"கலைஞன் வாழ்வதற்கு ஒரு நெருக்கடி வேண்டும். பூரணத்துவம் இல்லாத உலகினால் தான் கலைஞன் வாழ்கிறான். எல்லாமும் சரியாக உள்ள உலகில் கலைக்கு என்ன வேலை இருக்க முடியும். அத்தகைய உலகில் மனிதன் ஒருமைப்பாட்டை, சமத்துவத்தை தேடமாட்டான், மாறாக வெறுமனே வாழ்ந்து விட்டுப்போவான். சரியாக அமைக்கப்படாத உலகில் தான் கலை பிறக்கிறது". இப்படிச் சொன்னவர் பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆந்த்ராய் தார்க்வோஸ்கி.

சமனற்ற உலகை சமன்படுத்த வேண்டும் என்றதொரு சமூக அரசியல் பார்வையில் பிறந்தது தான் நம் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

உலகில் எல்லா நல்ல விஷயங்களுமே சிறுபான்மையினரால் தான் செய்யப்படுகிறது. பாராட்டப்படுகிறது. நல்ல அரசியல், நல்ல இலக்கியம், நல்ல சினிமா என்று எல்லாவற்றுக்கும் பின்னே ஏன் பெரும்பான்மையானவர்கள் செல்வதில்லை என்ற கருத்து எப்போதும் என் மண்டையை குடைகின்ற ஒன்று. அது உண்மையெனில், எதற்காக நாம் இத்துணை கஷ்டப்படுகிறோம்! சிறுபான்மையினர் மட்டுமே விரும்பக்கூடிய கலை, அரசியல், இலக்கியம் உருவாக்குவதில அர்த்தம் ஏதும் உள்ளதா என்கின்ற தர்க்க ரீதியான கேள்வி தொடர்ந்து என் மனதில் ஒலிக்கும்.

வரலாற்றை உற்று நோக்கினால் மாபெரும் சிந்தனையாளர்கள், தலைவர்கள், கலைஞர்கள், தங்கள் பணிகளை பெரும்பான்மை மக்களை நோக்கியே செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்.

புத்தர், ஏசு, மார்க்ஸ், லெனின், பிரெஷ்ட், ஷேக்ஸ்பியர், காந்தி, டால்ஸ்டாய், சாப்ளின், சேகுவாரா... என்று பலரை உதாரணமாக சொல்லலாம். இதில் சில விநோதங்களும் உண்டு. இன்று சேகுவாரா யாரென்று தெரியாத மாணவர்கள் கூட அவர் உருவம் பதித்த டீ ஷர்ட்டை அணிகின்றார்கள்.

எல்லா படைப்பாளிகளுக்குமே, தங்கள் படைப்புகள் பெருவாரியான மக்களை சென்றடைவதில் தான் உண்மையான திருப்தியும், போதையும் இருக்க முடியும். முற்போக்கு கலைஞர்கள் நிச்சயமாக இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. இங்கு நான் ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்.

ஸ்பார்ட்டகஸ் நாவலை எழுதிய புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் ஹோவர்ட் ஃபாஸ்ட் 1944 முதல் 1957 வரை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராய் இருந்த காலகட்டத்தைப் பற்றி தான் எழுதிய "Being Red" புத்தகத்தில் ஸ்பார்ட்டகஸ் எழுதிய சூழலைப் பற்றியும் பின்னர் அப்புத்தகத்தை வெளியிடுவதில் தான் சந்தித்த பிரச்சனைகளைப் பற்றியும் விளக்குகிறார்.

