“மக்களின் வாழ்க்கையைச் சொல்கிற இலக்கியங்கள்தாம் எனக்குப் பிடிக்கும். நான் மொழிபெயர்த் திருக்கிற எல்லாப் புத்தகங்களுமே மக்களுடைய வாழ்க்கையைச் சொல்பவை” என்கிறார் சுரா. 125க்கும் மேற்பட்ட பிற மொழி இலக்கிய நூல்களை எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் அவர். நவீன இலக்கியவாதிகளின் அங்கீகாரத் திற்கும் ஏங்காமல் தானுண்டு தன் மொழி பெயர்ப்புப் பணியுண்டு என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர். மாதம் ஒரு இலக்கிய நூல் என மொழிபெயர்த்துத் தள்ளிக் கொண்டிருக்கும் அவரின் பணிகளின்போது குறுக்கிட்டுப் பேசினோம்.

நீங்கள் மொழிபெயர்த்த பெரும்பாலான புத்தகங்கள் மலையாள மொழியில் இருந்து மொழிபெயர்த்ததாக இருக் கின்றன. உங்களுக்குத் தாய்மொழி மலையாளமா?

எனக்குத் தாய்மொழி தமிழ்தான். சொந்த ஊர் மூணாறுக்கு அருகில் உள்ள பழத்தோட்டம். அப்பா காய்கறி வியாபாரம், விவசாயம் செய்து கொண்டிருந்தார். நான் ஆறாம் வகுப்பில் இருந்து என் பட்டப்படிப்பு முடிக்கும் வரை மதுரையில் விடுதியில் தங்கித்தான் படித்தேன்.

நான் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி. எஸ்ஸி முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி நூலகத்தில் வைக்கம் முகம்மது பஷீரின் ‘பாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத்துத் தோழியும்’ என்ற மலையாளப் புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பைப் படித்தேன். அதில் இரண்டு குறுநாவல்கள் இருந்தன. அவற்றில் சித்திரிக்கப்பட்ட சுற்றுப்புறச் சூழ்நிலை, இயற்கைக் காட்சிகள் எல்லாம் எனது ஊரைப் போலவே இருந்தன. அதில் வருகின்ற மனிதர்களை என் சொந்த வாழ்க்கையில் சந்தித்தது போல இருந்தது. இளம்பருவத்துத் தோழியின் நாயகன் மஜீத்துக்கு நேர்ந்த துயரம் என்னை அழ வைத்தது.

ஒரு நாற்பது ஐம்பது பக்கங்களுக்குள் எப்படி இப்படி ஒரு காதல் காவியத்தைப் படைக்க முடிந்தது என்று பிரமித்துப் போனேன். தமிழில் இப்படி ஒரு புத்தகம் இதுவரை எழுதப்படவில்லையே, அது ஏன்? என்று யோசித்தேன்.

மொழிபெயர்ப்பே இப்படி உணர்வுப்பூர்வமாக இருந்தால் மூல நூலைப் படித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். உடனே நான் செய்தது, ‘30 நாட்களில் மலையாள பாஷை’ என்ற புத்தகத்தை வாங்கியதுதான். வெறிபிடித்த மாதிரி கல்லூரி வகுப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்ததும் மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். முதலில் எழுத்துகளை எழுதி எழுதிப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு மலையாள பத்திரிகைகளை வாங்கி அவற்றில் வெளிவரும் துணுக்குகள், சிறிய செய்திகளை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்தேன். பல சொற்களுக்குப் பொருள் புரிந்தது. பல சொற்களுக்குப் பொருள் புரியவில்லை. இருந்தும் விடாமுயற்சியுடன் மலையாளப் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இரண்டாண்டு களில் தயாராகிவிட்டேன். பட்டப் படிப்பு முடிந்து அடுத்து எம். ஏ. ஆங்கிலம் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படித்தேன். எனவே நான் வீட்டில் இருக்க வேண்டிய தாகிவிட்டது.

