வரிசை, ஆளுமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து இப்போது ‘வாஞ்சை’யுடன் வாசகர்களைச் சந்திக்க வந்திருக்கிறார் நல்ல எழுத்தாளரும், அதை விடவும் நல்ல சமூகப் போராளியுமான கவிஞர் ஜனநேசன். அவரின் ‘ஆலிவ் இலைகளேந்தி’யை வாசித்த அந்த நாள் நினைவு இன்னும் மனதில் புதிதாய்த்தான் இருக்கிறது. அது கவிதைகளின் தொகுப்பு. இன்று அவர் சிறுகதைகள், நாவல் என்று தனது எழுத்துலகை விரிவு செய்து, அதில் வெற்றிகளையும் பெற்று வருவது சிறப்பு.

‘வாஞ்சை’ எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள். வாஞ்சை என்று ஒரு சிறுகதை தனியே இருந்தபோதும் இதிலிருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனிதர்களை வாஞ்சையுடனேயே அணுகியிருக்கிறது.

வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைச் சும்மா புலம்பித் திரிய விடுவதில்லை ஜனநேசன் தன் படைப்புகளில். ஏதாவது ஒரு விதத்தில் அவரின் கதை மாந்தர்கள் நல்ல போராளி களாகவே உலவுகிறார்கள். ‘வாஞ்சை’ சிறுகதையில் வரும் மாரியம்மாளும் மேரியும் அண்டை வீட்டார்கள்தாம். கோழி வளர்ப்பால் இந்த இரு வீடுகளுக்குள்ளும் ஏற்படுகிறது பகை. எல்லாவற்றையும் போலவே அந்தப் பகையையும் தூர வீசிப் போட்டுவிடுகிறது திடீரென வரும் சுனாமி. மீனவர்களும் அவர்கள் வாழிடமும்தானே இந்தச் சுனாமியின் கொடூரப் பசிக்கு முதல் இரை? ஆனால், இந்தச் சுனாமி இன்னொன்றை யும் மனிதர்கள் உணரச் செய்துவிடுகிறது. அதுதான் மனித நேயம். வயது முதிர்ந்த அந்தச் சண்டைக்காரக் கிழவி மாரியம்மா தன் பகையையும் மறந்து மேரியைக் காப்பாற்று கிறபோதுதான் ஆழிப்பேரலைக்குக்கூட நன்றி சொல்லலாமோ என்று தோன்றுகிறது.

அதுபோலத்தான் ‘மலர் நீட்டம்’ கதையும். கட்டிட வேலை பார்க்கிற இடத்தில் பணியிலிருக்கும் பெண்களின் தன்மானத் திற்காகச் சிந்திக்கிறது இந்தக் கதை. ‘பொறுப்பு’ சிறுகதையில் விபத்தால் உயிர் போய்க்கொண்டிருக்கிற அந்தத் தருணத்தி லும் நாட்டுக்காகச் சாக முடியவில்லையே என்று கண்கலங்கும் ரகீமுக்காக நம் கண்களும் நீர்க்கின்றன.

 சின்னதானாலும் ‘பெயர்’ கதை நறுக் ரகம். அதுபோலவே பிணையம், மண்பாசம், மறுபிறப்பு, கடன், ஒப்பார் எல்லாமே அதனதன் தன்மையில் சிறப்பாய் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களின் வாசிப்பையே ஒரு லயமான அனுபவமாக்கிவிட்டது ‘சுமை’ சிறுகதை. கதை நிகழ்விடமான குற்றாலத்தைப்போலவே சொற்களின் அருவியிலும் வாசகர்கள் கச்சிதமாக நனையும் சுகம் தருகிறது இந்தக் கதை. சிறுவன் அருண் குமாரையும் அந்த ஆதிவாசிச் சிறுமி மாடத்தியையும் நம் நெஞ்சில் போட்டுக் கொஞ்சவேண்டும்போல இருக்கிறது.

வெளியிட்ட புதுமைப்பித்தன் பதிப்பகமும் நூலுக்கு மேலும் கௌரவம் சேர்க்கிற விதத்தில் தரமாகத் தயாரித்திருப்பது இன்னும் சிறப்பு. சிறுகதை நேயர்கள் வாசிக்கவேண்டிய நூல் இது.

 - சோழ.நாகராஜன்

வெளியீடு: புதுமைப் பித்தன் பதிப்பகம், ப.எண் 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83.

விலை ரூ 60.

Pin It