ஒரு நீண்ட சிறை வாசத்தின் போதுதான் ஸ்பார்ட்டகஸ் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வருகிறது. சிறை நூலகத்திலேயே ஸ்பார்ட்டகஸ் பற்றிய பல குறிப்புகளை எடுக்கிறார். பின்னர் சிறைவாசம் முடிந்த பின் வீட்டிற்கு வந்ததும் அவர், ஏற்கனவே படித்த ‘Ancient Lowly' என்கின்ற புராதன தொழிலாளர் வரலாறு பற்றிய புத்தகத்தை மீண்டும் முழுவதுமாக படிக்கிறார். அப்புத்தகம், அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பள்ளியில் பயிற்சியை முடித்தபோது அவருக்குப் பரிசாக கிடைத்தது. அப்புத்தகத்திலிருந்து தான் அவர் ஸ்பார்ட்டகஸ் கதையை கண்டுபிடிக்கிறார்.

எழுதி முடித்த உடன் படித்த தோழர்களும், பதிப்பாளர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் அப்புத்தகத்தை வெளியிட எந்த பிரபல பதிப்பகமும் முன்வரவில்லை. காரணம் அப்போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மெக்கார்த்தியியம் உச்சத்தில் இருந்தது.

இடதுசாரிகள் பதிப்பகம் ஒன்று அப்புத்தகத்தை வெளியிட முன்வந்தது. ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. காரணம் அவரே சொல்கிறார். "எனக்கு திமிர் அதிகம். என் புத்தகத்தை பெரிய பதிப்பகங்கள் தான் வெளியிட வேண்டும் என்றிருந்தேன். அப்போது தான் அது பெரிய அளவில் மக்களை சென்றடையும். ஏனெனில் அப்போது என் புத்தகங்கள் 83 மொழிகளில் உலகெங்கும் படிக்கப்பட்டது". பெரிய பதிப்பகங்கள் மெக்கார்த்தியியத்துக்கு பயந்து ஸ்பார்ட்டகஸை வெளியிட முன்வராததால், ஹோவார்ட் ஃபாஸ்டே பதிப்பாளர் ஆகிறார். 600 பிரதிகளுக்கு ஏற்கனவே அவரிடம் ஆர்டர்இருந்தது. தன் கையிலிருந்த கடைசி காசையும் செலவழித்து 'டைம்ஸ்' பத்திரிகையில் 5000 டாலர் செலவில் முழுபக்க விளம்பரம் தருகிறார். பின்னர் 50000 பிரதிகள் வெளியிட்டு மூன்றே மாதங்களில் 48000 பிரதிகளை விற்றுவிடுகிறார். பத்தாண்டுகளுக்கு பிறகு கிர்க்டக்ளஸ் ஸ்பார்ட்டகஸை திரைப்படமாக எடுக்கிறார். அதன் பின்னர் பல நாடுகளில் ஸ்பார்ட்டகஸ் பல லட்சம் பிரதிகள் விற்பனையானது வேறு விஷயம்.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எந்த ஒரு படைப்பாளியும், தன் பணியும் படைப்பும் பெரும்பாலான மக்களைச் சென்றடைவதையே விரும்புவான். இங்கே கூடியுள்ள எல்லா எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், பண்பாட்டு அரசியல் ஊழியர்களையும் ஒன்றிணைப்பது எது? நம் சிந்தனை, நம் கனவு, நம் நோக்கம்தான். சமனற்ற இந்த சமூகத்தை சரி செய்து சமத்துவத்தை கொண்டு வர விரும்புகிறோம். உழைப்பு தான் எல்லா செல்வங்களையும் உருவாக்குகிறது. ஆனால் தாராளமயமாக்கப்பட்ட இந்த உலகில் உழைப்பு மதிக்கப்படுவதில்லை மாறாக செல்வம் போற்றப்படுகிறது. அதனால்தான் நாம் உழைப்பை கொண்டாடுகிறோம். குறுக்குவழியில், குறுகிய காலகட்டத்தில் செல்வம் சேர்க்க விழைவோரையெல்லாம் எதிர்க்கிறோம். இன்றைய நவீன சந்தைப் பொருளாதார உலகு, தனது ஊடகங்களின் மூலம் தெரிந்தே, திட்டமிட்டு எல்லா மனித மனங்களிலும் பேராசையை ஊட்டுகிறது. இதை எதிர்க்கவும், மனித மனங்களை மகோந்நத விஷயங்களை நோக்கித் திருப்பவும், மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நாம் போராட வேண்டியுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அரசியல், தொழிற்சங்க தளங்களைக் காட்டிலும், பண்பாட்டுத் தளமே சிறந்ததாக இருக்கும்.