மூணாறுக்கருகில் உள்ள சிறிய ஊரான பழத்தோட்டத்தில் மொத்தமே 30- 40 வீடுகளே இருக்கும். எல்லா வீடுகளும் தனித்தனியாக இருக்கும். ஒருவருக் கொருவர் நெருக்கமான பழக்கம் இல்லை. இக்காலம் போல அக்காலத்தில் தொலைக்காட்சி எல்லாம் கிடையாது. வானொலியிலும் நிகழ்ச்சிகள் விரைவில் முடிந்துவிடும். எனவே நிறைய நேரம் கிடைத்தது. அப்போது தகழியின் ‘தோட்டியின் மகன்’ புத்தகத்தின் ஆங்கில நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். தினம்தோறும் அதில் ஓர் அத்தியாயம் படிப்பது, பின்னர் அதை என் அம்மாவுக்கும், தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும் தமிழில் சொல்வது வழக்கமாயிற்று. அந்தக் கதை ஆலப்புழை யில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை. பின்னர் அந்தக் கதையை நானே மொழிபெயர்த் தேன். ஆனால் அது புத்தகமாக வெளிவரவில்லை. அந்தக் கையெழுத்துப் பிரதியைத் தொலைத்துவிட்டேன். இப்படித்தான் என் மொழிபெயர்ப்புப் பணி ஆரம்பமானது. அப்போது எனக்கு வயது 22.

அப்படியானால் தமிழின் நவீன இலக்கியம் பற்றி எல்லாம் உங்களுக்கு அப்போது எதுவுமே தெரியாது. அப்படித்தானே?

மலையாள நாவலை முதன்முதலில் மொழி பெயர்க்கும்போது எனக்குத் தமிழின் நல்ல இலக்கியங்கள் பற்றி எதுவுமே தெரியாது என்பதே உண்மை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு அவை பரிச்சயமாகி விட்டன. நான் ஊரிலிருந்து கிளம்பி வந்து மதுரையில் அறை எடுத்துத் தங்கினேன். அப்போது மதுரையில் இருந்து இரண்டு இலக்கிய இதழ்கள் ஷெல்லி, ஜன்னல் என்ற பெயரில் வந்து கொண்டு இருந்தன. கவிஞர் பரிணாமனின் பழக்கமும், இலக்கிய நண்பர்களின் பழக்கமும் அப்போது கிடைத்தது. கவிஞர் பரிணாமன் என்னை மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலைப் படிக்கச் சொன்னார். இரவு, பகல் பாராமல் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் மூன்று நாட்களில் அந்த நாவலைப் படித்து முடித்தேன். லியோ டால்ஸ்டாய், அந்தோன் செக்காவ், மிகயீல் ஷோலகோவ், தாஸ்தாவெஸ்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தேன்.

‘ஷெல்லி’ - இலக்கியப் பத்திரிகை நண்பர்களின் தொடர்பால் தி. ஜானகிராமன், கு. ப. ரா. , புதுமைப்பித்தன், வண்ணநிலவன், ப. செயப்பிரகாசம், வண்ணநிலவன், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பது வழக்கமாயிற்று. பரிணாமன் ‘மகாநதி’ என்ற இதழை நடத்தி வந்தார். தி. சு. நடராசன், ஆ. சந்திரபோஸ், பொன்மணி, நவபாரதி, தனுஷ்கோடி ராமசாமி போன்றவர்களின் பழக்கம் கிடைத்தது. அவர்கள் மாதம்தோறும் நடத்தும் இலக்கிய கூட்டங் களில் நானும் கலந்து கொள்வேன். ஒரு கூட்டத்தில் ஒரு ரஷ்யக் கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வாசித்தேன். இளைஞனான என்னுடைய அந்த முயற்சியை அங்கிருந்த ஒருவர் பாக்கி விடாமல் எல்லாரும் பாராட்டினார்கள். அது எனக்கு அந்த நேரத்தில் மிகவும் ஊக்கமளித்தது.

திரைப்படத்துறையில் பிஆர்ஓ (மக்கள் தொடர்புப் பணி) வேலைக்கு எப்படிப் போனீர்கள்? அந்த வேலையைச் செய்து கொண்டே எப்படி மொழிபெயர்ப்பு வேலைகளில் எப்படி ஈடுபட முடிகிறது?

நான் மதுரையில் தங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் சாவி என்ற பத்திரிகை புதிதாக ஆரம்பிக்கப் பட்டது. அதைப் படித்ததும் நான் சில ஐடியாக்களை எழுதி சாவி இதழின் ஆசிரியர் சாவிக்கு அனுப்பி வைத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் சென்னைக்கு வரச் சொன்னார். சென்னைக்கு வந்த இடத்தில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. என்னை சாவி பத்திரிகையில் உதவி ஆசிரியராக அவர் சேர்த்துக் கொண்டார். ஆனால் ஆறு மாதத்திற்கு மேல் சாவியில் நீடிக்க முடியாமற் போனது. அப்போது எம். ஜி. வல்லபன் ‘பிலிமாலயா’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அதில் நான் சேர்ந்தேன்.

