ்வளவு பணத்தை அரசு மருத்துவ மனைகளில் செலவளித்து நவீனப் படுத்தி இருக்கலாம் என்றும் எந்த நோய் வந்தாலும் அங்கு சிறந்த சிகிச்சை கிடைக்கச் செய்யலாம் என்றும் அரசு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதில் பெருமளவில் ஊழல் நடப்பதாகவும், ஆட்சியாளர்கள் கமிசன் பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இலவசத் திட்டங்களில்கூட பலநூறு கோடி ஊழல் செய்ய முடியும் என்பதை தமிழகத்தில் தான் காண்கிறோம். ஊழல்களைப் பற்றி முன்பு நீதிபதி சர்க்காரியா கூறியதுபோல் விஞ்ஞானரீதியாகச் செய்யப்படுகிறது போலும்! 

இயற்கைச் செல்வங்கள் அழிப்பு

எஸ்ஸார், ஜின்டால், வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஒரிசா, ஜார்க்கண்ட் முதல் உத்தர்காண்ட் வரை காடுகளையும் மலைகளையும் வேகமாய் அழித்து வருகின்றன. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, இயற்கையை அழிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்தும் என்று உறுதியளித்துள்ளது.

தமிழக அதிமுக எம்பிக்கள் திமுக அரசால் கிரானைட், மணல் கொள்ளை நடப்பதைக் குறித்தும் புகார் கூறினர். அதற்கு மத்திய அமைச்சர் பதில் கூறவில்லை. எனினும் ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய்கள் கொடுத்தாலும் வரும் தேர்தலில் ஒரு பாடம் புகட்டுவதற்கு ஆற்றோரங்களில் வாழும் மக்களும், கடலோர மீனவர்களும் கோபத்தோடு காத்திருக் கிறார்கள்.

நேர்மையாளரைப் பழிவாங்கும் அரசு

ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கரை பணிநீக்கம் செய்து திமுக அரசு பழி வாங்கியுள்ளது. முதல்வர் குடும்பத்தினரின் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்க மறுத்து நேர்மையாய் நின்று உறுதிகாட்டியதால் பழிவாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அரசின் பெயரில் பதிவாகியிருக்க வேண்டிய 700 கோடி ரூபாய் சொத்து தனியாருக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவராக இருந்து சூரியக் குடும்பத்தின் சுமங்கலி நிறுவனத்திற்கு எதிராக உமாசங்கர் இருந்துள்ளார். மேலும் அரசு கேபிள் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட ரூ. 400 கோடி பெறுமான உபகரணங்கள் எங்கே என்று கேள்வியும் கிளப்பினார்.

விவகாரம் பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமானதும் முதல்வர் அரசு கேபிள் நிறுவனம் 50 ஆயிரம் இணைப்புகளோடு அடக்கமாய் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது என்று அறிக்கை விட்டார். முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைப்பது என்பது இதுதான் போலும். கலைஞர் முழுப்பொய் கூறுகிறார் என்று கேபிள் ஆபரேட்டர்கள் சங்கத்தலைவர்கள் கூறிவிட்ட னர். தனது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக கலைஞர் எதையும் செய்வார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் கூசாமல் பொய்யும் சொல்வார் என்பதை தமிழகம் புரிந்து கொண்டு விட்டது. ஊழல் ரகசியங்களை வெளிப் படுத்தும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பழி வாங்குவதும் அவருக்கு வாடிக்கை தான்.

இசை தந்த மறுபிறவி

இரண்டு மாதங்களாய் கோமா நிலையில் மருத்துவமனையில் மரணத்தை நோக்கிய பயணத்தில் கிடந்த ஆறுவயது சிறுமி காது வழியே இசையைக் கேட்டு நினைவு திரும்பினர். கடந்த மாதம் கேரளத்தில் ஆலப்புழை அருகிலுள்ள மருத்துவமனையில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ஆறு வயது சிறுமியான ராதிகா விளையாடிக் கொண்டிருந்தபோது தலையில் அடிபட்டு மூளையைத் தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். மூச்சுத்திணறல் ஏற்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டது. மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். டாக்டர் மோகன் என்பவர் மட்டும் இந்தச் சிறுமிக்கு இசைச் சிகிச்சையளிக்கும் முயற்சியில் இறங்கினார். சிறுமியின் காதுகளில் இசை கேட்கும் கருவிகளைப் பொருத்தி தொடர்ந்து மெல்லிய கர்னாடக இசைப் பாடல்களைக் கேட்கும்படிச் செய்தார்.

பாடல்களைக் கேட்டு சிறுமி கண்ணைத் திறந்து விட்டாள். பின்பு சிரிக்கத் துவங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நினைவு திரும்பியது. இசைச் சிகிச்சை தொடர்ந்தது. சிலதினங்களில் ராதிகா குணமடைந்து வீடு திரும்பி விட்டார். இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்பது இதுதான் போலும்.

Pin It