இதற்காகத்தான் நாம் கதை எழுதுகிறோம். கட்டுரை வாசிக்கிறோம். நாடகம் போடுகிறோம். பாடல் பாடுகிறோம். ஓவியம் வரைகிறோம். நமக்கு முன்னே பல ஆண்டுகளாக இருந்த பல பண்பாட்டு அரசியலில் இயக்கங்களின் தொடர்ச்சியாகத்தான் நம் சங்கம் தோன்றியது. நம் எழுத்தாளர் சங்கத்திற்கு இன்று வயது வெறும் 36தான். இந்த 36 ஆண்டுகளில் பண்பாட்டுத் தளத்தில் இறங்கி பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஊடுறுவுவதற்கு எத்தகைய கருவிகளை நாம் கையில் எடுத்தோம் என திரும்பி பார்த்தால்,

எழுத்து, நாடகம், இசை போன்றவற்றை நாம் ஓரளவு தாராளமாகவே கையில் எடுத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் கதை படிப்பவர்கள், நாடகம் பார்ப்பவர்கள் மற்றும் இசை கேட்பவர்களை விட சினிமா பார்ப்பவர்கள் நிச்சயம் அதிகம். கடந்த 36 ஆண்டுகளில் சினிமாவை எத்தனை முறை, எந்த அளவு நாம் கையில் எடுத்திருக்கிறோம் எனத் திரும்பிப் பார்ப்போம்.

கதை, கவிதைகளிலிருந்து நாடகத்தை, வீதி நாடகத்தை கையில் எடுத்தபோது நம் இயங்குதளம் விரிவடைந்தது. பின்னர் கலை இரவு என்கின்ற கதம்ப நிகழ்ச்சியை நாம் அறிமுகப்படுத்திய போது, நம் இயங்குதளம் மேலும் விரிவானது. அதுவரை வராதவர்களெல்லாம் நம் இயக்கத்திற்குள் வந்தனர். ஆனால் நம்மால் கலை இரவு என்ற ஒன்றிலிருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கிப் போக முடியவில்லை.

அப்போது தான் நாம் சினிமாவை கையிலெடுக்க நினைத்தோம்.சினிமாவை கையிலெடுப்பது ஒன்றும் புதிதல்ல. 20 ஆண்டுகளக்கு, முன்பே, திருநெல்வேலி பகுதியில் தெரு சினிமா இயக்கம் என்ற பெயரில் பல உலக சினிமாக்களை பல கிராமங்களுக்கும், சிறு நகரங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறீர்கள். அப்போது ஏற்பட்ட அனுபவம், பிரச்சனைகள் குறித்து தோழர் தமிழ்ச்செல்வன் பலமுறை நம்மிடையே பேசியிருக்கிறார்.

இந்த தெரு சினிமா இயக்கம் ஒரு சில பகுதிகளில் மட்டும் குறுகிய காலம் இருந்துவிட்டு மறைந்துபோனது. அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தன. 16அஅ சுருளில் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. அதைத் திரையிடுவதியிலும் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தன.