அந்தப் பத்திரிகையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பணி எனதாயிற்று. அப்போது நிறைய சினிமா தொடர்பான ஆட்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக 1981 இல் விஜயகாந்த் நடித்த ‘சாதிக்கொரு நீதி’ படத்துக்கு முதன்முதலில் பி. ஆர். ஓ. ஆனேன். அதற்குப் பிறகு 180 திரைப்படங்களுக்குப் பி. ஆர். ஓ. வாக இருந்திருக்கிறேன். ஆனால் சாவி பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நான் ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்திருந்த வைக்கம்முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ நாவலை எடுத்துக் கொண்டு மஞ்சரி இதழின் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே அப்போது த. நா. சேதுபதி ஆசிரியராக இருந்தார். அவர் மதிலுகள் மொழிபெயர்ப்பை வாங்கிப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். 22 வயதில் இவ்வளவு அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்களே என்று வியந்து பாராட்டிய தோடு அல்லாமல், மஞ்சரியின் முழு இதழிலும் அந்த நாவலை வெளியிட்டார்.

அப்புறம் மஞ்சரியில் எனது மொழி பெயர்ப்புகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன. 1985-85 கால கட்டத்தில் தாமரை இதழிலும் எனது மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இப்படி மொழிபெயர்ப்புகளாக வெளிவந்தவற்றை புத்தகமாக வெளியிட நான் அப்போது தமிழில் முன்னணியில் இருந்த இரண்டு பதிப்பகங்களை அணுகினேன். ஆனால் அவர்கள் வெளியிடத் தயாராக இல்லை. அதில் எனக்கு லேசாகச் சோர்வு ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு வேலைகளை நிறுத்திவிட்டு சினிமாவில் மக்கள் தொடர்புப் பணியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தேன். ஆனால் சினிமா பற்றிய செய்திகள், கட்டுரை கள் எழுதுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.

மீண்டும் எப்போது மொழிபெயர்க்க ஆரம்பித்தீர்கள்?

1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் ஓர் இலக்கியக் கூட்டம் நடந்தது. அதற்கு நான் போயிருந்தேன். அங்கு கொடுக்கப்பட்ட பதிவேட்டில் பெயர், முகவரியை எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு கவிஞர் இளைய பாரதி என்னைத் தேடி வந்துவிட்டார். அதுமுதல் அவர் எனக்கு ரொம்ப பழக்கமாகிவிட்டார்.

2002 இல் புதுமைப்பித்தன் பதிப்பகத்தின் வேலைகளை அவர் கவனித்துவந்தார். அவர் புதுமைப் பித்தன் பதிப்பகத்திற்காக எனது மொழிபெயர்ப்பு நாவல்களைக் கேட்டார். ஆனால் என்னிடம் எந்தப் பிரதியும் இல்லை. அதற்குப் பின் மஞ்சரி அலுவலகத் திற்கும், தாமரை அலுவலகத்திற்கும் சென்று பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒருவாறு நான் மொழிபெயர்த்து வெளிவந்த படைப்புகளைச் சேகரித்து புத்தகமாக வெளியிடக் கொடுத்தேன்.

புதுமைப்பித்தன் பதிப்பகத்திலிருந்து 5 நாவல்கள் வெளிவந்தன. அதில் புதிதாக 3 நாவல்களை மொழி பெயர்த்துத் தந்ததும் அடங்கியிருந்தது. மீண்டும் நான் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். பழையபடி என்னை இலக்கியப் பாதையில் திருப்பிவிட்டதில் இளைய பாரதிக்குப் பெரும் பங்குண்டு.

அதற்குப் பின்பு நக்கீரன் நிறுவனத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘இனிய உதயம்’ மாத இதழுக்கு மாதம் ஒரு நாவலை மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று அதன் பொறுப்பாசிரியர் மா.முருகன் கேட்டார். நக்கீரன் கோபாலும் கேட்டார்.

2002 இலிருந்து இன்றுவரை மாதம் ஒரு நாவலை அவர்களுக்காக மொழிபெயர்த்துத் தந்துவருகிறேன். இதுவரை மாதம் ஒரு புத்தகம் வந்ததையும் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்கள் வெளிவந்துவிட்டன.

நவீன இலக்கியப் படைப்பாளிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடையே உங்களுடைய படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே?

