கனவு வராத நாட்களில்
விண்மீன்களைப் பிடித்து
கைவிரலுக்குள்
வைத்துப் பார்க்கும்போது
சின்னதாகவே தெரிகிறது
வானம்.

 

ஒவ்வொரு முறையும்
சாட்டை சொடுக்கி
கையேந்தும் யாசகனின்
எதிர்பார்ப்பென்பது
இல்லையென்ற சொல்லாவது.


இடிந்து கிடந்த கோவிலுக்குள்
சிதைந்து நிற்கும்
அம்மன் சிலையோடு
யாரும் பேசுவதில்லை.
துடியான சாமியென
ஊர் பேசிக்கொண்டிருக்கிறது.


இடுகாட்டில்
துவங்குகிறது
இறந்தவன்
வாழ்ந்த வாழ்க்கை.


கறி மெல்லும் போது
தனது உள் கன்னச்சதையை
தவறி கடித்து விடும்
சராசரி மனிதனிலும்
ஒளிந்து கிடக்கிறது
ஒரு மிருகம்.

Pin It