நாடகங்கள், கலை இரவுகளைப் போல், சினிமாவை நம் இயக்கம் எப்போதுமே தீவிரமாகக் கையாண்டதில்லை. மேற்கூறிய விஷயங்கள் அல்லாமல், பல்வேறு காரணங்களால், பத்தாண்டுகளக்கு முன்புவரை சினிமா நமக்கு சுலபமாக கையாள முடியாத ஊடகமாகவே இருந்தது. நம்மால் முடிந்ததெல்லாம் யாராவது அபூர்வமாக முக்கிய சமூகப் பிரச்சனைகளைக் குறித்தோ, உழைக்கும் வர்க்கம் குறித்தோ, இடதுசாரி அரசியல் சாயலோடோ படம் எடுத்தால் அப்படங்களை நாம் மனமாரப் பாராட்டினோம். அப்படத்தின் கலைஞர்களைக் கூப்பிட்டு கௌரவித்தோம். தற்போது திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் பங்கு பெறாத நம் கலை இரவுகள் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரு படத்தயாரிப்புகளோடு நம் இயக்கத்தை சேர்ந்த சிலர் தங்களை இணைத்துக் கொண்டு கையையும், மனதையும் சுட்டுக் கொண்டது சில மூத்த தோழர்களுக்கு இன்னமும் நினைவில் இருக்கலாம்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் நுட்ப - குறிப்பாக டிஜிட்டல் தொழில் நுட்பப் புரட்சி காரணமாக எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. டிஜிட்டல் தொழில் நுட்பம் பல வேலைகளை இலகுவாக்கிவிட்டது. இன்று புத்தகப் பதிப்புகள் பெருகிவிட்டது மட்டுமல்ல அவற்றின் தரமும் பல மடங்கு கூடிவிட்டது. டிஜிட்டல் மலிவு விலை வீடியோ கேமராக்களின் வருகையால் பலர் இயக்குநர் என்ற அடைமொழியோடு குறும்படம். ஆவணப்படம் - ஏன் முழு நீளத் திரைப்படங்கள் கூட எடுக்க கிளம்பிவிட்டனர். குறிப்பாக நம் திரை இயக்கத்துக்கு இரண்டு தொழில்நுட்பங்கள் உத்வேகம் தந்தது. ஒன்று DVD என்றழைக்கப்படும அடர் தகடுகள் முக்கியமான இந்திய மற்றும் உலகப்படங்கள் மிகச் சுலபமாக, மிக மலிவாக அடர் தகடுகளில் கிடைக்கிறது. இன்னொன்று LCD projector எனப்படும் DVDயை பெரிய அளவில் திரையிட உதவும் கருவி. ஒரு கட்டத்தில் ஒரு லட்சரூபாய்க்கு மேல் இருந்த இந்த ப்ராஜெக்டர்கள் இன்று 25 ஆயிரம் ரூபாய்க்கு கூட கிடைக்கிறது.

இதனால் உந்தப்பட்டு சினிமா என்ற அற்புத ஊடகத்தை மீண்டும் கையில் எடுப்போம். திரை இயக்கம் என்ற பெயரில் உன்னத சினிமாக்களை தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்வோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தோம்.

இம்முடிவை ஒட்டி இரு பயிற்சி முகாம்களை, நம் உறுப்பினர்களுக்காக முன்னும் பின்னும் நடத்தினோம். முதல்பயிற்சி முகாம் குறும்படப் பயிற்சி முகாம். இன்று பல இளைஞர்கள் சினிமா மீது உள்ள தங்கள் ஆர்வமே தாங்கள் சினிமா எடுக்க தகுதி என்று தவறாக நினைத்துவிடுகிறார்கள். நம் தோழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நம் தோழர்களில் பலர் எடுத்தப் படங்கள் பார்க்க முடியாதவையாகத்தான் இருந்தன. படம் எடுத்த அவர்களின் முயற்சியைப் பாராட்டலாம். அவர்களின் ஆர்வக்கோளாறைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

திரை இயக்கம் என்று நாம் நினைத்து, திட்டமிட்டது உலக சினிமாவை, உன்னத சினிமாவை தமிழ்நாட்டின் உள்ளூர்களுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான். அதற்காக நாம் மண்டல வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, திரை இயக்கத்தை எப்படிக்கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட விரும்பினோம். எனக்குத் தெரிந்தவரை ஏழு மண்டலங்களில் ஐந்து மண்டலங்களில் தான் அத்தகைய பயிற்சி முகாம்களை நடத்த முடிந்தது.