முதலில் நான் யாருடைய அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக் கிடக்கவில்லை. நான்பாட்டுக்கு என் வேலையைச் செய்து கொண்டு போகிறேன். யார் அங்கீகரிக்கிறார்கள், யார் அங்கீகரிக்கவில்லை என்றெல்லாம் நான் பார்ப்ப தில்லை. அடுத்து தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அவர் களுடைய இதழ்களில் எதையும் எழுதியதில்லை. ஏனென்றால் நான் எழுதியதை வெளியிட ‘இனிய உதயம்’ போன்ற தளம் இருக்கும்போது சிற்றிதழ்களில் எழுத வேண்டிய தேவை எதுவும் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு நேரமும் இல்லை.

அதுபோல எந்த விருதுக்கும் என் புத்தகங்களை நான் அனுப்பி வைத்ததில்லை. நானே என் புத்தகங்களை அனுப்பி வைத்து அதற்கு விருது பெறுவது எனக்கு உடன்பாடாக இல்லை. கூச்சமாக இருக்கிறது.

மலையாளம் தவிர வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துள்ளீர்களா?

மலையாளத்தில் அதிகமாக மொழிபெயர்த்திருக்கிறேன். மலையாளம் தவிர உருது, வங்கமொழி, பிரெஞ்ச், ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்யன், சிந்தி, இந்தி மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வழித் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் எந்த மொழியில் இருந்து மொழிபெயர்த்தாலும் அது மக்களுக்குப் புரியக் கூடிய தாக எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைக் கிறேன். கலை கலைக்காகவே என்பதில் எனக்கு உடன் பாடில்லை. கலை மக்களுக்கானது. மக்களுக்குப் பயன் படக் கூடியதே கலை. வாழ்க்கையைச் சொல்கிற எழுத்துகளே எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தவற்றை மட்டுமே மொழிபெயர்க்கிறேன். பதிப்பாளரின் ஆணைக் கிணங்கி நான் மொழிபெயர்ப்பதில்லை. நான் மொழி பெயர்த்ததை அவர்கள் வெளியிடுகிறார்கள். அந்தச் சுதந்திரம் இருப்பதால்தான் நான் தொடர்ந்து இயங்க முடிகிறது.

மலையாள இலக்கியத்தில் நீங்கள் காணக் கூடிய மாறுதல்கள் எவை?

கேரள மக்களின் வாழ்க்கையைப் போலவே மலையாள இலக்கியத்தில் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. வறுமையில் வாடிய மக்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டத்தை தகழி, வைக்கம் முகம்மது பஷீர், பி. கேசவதேவ், எஸ். கே. பொற்றேகாட் போன்றவர்களின் படைப்புகள் பிரதிபலித்தன.

கேரளாவின் கூட்டுக் குடும்பமுறை சிதைந்ததன் விளைவுகளை, பெண்களின் துயரங்களை எம். டி. வாசு தேவன் நாயர் படைப்புகள் சித்திரித்தன. வளைகுடா நாடுகளில் வேலை கிடைத்து அந்தப் பணம் கேரள மண்ணிற்குப் பாய ஆரம்பித்த பின்பு அங்கு மக்களின் வாழ்க்கையிலும், மனோபாவத்திலும், நடத்தையிலும், ஆண்-பெண் உறவுகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை மாதவிக்குட்டி, முகுந்தன், சக்கரியா, காக்கநாடன் ஆகி யோரின் படைப்புகள் கூறுகின்றன. இன்றைய வாழ்வின் சிதைவுகளைச் சித்திரிக்கும் படைப்புகளாக கே. ஆர். மீரா, சி. வி. பாலகிருஷ்ணன், கே. எல். மோகன வர்மா, கே. கே. சுதாகரன், ஆனந்த், சேது, புனத்தில் குஞ்ஞப்துல்லா, என். எஸ். மாதவன் ஆகியோரின் படைப்புகள் இருக்கின்றன.

மலையாளப் படைப்பாளிகள் யதார்த்த வாதத்தைப் பின்பற்றினாலும், பின்நவீனத்துவத்தைப் பின்பற்றினாலும், மேஜிக்கல் ரியலிஸத்தைப் பின்பற்றினாலும் அல்லது வேறு எதைப் பின்பற்றினாலும், அவர் களுடைய படைப்புகள் மனிதர்களின் வாழ்க்கையை மிக உயிர்ப்போடு சித்திரிக்கின்றன. அதனால்தான் அவற்றை நான் அதிகமாக மொழிபெயர்த்திருக்கிறேன்.

சந்திப்பு: அருஞ்சுனை

Pin It