ஈரத்துணிகளை
வீட்டுக்குள் விரட்டிவிட்டு
கொடிக்கம்பியில்
மழைத்துளிகளை
காயப்போட்டுச் செல்கிறது
கார்மேகம்.


இலையுதிர் காலத்து
மரத்தடி இரவு.
கிளைகளில் நட்சத்திரங்கள்.


திருஷ்டிப் பொட்டும்
அழகாகிப் போனது
குழந்தையின் கன்னத்தில்.

தடைபட்ட மின்சாரம்
தருவித்த அமைதியை
எடுத்துரைக்க வந்துவிடுகிறது
எப்போதும் ஒரு காகம்.


கடைவிரித்துக் காத்திருக்கிறான்
கிளி ஜோஸ்யக்காரன்
எப்போது நீளும் முதல் கை?


இரவு ரயில்.
பௌர்ணமி பார்க்க
வசதியில்லாத
எதிர்ப்பக்க இருக்கை.
ஏமாற்றத்தில்
தூங்கிப் போனேன்.
அதிகாலையில்
என்னை
வேடிக்கை பார்த்தபடி
நின்றது நிலா
என் ஜன்னலில்.

Pin It