பல இடங்களில் நம் தோழர்கள் பல திரையிடல்களை நடத்தினர். சில இடங்களில் ஒரு சில திரையிடல்களையே நடத்தினர். காரணம் வேறென்ன, நம்முடைய வழக்கமான மற்ற வேலை பளுதான். எந்த ஒன்றையும் இயக்கமாக நடத்த, அந்த இயக்கம் நிலைத்து நின்று அடுத்தக் கட்டத்துக்கு போக வேண்டுமெனில் அதற்கென்று சிலர் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது இயக்கமாக மாறுவதற்கு சாத்தியமே இல்லை.

தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் திரைஇயக்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட கழகமாகச் செயல்பட வேண்டும். இந்தக்கழகங்கள் அந்த ஊர் மக்களுக்கு முக்கியமான இந்திய, உலக திரைப்படங்களைத் தொடர்ச்சியாகத் திரையிட வேண்டும். திரைப்படங்களைத் தமிழில் புரிந்துகொள்ள, தமிழில் அறிமுகமும், தேவைப்பட்டால் நேரடி வர்ணனையும் விவாதமும் நடத்தப்பட வேண்டும். இப்பணிகளை செய்ய நம் தோழர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இப்பணிக்காக நூற்றுக்கணக்கான வீடியோ ப்ராஜெக்டர்களை சொந்தமாக வாங்கவேண்டும். திரையிடுவதற்கான படங்களை கொண்ட ஒரு DVD ஆவணப் பாதுகாப்பகத்தை மைய அளவிலும், மாவட்ட அளவிலும் ஏற்படுத்த வேண்டும்.

முடிந்த இடங்களில் DCD திரையிடலுக்கான குறைந்த செலவிலான, அதே நேரத்தில் தொழில் ரீதியிலான அரங்கங்கள் கட்ட வேண்டும். இந்த பணிகளில் நம் இயக்கத்துக்கு வெளியே உள்ள மாணவர்களை, இளைஞர்களை குறிப்பாக சினிமா, ஊடகத்தில் ஆர்வமுள்ளவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊர் ஊராகப் பயணம் செய்து அற்புதமான உலக திரைப்படங்களை திரையிட ஒரு வீடியோ ஜாதா தமிழ்நாட்டின் ஐந்து முனைகளிலிருந்து நடத்தப்பட வேண்டும். ஐந்து முனைகளிலிருந்து புறப்பட்ட இந்த திரைஇயக்க பேரணி ஒரு மையப்புள்ளியில் சந்தித்து அங்கு ஒரு மாபெரும் உள்ளூர் உலகத் திரைப்பட விழா நடத்தப்பட வேண்டும். அவ்விழாவிற்கு உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவரை, ஈரானிய திரைப்பட இயக்குநரை சிறப்பு விருந்தினராக வரவழைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் தமிழ்ச்செல்வனின் கனவுகள் விரிந்தபோது, அது என்னையும் தொற்றிக் கொண்டது. அதனால்தான் திரை இயக்கத்துக்காக தோழர்கள் எப்போது கூப்பிட்டாலும் எங்கு கூப்பிட்டாலும் சென்று வந்தேன்.

இப்படி உலக சினிமாவை உள்ளூர்களுக்குக் கொண்டு செல்வது என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. நமக்கு முன்பு பலர் இதை செய்திருக்கிறார்கள். 1930களிலிருந்தே இதுபோன்ற திரைப்படக் கழகங்கள் பல ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்டன. இதன்மூலம் சினிமாவில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மற்ற நாடுகளின் சினிமாவைப் பார்த்து ரசித்தார்கள்.இதன் மூலம் சினிமா வராற்றில் பல புதிய இயக்கங்கள் தோன்றின. நியுவேவ் சினிமா இயக்கம் பிரான்சிலும், நியே ரியலிஸ சினிமா இயக்கம் இத்தாலியிலும் தோன்ற இதுபோன்ற திரை இயக்கங்கள் முக்கிய காரணமாக இருந்தன. இதுபோன்ற இயக்கங்களால் சினிமாவில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களாகவும் மாறினார்கள்.

இந்தியாவில் இதுபோன்ற இயக்கங்களைத் துவக்கியவர்களில் முக்கியமான நபர்கள் இரண்டுபேர், ஒருவர் இயக்குநர் சத்யஜித்ராய். இன்னொருவர் பேராசிரியர் சத்திஷ் பகதூர். இவர் 1950 களின் முற்பகுதியில் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பேராசிரியராக இருந்தார். சினிமா மீதான தன் ஆர்வம் காரணமாக ஆக்ரா பல்கலைக்கழகத்தில் ஒரு ஃபிலிம் சொசைட்டியை தொடங்கினார். இந்தியாவில் ஒரு கல்வி நிலையத்தில் தொடங்கப்பட்ட முதல் ஃபிலிம் சொசைட்டி என்றே இதைச் சொல்லலாம். அவர் நடத்திய பிலிம் சொசைட்டிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், சினிமா விமர்சகருமான மேரி செட்டனை வரவழைத்தார். இந்த மேரி செட்டன்தான், ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஐஸன்ஸ்டைன் மற்றும் இந்திய திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவரோடு ஏற்பட்ட தொடர்பால் சத்திஷ் பகதூர் இந்தியாவின் முதல் சினிமா ரசனை பேராசிரியராக மாறினார். 1967ல் சத்திஷ் பகதூர் முதன் முதலாக நடத்திய ஒரு மாத சினிமா ரசனை பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற கே.வி.சுப்பண்ணாதான் உலக சினிமாவை கிராமங்களுக்குக் கொண்டு சென்றதில் இந்தியாவில் முன்னோடியாவர். இவர் சத்திஷ் பகதூரின் ஒரு மாத திரைப்பட ரசனை பயிற்சி வகுப்புக்கு பின் அவர் சொன்னார்:" அந்த பயிற்சி வகுப்பில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது வெறும் சினிமா அல்ல. வாழ்க்கையில் நான் செய்யவேண்டிய முக்கிய பணியும் எனக்கு அங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டது."

அவரின் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டே கர்நாடக மாநிலத்தின் ஹிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த தன் கிராமமான ஹெகடுவில் சுப்பண்ணா சதிஷ் பகதூரை அழைத்து 10 நாள் திரைப்பட ரசனை வகுப்பை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தனது கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் கிராம மக்களுக்கான திரை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் மூலம் சத்யஜித்ரே, குரோசாவா, டிசிக்கா போன்ற உலக சினிமா மேதைகளின் படங்கள் கன்னட மொழியில் நேரடி வர்ணனையுடன் காண்பிக்கப்பட்டது. வெகு விரைவிலேயே ஹெகடு கிராம மக்களுக்கு உலக சினிமாவும் உன்னத சினிமாவும் உள்ளூர் சினிமாவாகிப் போனது. அவரின் இந்த திரை இயக்க முயற்சியின் வெற்றியை காண இந்தியாவின பல பகுதிகளிலிருந்தும், உலகின் சில பகுதிகளிலிருந்தும் கலைஞர்களும் சமூகவியல் விற்பன்னர்களும் ஹெகடு கிராமத்திற்கு வந்தனர். அவர் வருடா வருடம் நடத்திய பண்பாட்டு திருவிழாவில் சினிமா, நாடகம். வாசிப்பு என அமர்க்களப்பட்டது. சுப்பண்ணாவின் இந்த பண்பாட்டுப் பணிக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் மேகசேச விருது வழங்கப்பட்டது.

70களின் துவக்கத்தில் கே.வி.சுப்பண்ணா செய்த பணியைத்தான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து நாம் துவக்கியுள்ளோம்.

ஆனால் அவர் செய்த பணிக்கும் நாம் செய்கின்ற பணிக்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. அவர் உலக சினிமாவில் வசீகரிக்கப்பட்டு அதை கிராம மக்களுக்கு, தன் சொந்த கிராம மக்களுக்குக் கொண்டுசென்றார்.

நம் திரை இயக்கத்திற்கு இதற்கும் அப்பாற்பட்டு முக்கிய நோக்கம் உள்ளது. அது தார்க்கோவ்ய்கி கூறியது போல சமனற்ற சமூகத்தை சமன்படுத்துவதற்காக நாம் மேற்கொண்டுள்ள அரசியல், சமூக பண்பாட்டு பணியின் ஒரு பாகமாகத்தான் நாம் திரை இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.

நாம் கனவு காண்கின்ற, காண விரும்புகின்ற புதிய சமுதாயத்திற்கு சினிமா என்கின்ற மாபெரும் கலை பற்றிய சரியான புரிதல் வேண்டும் என்கின்ற எண்ணத்தில் நாம் இந்த திரை இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.

நம் இயக்கத்தின் இயக்க பணிகளில் குறிப்பாக முக்கிய பிரச்சனைகள், குறித்த விவாதங்களிலும் கூட்டங்களிலும் சினிமாவை விவாதத்துக்கான ஒரு கருவியாக பயன்படுத்தவேண்டும்.

செம்மலரில் வரும் என்னுடைய சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு தொடரில் பல முக்கிய சமூக பிரச்சனை மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்த படங்களைக் குறிப்பிட்டுள்ளேன். சமீபத்தில் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று எழுந்த போராட்டங்களிலும் விவாதங்களிலும் மரண தண்டனையையே எடுக்கவேண்டும் என்று பரவலாக சொல்லப்பட்டது. அத்தகைய விவாதத்திற்கு போலந்து நாட்டுப் படமான கீவ்ஸ்லோவ்ஸ்கியின் "ஹ ளுhடிசவ குடைஅ ஹbnடிரவ முடைடiபே" பெரும் உதவியாய் இருந்திருக்கும்.

நான் வகுப்பு எடுக்கும் சில திரைப்படக் கல்லூரிகளில் இப்படத்தை திரையிட்டதன் மூலம் "மரணதண்டனை" ஒழிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனமான தண்டனை என்கின்ற விவாதம் மாணவர்களிடையே நடந்தது. தீண்டாமை பற்றிய மாநாட்டில் தோழர். தமிழ்ச்செல்வன் 'அம்பேத்கர்' படத்தை தேடிப்பிடித்து திரையிட்டார்.

எல்லா விவாதங்களுக்கும், எல்லா கூட்டங்களுக்கும் கருப்பொருளுக்கு வலு சேர்க்கும் வகையில் சரியான திரைப்படங்களை உபயோகிக்கவேண்டும்.

திரை இயக்கம் என்பது நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்வது மட்டும்தானா? இந்த டிஜிட்டல் உலகில், உருவாக்குவதும் அழிப்பதும் ஊடகமே என்றாகிப்போன நிலையில், முக்கிய பிரச்சினைகளை, நிகழ்வுகளை மக்களிடையே எடுத்துச்செல்ல நாமும் இந்த ஊடகங்களை உபயோகித்து படங்கள் எடுக்க வேண்டாமா? நான் சொல்வது வியாபார ரீதியான முழுநீள திரைப்படங்களை அல்ல. மாறாக, எரியும் பிரச்சினைகளை, முக்கிய நிகழ்வுகளை, அற்புத மனிதர்களை பற்றியெல்லாம் படம் எடுக்க யாருக்கும் அக்கறையில்லை. அதை நாம்தான் எடுக்கவேண்டும். தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கும், நிகழ்வுகளுக்குமா பஞ்சம்? தமிழ்நாட்டுக்கே உரிய சிக்கலான சாதிப் பிரச்சனைகள், ஊழல்கள், தனி மனிதர்களின் அதீத பேராசை காரணமாக விளை நிலங்களெல்லாம் கட்டிடங்களாக மாறுகின்ற அவலநிலை, திருநங்கைகள் பற்றி நம் பார்வை... இப்படி எத்தனையோ உள்ளன.

இப்படங்களை ஏனோ தானோ என்று எடுக்காமல், நம் கருத்தோடு மோதல் இல்லாத தொழில் ரீதியான கலைஞர்களின் துணைகொண்டு எடுக்கவேண்டும். இதற்கான செயலவை திரை இயக்கத்தின் செலவாகக் கருதி அதை நாம் திரட்டியாக வேண்டும்.

இப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டு, பேசப்படும்பொழுது அடுத்தடுத்த படங்களுக்கு நிதி திரட்டுவது கடினமான பணியாக இருக்காது. குறைந்த செலவில், நியாயமான முறையில் குறும்படங்கள், நெடும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கும் சார்பாக எடுப்பது இன்று சாத்தியமே.

பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் தங்களின் அரசியல், பண்பாட்டு பணியின் ஒரு பாகமாக இதுபோன்ற படங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. 1930களிலேயே உலகப் புகழ்பெற்ற ழான் ரெனுவாரின் ஒரு படத்தைத் தயாரித்தது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் பார்டிதான்.

உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும் எனத் தெரியாது. இந்த வாரம் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி எடுக்கப்பட்ட படம் இது. குடிரனேiபே ய ஞயசவல என்றழைக்கப்படும் இப்படம் பல நூறு கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஹாங்காய், தய்வான், சிங்கப்பூர் என பல நாடுகளைச் சேர்ந்த சீனமொழி பேசும் 178 திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு விளம்பரதாரராக பிரதான நிதியுதவி செய்தது யார் தெரியுமா? ழுஆ என்றழைக்கப்படும் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியும் காடிலாக் கார் பிரிவுதான். இது ஒரு விநோதம் தான். நாம் வாழ்கின்ற தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார சூழ்நிலையில் இந்த விநோதங்கள் சாதாரணமாகிவிட்டன.

இறுதியாக நான் சொல்வது இதுதான். சினிமா ஒரு அற்புதக் கலை. எல்லாக் கலைகளையும் அது தன்னகத்தே உள்ளடக்கியிருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே. அது ஒரு சக்திமிக்க புதிய கலையாய்த் திகழ்கிறது.

சினிமாவின் அழகியல் ஈடு இணையற்றது. அது ஒரு விஷயத்தை நமக்கு தரும்பொழுது அதை நம்மால் அனைத்து உணர்வுகளினூடே எடுத்துக்கொள்ள முடிகிறது.

இதனால்தான் கண்பார்வை இல்லாமலேலேய, சிறந்த எழுத்தாளராகவும், பல சமூக பிரச்சனைகளுக்காகவும், கல்வி முறை மாற்றத்திற்காகவும் போராடிய அற்புத மனுஷி ஹெலன் கெல்லார் ஒரு முறை சொன்னார்:

"கடவுள் எனக்கு மூன்று நாட்கள் மட்டும் பார்க்கக்கூடிய சக்தியை கொடுத்தால், முதல் நாள் முழுவதும் என்னோடு இருந்த அற்புத மனிதர்களைப் பார்த்து மகிழ்வேன். இரண்டாம் நாள் வண்ண மலர்களையும், எழில்கொஞ்சம் இயற்கைக் காட்சிகளையும் கண்டு மகிழ்வேன், மூன்றாம் நாள் முழுக்க அற்புதமான திரைப்படங்களைக் கண்டு மகிழ்வேன்."

- எம்.சிவகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., +91 99520 23060)

Pin It